மனச்சோர்வு

பேறு காலகட்டம்

குழந்தை பிறப்பதற்குச் சிறிது முன்பாக, குழந்தை பிறந்தபிறகு உள்ள காலகட்டத்தை இவ்வாறு அழைக்கிறோம். ஒரு பெண் கர்ப்பமாகி 22 வாரங்கள் பூர்த்தியடைந்ததும், இந்தக் காலகட்டம் தொடங்குகிறது, அவருக்குக் குழந்தை பிறந்த ஏழு நாள்களில் இது நிறைவடைகிறது.

இந்தக் காலகட்டத்தில் தாய்மார்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் பலவிதமான பெரிய மாற்றங்களைச் செய்துகொள்ளவேண்டியிருக்கும். புதிதாகக் குழந்தை பெறுவோர் பல தனித்துவமான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள், அது அவர்களைப் பெரும் திகைப்பில் ஆற்றலாம்.

‘ப்ளூஸ்’ - இது இயல்பானது

இது இயல்பில்லை

பல பெண்கள், குழந்தை பெற்று இரண்டு முதல் ஐந்து நாள்களில் 'பேபி ப்ளூஸ்' எனப்படும் உணர்வை அனுபவிக்கிறார்கள். உணர்வு எழுச்சி நிறைந்த இந்தக் காலகட்டம் இயல்பானதுதான். இது தாற்காலிகமான ஒரு விஷயம், இதன் தீவிரம் ஒவ்வொரு தாய்க்கும் மாறுபடும். பொதுவாக பேபி ப்ளூஸ் 10 நாள் நீடிக்கிறது. அதற்குள் தாய் அதிலிருந்து விடுபட்டுவிடுவார்.

ஒருவேளை, இரண்டு வாரங்களுக்குப்பிறகும் அவர் அழுகிறார், எரிச்சலுடன் இருக்கிறார், மற்ற உணர்வுத் துயரங்களைச் சந்திக்கிறார் என்றால், அவருக்குப் பேறுகாலத்துக்குப்பிந்தைய மனச்சோர்வு வந்திருக்கலாம்.

புதிதாகக் குழந்தைபெற்ற யாரிடமேனும் இந்த அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், அவர்கள் நிபுணரின் உதவியைப் பெறவேண்டும்.

முக்கியம்: பேறுகாலத்துக்குப்பிந்தைய மனச்சோர்வானது தாய்மார்கள், தந்தைமார்கள், புதிய குழந்தையைத் தீவிரமாகப் பாதிக்கக்கூடும். தாய்-குழந்தை இடையிலான அன்புப்பிணைப்பு பாதிக்கப்படலாம். குழந்தைக்கு வேண்டிய அரவணைப்பு கிடைக்காமல்போகலாம். பேறுகாலத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில் தந்தைமார்களும் மனச்சோர்வை அனுபவிக்கக்கூடும். இது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் நலனைப் பாதிக்கிறது.

பேறுகாலத்துக்குப் பிந்தைய மனச்சோர்வைக் குணப்படுத்துவது அவசியம். இந்தப் பிரச்னையைக் குணப்படுத்தாவிட்டால், பாதிக்கும் மேற்பட்ட தாய்மார்கள் ஆறு மாதங்கள் கழித்தும் உடல்நலமில்லாமல் இருப்பார்கள்.

பேறுகாலத்துக்குப்பிந்தைய காலகட்டம்

இந்தக் காலகட்டம், குழந்தை பிறந்தவுடன் தொடங்குகிறது, சுமார் ஆறு வாரங்களுக்கு நீடிக்கிறது. குழந்தைபெற்ற முதல் வாரத்தில், உளவியல் மற்றும் ஹார்மோன் காரணங்களால் தாயின் மனோநிலை மற்றும் உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான தாய்மார்கள் உணர்ச்சிவயப்படுகிறார்கள், மனச்சோர்வான நிலையில் காணப்படுகிறார்கள், அடிக்கடி அழுகிறார்கள், எரிச்சலடைகிறார்கள், பதற்றமடைகிறார்கள், அவர்களுக்குச் சரியாகப் பசியெடுப்பதில்லை, தலைவலி வருகிறது, ஞாபகமறதி ஏற்படுகிறது. இவை அனைத்தும், பேறுகாலத்துக்குப் பிந்தைய ப்ளூஸின் அறிகுறிகள். இது ஒரு தாற்காலிகமான நிலை. 10 நாள்களுக்குள் தாய்மார்கள் இதிலிருந்து முழுமையாக விடுபட்டுவிடுவார்கள்.

