பழக்கங்கள் எப்படி அடிமைத்தனமாகின்றன

Published on

ஒருவர் முதன்முதலாக உடற்பயிற்சிக்கூடத்தில் சேர்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆரம்பத்தில், தூக்கத்திலிருந்து எழுந்து, உடற்பயிற்சிக்கூடத்துக்குச் சென்று, உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு அவருக்கு மிகுந்த உழைப்பு தேவைப்பட்டிருக்கும். ஆனால், அதை அவர் தொடர்ந்து செய்யச்செய்ய, அது வழக்கமான விஷயமாகியிருக்கும், ஆரம்பத்தில் தேவைப்பட்ட அளவு உழைப்பு இப்போது அதற்குத் தேவைப்படாது. இரு வாகனங்களை ஒன்றுக்கொன்று இணையாக நிறுத்துவது, சூதாடுவது, புகை பிடிப்பது, அதீதமாக உண்பது, பல் துலக்குவது... இவை அனைத்தும் பழக்கங்களுக்கான எடுத்துக்காட்டுகள், மக்கள் இவற்றை நாள்தோறும் செய்கிறார்கள். இந்தப் பழக்கங்கள் எப்படி உருவாகின்றன? இவற்றில் சில பழக்கங்கள் அடிமைத்தனமாக ஆகின்றனவே, அது எப்படி?

பழக்கங்கள் எப்படி உருவாகின்றன?

பழக்கங்கள் மூன்று நிலைகளில் உருவாகின்றன. ஒரு தூண்டுதல் (அல்லது பின்னணி), ஓர் எதிர்வினை, மற்றும் ஒரு பரிசு (அல்லது விளைவு). இவை அனைத்தும் ஓர் இலக்கை நோக்கி நகர்கின்றன. சுற்றுச்சூழலில் இருக்கும் தூண்டுதல்களால், மக்கள் எதிர்வினையாற்றுகிறார்கள், அவர்களுடைய மூளைகள் இந்தத் தூண்டுதலையும் பரிசையும் இணைத்துப் புரிந்துகொள்கின்றன. அதனால்தான் அவர்கள் அந்தச் செயலைத் திரும்பத்திரும்பச் செய்யக் கற்றுக்கொள்கிறார்கள். பழக்கங்கள் இலக்குகளால் உருவாகின்றன. இலக்குகள் பெருமளவு நெகிழ்வுத்தன்மை கொண்டவை, அவை மாறிக்கொண்டே இருக்கின்றன, ஆனால், பழக்கங்கள் நிரந்தரமானவை. ஒரு பழக்கத்தால் ஒரு குறிப்பிட்ட நோக்கம் நிறைவேறிக்கொண்டிருந்தது, ஒரு குறிப்பிட்ட இலக்கு எட்டப்பட்டது என்று வைத்துக்கொள்வோம், இந்த நோக்கம், இலக்கு நின்றபிறகும், பழக்கங்கள் தொடர்கின்றன, அப்படிதான் மனித மனம் அமைந்துள்ளது.

மூளையின் நரம்புச் சுற்று இந்த இணைப்புகளை உருவாக்குகிறது, பின்னர் இவை நிரந்தரமாகின்றன. குறிப்பாக, இந்தப் பழக்கங்களினால் ஒரு நிம்மதியுணர்வு அல்லது நேர்விதமான பின்னூட்டம் கிடைத்தால் அந்த இணைப்புகள் நிரந்தரமாக நிலைத்துவிடுகின்றன. அதனால்தான், அந்தப் பழக்கங்களை உடைப்பது மிகக் கடினமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக: ஒருவர் பசியோடு இருக்கிறார், அப்போது அருகிலிருக்கும் ஒரு கடையின் ஜன்னலில் ஒரு சுவையான கேக்கைப் பார்க்கிறார். அந்தக் கேக்தான் அவருடைய தூண்டுதல்; அந்தப் பசிதான் அவருடைய பின்னணி. அவர் கேக்கைச் சாப்பிடுகிறார் (எதிர்வினை); அவருடைய மனம் நிறைவடைகிறது, அவருடைய உடல் இந்தச் செயல்முறையைத் தொடர்ந்து நிகழ்த்துகிறது (இலக்கு: உயிர்வாழ்தல்). இங்கு கூடுதலாக ஒரு நேர்விதமான பின்னூட்டமும் கிடைக்கிறது: கேக்கைச் சாப்பிட்டபின் அவர் மகிழ்ச்சியாக உணர்கிறார், அது அந்தப் பழக்கத்தை உறுதிப்படுத்துகிறது. அடுத்தமுறை அவர் ஒரு கேக்கைப் பார்க்கும்போது, அதனால் அவருடைய மூளை தூண்டப்பட வாய்ப்பிருக்கிறது, அது தானாகச் செயல்பட்டு அந்தக் கேக்கைச் சாப்பிடவேண்டும் என்று விரும்பத்தொடங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இப்படி நடந்துகொள்வதால் அடிப்படையில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஒரு பழக்கத்தால் நன்மையைவிட அதிகத் தீமைகள் வரும்போது, அது ஒரு தீய பழக்கமாகிவிடுகிறது. எடுத்துக்காட்டாக, சிலர் மன அழுத்தத்தை உணரும்போது அதிக இனிப்புப்பொருட்களை உண்பார்கள். இனிப்பான பொருட்களை உண்ணும்போது, உடலிலிருந்து மூளைக்கு ஒரு சமிக்ஞை செல்கிறது, 'நான் என்ன சாப்பிட்டேன் என்பதையும், எங்கே சாப்பிட்டேன் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்.' இதனால், அவர் ஒவ்வொருமுறை அழுத்தமாக உணரும்போதும், மூளை தந்திரமாக அவரைத் தூண்டி ஒரு கேக்கையோ ஐஸ்க்ரீமையோ சாப்பிடச்செய்கிறது. ஏனெனில், சென்றமுறை அதைச் சாப்பிட்டபோதும், அதற்குமுன் ஒருமுறை அதைச் சாப்பிட்டபோதும் அவர் மகிழ்ச்சியாக உணர்ந்திருக்கிறார். இது கிட்டத்தட்ட அனிச்சைச்செயலைப்போல் நிகழ்கிறது: இதைத் தன்னால் கட்டுப்படுத்த இயலாது என்று அவர் உணர்கிறார்.

