NIMHANS பிறப்புக்கால மன நலச் சேவைகள், பெங்களூர், இந்தியா - கர்ப்பமாக உள்ள, புதிதாகக் குழந்தை பெற்ற பெண்களுக்கான வழிகாட்டல் குறிப்பு

கர்ப்பமாக உள்ளவர்கள் மற்றும் புதிதாகக் குழந்தை பெற்றுள்ள பெண்கள் COVID-19 தொடர்புள்ள பதற்றம் மற்றும் உளவியல் அழுத்தத்தைச் சமாளித்தல். 

கர்ப்பமாக உள்ள மற்றும் புதிதாகக் குழந்தை பெற்றுள்ள பெண்களுக்கு COVID-19 தொடர்பாக ஏற்படக்கூடிய பொதுவான கவலைகள் எவை? 

1. எனக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் காத்துக்கொள்வது எப்படி? 

2. இன்னும் பிறக்காத என் குழந்தைமீது வைரஸின் தாக்கம் எப்படி இருக்கும்? 

3. பிரசவத்தின்போதும் அதற்கு முன்பாகவும் என் தாய் அல்லது கணவர் என்னுடன் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்களா? 

4. எனக்குப் பிரசவ நேரம் வரும்போது, போக்குவரத்து வசதிகள் கிடைக்குமா? 

5. பிரசவத்துக்கு முந்தைய பரிசோதனைகள் அல்லது ஸ்கேன்களுக்காக ஒரு மருத்துவமனைக்குச் செல்வது பாதுகாப்பானதுதானா? 

6. கர்ப்பமாக உள்ள ஒருவர் கை தூய்மைப்படுத்தியை (சானிடைசர்) மிகுதியாகப் பயன்படுத்தினால் ஏதேனும் பிரச்னைகள் வருமா? 

7. நான் COVID-19க்கு என்னைப் பரிசோதித்துக்கொள்ளவேண்டுமா? 

8. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தால் அது குழந்தையைப் பாதிக்குமா? 

9. என்னுடைய உறவினர்கள் குழந்தையைத் தொட்டுத் தூக்கலாமா? 

10. யாரும் எங்களைப் பார்க்க வராவிட்டால், குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கு எனக்குப் போதுமான ஆதரவு கிடைக்காவிட்டால் என்னுடைய மனநிலை சோர்வடையக்கூடும்; அதைத் தடுப்பது எப்படி? 

கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் சில உண்மைகள் 

1. கர்ப்பத்தின் தொடக்க நிலையில் உள்ள பெண்களுக்கு, COVID-19ஆல் கர்ப்பம் கலையும் வாய்ப்பு மிகுதியாகும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. 

2. கர்ப்பமாக உள்ள ஒருவரிடமிருந்து குழந்தைக்கு வைரஸ் பரவலாம் என்பதற்கும், வைரஸால் குழந்தையிடம் இயல்பற்ற மாற்றங்கள் ஏற்படலாம் என்பதற்கும் எந்தச் சான்றும் இல்லை. 

3. புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிசுக்களுக்கு நோய்த்தொற்றினால் வரும் சிக்கல்களுடைய ஆபத்து கூடுதலாக இல்லை. பிரசவத்துக்கு முந்தைய வழக்கமான பரிசோதனைகள், அல்ட்ராசவுன்ட்கள், தாய் மற்றும் குழந்தை மதிப்பீடுகள் போன்றவை முன்புபோலவே தொடரவேண்டும், ஆனால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடரவேண்டும். 

4. உங்கள் குழந்தையைப் பிரசவிப்பதற்கான மிகப் பாதுகாப்பான இடம், மருத்துவமனைதான். அங்கு நல்ல பயிற்சி பெற்ற ஊழியர்களின் ஆதரவும், தேவைப்பட்டால் நெருக்கடி நேர வசதிகளும் உங்களுக்குக் கிடைக்கும். 

5. தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்க விரும்பும் பெண்கள் அதைச் செய்யுமாறு ஊக்குவிக்கப்படவேண்டும்; அதற்கு அவர்களுக்குத் தேவைப்படும் ஆதரவை வழங்கவேண்டும். தாய்ப்பாலில் வைரஸ் பரவுகிறது என்பதற்கான எந்தச் சான்றும் இப்போது இல்லை. 

