தெரபிகளின் வகைகள்

ஒருவர் ஒரு தெரபிஸ்டை பார்க்கவேண்டுமென்றால் அவருக்கு “பெரிய” பிரச்னை இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை

சைக்கோ தெரபி என்றால் என்ன?

சைக்கோ தெரபி என்பது அறிவியல் முறையில் உறுதி செய்யப்பட செயல்களைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் எண்ணங்கள், உணர்வுகளை கையாண்டு ஆரோக்கியமான பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்கின்ற ஒரு சிகிச்சை ஆகும். பாதிக்கப்பட்டவருக்கு இது ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது. இதன் மூலம் அவர் தன்னுடைய பிரச்னையைப்பற்றி மனம் திறந்து பேசலாம், உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இவை அனைத்தையும் அவர்களைப்பற்றிய தீர்ப்பைச் சொல்லாத ஒரு தெரபிஸ்ட் கேட்டுக்கொண்டிருப்பார். இந்தச் சிகிச்சையைப் பெறுகிற ஒருவர் தன்னுடைய ஆரோக்கியமற்ற எண்ணங்கள் மற்றும் நடவடிக்கை பாணிகளை மாற்றிக்கொள்ளலாம் தங்களுடைய வாழ்க்கைச் சூழல்களைச் சமாளிப்பதற்கு ஏற்ற திறன்களைக் கற்றுக்கொள்ளலாம். சைக்கோ தெரபியின் நோக்கம், பாதிக்கப்பட்டவர் பல்வேறு வியுங்ககளைப் பயன்படுத்தி தன்னுடைய சிரமங்களைப் புரிந்துகொண்டு அவற்றை வெல்லுவதற்கு உதவுதல் ஆகும். உதாரணமாக சிறப்பாக தகவல் தொடர்பை நிகழ்த்துதல், பிரச்னைகளைத் தீர்த்தல், முடிவுகளை எடுத்தல், உறுதிப்பாட்டு திறன் பயிற்சிகள், மனத்தைத் தளர்வாக்கும் உத்திகள் போன்றவை

சைக்கோ தெரபி சிகிச்சை பெறுகிற ஒருவர் பின்வரும் விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார் :

 • இப்போதைய அல்லது இதற்கு முந்தைய உறவுகளோடு இருக்கும் முரண்களைச் சரிசெய்தல்
 • பணி அல்லது வாழ்க்கைச் சூழலில் காரணமாக ஏற்பட்டிருக்கும் பதற்றைத்தைத் தணித்தல்.
 • விவாகரத்து, அன்புக்குரிய ஒருவரின் இறப்பு, வேலை பறிபோதல், போன்ற முக்கியமான வாழ்க்கை மாறுதல்களைச் சமாளிக்கக் கற்றுக்கொள்ளுதல்,
 • கோபம், ஆவேசம் போன்ற எதிர்மறையான ஆரோக்கியமற்ற பழக்கங்கள், மற்றும் சமூக, தனிப்பட்ட உறவுகளைப் பாதிக்கக்கூடிய பற்ற பழக்கங்களைக் குறைத்தல்
 • மருத்துவ நோய்கள் அல்லது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், எயிட்ஸ் போன்ற நாள்பட்ட பிரச்னைகள் தனக்கு வந்திருந்தாலோ அல்லது ஒரு குடும்ப உறுப்பினருக்கு வந்திருந்தாலோ அந்த நிலைமையைச் சமாளித்தல்
 • ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளுதல், அவற்றை ஆரோக்கியமான பழக்கங்களாக மாற்றுதல். உதாரணமாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், போன்ற வாழ்க்கைமுறைக் குறைபாடுகளால் ஏற்படுகிற மாற்றங்கள், ஒருவர் எதற்காவது அடிமையாகும்போது செய்யவேண்டிய மாற்றங்கள் போன்றவை
 • எதிர்மறையான உணர்வுகள், பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை போன்றவற்றில் இருந்து விடுபடுதல்

சில சூழ்நிலைகளில் சைக்கோ தெரபியானது மருந்துகள் அளவிற்கு சிறப்பான பலனைத் தரக்கூடும். அதே சமயம் பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து பாதிக்கப்பட்டவருக்கு எந்தச் சிகிச்சை அளிப்பது என நிபுணர்கள் தீர்மானிப்பார்கள். மருந்துகள், மற்றும் பிற சிகிச்சை முறைகளைப் பெற்றுக்கொண்டிருப்பவர்களும் சைக்கோ தெரபி எடுத்துக்கொள்ளலாம். அதாவது அவர்களின் ஒட்டுமொத்தச் செயல் திட்டத்தில் சைக்கோ தெரபி இடம்பெறலாம்.

