Others

பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸ்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸ் என்றால் என்ன?

பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸ் (அல்லது பர்பெரல் சைக்கோசிஸ்) என்பது, திடீரென்று தொடங்கும் ஒரு தீவிர மனநலப் பிரச்னை ஆகும். இது பெரும்பாலும் குழந்தை பிறந்து சில நாள்களில் அல்லது சில வாரங்களில் நிகழ்கிறது.  

பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸ் என்பது எந்தப் பெண்ணுக்கும் வரலாம். இதற்குமுன் மனநலப் பிரச்னைகளை அனுபவிக்காத ஒருவருக்கும் வரலாம். பாதிக்கப்படும் தாய்க்கும் அவரது கணவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த அனுபவம் பயம்தரலாம். பொதுவாக, பேறுகாலத்துக்குப் பிந்தைய சைக்கோசிஸை அனுபவிக்கும் பெண்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட்டுக் குணமாகிவிடுகிறார்கள்.

முக்கியம்: பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸ் என்பது, ஒரு மனநல நெருக்கடி ஆகும். இந்தப் பிரச்னையைச் சந்திக்கும் தாய்க்கு விரைவில் உதவி தேவை. பொதுவாக இந்தப் பிரச்னை திடீரென்றுதான் வருகிறது. பாதிக்கப்பட்ட தாயிடம் அறிகுறிகள் மாறிமாறிக் காணப்படலாம். இந்தப் பிரச்னையைப்பற்றிப் பலருக்கு எதுவும் தெரிவதில்லை. அந்தப் பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று நினைத்து, அதனை விரட்டுவதற்காக மந்திரவாதிகளிடம் செல்கிறார்கள். இதனால், அந்தப் பெண் முறையான சிகிச்சை பெறுவதற்குத் தாமதமாகிறது. இது அவருக்கும் அவரது குழந்தைக்கும் தீவிரமான பாதிப்புகளைக் கொண்டுவரக்கூடும். இயன்றவரை விரைவாக அவருக்குச் சிகிச்சை பெற்றுத்தரவேண்டும்.

​பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸுக்கான அறிகுறிகள் என்ன?

பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸுக்குப் பலவிதமான அறிகுறிகள் இருக்கலாம். உதாரணமாக:

·திடீரென்று மனோநிலை மாறுதல்: 'மிக மகிழ்வாக' அல்லது 'மேனியாக்' நிலையில் இருத்தல், சத்தமாகப் பாடுதல், ஆடுதல்

·நிலைகொள்ளாமல் இருத்தல், ஓர் இடத்தில் அமரமுடியாமல் தவித்தல்

·எரிச்சலுடன் இருத்தல், கத்துதல், பிறரைத் திட்டுதல்

·அதிவேகமாகச் சிந்தித்தல், அதனால் வெளியே படபடவென்று பேசுதல், குழப்பத்துடன் காணப்படுதல்

·மனத்தடைகளை விடுத்து, அசாதாரணமான நடவடிக்கைகளில் ஈடுபடுதல். உதாரணமாக, தனக்குத்தெரியாத ஒருவரிடம் பேசுதல், நண்பர்களிடம் மிகவும் உரிமை எடுத்துக்கொள்ளுதல் போன்றவை.

·வளவளவென்று பேசுதல், வழக்கத்தைவிட அதிகச் சுறுசுறுப்புடன் காணப்படுதல், பிறரிடம் அதிகமாகப் பழகுதல்

·எல்லாரிடமிருந்து விலகியிருத்தல், ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருத்தல், பிறர் தன்னிடம் பேசினாலும் பதில்சொல்லாமலிருத்தல்

·தூங்க இயலாமல் சிரமப்படுதல், அல்லது, களைப்பாக உள்ளபோதும் தூங்க விரும்பாதிருத்தல்

·எதிலும் சந்தேகம், பயம், பிறரைச் சார்ந்திருத்தல், தனக்கு ஏதோ ஆபத்து என்று தொடர்ந்து எண்ணுதல்

·மாயத்தோற்றங்கள்: தவறான நம்பிக்கைகள், தன் இயல்புக்குப் பொருந்தாத எண்ணங்களில் உறுதியாக இருத்தல். உதாரணமாக, ஒரு தாய் தனக்கு யாரிடமிருந்தோ நிறையப் பணம் வந்திருப்பதாக எண்ணலாம், அல்லது, தனக்குப் பிறந்திருக்கும் குழந்தை தன்னுடையதல்ல என்று நம்பலாம்.