6. தாய்க்கு COVID-19 தொற்று இருந்தால், அல்லது, இருப்பதாக ஐயம் எழுந்தால், உடனே அவரை அவருடைய குழந்தையிடமிருந்து பிரித்துவிடக்கூடாது. அதற்குப்பதிலாக, அவர் மேம்பட்ட முன்னெச்சரிக்கைகளையும் பொதுவான தூய்மை விதிமுறைகளையும் பின்பற்றவேண்டும் என்று ஊக்கப்படுத்தலாம்; குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது அவர் ஒரு முகமூடியை அணிவதுபற்றிச் சிந்திக்கலாம் அல்லது, பாலை வெளியிலெடுத்துப் பாட்டில்மூலம் குழந்தைக்கு அளிக்கலாம். 

சிறிதளவு பதற்றம் இயல்பானதுதான், புரிந்துகொள்ளக்கூடியதுதான் என்பதைத் தயவுசெய்து நினைவில் வையுங்கள். அதேசமயம், இதைப்பற்றி யாரிடமாவது பேசுவது உதவிகரமாக இருக்கும். ஆகவே, நீங்கள் நம்புகிற நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் பேசுங்கள். 

சில நேரங்களில், பதற்றம் மிகுதியாகலாம், அப்போது நீங்கள் உங்களுடைய நலப்பராமரிப்பு வழங்குநரைத் தொடர்புகொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக, உங்களுடைய மருத்துவர் அல்லது உங்களுடைய ANMஐத் தொடர்புகொள்ளலாம். 

என்னுடைய பதற்றம் அல்லது துன்பவுணர்வு இயல்பானதா அல்லது மிகுதியானதா என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது? 

உங்களுக்கு மிகுதியான பதற்றம் அல்லது உளவியல் துன்பம் உள்ளதா என்பதை அடையாளம் காண உங்களுக்கு உதவும் சில அறிகுறிகள் இவை 

 • அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் எடுத்தபிறகும், ஏதும் நிகழ்ந்துவிடாது என்று பிறர் உறுதிப்படுத்தியபிறகும், தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று மிகுதியாகக் கவலைப்படுதல் 

 • பதற்றத்தால் தூக்கமின்மை 

 • COVID-19பற்றிய சமூக ஊடகச் செய்திகளில் மிகுதியாகக் கவனம் செலுத்துதல் 

 • குடும்ப உறுப்பினர்கள் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுபற்றி மிகுதியான பதற்றம் கொள்ளுதல் 

 • வேலைசெய்யாமலிருப்பதுபற்றி மிகவும் கவலைப்படுதல் 

 • தனித்திருப்பதால் வருத்தம், சினத்தை உணர்தல், குடும்பத்தினர், நண்பர்களைச் சந்திக்க இயலாமலிருத்தல் 

 • பதற்றமாக அல்லது பரபரப்பாக உணர்தல் 

 • கவலைப்படுவதை நிறுத்தவோ கட்டுப்படுத்தவோ இயலாமலிருத்தல் 

 • மனத்தைத் தளர்வாக்கிக்கொள்ளச் சிரமப்படுதல் 

 • ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்வதே கடினமாக இருக்கும் அளவுக்கு நிலையற்று இருத்தல் 

 • எளிதில் எரிச்சலடைதல் அல்லது சினம் கொள்ளுதல் 

 • மோசமான ஏதோ நடந்துவிடுமோ என்று அச்சத்தை உணர்தல் 

கர்ப்பிணிப் பெண்கள் அல்லது புதிதாகக் குழந்தை பெற்ற தாய்மார்கள் மிகுதியான பதற்றம் கொள்வதை எப்படித் தடுக்கலாம்? 

நான்கு வழிகள்: பகிர்தல், திட்டமிடுதல், பதற்ற எண்ணங்களைக் குறைத்தல் மற்றும் மனத்தைத் தளர்வாக்கிக்கொள்ளுதல் 

A. பகிர்தல் 

1. உங்கள் மகப்பேறியல் மருத்துவர் அல்லது முதன்மை மருத்துவர் அல்லது உங்கள் ANMஉடன் தொடர்ந்து பேசிவாருங்கள். நீங்கள் மிகப் பதற்றமாகவோ கவலையாகவோ உணர்ந்தால் அவர்களைத் தொடர்புகொள்வது எப்படி என்று அவர்களைக் கேளுங்கள். அந்த மருத்துவமனை அல்லது மருந்தகத்தில் நீங்கள் அழைக்கக்கூடிய ஒரு தொலைபேசி எண் உள்ளதா என்று கண்டறியுங்கள். 

