பேறுகாலத்துக்குப்பிந்தைய தூக்கப் பிரச்னைகள்

பிள்ளை பெறும் தாய் உடலளவிலும் உணர்வளவிலும் மிகுந்த களைப்போடு இருப்பார். அப்போது அவருக்கு நிறைய ஓய்வும் அமைதியும் தேவை. அப்போதுதான் அவர் தனது களைத்த நிலையிலிருந்து மீளமுடியும். ஆனால், பல பெண்களுக்கு அந்த நேரத்தில் போதுமான அளவு ஓய்வோ தூக்கமோ கிடைப்பதில்லை. இது அவர்களுடைய உணர்வுத் துயரத்தை அதிகப்படுத்தக்கூடும். அந்தத் தாய் தன் குழந்தையின் ஆரோக்கியத்தைப்பற்றிப் பதற்றப்படக்கூடும், குழந்தை நன்றாகத் தூங்குகிறதா என்பதைப்பற்றியே தொடர்ந்து சிந்திக்கக்கூடும், இதனால், அவரே நினைத்தாலும் அவரால் போதுமான அளவு ஓய்வெடுக்க இயலுவதில்லை. சில தாய்மார்கள், தாங்கள் தூக்கத்தில் குழந்தையைக் காயப்படுத்திவிடுவோமோ என்றுகூடக் கவலைப்படுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், பல தாய்மார்கள் களைப்பு, சலிப்பைச் சமாளித்து ஓர் ஆரோக்கியமான தூக்க ஒழுங்குக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் சிலருக்கு, தூக்கப் பிரச்னைகள் தொடர்கின்றன.

பேறுகாலத்துக்குப்பிந்தைய தூக்கமின்மை என்பது, களைப்போடு இருக்கும் தாய்மார்கள் தூங்க இயலாமல் சிரமப்படும் ஒரு நிலையாகும். இவர்களுடைய குழந்தை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாலும், இவர்களால் தூங்க இயலாது. இவர்கள் தொடர்ந்து விளிம்புநிலையிலேயே இருப்பார்கள், குழந்தை தூங்குவதைக் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். தாங்கள் தூங்கிவிட்டால், குழந்தை அழும்போது அது தங்கள் காதில் விழாதோ  என்று இவர்கள் கவலைப்படுவார்கள். அப்படியே தூங்கினாலும், விரைவில் குழந்தை அழும் சத்தம் கேட்பதாக எண்ணி எழுந்துவிடுவார்கள். உண்மையில் குழந்தை நன்றாகத் தூங்கிக்கொண்டுதானிருக்கும். பேறுகாலத்துக்குப்பிந்தைய இன்சோம்னியா என்பது பேறுகாலத்துக்குப்பிந்தைய மனச்சோர்வுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. பல நேரங்களில் இது தனியாகவும் காணப்படுகிறது.

தூக்கத்தை மேம்படுத்துவது எப்படி?

குழந்தை பிறந்ததுமுதல் சரியாகத் தூங்க இயலவில்லை என்று சொல்லும் தாய்மார்கள் இந்த உத்திகளைப் பயன்படுத்தித் தங்களுடைய தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம்:

·கஃபைன் உள்ள பொருள்களைத் தவிர்க்கலாம்: கஃபைன் உள்ள பொருள்கள் தூக்கத்தைத் தொந்தரவுசெய்யும். அவற்றைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, மாலை, இரவு நேரங்களில் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது.

·ஒரு தூக்க ஒழுங்கை உருவாக்கலாம்: தூங்கச்செல்லுமுன் மனம் தளர்வோடு இருப்பது அவசியம். உதாரணமாக, வெதவெதப்பான நீரில் குளிக்கலாம், ஒரு புத்தகம் படிக்கலாம், அல்லது, மெல்லிசை கேட்கலாம். இதனால், மனம் தளர்வடையும், தூக்கம் வரும்.

·உடலைத் தளர்வடையச்செய்யும் உத்திகள்: ஆழமாக மூச்சுவிடுதல், தசைகளைத் தளர்த்துதல் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி உடலைத் தளர்வடையச்செய்யலாம்.

·துணைவரின் உதவியைப் பெறலாம்: தாய்க்குச் சரியான தூக்கம் கிடைக்க அவரது கணவர் நன்கு உதவலாம். உதாரணமாக, அவருக்கு மசாஜ் செய்துவிட்டால் உடல் தளர்வடையும், நன்கு தூக்கம் வரும். 'இரவுக் கடமை'யைத் தாய் தன் கணவருடன் பகிர்ந்துகொள்ளலாம். குழந்தையைப்பற்றிக் கவலைப்படாமல் தூங்கலாம்.

குறிப்பாக, தூக்கப்பிரச்னையைப்பற்றி அவர் தனது மருத்துவரிடம் பேசவேண்டும். அவர் இந்தச் சூழ்நிலையை ஆராய்ந்து, என்னசெய்யலாம் என்று ஆலோசனை வழங்குவார். மருத்துவரிடம் கேட்காமல் தூக்கத்துக்கு உதவும் எந்த மருந்தையோ கருவியையோ பயன்படுத்தவேண்டாம்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org