சைக்கோ தெரபிஸ்ட் என்பவர் யார்?

சைக்கோ தெரபிஸ்ட் என்பவர் சைக்கோ தெரபி மற்றும் பிற உளவியல் சிகிச்சை வடிவங்களில் பயிற்சி பெற்ற ஒரு மனநல நிபுணர் ஆவார். அத்துடன் அவர் மனநல மதிப்பீடு, பிரச்னைகளைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருக்கலாம்.

சைக்கோ தெரபியில் என்னென்ன வகைகள் உள்ளன?

பலவகையான தெரபிகள் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவருக்கு வந்திருக்கிற பிரச்னையைப் பொறுத்து அவருக்கு எந்தவிதமான தெரபியை அளிப்பது என்று நிபுணர் முடிவுசெய்வார். உதாரணமாக, தீவிர செயல்பாட்டுக் குறைபாடு பிரச்னை கொண்ட ஒருவருக்கு நடவடிக்கை தெரபி பயன்படலாம், மனச்சோர்வு பிரச்னையை கொண்ட ஒருவருக்கு அறிவாற்றல் நடவடிக்கை தெரபி பயன்படலாம். இப்படி தெரபியின் வகையானது மாறுபடும்.

சில குறிப்பிட்ட வகைத் தெரபிகள் இங்கே சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன:

நடவடிக்கைத் தெரபி: இந்தச் சிகிச்சை பாதிக்கப்பட்டவர் தன்னுடைய எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள உதவுவதில் கவனம் செலுத்துகிறது, அதன்மூலம் அவர்கள் தங்களுடைய இப்போதைய நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வார்கள், தங்களுடைய சிந்தனையில் இருக்கிற எதிர்மறையான பாணிகளை அடையாளம் காண்பார்கள், அவற்றை நேர்விதமான பாணிகளாக எப்படி மாற்றியமைப்பது என்று கற்றுக்கொள்வார்கள். இந்தச் சிகிச்சைக்கு ஒரு கட்டமைப்பான அணுகுமுறை உள்ளது, பாதிக்கப்பட்டவர் தன்னுடைய நடவடிக்கை பாணியை மாற்றுவதற்கு இது உதவுகிறது, அவர்கள் தங்களுடைய வாழ்க்கைச் சூழல்களுக்கு மேலும் இணங்கி வாழ்வதை உறுதிசெய்கிறது. உதாரணமாக ஒருவர் புகையிலை பழக்கத்தை விட முயற்சி செய்துகொண்டு இருக்கிறார் என்றா, அவர் அதற்காகத் தன்னுடைய நடவடிக்கைகளை எப்படி மாற்றிக்கொள்ளவேண்டும் என்று இந்தச் சிகிச்சை சொல்லித்தருகிறது.

அறிவாற்றல் தெரபி: இது உணர்வுகள் மற்றும் எண்ணங்களைக் கையாள்கிறது. உணர்வுகள் மற்றும் செயல்களால் தான் எண்ணங்கள் தூண்டப்படுகின்றன. இந்தச் சிகிச்சையானது, சில குறிப்பிட்ட கற்றல் கொள்கைகளைப் பயன்படுத்துகிறது. உதாரணமாக உறுதிப்பாடுகளை வழங்குதல், பரிசுகளை வழங்குதல், தண்டனைகளை வழங்குதல், நடவடிக்கைக் கட்டுப்பாட்டின் மூலம் மாற்றத்தைத் திட்டமிடுதல், மனதை தளர்வாக்கும் பயிற்சிகள், திறன் பயிற்சிகள், உறுதிப்பாட்டு திறன் பயிற்சி போன்றவை. இந்தச் சிகிச்சையானது தவறான நம்பிக்கைகள், எண்ணங்களை திருத்தும் நோக்கங்களைக் கொண்டிருக்கிறது. இந்தத் தவறான நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்கள்தான் கோபம், சோகம், பதற்றம் போன்ற எதிர்மறை எண்ணங்களை உண்டாக்குவதால் அவற்றை சரிசெய்யும்போது ஒருவருடைய மனநிலை தெளிவடைகிறது. உதாரணமாக மனச்சோர்வு பிரச்னை கொண்டவர்களுக்கு அறிவாற்றல் தெரபி மூலம் சிகிச்சை வழங்கலாம்.