2. உங்கள் நாளை நான்கு பகுதிகளாகப் பிரியுங்கள்: ஓய்வு, பொழுதுபோக்குகள், பணி மற்றும் உடற்பயிற்சி. இந்த நான்கு தலைப்புகளையும் சமமாகப் பயன்படுத்தி உங்களுக்கென்று ஒரு கால அட்டவணையைத் தயாரிக்க முயலுங்கள். 

3. இயன்றவரை தனிமையைத் தவிர்க்க முயலுங்கள், உறவினர்கள், நண்பர்களுடன் தொலைபேசி, வீடியோ அழைப்புகளின்மூலம் உரையாட வழி காணுங்கள். 

4. மனக் கலக்கத்தை உண்டாக்கும் சமூக ஊடக மற்றும் TV நிகழ்ச்சிகளிலிருந்து விலகியிருங்கள்; உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரிடம் எதிர்மறைச் செய்திகளை உங்களுக்கு அனுப்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், நிறையச் செய்திகள் வருகிற குழுக்களிலிருந்து விலகிவிடுங்கள். 

5. சமூகத் தனிமைப்படுத்தலின்போது, கர்ப்பத்துடன் தொடர்புடைய வழக்கமான கொண்டாட்டங்களை உங்களால் கொண்டாட இயலாமல் போகலாம். இது உங்களுக்கு ஏமாற்றம் தரலாம். அதற்குப்பதிலாக, உங்களைச் சிறப்பாக உணரச்செய்கிற பிற தனித்துவமான வழிகளைக் கண்டறிய முயலுங்கள். 

எடுத்துக்காட்டாக, நீங்களும் உங்களுடைய உடனடிக் குடும்ப உறுப்பினர்களும் ஒரு சிறிய விழாவில் கலந்துகொள்ளலாம்; அதன் புகைப்படங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம். 

B. தயாரிப்பு மற்றும் திட்டமிடல் - பதற்றத்தைக் கையாள்வதற்கான ஒரு நல்ல வழி, நடக்கப்போகிறவற்றுக்குத் தயாராக இருத்தல். சில விஷயங்களுக்குத் திட்டமிடுவது கடினம்; அதேசமயம், நீங்கள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று ஒரு திட்டத்தைத் தயாராக வைக்கலாம். 

6. ஆம்புலன்ஸ் சேவைகள், உங்களுடைய நண்பர்கள் இருவர் அல்லது மூவர், உங்களுடைய உடனடிக் குடும்ப உறுப்பினர்களுடைய தொலைபேசி எண்களைக் கைவசம் வைத்திருங்கள்; அவர்களுடைய உதவி உங்களுக்குத் தேவைப்படலாம் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். 

7. உங்களுடைய பிரசவத்துக்கு முந்தைய நலப்பராமரிப்பு அட்டையை ஸ்கான் செய்து உங்கள் உடனடி நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள்; மருத்துவமனை அல்லது உங்கள் மருத்துவருடைய தொலைபேசி எண்களையும் அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்; ஒருவேளை, உங்களுடன் இருப்பதற்காக அவர்கள் மருத்துவமனைக்கு வரவேண்டியிருந்தால், இந்தத் தகவல்கள் உதவும். ஊரடங்கு அல்லது ஊரைப் பூட்டிவைத்தல் போன்றவற்றின்போது அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியில் வந்தால், ஏன் வந்தார்கள் என்பதற்கான சான்றைக் காவல்துறையினர் கேட்பார்கள். அப்போது இவற்றைக் காண்பிக்கலாம். 

8. குழந்தை பிறந்ததும், குழந்தை மருத்துவருடைய தொலைபேசி எண்ணைக் கைவசம் வைத்திருங்கள். தடுப்பூசி போடுவதைப்பற்றி அவரிடம் பேசுங்கள். 

