புதிய தாய்மை: குழந்தை பிறந்தபின் தாயின் தூக்கத்தில் பிரச்னைகள் வருமா? 

புதிய தாய்மை: குழந்தை பிறந்தபின் தாயின் தூக்கத்தில் பிரச்னைகள் வருமா? 

குழந்தை பெற்றுக்கொள்வதென்பது ஒரு தாய்க்கு உடல்ரீதியில் மற்றும் உணர்வுரீதியில் சோர்வைக் கொண்டுவருகிற ஒரு விஷயம். அப்போது தாய்க்கு நிறைய ஓய்வு தேவை, அவர் தன்னுடைய மனத்தை இதமாக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் தேவை, அப்போதுதான் அவர் இந்தச் சோர்வான அனுபவத்திலிருந்து மீள இயலும். அதேசமயம், பல தாய்மார்கள் போதுமான அளவு தூக்கம் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள்; இது அவர்களுடைய உணர்வுத் துயரத்தை அதிகப்படுத்தலாம். குழந்தையின் நலம்பற்றிய பதற்றங்கள், குழந்தை நன்கு தூங்குகிறதா என்பதுபற்றிய தொடர்ச்சியான கவலைகள் போன்றவற்றால், தாய்க்கு மன நிறைவு இல்லாமலிருக்கலாம், அவருக்குப் போதுமான ஓய்வு கிடைக்காமலிருக்கலாம். சில தாய்மார்கள், தாங்கள் தூங்கும்போது தங்களுடைய குழந்தையைக் காயப்படுத்திவிடுவோம் என்று கவலைகொள்கிறார்கள். பல தாய்மார்களால் களைப்பு, சோர்வைச் சமாளித்துக்கொண்டு ஒரு நல்ல தூக்க ஒழுங்குக்குத் திரும்ப இயலுகிறது; ஆனால் சிலர், தூக்கம் வராமல் சிரமப்படுகிறார்கள்.

குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய தூக்கமின்மை என்பது, புதிய தாய்மார்கள் களைப்போடு இருந்தாலும், அவர்களுடைய குழந்தை நன்கு தூங்கிக்கொண்டிருந்தாலும், அவர்களால் தூங்க இயலாத ஒரு நிலையாகும். அவர்கள் தொடர்ந்து பரபரப்பாக உள்ளார்கள், குழந்தை நன்கு தூங்குகிறதா என்று கவனித்தபடி இருக்கிறார்கள். தாங்கள் தூங்கிவிட்டால், குழந்தை அழும்போது அது தங்களுக்குக் கேட்காது என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். சில சமயங்களில், அவர்கள் தூங்கிவிடுகிறார்கள்; ஆனால், 'கற்பனையான ஒலிகளை'க் கேட்டு விழித்துக்கொள்கிறார்கள், அதாவது, குழந்தை நன்கு தூங்கிக்கொண்டிருந்தபோதும், அதன் அழுகைச் சத்தத்தைக் கேட்பதாகக் கற்பனை செய்துகொள்கிறார்கள். குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய தூக்கமின்மை என்பது, குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது; சில நேரங்களில் அது தனியாகக் காணப்படுவதும் உண்டு.

புதிய தாய்மார்கள் தங்களுடைய தூக்கத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்?

ஒருவருக்குக் குழந்தை பிறந்ததுமுதலே அவரால் போதுமான அளவு தூங்க இயலவில்லையென்றால், அவர் தன்னுடைய தூக்கத்தின் தரத்தை மேம்படுத்திக்கொள்ள இவற்றை முயன்றுபார்க்கலாம்:

  • கஃபைன் உள்ள பொருட்களைத் தவிர்க்கலாம்: கஃபைனானது ஒருவருடைய தூக்கத்தைத் தொந்தரவு செய்யும், ஆகவே, அதை எடுத்துக்கொள்ளாமலிருப்பது நல்லது. குறிப்பாக, நாளின் பிற்பகுதியில் அதனை எடுத்துக்கொள்ளவேண்டாம்.

  • ஒரு தூக்க ஒழுங்கை உருவாக்கலாம்: தூங்கச்செல்வதற்குமுன் மனத்தை இதமாக்கிக்கொள்வது நல்லது. எடுத்துக்காட்டாக, கதகதப்பான நீரில் குளிப்பது, ஒரு புத்தகத்தைப் படிப்பது, அல்லது, மெல்லிசையைக் கேட்பது போன்றவை ஒருவருடைய மனத்தை இதமாக்கலாம், தூக்கத்துக்குத் தயாராக்கலாம்.

  • உடலை இதமாக்கும் உத்திகள்: ஆழமாக மூச்சுவிடுதல் மற்றும் தசைகளைத் தளர்வாக்கும் உத்திகள் போன்றவை ஒருவருடைய உடலை இதமாக்கலாம்.

  • துணைவரையும் இதில் பங்கேற்கச்செய்யலாம்: புதிய தாய் நன்கு தூங்குவதற்கு அவருடைய துணைவர் அல்லது கணவர் நன்கு உதவலாம். எடுத்துக்காட்டாக, கணவர் மனைவிக்கு மசாஜ் செய்துவிடலாம்; இதன்மூலம் மனைவியின் உடல் தளர்வடைந்து தூக்கம் வரும். கணவரும் மனைவியும் 'நைட் டியூட்டி'யைப் பகிர்ந்துகொள்ளலாம்; அதாவது, இன்று இரவு இவர், நாளை இரவு அவர் என மாற்றி மாற்றிக் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் கடமையை ஆற்றலாம், இதன்மூலம் தாய்க்குக் குழந்தையைப்பற்றிய கவலைகள் குறையும், அவர் இதமாக உணர்வார், அதன்மூலம் அவருடைய தூக்கம் மேம்படும்.

மிக முக்கியமாக, அவர் தன்னுடைய மருத்துவரிடம் தன் தூக்கப் பிரச்னைகளைப்பற்றிப் பேசவேண்டும். இந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்கலாம் என்பதுபற்றி மருத்துவர் அவருக்குச் சிறந்த ஆலோசனையை வழங்குவார். மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல், தூக்கத்துக்கு உதவும் மருந்துகளை/கருவிகளைப் பயன்படுத்தவேண்டாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org