மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்றால், தனக்குத்தானே இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும் 

தொழில்துறையில் தொடக்கநிலை நிறுவனங்களைப்பற்றிப் பேசும் நூல்களில் விவரிக்கப்படும் புகழ்பெற்ற ஒரு சிந்தனை, நிதி வெற்றிக்கு, இலக்குகளை நிர்ணயிப்பது முக்கியமானது. இது உண்மையாக இருக்கலாம். அதைவிட முக்கியம், இலக்குகள் நம்முடைய அன்றாட மகிழ்ச்சியைப் பாதிப்பதாக நேர்வித உளவியல் கண்டறிந்துள்ளது. இந்தச் சுவாரஸ்யமான இணைப்பைப் புரிந்துகொண்டால், ஒருவருடைய நலன் இன்னும் சிறப்பாக வாய்ப்புகள் அதிகம். அது எப்படி? ஒருவர் தன்னுடைய நம்பிக்கைகள், எதிர்காலத்துக்கான கனவுகளை விவாதிக்கும்போது, உண்மையில் அவர் தன்னுடைய இலக்குகளை விவரிக்கிறார். ஒருவர் தன்னுடைய ஆற்றலை எங்கு குவிக்கிறார், எந்த அர்ப்பணிப்புகளில் கவனம் செலுத்துகிறார் என்பதைத் தீர்மானிக்க இவை அவருக்கு உதவுகின்றன. மக்கள் தங்களுடைய தனிப்பட்ட இலக்கொன்றை எட்டும்போது மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள் என்கிறது என்னுடைய உயர்நிலை அனுபவ ஆய்வு. அது கல்வி இலக்காக இருந்தாலும் சரி, பணி இலக்காக இருந்தாலும் சரி, அல்லது, சமூக உறவுகள்பற்றிய இலக்காக இருந்தாலும் சரி. ஒருவர் தன்னுடைய இலக்குகள் என்ன என்பதைப்பற்றிச் சிந்தித்திருக்காவிட்டால், அல்லது, அவை என்ன என்பதைப்பற்றிய ஒரு தெளிவான சிந்தனையைக் கொண்டிருக்காவிட்டால், மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிற ஒரு வளச் சாத்தியத்தை அவர் இழந்துகொண்டிருக்கக்கூடும்.

மகிழ்ச்சியைத் தருவதில் சில குறிப்பிட்ட வகை இலக்குகள் மற்ற இலக்குகளைவிட அதிகச் செயல்திறனுடன் உள்ளன என்று உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்: சிறப்பாக, தனிப்பட்டமுறையில் மதிக்கப்படுகிற, எதார்த்தமான, மற்றும் சுதந்தரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள். பிறரால் வற்புறுத்திச் சுமத்தப்படுகிற, அல்லது, ஒருவர் உண்மையில் மதிக்காத இலக்குகளைவிட, தனக்குப் பொருளுள்ள இலக்குகளைப் பின்பற்றுவது அவருக்கு அதிக நிறைவைத் தரும் என்பது தெளிவாகப் புரிகிறது.

சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் டாக்டர் ர்யான் நீமியெக் வழிநடத்திய தாக்கம் மிகுந்த ஓர் ஆய்வு, உள்ளார்ந்த, அல்லது, தனிப்பட்டமுறையில் பொருளுள்ள, இலக்குகள் அதிக நலனை அடைய உதவின என்றும், வெளியார்ந்த இலக்குகளை எட்டுவது உண்மையில் எதிர்த்திசை விளைவுகளை உண்டாக்கியது என்றும் கண்டறிந்துள்ளது. ஒருவருடைய மதிப்பீடுகள், இலக்குகளுக்கிடையில் நல்ல பொருத்தம் இருக்கும்போது, அவர்கள் அதிக ஊக்கமுள்ளவர்களாக, மற்றவர்களைவிடக் கூடுதல் அர்ப்பணிப்புள்ளவர்களாக, அதிக நலன் உணர்வை அனுபவிக்கிறவர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று மற்ற ஆய்வுகள் காட்டுகின்றன.