C. பதற்றம் தரும் எண்ணங்களைக் குறைத்தல் 

கவலையைக் குறைக்க நீங்கள் என்ன செய்யலாம்? 

 • உங்களுடைய மையக் கவலை என்ன என்பதுபற்றிச் சிந்தியுங்கள், அதை வெளிப்படையாகப் பேசுங்கள். இதனால், வேறு பல பிரச்னைகளுடன் அது கலந்து சிக்கலாவதைத் தடுக்கலாம். உங்கள் கவலை பிரசவத்தைப்பற்றியதா? குழந்தையின் உடல்நலனைப்பற்றியதா? ஊரடங்கு நேரத்தில் மளிகைப்பொருட்களை வாங்குவதற்காக வெளியில் சென்ற உங்கள் கணவர் எப்படி வீடு திரும்புவார் என்பதைப்பற்றியதா? 

 • சில நேரங்களில், நம்முடைய கவலையைப்பற்றி உரக்கச் சிந்தித்தாலே போதும், அந்தக் கவலை தேவையில்லாதது என்பதைப் புரிந்துகொண்டுவிடுவோம். 

 • ‘கவலையைக் கிளறிவிடுதலை’த் தவிர்க்க முயலுங்கள், அதாவது, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றாதீர்கள்: உங்கள் கவலையுடன் தொடர்புடைய தலைப்புகளைப் பேசும் சமூக ஊடகப் பதிவுகள், வலைப்பதிவுகள், அரட்டை அறைகளிலிருந்து விலகியிருங்கள். 

 • உங்களை நீங்களே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: இப்போதைய சூழலில் சாத்தியமுள்ள எல்லாத் தெரிவுகளையும் நான் யோசித்துவிட்டேனா? 

செய்யக்கூடிய நேர்விதமான விஷயங்கள்: 

 • யாருடனாவது பேசுங்கள், இந்தக் கவலையைப்பற்றி இல்லை, எதையாவது பேசுங்கள். வெறுமனே அரட்டையடியுங்கள். 

 • நீங்கள் விரும்பி ரசித்துச் செய்கின்ற ஒரு செயல்பாட்டை அடையாளம் காணுங்கள், அதில் மூழ்குங்கள்: படித்தல், இசை கேட்டல், ஒரு புதிரைத் தீர்த்தல், நடத்தல், உங்களைச் சுற்றியிருக்கிற குழந்தைகளுடன் விளையாடுதல், ஒரு புதிய சமையல் குறிப்பை முயன்றுபார்த்தல், ஒரு கப்போர்டைத் தூய்மைப்படுத்துதல், சில கைவினைப் பொருட்களைச் செய்தல், தன்னம்பிக்கைப் பொன்மொழிகளைக் கொண்டு சுவரொட்டிகள் தயாரித்தல், நாட்குறிப்பு/வலைப்பதிவு எழுதுதல் போன்றவை. 

 • இதமான உணர்வை நாடுவதற்கான வழிகளைக் கண்டறியுங்கள்: ஒரு தன்னம்பிக்கைச் சொற்பொழிவு, இதம் தரும் இசை, மந்திரங்கள் சொல்லுதல், அறிவார்ந்த சொற்களைக் கொண்ட ஒரு புத்தகம். 

 • ஒரு நன்றியுணர்வுக் குறிப்பேட்டை எழுத முயலுங்கள், நீங்கள் எதற்கெல்லாம் நன்றி தெரிவிக்கிறீர்கள் என்று சிந்தித்து அனைத்தையும் பட்டியலிடுங்கள். 

D. மனத்தைத் தளர்வாக்கிக்கொள்ளுதல் மற்றும் மனமுழுமை - மனத்தைத் தளர்வாக்கிக்கொள்வதற்கான வழிகளைக் கண்டறியுங்கள்: யோகாசனம், தியானம், ஆழமாக மூச்சுவிடுதல், மனமுழுமை. இவற்றைச் செய்ய உங்களுக்கு எந்தப் பளபளப்பான கருவிகளும் தேவையில்லை. ஒரு கச்சிதமான, எந்தத் தொந்தரவும் இல்லாத நேரம்/இடம் வேண்டும் என்று காத்திருக்கவும் வேண்டியதில்லை. 