ஒருவேளை இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், தீவிரமானால், இதனால் பேறுகாலத்துக்குப்பிந்தைய மனச்சோர்வு ஏற்படக்கூடும். இது பலரிடம் காணப்படுகிற, அவர்களை முடக்கிவிடக்கூடிய ஒரு சூழ்நிலை ஆகும்.  குழந்தை பிறந்த ஆறு வாரங்களுக்குள், சில தாய்மார்கள் தீவிர மனச்சோர்வுக்கு ஆளாகலாம். இதனைக் குணப்படுத்தாவிட்டால், இந்தப் பிரச்னை ஆறு மாதங்கள் தாண்டியும் நீடிக்கலாம். இதனால் தாய், குழந்தை, குடும்பம் என அனைவரும் தீவிரமாகப் பாதிக்கப்படலாம்.

பேறுகாலத்துக்குப்பிந்தைய மனச்சோர்வுக்கான சில அறிகுறிகள்:

·மிகவும் அழுத்தமாக உணர்தல், எரிச்சலடைதல், தொடர்ந்து களைப்போடிருத்தல்.

·சுயமதிப்பு குறைதல், தன்னால் குழந்தையை நன்கு வளர்க்க இயலுமா என்று சந்தேகப்படுதல்.

·எப்போதும் குழந்தையைப்பற்றிக் கவலைப்படுதல், அல்லது, குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் ஆர்வமே இல்லாமலிருத்தல்

·வீட்டில் எல்லா வேலைகளும் ஒழுங்கற்றிருக்கும் நிலையைச் சமாளிக்க இயலாமல் சிரமப்படுதல். குழந்தை கண்ட நேரத்தில் சாப்பிடுகிறது, கண்ட நேரத்தில் தூங்குகிறது என்பதால், தாய் சரியாகத் தூங்க இயலாமல் சிரமப்படுதல்

·குழந்தை தூங்கும்போதும் ஓய்வெடுக்க இயலாதிருத்தல்

·கர்ப்பமாகுமுன் அல்லது குழந்தை பிறக்குமுன் விரும்பிச் செய்த விஷயங்களை இப்போது ரசித்துச் செய்ய இயலாமலிருத்தல்

·எதிலும் கவனம் செலுத்த இயலாத நிலை, தீர்மானம் எடுக்க இயலாமலிருத்தல், பணிகளைச் செய்ய இயலாமலிருத்தல்

·பதற்றம் சார்ந்த உடல் அறிகுறிகள், இதயம் படபடத்தல், அடிக்கடி தலைவலி, கை வியர்த்தல்

·எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லை என உணர்தல் அல்லது, பரபரப்பாக இருத்தல்

·குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிட ஆர்வமின்றி இருத்தல்

·தன்னைப்பற்றியும் வருங்காலத்தைப்பற்றியும் தொடர்ச்சியான எதிர்மறை எண்ணங்கள், நம்பிக்கையில்லாத உணர்வு

·கோபம், சோகம், இழப்பு, அழுகை உணர்வுகளை அனுபவித்தல்

·பசியெடுக்கும் தன்மை மாறுதல்

·குடும்பத்தினர், நண்பர்களின் கருத்துகளுக்கு அதீதமாக உணர்ச்சிவயப்படுதல்

·தங்களையோ குழந்தையையோ காயப்படுத்துவதுபற்றிச் சிந்தித்தல்

·தொடர்ந்து குற்றவுணர்ச்சி, வெட்க உணர்வுகளோடு இருத்தல், மனத்துயரைக் கொண்டுவரும் எண்ணங்கள் அல்லது காட்சிகளின் குறுக்கீடு

பேறுகாலத்துக்குப்பிந்தைய மனச்சோர்வுக்குச் சிகிச்சை பெறுதல்

பேறு காலகட்ட மனச்சோர்வுக்கு உளவியல் மற்றும் மருந்தியல்சார்ந்த சிகிச்சைகள் பலன் தருகின்றன.

பேறுகாலகட்ட மனோநிலை மற்றும் பதற்றக் குறைபாடுகளுக்குத் தேவைப்படும் உதவியை மதிப்பிடுதல், சிகிச்சை பெறுதல் முக்கியம். பேறு காலகட்டத்தில் CBT உள்ளிட்ட உளவியல் சிகிச்சைகள், உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைகள் நல்ல பலன் தருகின்றன. இவற்றைக் கவனித்துச் சிகிச்சையளிக்காவிட்டால், மொத்தக் குடும்பத்துக்கும் மனத்துயரம் தொடரும்.

குறிப்பு: தீவிர மனச்சோர்வு அல்லது இருதுருவக் குறைபாடு கொண்ட பெண்களுக்கு மருந்துகள் தேவைப்படலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org