·பிரமைகள்: நிஜத்தில் இல்லாத, பிறர் காதில்/கண்ணில் விழாத விஷயங்களைக் கேட்டல், பார்த்தல்.

இந்த அறிகுறிகளால், பாதிக்கப்பட்ட தாய் தன்னுடைய குழந்தையைக் கவனித்துக்கொள்ள இயலாமலிருக்கலாம். தனக்கு இப்படியொரு பிரச்னை இருப்பதையே அவர் உணராமலிருக்கலாம். ஆனால், அவருடைய கணவர், குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் இதைக் கவனிப்பார்கள், ஏதோ தவறாகிவிட்டது என்று உணர்வார்கள். உண்மையில், அவரது குடும்பத்தினர் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள இயலாமல் சிரமப்படலாம், அது புரியாமல் தவிக்கலாம்; ஆனால், அவர்கள் உடனே நிபுணரின் உதவியை நாடவேண்டியது அவசியம்.

குறிப்பு: பேறுகாலத்துக்குப் பிந்தைய சைக்கோசிஸின் அறிகுறிகள் மணிக்கு மணி மாறலாம், நாளுக்கு நாள் மாறலாம்.

பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸ் எதனால் ஏற்படுகிறது?

பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸ் என்பது தாயின் பிழையால் ஏற்படுவதல்ல. அது உறவுப்பிரச்னைகளாலோ அழுத்தத்தாலோ ஏற்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு இந்தப் பிரச்னை வருமா, வராதா என்று தீர்மானிக்கும் காரணிகள் பல உண்டு. அவற்றில் ஒன்று, மரபியல். ஒரு பெண்ணின் தாய் அல்லது சகோதரிபோன்ற ஒரு நெருங்கிய உறவினருக்கு இந்தப் பிரச்னை இருந்திருந்தால், அந்தப் பெண்ணுக்கும் பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த நிலையில் உள்ளவர்களுடைய ஹார்மோன் அளவுகள் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது. ஒரு தாயின் தூக்கம் கடுமையாகப் பாதிக்கப்படும்போது அவருக்கு இந்தப் பிரச்னை வரக்கூடும்.

பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸ் வரும் வாய்ப்பு அதிகமுள்ள பெண்கள், அதைத் தடுக்க என்ன செய்யலாம்?

ஒரு பெண்ணுக்கு இருதுருவக் குறைபாடு அல்லது ஸ்கிஜோஃப்ரெனியா அல்லது வேறோர் உளவியல் குறைபாடு இருந்தால், அவருக்குக் குழந்தை பிறந்ததும் மறுபடி ஒரு மனம் சார்ந்த பிரச்னை வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். இதுபோன்ற தீவிரப் பிரச்னைகளை அனுபவித்த ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால், அவர் இதைப்பற்றித் தன்னுடைய மகப்பேறு மருத்துவரிடமும் மனநல மருத்துவரிடமும் பேசவேண்டும். தான் இப்போது உண்டுவரும் மருந்துகளைப்பற்றிச் சொல்லவேண்டும். அவர்கள் இதனை ஆராய்ந்து ஓர் ஆலோசனை வழங்குவார்கள். அதன்மூலம், அவர் கர்ப்பமாவதற்குமுன் மனத்தளவில் ஆரோக்கியமான நிலையை எட்டுவார். சில பகுதிகளில், பேறுகாலகட்ட மனநல நிபுணர்கள் உள்ளார்கள். இந்த மருத்துவர்கள், தற்போது மனநலப் பிரச்னைகளைச் சந்திக்கிற அல்லது இதற்குமுன் மனநலப் பிரச்னைகளைச் சந்தித்த பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்கு மனநலப் பராமரிப்பு வழங்குவதில் விசேஷக் கவனம் செலுத்துகிறவர்கள்.