இன்னோர் எடுத்துக்காட்டு: புகைபிடித்தல் ஒருவர் கையில் சிகரெட்டுடன் ஸ்டைலாகப் புகையை ஊதியபடி ஓர் அழகான காரை ஓட்டுகிறார், அதைப் பார்க்கும் பிறர், தாங்களும் இதேபோல் 'பந்தா'வாக இருக்கவேண்டும் என்பதற்காகப் புகை பிடிக்கும் பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள். அப்போது அவர்கள் புகை பிடிப்பதை எண்ணி மகிழ்ச்சியாக உணர்ந்திருக்கமாட்டார்கள்: அதேசமயம், புகை பிடித்தால் தாங்களும் 'பந்தா'வாக இருக்கலாம் என்று உணர்ந்திருப்பார்கள். ஆனால், கல்லூரிப்படிப்பை முடித்து 15 ஆண்டுகளுக்குப்பிறகும், அவர்கள் தொடர்ந்து புகை பிடிக்கிறார்கள்; அதை நிறுத்தவேண்டும் என்று அவர்கள் பலமுறை முயன்றிருக்கிறார்கள், எதுவும் பயன் தரவில்லை. சில நேரங்களில், அவர்கள் புகை பிடிப்பத்தை வெற்றிகரமாக நிறுத்தியிருப்பார்கள்; ஆனால், அடுத்தமுறை ஓர் அழுத்தமான நிகழ்வு ஏற்படும்போது, மீண்டும் அதே பழக்கத்துக்குத் திரும்பியிருப்பார்கள்.

அழுத்தமான நிகழ்வுகளை நம் மூளை எப்படி எதிர்கொள்கிறது?

மூளையிலிருக்கும் ப்ரீஃப்ரன்டல் காரெடெக்ஸ் என்ற பகுதி, தர்க்கச்சிந்தனை, தீர்மானமெடுத்தல், படைப்புணர்வுச் செயல்முறைகளுக்குப் பொறுப்பேற்கிறது. ஒருவர் அதீதமாக உண்கிறார் அல்லது புகை பிடிக்கிறார் என்றால், அது அவருக்குத் தீமையைத் தரும் என்பது அவருடைய ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸுக்குத் தெரியும்.

அழுத்தமான நேரங்களில், மூளையின் பல பகுதிகள் அமைதியாகிவிடுகின்றன, முக்கியமாக ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ்தான் முதலில் அமைதியாகிறது, இதனால் மனிதர்களால் தர்க்கரீதியில் சிந்திக்கவோ தீர்மானமெடுக்கவோ இயலுவதில்லை. அழுத்தத்தைச் சந்திக்கிறவர்கள் பிறரைப் பார்த்துக் கத்துவதும், கெட்ட பழக்கங்களில் ஈடுபடுவதும் இதனால்தான்; இதைச் செய்வதால் எந்தப் பலனும் இருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும், ஆனாலும் அவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள்.

