மனநலப் பிரச்னையும் தாய்மையும்

ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் எடுக்கிற தீர்மானங்களிலேயே மிக முக்கியமானது, தாயாகும் தீர்மானம். ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு மனநலப் பிரச்னை இருந்தால், அல்லது, இதற்குமுன் அவருக்கு மனநலப் பிரச்னை இருந்திருந்தால், இந்தத் தீர்மானம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவருக்கு மனநலப் பிரச்னை இருக்கிறது அல்லது இதற்குமுன் இருந்திருக்கிறது என்றால், அவர் தாயாகுமுன் பல விஷயங்களை யோசிக்கவேண்டும். அவர் குழந்தைக்குத் திட்டமிடுமுன் தன்னுடைய மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இந்தத் தீர்மானத்தில் அவருடைய கணவர் அல்லது இன்னொரு குடும்ப உறுப்பினரும் பங்கேற்பது சிறந்தது. காரணம், இதுபற்றித் தனியே சிந்தித்துத் தீர்மானிப்பது சிரமமாக இருக்கலாம். இதுபோன்ற நேரங்களில் அவர்கள் விவாதிக்கவேண்டிய சில விஷயங்கள்:

  • கர்ப்பமாக விரும்பும் பெண்ணுக்கு இதற்குமுன் மனநலப் பிரச்னை இருந்திருந்தால், கர்ப்பத்தினால் அவருடைய ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா? கர்ப்பமாவதால் அவருடைய மனநலம் பாதிக்கப்படக்கூடுமா? இதற்குமுன் அவர் மருந்துகளைச் சாப்பிட்டிருந்தால், அது கருவைப் பாதிக்கக்கூடுமா?

  • அவர் இப்போதும் மருந்துகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் என்றால், அது குழந்தையை எப்படிப் பாதிக்கும்? ஒருவேளை அதனால் தீவிர பாதிப்புகள் இருக்கும் என்றால், ஏதேனும் மாற்று மருந்துகள் உண்டா? அல்லது, அவர் மருந்து சாப்பிடுவதை நிறுத்தலாமா?

  • மருந்து சாப்பிடுவதால் அவர் தாய்ப்பால் தருவது பாதிக்கப்படுமா? அதனால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

  • குழந்தைக்கும் இதே மனநலப் பிரச்னை, அல்லது இதைப்போன்ற வேறு மனநலப் பிரச்னை வரக்கூடுமா?

  • பேறுகாலத்துக்குப்பிறகு ஏதேனும் சிக்கல்கள் இருக்குமா? என்ன முன்னெச்சரிக்கைகளை எடுக்கவேண்டும்?

  • அவர் தன்னுடைய மகப்பேறு மருத்துவருடன் பேசவேண்டிய பிரச்னைகள் என்னென்ன?

மனநலப் பிரச்னை கொண்ட பெண்களும் சவுகர்யமாகக் கர்ப்பமாகலாம், குழந்தை பெற்றுக்கொள்ளலாம், கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இதனைக் கையாளவேண்டும், அவ்வளவுதான். அவர் கர்ப்பமாவதன் ஆபத்துகள், பலன்களைப்பற்றி மனநல மருத்துவர் ஆராய்வது முக்கியம். இதற்குக் காரணம், ஒரு பெண்ணுக்கு மனநலப் பிரச்னை வந்து, குணமாகி, அதன்பிறகு அவர் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்தால்கூட, இப்போது அவருக்கு அந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான ஆபத்து மிக அதிகம். சில சமயங்களில், 'சில மாதம் பொறுத்திருந்துவிட்டு, அதன்பிறகு கர்ப்பத்தைப்பற்றி யோசியுங்கள்' என்று மருத்துவர் சொல்லக்கூடும். காரணம், அந்தப் பெண்ணுக்குச் சமீபத்தில் மனநலப் பிரச்னை ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம், அல்லது, அவருக்கு அடிக்கடி மனநலப் பிரச்னை வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கலாம். ஒவ்வொரு மனநலப் பிரச்னையும் தனித்துவமானது. இருதுருவக் குறைபாடு, ஸ்கிஜோஃப்ரெனியா என அனைத்துக்கும் வெவ்வேறுவிதமான ஆபத்துக் காரணிகள் உண்டு. ஆகவே, கர்ப்பமாக விரும்பும் பெண் இவற்றைத் தன்னுடைய மனநல நிபுணரிடம் பேசுவது அவசியம்.

பராமரிப்புத் திட்டம்

இதற்குமுன் மனநலப் பிரச்னையைச் சந்தித்திருக்கும் ஒரு பெண் இப்போது கர்ப்பமாக விரும்புகிறார் என்றால், அவருக்கு ஒரு பராமரிப்புத் திட்டம் மிக அவசியம். பொதுவாக இதனை அவரும் அவருடைய மனநல மருத்துவரும் மகப்பேறு மருத்துவரும் இணைந்து உருவாக்கவேண்டும். இந்தத் திட்டத்தில் அவரை எப்போதெல்லாம் பரிசோதிப்பது என்ற விவரங்கள் இருக்கும். இதன்மூலம் கர்பப்த்தின்போது அவரை இன்னும் நன்றாகக் கண்காணிக்க இயலும். மனநலப் பிரச்னை கொண்ட ஒரு பெண் கர்ப்பமானால், அவரிடம் எந்தெந்த அறிகுறிகளைக் கவனிக்கவேண்டும், பிரச்னைகள் வந்தால் என்ன செய்வது என்பதெல்லாம் அந்தப் பெண்ணுக்கும் அவருடைய கணவர் அல்லது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படும். நெருக்கடிச் சூழல்களில் என்ன செய்யவேண்டும் என்கிற ஒரு திட்டமும் வழங்கப்படும். இத்துடன், அத்தகைய சூழ்நிலைகளில் அவரது குடும்பத்தில் தொடர்புகொள்ளக்கூடிய இன்னொருவர் இருப்பதையும் இது உறுதிசெய்கிறது.

சிக்கல்கள் ஒருபுறமிருக்க, மனநலப் பிரச்னை கொண்ட பெண்கள் பலர் சவுகர்யமாகக் கர்ப்பம்தரித்துக் குழந்தை பெற்று நல்ல தாய்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அதற்கு முக்கியத் தேவைகள், தயாராக இருத்தல், இதுபற்றி நன்கு அறிந்துவைத்திருத்தல், அதன்மூலம் பயச்சூழல்களைத் தவிர்த்தல்.  

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org