இரண்டாவது முக்கியப் பிரச்னை, அணுகல் Vs தவிர்த்தல் இலக்குகளைப்பற்றியது. அணுகல் இலக்குகள் என்பவை, எதைநோக்கியேனும் செல்லவேண்டும் என்று நம்மை ஊக்குவிக்கின்றன, எடுத்துக்காட்டாக, “நான் ஆலோசனை வழங்குதலில் ஒரு பட்டம் பெற விரும்புகிறேன்”. மாறாக, தவிர்த்தல் இலக்குகள் சிரமங்களை, ஆபத்துகளை, அல்லது அச்சங்களைத் தவிர்க்கவேண்டும் என்று நம்மை ஊக்குவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, “பொது மேடைகளில் பேசுவது எனக்கு மிகவும் பதற்றம் தருகிறது, ஆகவே, நான் அதைத் தவிர்க்க முயல்கிறேன்”. தவிர்த்தல் இலக்குகளைவிட அணுகல் இலக்குகள் மகிழ்ச்சியுடன் தொடர்புகொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதைப் பல்வேறு பண்பாட்டைச் சேர்ந்தவர்கள்மத்தியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்று வெளிப்படுத்துகிறது. அதாவது, மக்கள் கடினமான அல்லது வலியைத் தருகிற ஒன்றைத் தவிர்க்க முயல்வதைவிட, தாங்கள் மதிக்கிற ஒன்றை நோக்கிச் செல்கிறவர்களாகத் தங்களைக் காணும்போது அதிகம் மகிழ்கிறார்கள். ஆனால், ஊக்கம் என்பது இயல்பில் சிக்கலானது, சூழலைப் பொறுத்து, அணுகல் மற்றும் தவிர்த்தல் இலக்குகள் ஆகிய இரண்டும் நம்மை மனநிறைவாக உணரச்செய்யலாம்.

மூன்றாவதாக, தாங்கள் மதிக்கின்ற இலக்குகளை மக்கள் எந்த வேகத்தில் அணுகுகிறார்கள் என்பதும் முக்கியம். குறிப்பிடத்தக்க இலக்குகளை நோக்கிப் போதுமான, அல்லது, எதிர்பார்த்ததைவிடச் சிறந்த முன்னேற்றத்தை நிகழ்த்துவது ஒருவிதமான மகிழ்ச்சியுணர்வை உண்டாக்குகிறது. ஒருவர் இலக்குகளை நோக்கி நிகழ்த்தியுள்ள, அல்லது, நிகழ்த்தக்கூடும் என எதிர்பார்க்கிற முன்னேற்ற வேகமானது, அதை உண்மையில் எட்டுவதைவிட அதிக முக்கியமாகக்கூட இருக்கலாம்; தானே ஏற்றுக்கொள்ளக்கூடிய முன்னேற்ற வேகங்கள் அதிக நேர்வித உணர்வுகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.

நான்காவதாக, ஒருவருடைய இலக்குகள் அவருடைய மகிழ்ச்சியுணர்வில் கொண்டிருக்கக்கூடிய தாக்கமானது, அந்த இலக்குகளுடைய தெளிவுத்தன்மையைச் சார்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. மிகவும் அருவமான இலக்குகள் மகிழ்ச்சியை அதிகரிப்பதில் உதவாமலிருக்கலாம், ஏனெனில், அவை எட்டப்பட்டுவிட்டதை அறிவது கடினம். எடுத்துக்காட்டாக, ஒருவர் “கருணையுள்ள, அக்கறையான மனிதராக இருப்பேன்” என்று இலக்கு அமைத்துக்கொண்டால், அவர் மக்களைப் போதுமான அளவு பச்சாத்தாபத்துடன் நடத்தியுள்ளாரா, தன்னுடைய இலக்கை அடைந்துள்ளாரா என்பதை அறிவது கடினமாகும். மாறாக, உறுதியான இலக்குகளைப் பொறுத்தவரை வெற்றியை ஒருவர் கிட்டத்தட்ட உடனே அறியலாம். அப்படிப்பட்ட இலக்குக்கான ஓர் எடுத்துக்காட்டு, “நாள்தோறும் குறைந்தபட்சம் ஒருவரையாவது வலியச்சென்று கருணையுடனும் பச்சாத்தாபத்துடனும் நடத்துவது." ஒவ்வொரு நாளின் நிறைவிலும், இந்தக் குறிப்பிட்ட இலக்கை ஒருவர் எட்டியுள்ளாரா, இல்லையா என்பது அவருக்கு உறுதியாகத் தெரியும்.