பரிசின் அடிப்படையிலான கற்றல்தான் பழக்கத்தின் உருவாக்கத்துக்கு வழிவகுக்கிறது. இதன் வேர், உயிர்வாழ்தலில் உள்ளது, ஆனால், இதன் காரணமாகவே ஒருவர் உயிரிழக்கவும் கூடும்: உலகெங்கும் மக்களுடைய மரணத்துக்குக் காரணமாக அமைபவற்றுள் தவிர்க்கக்கூடியவை என்று பார்த்தால், அப்பட்டியலில் முதலில் வருபவை உடல்பருமனும் புகையிலையும்தான்.

இந்தப் பழக்கங்கள் அனைத்துக்கும் உறுதிப்படுத்தும் பின்விளைவுகள் உள்ளன, ஒரு குறிப்பிட்ட செயலை இரண்டாவதுமுறை, மூன்றாவதுமுறை, நான்காவதுமுறை செய்வதா, வேண்டாமா என்று மூளை தீர்மானிப்பது இதைக்கொண்டுதான்.

சூதாட்டம் போன்ற அடிமைத்தனங்கள் எப்படி நிகழ்கின்றன? ஸ்டீஃபென் கெண்டால் என்ற பழக்கவழக்க உளவியலாளர் பழக்கங்கள் மற்றும் உறுதிப்படுத்தலை ஆராய்ந்தார், இதற்காக அவர் ஒரு புகழ்பெற்ற பரிசோதனையைநிகழ்த்தினார், அதைக்கொண்டு, உறுதிப்படுத்தல் மற்றும் பரிசு ஆகிய அமைப்புகளை நாம் புரிந்துகொள்ளலாம். இந்தப் பரிசோதனைக்காக, புறாக்கள் இரண்டு கூண்டுகளில் அடைக்கப்பட்டன; இரண்டிலும் ஒரு லீவர் அமைக்கப்பட்டது. முதல் கூண்டில் இருக்கும் லீவரை எப்போது அழுத்தினாலும் உணவு கிடைக்கும். அதாவது, இந்தக் கூண்டில் இருக்கும் புறாக்கள் அந்த லீவரை அழுத்தி உணவைப் பெறலாம். இரண்டாவது கூண்டில் இருக்கும் லீவரும் உணவைத் தரும், ஆனால், எப்போதும் உணவைத் தராது; அதாவது, சில நேரங்களில் உணவு கிடைக்கும், சில நேரங்களில் கிடைக்காது. இந்த இரு கூண்டுகளையும் கெண்டால் தொடர்ந்து ஆராய்ந்தார், இரண்டாம் கூண்டில் இருக்கும் புறாக்கள் முதல் கூண்டில் இருக்கும் புறாக்களைவிட அதிகமுறை லீவரை அழுத்துகின்றன என்று கண்டறிந்தார்.

சூதாட்டத்திலும் இதேமாதிரியான ஓர் அமைப்புதான் உள்ளது: அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாதபோது, மனிதர்களுக்குக் குறுகுறுப்பு அதிகரிக்கிறது, அவர்கள் அந்தச் செயலின் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். 'ஸ்லாட் மெஷின்ஸ்' என்ற விளையாட்டுக்கருவிகளைக் கொண்டு விளையாடும் குழந்தஹிகளும் இதேமாதிரிதான் நடந்துகொள்கிறார்கள். அங்கும் இந்தக் கொள்கை பொருந்தும். உறுதிப்படுத்தல் தொடர்ச்சியாகக் கிடைப்பதைவிட, அவ்வப்போது கிடைப்பதைதான் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள், அதுதான் அவர்களுக்குப் பெரிய பரிசு என்று கெண்டாலின் பரிசோதனை காட்டியது.

ஒருவருடைய பழக்கங்கள் அவருடைய சமூக, தனிப்பட்ட மற்றும் தொழில்சார்ந்த வாழ்க்கைகளைப் பாதிக்கத் தொடங்கும்போதுதான் அவை பிரச்னையாகின்றன. ஒருவரால் சிகரெட் பிடிக்காமல் எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்ய இயலுவதில்லை; இன்னொருவர் வாழ்க்கையில் சிறிய அழுத்தம் வந்தாலும் சாக்லெட் சாப்பிட்டே தீருவேன் என்கிறார்... இவர்களெல்லாம் தங்களைத் தாங்களே பரிசோதித்துக்கொள்வது நல்லது. எல்லா அடிமைத்தனங்களுக்கும் அடித்தளத்தில் உள்ளவை, பழக்கங்கள்தான். அடிமைத்தனங்களில் வேறு சில காரணிகளும் உண்டு: தன்னம்பிக்கை, அனிச்சைச்செயல்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் திறனில் குறைபாடுகள், அவற்றோடு தொடர்புடைய ஏக்கங்கள் போன்றவை. எனினும், அவை பழக்கங்களைப்போன்ற அமைப்பில்தான் உருவாகின்றன.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org