ஆகவே, ஒரு பெண் கர்ப்பமாகிறார், அவருக்குப் பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸ் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என்றால், அவர் தனது மகப்பேறு மருத்துவரிடமும் பொது மருத்துவரிடமும் இதைப்பற்றிப் பேசவேண்டும். தேவைப்பட்டால், அவர்கள் அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அனுப்புவார்கள். இதன்மூலம் அவரது உடல்நலத்தோடு மனநலமும் சிறப்பாக அமையும்.

குறிப்பு: இருதுருவக் குறைபாடு அல்லது ஸ்கிஜோஃப்ரெனியாபோன்ற தீவிரக் குறைபாடுகளுக்காக மருந்துகளை உட்கொண்டுவரும் பெண்கள் கர்ப்பமாக விரும்பினால், அதற்குமுன்னால் அவர்கள் தங்கள் மனநல மருத்துவரிடம் பேசவேண்டும். அந்த மருத்துவர் அவர் கர்ப்பகாலத்தின்போதும் இந்த மருந்துகளைச் சாப்பிடலாம், அதன்மூலம் நலமாக இருக்கலாம் என்று சிபாரிசு செய்யக்கூடும்.

பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸுக்குச் சிகிச்சை பெறுதல்

பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தாய்க்கு, உடனடி உதவி தேவை. அவரை ஒரு மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை வழங்கவேண்டும். சில பகுதிகளில், மனநலப் பிரச்னைகொண்ட தாய்மார்களுக்குச் சிகிச்சை வழங்கும்போது, அவர்களுடைய குழந்தைகளையும் உடன் அனுமதிக்கிற சிறப்பு மனநல மருத்துவமனைகள் உள்ளன. இதுபோன்ற நேரங்களில், அந்தத் தாயோடு இன்னொரு பெண்மணியும் மருத்துவமனைக்கு வருவார், உதாரணமாக, அவரது தாய் அல்லது மாமியார் போன்றோர் அங்கே வந்து தங்குவார்கள், அவர் குழந்தையைப் பார்த்துக்கொள்ள உதவுவார்கள்.

பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸிலிருந்து ஒருவர் விடுபடுவதற்குச் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் ஆகலாம். மிகத் தீவிரமான அறிகுறிகள் இரண்டு முதல் 12 வாரங்கள்வரை நீடிக்கலாம். பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸ் பிரச்னை கொண்ட பல பெண்கள், அதிலிருந்து முழுமையாகக் குணமாகிவிடுகிறார்கள். ஆனால் சிலருக்கு, இந்தப் பிரச்னை அவர்களுடைய வாழ்நாளில் இன்னொரு சந்தர்ப்பத்தில் திரும்ப வருகிறது. குறிப்பாக, அவர்கள் மீண்டும் கர்ப்பமானால், இந்தப் பிரச்னை மறுபடி வரும் வாய்ப்பு இருக்கிறது.

சிகிச்சையின்போது தாய்ப்பால் தருதல்

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறும் தாய், தன் குழந்தைக்குப் பாலூட்டுவதுபற்றித் தனது மனநல நிபுணரிடம் பேசி ஆலோசனை பெறவேண்டும். சில மருந்துகள் தாய்ப்பாலில் கலக்கின்றன, ஆனால் வேறு பல மருந்துகள் அவ்வாறு கலப்பதில்லை. ஆகவே, மருத்துவர் இதைப்பற்றிச் சிந்தித்து, தாய் உட்கொள்ளும் மருந்துகளின் அடிப்படையில் அவர் எப்போது தன் குழந்தைக்குப் பாலூட்டலாம் என்று ஆலோசனை சொல்வார்.

