புதிதாகத் தாயாதல்: சிலர் அதீதமாகக் கவலைப்படுகிறார்களா?

ஒரு குழந்தையை இந்த உலகுக்குக் கொண்டுவருவது என்பது பல கவலைகள் மற்றும் அழுத்தத்தைக் கொண்ட ஒரு செயல்பாடாகும்.  இந்தக் கவலைகள் மற்றும் அழுத்தங்களில் பெரும்பாலானவை தற்காலிகமானவை, காலப்போக்கில் சரியாகிவிடக்கூடியவை.    அதேசமயம், சிலருக்குத் தொந்தரவான எண்ணங்கள் மற்றும் கவலைகள் தொடரலாம், அவர்களால் அன்றாடச் செயல்பாடுகளைச் செய்ய இயலாமல் போகலாம், அப்படிப்பட்டவர்களுக்கு போஸ்ட்பார்டம் பதற்றம் ஏற்பட்டிருக்கலாம்.  எந்த ஒரு புதிய தாயும் குழந்தையின் ஆரோக்கியத்தைப்பற்றி, குழந்தைக்கு என்ன உணவு தருவது என்பதுபற்றிக் கவலைப்படலாம், இவையெல்லாம் மிகவும் இயல்பானவை.    ஆனால் இந்தக் கவலைகள் தொடர்ச்சியான தொந்தரவு எண்ணங்களாகவும் பயங்களாகவும் மாறினால் அவருக்கு இன்னொருவருடைய உதவி தேவைப்படலாம்.

போஸ்ட்பார்டம் பதற்றத்தின் அறிகுறிகள், கர்ப்பத்தின்போது ஏற்படுகிற பதற்றத்தின் அறிகுறிகள்போலவே இருக்கும்.   இந்த அறிகுறிகளில் சில:

  • எப்போதும் நிலையற்ற உணர்வு, எரிச்சலுடன் இருத்தல்
  • அன்றாட வேலைகளைச் செய்ய இயலாதபடி பாதிக்கும் தொடர்ச்சியான, தொந்தரவான எண்ணங்கள்
  • இரவில் ஓய்வெடுக்கவோ தூங்கவோ சிரமப்படுதல்
  • குழந்தையின் நலனைப்பற்றித் தொடர்ந்து கவலைப்பட்டுக்கொண்டே இருத்தல், குழந்தை நன்றாகதான் இருக்கிறதா என்று அடிக்கடி சென்று பார்த்துக்கொண்டே இருத்தல்
  • குழந்தையுடன் வெளியே செல்ல இயலாத அளவுக்குக் கவலை

ஒரு புதிய தாய் இந்த அறிகுறிகளை அனுபவித்தால் அவர் தன்னுடைய GP அல்லது மகப்பேற்று மருத்துவருடன் பேசலாம், அந்த மருத்துவர் அவரை ஒரு மனநல நிபுணரிடம் அனுப்புவார். 

போஸ்ட்பார்டம் OCD

சில நேரங்களில் புதிய தாய்மார்களுக்கு மிகவும் பயத்தை உண்டாக்கக்கூடிய தொந்தரவான காட்சிகள் திரும்பத் திரும்பத் தோன்றலாம், அதன்மூலம், தங்களுடைய குழந்தைக்குக் காயத்தைக் கொண்டுவரக்கூடிய விஷயங்களைத் தவிர்ப்பதற்காக அவர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுக்கக்கூடும்.    போஸ்ட்பார்டம் OCD க்கான சில அறிகுறிகள்: 

  • குழந்தையைப்பற்றிய தொந்தரவான மற்றும் அச்சத்தை உண்டாக்கக்கூடிய எண்ணங்கள் மற்றும் காட்சிகள்
  • அச்சம் தரும் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்காகத் தாய் சில செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்பச் செய்கிற கட்டாயமான நடவடிக்கை.  எடுத்துக்காட்டாக, குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று ஒரு தாய் அஞ்சக்கூடும், அதற்காக வீட்டைத் தொடர்ச்சியாகத் தூய்மைப்படுத்திகொண்டே இருக்கக்கூடும்; அல்லது, குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும்போதும் அதை அடிக்கடி சென்று பார்க்கவேண்டும் என்று அவர் உணரக்கூடும்.   
  • குழந்தையுடன் தனியாக இருக்க அஞ்சுதல்
  • தீவிர விழிப்புணர்வு கொண்ட நடவடிக்கை, அதனால் மனத்தைத் தளர்வாக வைத்துக்கொள்ள இயலாமலிருத்தல்.

சிகிச்சை

குழந்தைப்பேற்றுக்கு முந்தைய பதற்றத்தைப்போலவே, போஸ்ட்பார்டம் பதற்றத்தின் சிகிச்சையும் அறிகுறிகளின் தீவிரத்தன்மையைப் பொறுத்து அமைகிறது.   இந்த அறிகுறிகள் தீவிரமாக இல்லாவிட்டால், உணர்வு ஆதரவு மற்றும் சிகிச்சை போன்றவை அந்தத் தாய் தன்னுடைய பதற்றத்தைச் சமாளிக்க உதவலாம்.    அதேசமயம் இன்னும் தீவிரமான அறிகுறிகளைக் கொண்ட தாய்மார்களுக்கு உளவியல் சிகிச்சையுடன் மருந்துகளும் தேவைப்படலாம்.   அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) அல்லது தனிநபர்களுக்கிடையிலான சிகிச்சை (IPT) போன்ற சிகிச்சைகள் அந்தத் தாய்க்கு உதவக்கூடும்.  இந்தச் சிகிச்சைகளின் நோக்கம், இந்தத் தொந்தரவான எண்ணங்களின் அடிப்படைக் காரணத்தைப் புரிந்துகொள்ளுதல், அவற்றுக்குப் பதிலாக நல்ல எண்ணங்களைக் கொண்டுவருதல்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org