கர்ப்பத்தின்போது கணவரின் ஆதரவு

Published on

இந்தியாவில் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றால், அந்த நேரத்தில் அவருடைய கணவர் தன் குடும்பத்துக்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்துத் தருவதோடு நின்றுவிடுகிறார். ஒரு பெண்ணின் கர்ப்பகாலம் மிகவும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒன்று. அதேசமயம், பல புதிய தாய்மார்கள் நிறைய பதற்றத்தை அனுபவிக்கிறார்கள். காரணம், அவர்கள் தங்கள் குழந்தையின் நலனைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள், தங்களுடைய நலனை எண்ணிக் குழம்புகிறார்கள், அவர்கள் பல உயிரியல், சமூகவியல் மற்றும் கலாசார அழுத்தங்களையும் சந்திக்கவேண்டியுள்ளது. இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது, அந்தப் பெண்ணின் மிக நெருங்கிய சிநேகிதர், அதாவது, அவருடைய கணவர் வெறுமனே சம்பாதித்துத்தந்தால் போதாது. இன்னும் நிறைய பொறுப்புகளை ஏற்கவேண்டும். இதுபோன்ற நேரங்களில், ஆண்கள் தயங்குவதற்குக்காரணம், அவர்களுக்குக் கர்ப்பம்பற்றி அதிகம் தெரிவதில்லை, தங்கள் மனைவிக்குத் தாங்கள் எப்படி உதவலாம் என்றும் தெரிவதில்லை. பிறப்பு, குழந்தைகள், அதுதொடர்பான நிகழ்வுகள் எல்லாம் பெண்களுடைய வேலை என்று நினைத்துவிடுகிறார்கள். சில பெண்களுடைய கணவர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். அந்தப் பெண்கள் குறைந்த மன அழுத்தத்தையே அனுபவிக்கிறார்கள், அவர்களுடைய பிரசவமும் அதற்குப்பிந்தைய நிகழ்வுகளும் எளிதாக இருக்கின்றன. அப்படியானால், தந்தையாகப்போகும் ஒருவர் என்னவெல்லாம் செய்யலாம்?

-          குழந்தையின் வருகைக்காகத் தாயுடன் சேர்ந்து திட்டமிடலாம். உதாரணமாக, மருத்துவப் பராமரிப்புக்காகப் பணம் ஏற்பாடு செய்தல், பிரசவத்துக்கு முன்பும் பின்பும் அவர் சவுகர்யமாக உணரக்கூடிய ஓர் ஆதரவு அமைப்புக்கு ஏற்பாடு செய்தல், புதிதாகப் பிறக்கப்போகும் குழந்தைக்குச் சவுகர்யமாக உள்ளபடி வீட்டை மாற்றியமைத்தல் போன்றவை.

-          மனைவி மகப்பேறு மருத்துவரிடம் செல்லும்போதெல்லாம், கணவரும் உடன்செல்லலாம். அவரது கர்ப்பம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம், அதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா என்று கேட்டு அறியலாம். கர்ப்பமாக உள்ள தன் மனைவிக்கு என்னவெல்லாம் தேவை, அவர் எப்படிப்பட்ட கவலைகளை உணரக்கூடும் என்பதையெல்லாம் ஒரு கணவர் புரிந்துகொள்ளவேண்டும்.

- பெரும்பாலான நகர்ப்புறமக்கள் தனிக்குடித்தனமாகவே வாழ்கிறார்கள். ஆகவே, கர்ப்பமாக உள்ள பெண் ஊட்டச்சத்துமிக்க உணவு எடுத்துக்கொள்வதையும், நேரத்துக்கு மருந்துகள் சாப்பிடுவதையும் அவருடைய கணவர்தான் உறுதிசெய்யவேண்டும்.

-          கர்ப்பமாக உள்ள பெண்களின் மனோநிலை அடிக்கடி மாறுவது சகஜம்தான். அதுபோன்ற நேரங்களில் பொறுமையாகச் செயல்படவேண்டும், அவருக்கு ஆதரவளிக்கவேண்டும்.

- கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணைக் கவனித்துக்கொள்ளும் கணவர், நகைச்சுவை, அன்பு, கவனிப்பின்மூலம் அவர் தனது கர்ப்பத்தை மகிழ்ந்து அனுபவிக்கும்படி செய்யலாம்.

-   பிற குடும்ப உறுப்பினர்கள் அவரோடு சண்டைபோட்டால், அவருக்கு ஆதரவாக இருக்கலாம். ஞாபகமிருக்கட்டும், இப்போது கணவரும் மனைவியும் ஒன்றாகச் செயல்படவேண்டும்!

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org