இயன்றபோதெல்லாம், தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டவேண்டும். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும், தாயும் நலமாக இருப்பார், தாய், குழந்தை இடையே ஓர் அன்புப்பிணைப்பு ஏற்படும். தாய்க்கு வந்திருக்கும் பிரச்னை, குழந்தைக்குப் பரவாது. ஒரு தாய் மிகவும் குழம்பிக் காணப்பட்டால், சிறிதுநேரம் குழந்தையை வேறோர் இடத்துக்குக் கொண்டுசெல்லலாம். அவர் அமைதியானபிறகு, மீண்டும் குழந்தையை அவரிடம் தரலாம். குழந்தை தாயிடம் இருக்கும்போதெல்லாம், யாரேனும் அவர்களைத் தொடர்ந்து கவனிக்கவேண்டும்.

சிகிச்சைக்குப்பிறகு

பொதுவாக, பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸுக்குப்பிறகு மனச்சோர்வு, பதற்றம், குறைந்த சமூக நம்பிக்கை போன்றவை வரலாம். நடந்ததை அவர் ஏற்றுக்கொள்ளக் கொஞ்சநாளாகும். அதுவரை அவர் கொஞ்சம் சோகமாக இருப்பது இயல்புதான், தாய்மையின் தொடக்கத்தை இப்படி இழந்துவிட்டோமே என்று அவர் வருந்தக்கூடும். அவர் உறவுகள், நட்புகள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத் திரும்பப்பெறக் கொஞ்சநாளாகும். பெரும்பாலான பெண்கள் இதிலிருந்து விடுபட்டுத் தங்களுடைய வழக்கமான நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள்.

இதுபோன்ற நேரங்களில் அவர்கள் தங்களுடைய உணர்வுகளைத் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களிடம் பேசலாம். அது அவர்களுக்கு நன்கு பயன்படும். அதேசமயம், இதைத்தாண்டிய சில சிரமங்களும் அவர்களுக்கு இருக்கலாம். அதுபோன்ற நேரங்களில், அவர்கள் ஓர் உளவியலாளர் அல்லது ஒரு மனநல மருத்துவர் அல்லது ஓர் ஆலோசகரிடம் பேசலாம், உதவி பெறலாம்.

​பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸைச் சமாளித்தல்

▪ தாய்க்கு:

பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸைச் சந்தித்துள்ள ஒரு தாய், தன்னால் குழந்தையை வளர்க்கமுடியுமா என்று சந்தேகம்கொள்வது இயல்புதான். இந்தப் பிரச்னையைச் சந்திக்காத பல தாய்மார்களும்கூட இப்படிதான் உணர்கிறார்கள்.

சில தாய்மார்கள் பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸுக்குப்பிறகு தங்கள் குழந்தையுடன் ஓர் அன்புப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள இயலாமல் சிரமப்படுகிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் மனத்துயரை ஏற்படுத்தலாம். ஆனால், இந்த உணர்வுகள் தாற்காலிகமானவை. பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸைச் சந்திக்கும் பல பெண்கள் அதிலிருந்து விலகிவந்து தங்கள் குழந்தைகளுடன் நல்ல அன்புப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். இதுபற்றி அந்தத் தாய் தன்னுடைய மகப்பேறு மருத்துவர் அல்லது ஒரு மனநல நிபுணரிடம் பேசலாம், தான் தன்னுடைய குழந்தையுடன் நல்ல அன்புப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதறான வழிகளைக் கேட்டறியலாம். இதுபோன்ற நேரங்களில் அந்தத் தாய் தன்னுடைய பிரச்னையிலிருந்து விடுபட்டு வந்து தன்னுடைய குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்கு அவருடைய குடும்பம் ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது.