மனத்தைத் தளர்வாக்கும் சில எளிய உடற்பயிற்சிகள்: 

 • மனமுழுமை மூச்சுவிடுதல்: ஒரு நாற்காலி அல்லது படுக்கையில் அமர்ந்தபடி உங்கள் கண்களை மூடுங்கள், உடலைத் தளர்வாக்குங்கள். உங்கள் பாதம் தரையில் படுவதைக் கவனியுங்கள். உங்கள் மூச்சுவிடுதலில் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு மூச்சும் உள்ளே வருவதை, வெளியில் செல்வதைக் கவனியுங்கள், மறுபடி உள்ளே வருவதை, வெளியில் செல்வதைக் கவனியுங்கள். இந்த நேரத்தில் உங்கள் எண்ணங்கள் அங்குமிங்கும் திரியலாம், அவற்றை மீண்டும் உங்கள் மூச்சுக்குக் கொண்டுவாருங்கள். உங்களைச் சுற்றியுள்ள ஒலிகள் எவையேனும் (கதவு மணி, பறவைகளின் கீச்கீச், போக்குவரத்தின் ஒலி) உங்கள் கவனத்தை ஈர்த்தால், ஒலியைக் கவனியுங்கள், ஆனால், உங்கள் கவனத்தை மீண்டும் உங்கள் மூச்சுவிடுதலுக்குக் கொண்டுவாருங்கள். இதை நீங்கள் பத்து மூச்சுவிடுதல்களுக்குச் செய்யலாம், அல்லது, 1 நிமிடம், அல்லது 3 நிமிடம், அல்லது 5 நிமிடங்களுக்குச் செய்யலாம், பிறகு, மெதுவாக உங்கள் கண்களைத் திறங்கள். 

 • சதுர மூச்சுவிடல்: 1-2-3-4 என்று எண்ணியபடி மூச்சை உள்ளே இழுங்கள். 1-2-3-4 என்று எண்ணியபடி மூச்சை இழுத்துப்பிடியுங்கள். 1-2-3-4 என்று எண்ணியபடி மூச்சை வெளியில் விடுங்கள். 1-2-3-4 என்று எண்ணியபடி மூச்சை இழுத்துப்பிடியுங்கள். இதை மூன்று அல்லது ஐந்து மூச்சுவிடல்களுக்குச் செய்யுங்கள்; அல்லது, நீங்கள் முன்பைவிட அமைதியாக உணரும்வரை செய்யுங்கள். 

கர்ப்பமாக உள்ள மற்றும் புதிதாகக் குழந்தை பெற்ற பெண்களுடைய குடும்ப உறுப்பினர்கள் எவ்விதங்களில் அந்தப் பெண்களுக்கு உதவலாம்? 

1. மிகுதியான பதற்றம் அல்லது உளவியல் துன்பத்தின் அறிகுறிகளை அறிந்திருக்கலாம் 

2. அந்தப் பெண்ணின் கவலைகளைக் குறைத்துப்பேசாமலிருக்க முயலலாம்: அவர் இப்படி உணர்வது இயல்புதான் என்று அவருக்குச் சொல்லலாம் 

3. அவருடைய கவலைகளில் சிலவற்றைச் சரிசெய்ய முயலலாம், அவர் எல்லாக் கவலைகளையும் தனக்குள் வைத்துக்கொண்டு அழுத்தத்தை அனுபவிக்காமல், தன்னுடைய நலப்பராமரிப்பு வழங்குநரிடம் இதுபற்றிப் பேசலாம் என்று ஊக்குவிக்கலாம் 

4. அவர் ஓர் ஒழுங்கைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தலாம், ஆர்வமான உரையாடல்களில் அவரை ஈடுபடுத்தலாம் 

5. நீங்கள் ஒன்றாகச் செய்யக்கூடிய சில செயல்பாடுகளைக் கண்டறியலாம்: ஒரு விளையாட்டு விளையாடலாம், ஒரு கைவினைப்பொருள் செய்யலாம் அல்லது கதைகளைச் சொல்லலாம் 

