பிரசவத்துக்குப்பிறகு ஆரோக்கியம்

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, எல்லாரும் அவரையே கவனிப்பார்கள். ஆனால், குழந்தை பிறந்த மறுகணம், எல்லாக் கவனமும் குழந்தையின்பக்கம் திரும்பிவிடும். முதன்முதலாகக் குழந்தை பெறும் ஒரு தாய், இன்னும் பிரசவத்தின் அதிர்ச்சியிலிருந்தே விலகிவந்திருக்கமாட்டார், இந்தச் சூழ்நிலையில் அவர் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைச் சமாளிப்பது சிரமம்தான். இந்தப் புதிய பொறுப்புகள் அவர்களுக்குத் திகைப்பூட்டுகின்றன. இதுபோன்ற நேரங்களில் அவர்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

·குழந்தை பிறந்து சில நாள்கள் அல்லது சில வாரங்களுக்கு மிகவும் களைப்பாக, பலவீனமாக உணர்வது இயல்புதான். பிரசவத்தில் குறிப்பிடத்தக்க ரத்த இழப்பு ஏற்பட்டிருக்கலாம், அதனால் அந்தத் தாய் களைப்பாக உணரலாம், அவரது உடல் நடுங்கலாம். திடீரென்று அவரது எடை குறைந்துபோகும், வயிறு 'காலியாக' இருப்பதைப்போல் உணர்வார். அப்போது அவர் 2-3 வாரங்களுக்கு நன்கு ஓய்வெடுக்கவேண்டும்.

·நிறைய தண்ணீர், திரவ உணவுகளைக் குடிக்கவேண்டும். இந்தக் காலகட்டத்தில் உடலில் போதுமான அளவு நீர் இருப்பது மிகவும் முக்கியம்.

·சாதாரண, ஊட்டச்சத்துமிக்க உணவை அவர் எடுத்துக்கொள்ளவேண்டும். புதிய தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருள்கள் தேவை. தான் என்ன சாப்பிடலாம் என்பதைப்பற்றி அவர் தனது மருத்துவரிடம் பேசலாம், அவரது கருத்துகளின் அடிப்படையில் தனது உணவைத் தீர்மானிக்கலாம். ஊரில் எல்லாரும் சொல்வதைக் கேட்டுக் குழம்பவேண்டியதில்லை. உணவைப்பற்றி எல்லாரும் ஆளுக்கொன்று சொல்வார்கள். அதில் எவையெல்லாம் அறிவியல்பூர்வமாக, மருத்துவரீதியில் சரியாகத் தோன்றுகின்றனவோ அவற்றைப் பின்பற்றுவது நல்லது.

·தாய்ப்பாலூட்டுதல்: பெரும்பாலான தாய்மார்களுக்கு, முதல் சில நாள்கள் தாய்ப்பாலூட்டுதல் மிகவும் கடினமாக இருக்கலாம். அப்போது அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள் அல்லது செவிலியர்களின் உதவியைப் பெறலாம். தாய்ப்பாலூட்டுதலைப்பற்றி அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டறியலாம், அநாவசியமாக எந்த அழுத்தத்துக்கும் ஆளாகவேண்டியதில்லை. பாலூட்டும் தாய்மார்கள் சரியானபடி அமரவேண்டும், தங்கள் உடலைச் சரியாகப் பொருத்திக்கொள்ளவேண்டும், நல்ல மனநிலை, சரியான அணுகுமுறை அவசியம். இதில் ஏதேனும் சந்தேகமிருந்தால், ஒரு தாய்ப்பால் நிபுணரிடம் பேசலாம்.

·குழந்தை பிறந்த முதல் சில நாள்களுக்கு, தாய் பலவிதமான மனக்குழப்பங்களைச் சந்திப்பார். தான் குழந்தை பெற்றுக்கொண்டது சரியான தீர்மானம்தானா என்றுகூட அவர் யோசிக்கக்கூடும். இதுபோன்ற நேரங்களில் அவருக்கு ஆதரவளிக்கும் ஓர் அமைப்பு தேவை, அப்போதுதான் அவருக்கும் ஓய்வு கிடைக்கும், குழந்தையையும் யாராவது கவனித்துக்கொள்வார்கள்.