▪ கணவருக்கு:

ஒருவருடைய மனைவிக்குப் பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸ் வந்துள்ளது என்றால், அது அந்தக் கணவருக்கும் மிகுந்த மனத்துயரைத் தரலாம், அவர் பயந்துபோகலாம், அதிர்ச்சியடையலாம்.  தனக்கு இப்படியொரு பிரச்னை இருப்பதையே அந்தப்பெண் அறியாமலிருக்கலாம். ஆகவே, அந்தக் கணவர் ஒரு நிபுணரைச் சந்தித்து உதவி பெறுவது நல்லது. ஒருவேளை அந்தத் தாயும் குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், அந்தக் கணவர் தனிமையாக உணரலாம், விரக்தியடையலாம். ஒருவேளை அந்தத் தாய்மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், தன் மனைவிக்காகவும் குடும்பத்துக்காகவும் அந்தக் கணவர் சில கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில், அந்தக் கணவர் தன் மனைவிக்குச் சிகிச்சையளிக்கும் ஆலோசகர் அல்லது மனநல நிபுணரைச் சந்தித்து உதவி பெறவேண்டும், ஆலோசனை பெறவேண்டும். இந்த நேரத்தில் என்ன செய்யலாம் என்று அவர்கள் ஆலோசனை சொல்வார்கள், வழிகாட்டுவார்கள்.

அந்தத் தாயும் குழந்தையும் வீடு திரும்பியபிறகு, கணவர் இவற்றைச் செய்யலாம்:

·அமைதியாக, தன் மனைவிக்கு ஆதரவாக இருக்கலாம்

·நேரம் ஒதுக்கி, அவர் பேசுவதைக் கேட்கலாம்

·வீட்டுவேலைகள், சமையலில் உதவலாம்

·குழந்தையைக் கவனித்துக்கொள்ள உதவலாம், அல்லது, குழந்தையைக் கவனித்துக்கொள்ள ஒரு செவிலியை நியமிக்கலாம்

·அவரது மனைவி, மருத்துவமனையில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளவேண்டியிருக்கலாம். அதற்கு அந்தக் கணவர் உதவலாம். மருத்துவரிடம் பேசாமல் அந்த மருந்துகளை நிறுத்தக்கூடாது, அல்லது மாற்றக்கூடாது என்று சொல்லலாம்.

·இரவுநேரத்தில் அவர் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கு இயன்றவரை உதவலாம். அந்தத் தாய் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் அவரைக் களைப்பாக உணரச்செய்யும். ஆகவே, அவர் தன்னால் இயன்றவரை ஓய்வெடுக்கட்டும், தூங்கட்டும்.

·வீட்டுவேலைகளுக்குப் பிற குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உதவலாம். இதனால், மனைவி, குழந்தையோடு அந்தக் கணவர் நேரம் செலவிடலாம், தனக்காகவும் நேரம் ஒதுக்கலாம்

·இதுபோன்ற நேரங்களில் வீட்டுக்கு நிறைய விருந்தினர்கள், நண்பர்கள் வராதபடி பார்த்துக்கொள்வது நல்லது. இது அந்தத் தாயைப் பரபரப்பில்லாமல் செயல்படவைக்கும்.

·இல்லம் இயன்றவரை அமைதியாக இருக்கட்டும்.

·பொறுமை அவசியம். பேறுகாலத்துக்குப்பிந்தைய சைக்கோசிஸைச் சந்தித்துள்ள ஒரு பெண் அதிலிருந்து மீண்டு வருவதற்கு நேரமாகும்.

·அவர் உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும், நன்கு சாப்பிடவேண்டும், போதுமான அளவு ஓய்வெடுக்கவேண்டும், இதன்மூலம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். பிரச்னையைச் சமாளிப்பதற்காகப் போதைமருந்துகள், மது போன்றவற்றை நாடவேண்டாம்.

·தொலைநோக்கில் பார்க்கிறபோது, அந்தப்பெண் தன்னுடைய அனுபவங்களைப்பற்றிப் பேசப்பேச, அவர் விரைவாகக் குணமாவார்.

·சில நேரங்களில் கணவர், மனைவி இருவரும் ஆலோசனை பெறலாம், அல்லது, தம்பதியருக்கான தெரபியைப் பெறலாம்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org