தொழில்நுட்பத்திற்கு அடிமையாதல்

Q

பதின்பருவத்தில் இருக்கும் ஒருவர் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகியுள்ளார் என்றால், அவருக்கு எந்தத் தொழில்நுட்ப சாதனமும் கிடைக்காதபடி தடுத்துவிட்டால் என்ன தவறு?

A

இணையம் அல்லது செல்ஃபோனைத் தடைசெய்தால், இளைஞர்கள் திருந்தமாட்டார்கள், எரிச்சலடைவார்கள், கோபமடைவார்கள். சில இளைஞர்களுக்குத் தொலைபேசிகள் அல்லது கணினிகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் தனியே விலகி வாழத்தொடங்கிவிடுவார்கள், நண்பர்கள், குடும்பத்தினருடன் பேச மறுப்பார்கள். ஆகவே, இதுபோன்ற நேரங்களில் தொழில்நுட்ப சாதனங்களைத் தடுப்பதைவிட, அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதுதான் நல்லது என்று மனநல நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். “ஒருவர் ஒரு விஷயத்துக்கு அடிமையாகிவிட்டார் என்றால், அந்த விஷயத்தைத் தடைசெய்தால் அவருடைய பிரச்னை சரியாகிவிடாது" என்கிறார் NIMHANSன் SHUT க்ளினிக்கைச்சேர்ந்த டாக்டர் மனோஜ் ஷர்மா, "உதாரணமாக, புகைபிடிப்பதற்கு எதிரான தடையை எடுத்துக்கொள்ளுங்கள். அது பயன் தருகிறதா என்ன? ஒவ்வொருவரும் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும், ஊக்கப்படுத்திக்கொள்ளவேண்டும், அதுதான் இந்தப் பிரச்னையைச் சரியாக்கும்.”

Q

ஒருவர் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகியிருக்கிறார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

A

ஒருவர் தேவைக்குமேல் தொலைபேசியில் நேரம் செலவிடுகிறார் என்றால், அவர் தன்னைத்தானே பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம். அதன்மூலம், தான் ஆரோக்கியமானமுறையில்தான் தொலைபேசியைப் பயன்படுத்துகிறோமா என்று தெரிந்துகொள்ளலாம். (அடிமையாதலின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளைப்பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்

Q

ஒருவர் தன்னுடைய தொலைபேசிக்கு அடிமையாகியிருக்கிறார் என்று தோன்றுகிறது. அவர் என்ன செய்யவேண்டும்?

A

ஒருவர் தனது தொலைபேசிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த விரும்பினால், இந்த வழிகளைப் பின்பற்றலாம்:

 • தேவையானபோதுமட்டும் செல்ஃபோனைப் பயன்படுத்தலாம்

 • யாருடன் பேசினாலும் சுருக்கமாகப் பேசலாம்

 • குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் இருக்கும்போது தொலைபேசியைப் பயன்படுத்தாமலிருக்க முயற்சி செய்யலாம்

 • சில குறிப்பிட்ட நடவடிக்கைகளின்போது, தொலைபேசியைத் தூர வைத்துவிடலாம்: வண்டி ஓட்டுதல், வாசித்தல், சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவை.

 • தினமும் இவ்வளவு நேரம்தான் செல்ஃபோனில் செலவிடவேண்டும், இவ்வளவு தொகைதான் செலவிடவேண்டும் என்று வரம்பு நிர்ணயித்துக்கொள்ளலாம், அதற்குள் நேரத்தை, தொகையைச் செலவிடலாம்.

 • அதன்பிறகும் அவரால் தனது செல்ஃபோன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்றால், அவர் ஓர் ஆலோசகர் அல்லது ஒரு மனநல நிபுணரைத் தொடர்புகொள்ளவேண்டியிருக்கலாம்

 • மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸாப் போன்றவற்றை நாள்முழுக்கப் பயன்படுத்துவதைத் தடுக்க, சில குறிப்பிட்ட நேரங்களில் அந்தச் செய்திகளைப் பார்க்காமலிருக்கலாம். உதாரணமாக, இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை இவற்றுக்கு இடைவெளி விடலாம்.

தேவையான வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்றினால், சுமார் மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் ஒருவர் ஆரோக்கியமான பழக்கங்களுக்குத் திரும்பிவிட இயலும்.

இந்தப் பட்டியலை உருவாக்க உதவிய இணையத்தளம்: http://www.nimhans.kar.nic.in/ncw/leaflets2.pdf.

 

Q

ஒரு குழந்தை தொழில்நுட்பத்துக்கு அடிமையாகிறது என்றால், அதன் பெற்றோர் என்ன செய்யவேண்டும்?

A

ஒரு குழந்தை இணையத்துக்கு அடிமையாகியிருக்கிறது என்றால், அதன் பெற்றோர் கவலைப்படுவார்கள், தங்கள் குழந்தையின் ஆரோக்கியம், படிப்பு என்ன ஆகுமோ என்று எண்ணுவார்கள். அப்படித் தொழில்நுட்பத்துக்கு அடிமையான குழந்தைகளின் பெற்றோருக்குச் சில குறிப்புகள்:

 • பயப்படவேண்டாம். சரியான நேரத்தில் உதவி பெற்றால், தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் ஒருவரைக் குணப்படுத்திவிடலாம்.

 • நேர்விதமான தகவல்தொடர்பைப் பின்பற்றவேண்டும், அதாவது, தங்கள் மகன்/மகள் தொழில்நுட்பத்தை அதீதமாகப் பயன்படுத்துகிறார் என்று விமர்சிக்காமல், ஆரோக்கியமானமுறையில் அதுபற்றி விவாதிக்கலாம்.

 • இந்தப் பிரச்னையிலிருந்து மீள்வதற்குத் தேவையான வாழ்க்கை மாற்றங்களை நிகழ்த்தத் தங்கள் குழந்தைக்கு உதவலாம், தொழில்நுட்பத்தைச் சார்ந்திராத நடவடிக்கைகளை வலியுறுத்தலாம்; இதுபோன்ற திட்டங்களை உருவாக்கும்போது, அல்லது தீர்மானங்களை எடுக்கும்போது, அதில் பாதிக்கப்பட்ட குழந்தையும் பங்குபெறவேண்டும்.

 • இணையத்தில் நேரம் செலவிடுவதன்மூலம், தங்கள் குழந்தை எந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.

 • ஒருவேளை பெற்றோருக்குப் பயம் அல்லது கவலை ஏற்பட்டால், அந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்த அவர்கள் உதவி பெறவேண்டும், அப்போதுதான் அவர்களால் தங்கள் குழந்தைக்கு உதவ இயலும்

 • பிரச்னையைப்பற்றி அறிந்திருத்தல், அதனை எப்படிக் கையாள்வது என்பதைப் புரிந்துகொள்ளுதல்

 • சில குறிப்பிட்ட நேரங்களில் குடும்பத்தில் எல்லாரும் இணையத்திலிருந்து வெளியே வந்துவிடவேண்டும் என்று தீர்மானித்துக்கொள்ளலாம். உதாரணமாக, சாப்பிடும் நேரங்களில், வாரத்தில் ஒருநாள், அல்லது, வார இறுதியில்... இப்படி

 • "குடும்பத்துக்கான நேர"த்தில் பெற்றோர் தங்களது செல்ஃபோனை அல்லது கணினியை அணைத்துவிடவேண்டும், அதன்மூலம் அவர்கள் ஒரு நல்ல முன்னுதாரணமாக நடந்துகொள்ளவேண்டும்

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org