6. அவருடைய அறிக்கைகள் மற்றும் மருத்துவமனை அட்டை அல்லது குழந்தையின் அட்டை ஆகியவற்றின் ஒரு பிரதி உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்தலாம், இவை உங்களிடம் தயாராக உள்ளன என்று அவருக்குச் சொல்லலாம். அவருக்கு வலியெடுத்தால், ரத்தப்போக்கு ஏற்பட்டால், அல்லது, அவருக்கு பிரசவ வலி உண்டானால் அந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என்பதற்கான ஒரு திட்டத்தை விவாதியுங்கள். ஊர் இதேபோல் தொடர்ந்து பூட்டப்பட்டிருக்குமானால், குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்கான ஆதரவை எப்படிப் பெறுவது என்று ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். 

7. மனத்தைத் தளர்வாக்கிக்கொள்வதற்கான எளிய முறைகளை அவருக்குச் சொல்லித்தாருங்கள், அவற்றை அவருடன் சேர்ந்து செய்யுங்கள் 

8. நீங்கள் பதற்றமாக உணர்ந்தால், அதுபற்றி வேறு யாரிடமாவது பேச முயலுங்கள்; அவருடைய பதற்றங்களுடன் இதையும் சேர்த்துவிடாமலிருக்க முயலுங்கள் 

9. புதிதாகக் குழந்தை பெற்ற ஒரு தாய்க்குப் போதுமான தூக்கமும், குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்கான உதவியும் கிடைப்பதை உறுதிப்படுத்துங்கள். குழந்தைக்குப் பாடல்களைப் பாடுமாறு அவரை ஊக்குவியுங்கள்; குழந்தையோடு விளையாடச் சொல்லுங்கள்; செல்ஃபோன் போன்ற திரைகளில் செலவிடும் நேரத்தைக் குறைக்கச்சொல்லுங்கள். 

10. ஊர் பூட்டப்பட்டிருத்தல் அல்லது சமூகத் தனிமைப்படுத்தல் முயற்சிகளால், குழந்தைப்பிறப்புடன் தொடர்புடைய வழக்கமான சில சடங்குகள் இப்போது சாத்தியமில்லாமல் போகலாம். வீட்டிலேயே இதைக் கொண்டாடுவதற்கான வேறு எளிய வழிகளைக் கண்டறிய முயலுங்கள். எடுத்துக்காட்டாக, குழந்தையின் முதல் மாதத்தைப்பற்றிய ஒரு நினைவுப் புத்தகத்தை உருவாக்கலாம்; நண்பர்கள், தாத்தா, பாட்டி, உறவினர்களுடைய செய்திகளை அதில் எழுதலாம், அல்லது, அவர்களை இசை அல்லது தாலாட்டுகள் அல்லது செய்திகளைப் பதிவுசெய்து தாய்க்கும் குழந்தைக்கும் அனுப்பச்செய்யலாம். இந்த நேரத்தில் அந்தத் தாயின் பெற்றோரோ துணைவரோ அருகில் இல்லாவிட்டாலும், அவர்களுடன் இணைந்திருப்பதைப்போன்ற ஓர் உணர்வை இந்தச் சிறிய செயல்பாடுகள் அவருக்கு வழங்கும். சான்றுகள் 

• https://www.mohfw.gov.in/; 

• https://www.who.int/news-room/q-a-detail/q-a-on-covid-19-pregnancy-childbirth-and-breastfeeding 

• https://www.rcog.org.uk/en/guidelines-research-services/guidelines/coronavirus-pregnancy/covid- 19-virus-infection-and-pregnancy/ 

• https://ranzcog.edu.au/statements-guidelines/covid-19-statement 

குறிப்பு: இது கல்விசார்ந்த தகவலாகும், மருத்துவ ஆலோசனை இல்லை. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்களுடைய மகப்பேறியல் மருத்துவர் அல்லது ஒரு மன நல வல்லுனரைத் தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள். 

பிறப்புக்கால மன நலச் சேவைகள், தேசிய மன நலன் மற்றும் நரம்பு அறிவியல் கல்விக்கழகம், பெங்களூர், இந்தியாவால் 27 மார்ச், 2020 அன்று உருவாக்கப்பட்டது. 

NIMHANS பிறப்புக்கால மன நலன் உதவித் தொலைபேசி எண்: 8105711277

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org