கர்ப்பகாலத்தில் மனச்சோர்வு

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் சிக்கலான காலகட்டம், கர்ப்பகாலம்தான். இந்தக் காலகட்டத்தில் அவரது உடல் மற்றும் மன நலத்துக்குப் பிரச்னைகள் வருகிற வாய்ப்பு உள்ளது. ஆகவே, கர்ப்பமாக உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல அரவணைப்பு தேவை.

பெரும்பாலான பெண்கள் கர்ப்பகாலத்தை மகிழ்வாக அனுபவிக்கிறார்கள். ஆனால் சிலருக்கு, அது சவாலாக அமைந்துவிடுகிறது. பல உயிரியல் மற்றும் மன, சமூகவியல் காரணிகளால், கர்ப்பமாக உள்ள பெண்ணுக்கு மனச்சோர்வு, பதற்றம், OCD மற்றும் பேறுகாலத்துக்குப் பிந்தைய சைக்கோசிஸ் போன்ற மனநலப் பிரச்னைகள் வரலாம்.

கர்ப்பமாக உள்ள பெண்ணின் உடல்நலத் தேவைகளைமட்டும் கவனித்தால் போதாது, அவரது உளவியல் ஆரோக்கியத்தையும் கவனிக்கவேண்டும். கர்ப்பகாலப் பரிசோதனைகளில் இதையும் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்.  

· கர்ப்பகாலம்' 

ஒரு பெண் கர்ப்பமாக உள்ள ஒன்பது மாதக் காலகட்டத்தை 'கர்ப்பகாலம்' என்பார்கள். இந்தக் காலகட்டத்தில், பல உயிரியல் அல்லது மன, சமூகவியல் காரணிகளால் பெண்களுக்கு மனச்சோர்வு மற்றும் பதற்றம் வரலாம். அதேசமயம், இந்த மனநலப் பிரச்னைகளைப் பெரும்பாலும் யாரும் கவனிப்பதில்லை, அப்படியே கவனித்தாலும் புறக்கணித்துவிடுகிறார்கள். காரணம், மனச்சோர்வின் அறிகுறிகளும், கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் உடல்சார்ந்த மாற்றங்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி உள்ளன. ஆகவே, அவர் எரிச்சலாக இருக்கிறார், களைப்பாக உணர்கிறார், தூக்கம் போதவில்லை, பசி எடுக்கவில்லை என்றால், அதனை இயல்பான ஒரு விஷயமாக எண்ணிவிடுகிறார்கள்.

கர்ப்பகாலத்தில் ஒரு பெண்ணுக்கு மனச்சோர்வை உண்டாக்கக்கூடிய சில காரணிகள்:

·கணவனுடனான உறவில் பிரச்னைகள்

·திட்டமிடப்படாத அல்லது விரும்பாத கர்ப்பம்

·குடும்ப வன்முறை (உடல்ரீதியில், பாலியல்ரீதியில் அல்லது உணர்வுரீதியில்)

·அவருக்கு அல்லது அவரது குடும்பத்தில் ஒருவருக்கு மனச்சோர்வு, இருதுருவக் குறைபாடு, பேறூகாலத்துக்குப் பிந்தைய சைக்கோசிஸ் அல்லது பிற தீவிர மனநலப் பிரச்னைகள் இருந்திருந்தல்

·அவருக்கு ஏற்கெனவே OCD அல்லது அதிர்ச்சிக்குப்பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD) போன்ற மனநலப் பிரச்னை ஏதாவது இருந்திருந்தால், கர்ப்பகாலத்தில் அது மேலும் தீவிரமடையக்கூடும்.

·ஏற்கெனவே கண்டறியப்பட்ட மனநலப் பிரச்னைக்கு அவர் மருந்து எடுத்துக்கொண்டிருந்தால், இப்போது கர்ப்பமாகிவிட்டதும் அவர் அந்த மருந்தை நிறுத்தியிருத்தல்

·முந்தைய பிரசவத்தில் அவர் அனுபவித்திருக்கக்கூடிய சிக்கல்கள் அல்லது இழப்பின் சோகம்

·நிதிச்சுமை

·மது, போதைமருந்துகள் அல்லது மருத்துவர் சிபாரிசின்படி எடுத்துக்கொண்ட மருந்துகளுக்கு அடிமையாகியிருத்தல்

·ஒரு கிராமப்புறத்திலிருந்து நகரத்துக்கு இடம் மாறுதல், குடும்பத்தினர்/சமூக ஆதரவு இல்லாதிருத்தல்

·பணி அழுத்தம் மற்றும் உரிய தேதியில் முடிக்கவேண்டிய வேலைகளால் ஏற்படும் தீவிர அழுத்தம்

கர்ப்பத்தால் ஏற்படும் மாற்றங்கள் - இது இயல்பு

இது இயல்பில்லை

கர்ப்பமாகும் ஒவ்வொரு பெண்ணும் இந்த அறிகுறிகளில் சிலவற்றை அனுபவிக்கிறார். இவை பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றன.

·வாந்தி/குமட்டல், குறிப்பாக, முதல் மூன்று மாதங்களில்

·மனநிலை மாற்றங்கள், அழுகை அல்லது உணர்ச்சிவயப்படுதல்

·எரிச்சல்

·குறைந்த சுய மதிப்பு

·உடல் தோற்றம்பற்றிய கவலைகள்

·தூக்கப் பிரச்னைகள், குறிப்பாக, ஏழாம் மாதத்துக்குப்பிறகு

·களைப்பு, இது முதல் ஆறு மாதங்களில் அதிகமாக இருக்கும்

·பதற்றம், பிரசவ தேதி நெருங்க நெருங்க இந்தப் பதற்றம் அதிகரிக்கும், குழந்தை நல்லபடியாகப் பிறக்கவேண்டுமே என்ற உணர்வு ஏற்படும்

இந்த அறிகுறிகள் இருந்தால், அந்தப் பெண் கர்ப்பகாலப் பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று பொருள்:

 

·       எடையிழப்பு, அல்லது, கர்ப்பகாலத்தில் எடையேறாமலிருத்தல்

·       காலைநேர வாந்திப்பிரச்னை சரியானபிறகும் தொடர்ந்து பசியெடுக்காமலிருத்தல்

·       தூக்கப் பாணி மாறுதல்

·       பரபரப்பு அல்லது நிலைகொள்ளாத தன்மை

·       களைப்பு அல்லது ஆற்றலில்லாத உணர்வு

·       மதிப்பில்லாத உணர்வு அல்லது குற்றவுணர்வு

·       அன்ஹெடோனியா (எதிலும் ஆர்வமின்றி, மகிழ்ச்சியின்றி, எதையும் அனுபவிக்காமலிருத்தல்)

·       மிகவும் கவனமின்றிக் காணப்படுதல்

·      மரணம், தற்கொலைபற்றிய சிந்தனைகள் அடிக்கடி வருதல்

 

கர்ப்பமாக உள்ள ஒருவரிடம் இந்த மாற்றங்கள் காணப்பட்டால், அவர் ஒரு நிபுணரைச் சந்தித்து உதவிபெறுவது நல்லது.

முக்கியம்: கர்ப்பகால மனச்சோர்வைக் கண்டறிவது எளிது. இதை விரைவில் கண்டறிந்து சிகிச்சையளித்தால், குழந்தை பிறக்குமுன் தாய் நலமாகிவிடுவார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org