பேறுகாலத்துக்குப்பிந்தைய பதற்றம்

ஒரு குழந்தையை இந்த உலகுக்குக் கொண்டுவருவது எளிய விஷயமில்லை. அதுதொடர்பாக ஒருவருக்குப் பல கவலைகள், அழுத்தம் ஏற்படலாம். இவற்றில் பெரும்பாலானவை தாற்காலிகமே, சிலநாள்களில் அவை நின்றுவிடும். ஆனால் சிலருக்கு, இந்தக் குறுக்கிடும் எண்ணங்கள், கவலைகள் தொடர்ந்து வரும். இதனால் அவர்கள் தங்களுடைய தினசரி வேலைகளைக்கூடச் செய்ய இயலாமல் சிரமப்படுவார்கள். அதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்களுக்குப் பேறுகாலத்துக்குப் பிந்தைய பதற்றம் ஏற்பட்டிருக்கலாம். குழந்தையின் நலனைப்பற்றிக் கவலைப்படுதல், அதற்கு என்ன ஊட்டுவது என்று சிந்தித்தல்... இவையெல்லாம் ஒரு புதிய தாயிடம் இயல்பாக உள்ள விஷயங்கள். ஆனால், இந்தக் கவலைகள் தொடர்ந்த தொந்தரவு எண்ணங்களாக, பயங்களாக மாறினால், அவர்கள் நிபுணரின் உதவியை நாடவேண்டியிருக்கலாம்.

பேறுகாலத்துக்குப்பிந்தைய பதற்றத்தின் அறிகுறிகள், கிட்டத்தட்ட கர்ப்பகாலப் பதற்றத்தின் அறிகுறிகளைப்போலவேதான் இருக்கும். இவற்றில் சில அறிகுறிகள்:

·எப்போதும் நிலைகொள்ளாமல் தவித்தல், எரிச்சல்படுதல்

·தாய் தனது தினசரிப் பணிகளைச் செய்ய இயலாதபடி தடுக்கும் தொடர்ச்சியான, குறுக்கிடுகிற எண்ணங்கள்

·இரவில் நிம்மதியாக ஓய்வெடுக்கவோ தூங்கவோ சிரமப்படுதல்

·தொடர்ச்சியான கவலை, அதனால் அடிக்கடி குழந்தையைச் சென்று பார்த்துக்கொண்டே இருத்தல்

·குழந்தையுடன் வெளியே சென்றால் ஏதாவது ஆகிவிடுமோ என்று கவலைப்படுதல்

ஒரு புதிய தாய்க்கு இந்த அறிகுறிகள் இருந்தால், அவர் தனது GP அல்லது மகப்பேறு மருத்துவரிடம் பேசலாம், இவர் அவரைப் பரிசோதித்து, ஒரு மனநல நிபுணரிடம் அனுப்புவார்.

பேறுகாலத்துக்குப்பிந்தைய OCD

சில நேரங்களில், சில புதிய தாய்மார்களுக்குப் பயமுறுத்தும் காட்சிகள் திரும்பத்திரும்பத் தோன்றுகின்றன, தொந்தரவுசெய்கின்றன, ஆகவே, தங்கள் குழந்தைக்கு ஏதோ ஆகிவிடுமோ என்று எண்ணி அவர்கள் சில தீவிர நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். பேறுகாலத்துக்குப்பிந்தைய OCDக்கான சில அறிகுறிகள்:

·குழந்தைபற்றிய தொந்தரவான, பயமுறுத்தும் எண்ணங்கள், காட்சிகள்

·பயமுறுத்தும் எண்ணங்களை விரட்டுவதற்காக, தாய் சில குறிப்பிட்ட செயல்பாடுகளைத் திரும்பத்திரும்பச் செய்வார். உதாரணமாக, குழந்தைக்கு நோய்த்தொற்று வந்துவிடும் என்று அவர் பயந்தால், வீட்டைத் திரும்பத்திரும்பச் சுத்தம் செய்வார். அல்லது, குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும்போது அதை அடிக்கடி சென்று பார்ப்பார்.

·குழந்தையுடன் தனியே இருக்கப் பயப்படுதல்

·மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறை, அதனால், இயல்பாக இருக்கமுடியாமலிருத்தல்.

சிகிச்சை

கர்ப்பகாலப் பதற்றத்தைப்போலவே, பேறுகாலத்துக்குப் பிந்தைய பதற்றத்துக்கான சிகிச்சையும் அறிகுறிகளின் தீவிரத்தைப்பொறுத்து மாறும். அறிகுறிகள் தீவிரமாக இல்லாவிட்டால், அந்தத் தாய்க்கு உணர்வுநிலை ஆதரவும் தெரபியும் வழங்கினாலே போதும், அவர் தன்னுடைய பதற்றத்தைச் சமாளித்துவிடுவார். அதேசமயம், சிலருக்கு இன்னும் தீவிரமான அறிகுறிகள் காணப்படும். அப்போது அவருக்கு உளவியல் சிகிச்சையுடன் மருந்துகளையும் வழங்கவேண்டியிருக்கலாம். இந்தப் பிரச்னைகொண்ட தாய்மார்களுக்கு உதவக்கூடிய சிகிச்சைகள், அறிவாற்றல் நடைமுறைச் சிகிச்சை (CBT) அல்லது உளப்பகுப்பாய்வுச் சிகிச்சை (IPT). இந்தச் சிகிச்சைகளின் நோக்கம், தொந்தரவுசெய்யும் இந்த எண்ணங்கள் ஏன் வருகின்றன என்கிற மூலகாரணத்தைக் கண்டறிதல், அவற்றுக்குப்பதிலாக ஆரோக்கியமான எண்ணங்களைக் கொண்டுவருதல்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org