நிறைவாக, ஒருவருடைய இலக்குகளினிடையே உள்ள உறவுகள் தொடர்பான ஒரு முக்கியமான அம்சம், குறிப்பாக, அவற்றின் ‘பொருத்தம்’ Vs முரண் அளவு. பல இலக்குகளிடையே அதிகச் சமநிலை இருந்தால், போட்டியிடும் இலக்குகளிடையே குறைவான முரண் இருந்தால், அது அதிக மகிழ்ச்சியுணர்வுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வாழ்க்கையில் எட்டு அல்லது பத்து முக்கிய இலக்குகளைத் தீர்மானித்துக்கொண்டு, அவை அனைத்தும் “மிக முக்கியம்” என்று கருதுகிறவர்கள் தங்களையும் அறியாமல் இந்த இலக்குகளிடையே முரணை உண்டாக்கிவிடக்கூடும். காரணம், இவை அனைத்தையும் முழுமையாக அடைவதற்குத் தேவையான நேரத்தை அவர்களால் வழங்க இயலாது. சுருக்கமாகச் சொன்னால், பணி, பணம், குடும்பம், சமூக ஈடுபாடு மற்றும் ஓய்வு ஆகியவற்றில் “எல்லாமே வேண்டும்” என்கிற புகழ்பெற்ற விருப்பமானது உண்மையில் வெவ்வேறு இலக்குகளுக்கிடையிலான உள் முரணைத் தீவிரமடையச்செய்யலாம், மக்களுடைய அன்றாட மகிழ்ச்சியைக் குறைக்கலாம்.

இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுடைய அடிப்படையில், ஒருவர் தன்னைத்தானே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது உதவலாம்: அடுத்த ஆறு மாதங்களுக்கு என்னுடைய இலக்குகள் என்ன?  அடுத்த ஆண்டுக்கு என்னுடைய இலக்குகள் என்ன? அடுத்த மூன்றாண்டுகளுக்கு என்னுடைய இலக்குகள் என்ன? ஓர் எழுதப்பட்ட பட்டியலை உருவாக்குவது இதற்கு உதவலாம்; அதேசமயம், எதார்த்தமான, எட்டக்கூடிய, அளவிடக்கூடிய இலக்குகளை உருவாக்குவது மிகச்சிறந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அப்புறமென்ன, தொடங்கவேண்டியதுதான்!

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்திலுள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் ஓர் இணை உதவி உளவியல் பேராசிரியர். தனிப்பட்ட செயல்பாட்டில் உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான அவர், உளவியல் மற்றும் தொடர்புள்ள துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்/தொகுத்துள்ளார். சமீபத்தில், டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து அவர் எழுதியுள்ள நூல், நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்ச்சியுடைய அறிவியல். நேர்வித உளவியலுக்கான இந்தியச் சஞ்சிகை மற்றும் மனிதத்தன்மை உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களிலும் இவர் பணியாற்றுகிறார். இந்த மின்னஞ்சல் முகவரியில் அவரைத் தொடர்புகொள்ளலாம்: columns@whiteswanfoundation.org                      

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org