பிறருடன் பழகுதல் தெரபி (IPT): ஒருவர் பிறருடன் எப்படிப் பழகுகிறார் என்ற உணர்வுகளை மேம்படுத்துவதற்கான சிகிச்சை இது. இது ஒரு கட்டமைப்பைக் கொண்ட சிகிச்சை ஆகும். உதாரணமாக ஒருவருடைய திருமண உறவுகளில் ஏற்படும் முரண்கள், பெற்றோருக்கும் வளர் இளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் இருக்கும் உறவுகள் போன்றவாற்றை இச்சிகிச்சையின் மூலம் மேம்படுத்தலாம்.

IPT என்பது நேர வரம்பிற்கு உட்பட்ட ஒரு சிகிச்சையாகும். இதில் மூன்று நிலைகள் காணப்படுகின்றன : ஆரம்ப நிலை, மத்திய நிலை, முடிவு நிலை

 • ஆரம்பநிலையில், தெரபிஸ்ட் வழக்கமான ஒரு நேர்காணலை நிகழ்த்துகிறார். பாதிக்கப்பட்டவருக்கு IPT பொருந்துமா என்று தீர்மானிக்கிறார். பாதிக்கப்பட்டவர் வெவ்வேறு உறவுகளில் எப்படி நடந்து கொள்கிறார், பிறருடன் பிணைப்பை உண்டாக்கிக் கொள்வதற்கான திறன் அவருக்கு இருக்கிறதா, குறிப்பாக, இப்போதைய உறவுகளில் அவர் எப்படி இருக்கிறார் போன்றவற்றை மதிப்பிடுகிறார்
 • மத்திய நிகழ்வுகளில், தெரபிஸ்டும் பாதிக்கப்பட்டவரும் இணைந்து, தொடர்புள்ள பிரச்னைப் பகுதிகளை முதன்மையான IPT உத்திகளின் மூலம் சரிசெய்ய முயல்கிறார்கள்.
 • நிறைவுக்கட்டத்தில் தெரபிஸ்டும் பாதிக்கப்பட்டவரும் சேர்ந்து வெவ்வேறு பிரச்னைக்குரிய பகுதிகளில் தாங்கள் அடைந்திருக்கிற முன்னேற்றத்தை ஆராய்கிறார்கள். வருங்காலத்தில் வரக்கூடிய பிரச்னைக்காக திட்டமிடுகிறார்கள்.

சோகம் அல்லது இழப்புடன் தொடர்புடைய பிரச்னைகள் (முக்கியமான ஒருவரின் மரணம்), பதவிப் பிரச்னைகள் (துணைவருடன் அல்லது ஓர் உறவினருடன் வரும் சண்டைகள்), பதவி மாற்றங்கள், மற்ற முக்கியமான வாழ்க்கை மாற்றங்கள் போன்றவற்றிற்கும் இந்தச் சிகிச்சை வழங்கப்படுகிறது.