·குழந்தை பிறந்த முதல் சில மாதங்களில் தாய் களைப்பாக இருப்பது இயல்புதான், தன்னால் தீர்மானங்களை எடுக்க இயலவில்லை என்று அவர் உணர்வதும் இயல்புதான். பலரிடம் இந்த எண்ணங்களைப் பார்க்கமுடிகிறது. அதேசமயம், இதனால் அவர் தன் குழந்தையைப் பார்த்துக்கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது என்றால், அவர் பிறரிடம் உதவிகோரவேண்டும்.

·உடற்பயிற்சி: குழந்தை பிறந்து சில வாரங்களுக்குப்பிறகு, தாய் சில மென்மையான உடற்பயிற்சிகளைச் செய்யத்தொடங்கலாம். அவர் தனது உடல்நிலைக்கேற்ற உடற்பயிற்சிகளைதான் செய்யவேண்டும், இதுபற்றி அவர் தன் மருத்துவரிடம் பேசி ஆலோசனை பெறலாம்.

·புதிய தாய் தன் குழந்தையோடு நிறைய நேரம் செலவிடவேண்டியிருப்பதால், அதற்கு மிகுந்த கவனம் தேவைப்படுவதால், அவரால் தன் கணவருடன் அதிக நேரம் செலவிட இயலாமலிருக்கலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில், அவர் தன் கணவரையும் குழந்தைப்பராமரிப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம். இதன்மூலம் பொறுப்புகளும் பகிர்ந்துகொள்ளப்படும், கணவன், மனைவி இணைந்து நேரம் செலவிடும் சந்தர்ப்பங்களும் அமையும்.

·ஒரு தாய்க்குத் தன் குழந்தையைக் கவனித்துக்கொள்வது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தினால், அவர் தனக்கென்று சிறிதுநேரம் ஒதுக்கவேண்டும். அப்போது குழந்தையைப் பார்த்துக்கொள்ளுமாறு யாரிடமாவது உதவி கோரலாம்.

·குழந்தை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்போது அதனுடன் அதிக நேரம் செலவிடலாம்.

பணிக்குச்செல்லும் தாய்மார்களுக்கு:

·குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் பெண் பணியில் இருந்தால், குழந்தை பிறந்தபிறகு தன்னுடைய வேலை பாணி எப்படி அமையப்போகிறது என்று முன்கூட்டியே திட்டமிடவேண்டும்.

·இதுபற்றி அவர் தனது மேலாளர் அல்லது HRஉடன் பேசவேண்டும், தன் தேவைகளை வெளிப்படையாகச் சொல்லவேண்டும். சில நேரங்களில் அவருக்குத் தலைசுற்றலாம், தளர்வாக உணரலாம். அதுபோன்ற நேரங்களில் ஓய்வெடுத்துக்கொள்வது நல்லது. அதற்கு HRஇடம் அனுமதி பெறவேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்கிற வாய்ப்பு உண்டா என்று பார்க்கலாம். குழந்தை பெற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சவுகர்யங்கள், சலுகைகளைப்பற்றி ஒவ்வொரு நிறுவனமும் தெளிவான கொள்கைகளை உருவாக்கியிருக்கும். அவற்றை அவர் வாசிக்கவேண்டும்.

·ஓய்வு நேரங்கள்: வேலைக்கு நடுவே சிறு ஓய்வெடுத்து 10-15 நிமிடங்கள் தூங்குவது சாத்தியமா?

·குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் செல்லும் தாய்மார்கள் தங்களுடைய தாய்ப்பாலைச் சேகரித்துக் குழந்தைக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அதற்கான வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

·அழுத்தமானது குழந்தை, தாய் இருவரையும் பாதிக்கிறது. வேலை காரணமாகத் தாய்க்கு அழுத்தம் ஏற்பட்டால், இதுபற்றி அவர் தனது மேலாளரிடம் பேசவேண்டும். தேவைப்பட்டால், தன்னுடைய பொறுப்புகளை மாற்றியமைப்பதுபற்றி மேலாளரைக் கேட்கவேண்டும். பயணத்தால் ஏற்படும் களைப்பைக் குறைப்பதற்கு, வீட்டிலிருந்தே வேலை செய்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நிறுவனத்தில் இருக்கும் பேறுகால விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org