சைக்கோ டைனமிக் தெரபி: இந்தச் சிகிச்சையை அகமயமான சார்புள்ள சிகிச்சை என்றும் அழைப்பார்கள். இந்தச் சிகிச்சையானது ஒருவருடையாய் நடவடிக்கைகளை தூண்டுகிற அவருக்கே தெரியாத எண்ணச் செயல்முறைகளில் கவனம் செலுத்துகிறது. இந்தச் சிகிச்சையானது ஒருவர் தன்னைத்தானே உணர உதவுகிறது. பழைய நிகழ்வுகள் இப்போதைய நிகழ்வுகளை எப்படி பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளச் செய்கிறது. இப்படி ஒருவர் தன்னைத்தானே மதிப்பிட்டுக்கொள்வதால் தங்களுடைய எதிர்மறையான அனுபவங்களை ஆராய்கிறார்கள், இப்போதைய உறவுகள் அல்லது இதற்கு முந்தைய உறவுகளில் இருக்கும் சரி செய்யப்படாத முரண்களை ஆராய்கிறார்கள். இதன்மூலம் இப்போது அவர்களை செயலற்றதாக்கி இருக்கும் நடவடிக்கைகளைப்பற்றி சிந்திக்கிறார்கள்

குறிப்பு: தனக்கு இப்படி ஒரு சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதை ஒருவர் புரிந்துகொண்டு, மருத்துவருடன் இணைந்து செயல்பட முன்வந்தால், அவருக்கு இந்தச் சிகிச்சை மிகவும் நல்ல பலன் தருவது கண்டறியப்பட்டிருக்கிறது. OCD மற்றும் ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற தீவிர மனநலப் பிரச்னை கொண்டவர்களுக்கு இந்தத் தெரபி பலனளிக்காமல் போகலாம். அதே சமயம் உணர்வு முரண்கள் மற்றும் உறவுப் பிரச்னைகள் போன்றவற்றைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது பயன்படுகிறது.

குடும்பச் சிகிச்சை: இந்த வகை சிகிச்சையானது குடும்ப உறவுகளில் பிரச்னை உள்ளவர்களுக்கு அந்தப் பிரச்னையை சரிசெய்ய உதவுகிறது. உதாரணமாக திருமணம் சார்ந்த பிரச்னைகளால் மனைவிக்கு மனச்சோர்வு ஏற்பட்டிருந்தால், அவருக்கு இந்தச் சிகிச்சை தரலாம். இந்தச் சிகிச்சையை வழங்குபவர், பிரச்னைக்குரிய உறவை மதிப்பிடுகிறார். இந்த உணர்வு பிரச்னையை உண்டாக்கியிருக்கக்கூடிய இதற்கு முந்தைய நிகழ்வுகளை பற்றி கேட்டறிகிறார். அதன் அடிப்படையில் குடும்பத்திற்குள் செயலற்ற தகவல் தொடர்புகளைக் கண்டறிகிறார், அனுதாப உணர்வுடன் கவனிப்பது எப்படி, கேள்விகள் கேட்பது எப்படி, கோபப்படாமல் அல்லது தற்காப்புணர்வுடன் இல்லாமல் அறிவார்ந்த சிந்தனையோடு பதில் சொல்வது எப்படி என்று அவர்களுக்குச் சொல்லித்தருகிறார்.

சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவருடைய சிகிச்சையில் அவருடைய குடும்பமும் பங்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும், சில நேரங்களில் ஒரு குடும்பமே செயலற்றதாக இருக்கக்கூடும். பாதிக்கப்பட்டவருடைய இப்போதைய நிலைக்கு அவருடைய குடும்ப உறுப்பினர்களே காரணமாக அமைவார்கள், இதுபோன்ற சூழ்நிலைகளிலும் இந்தச் சிகிச்சை நல்ல பலன்களைத் தருகிறது.

குழுச் சிகிச்சை: இந்தச் சிகிச்சையானது பலருக்கு ஒரே நேரத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக 6 முதல் 12 நபர்களுக்கு இந்தச் சிகிச்சை வழங்கப்படலாம். இந்தச் சிகிச்சை பெறுகிற அனைவருக்கும் ஒரேமாதிரியான பிரச்னை இருக்கலாம். சிகிச்சை வழங்கும் நிபுணர், ஒருவருக்கு வந்திருக்கிற பிரச்னையின் தன்மையை ஆராய்ந்து, அதன் அடிப்படையில்தான் குழுச் சிகிச்சையைச் சிபாரிசு செய்வார்.

குழுச் சிகிச்சையானது பல விதத்தில் பலன் தருகிறது. இதில் பங்கேற்பவர்களுக்குத் தங்களைப்போன்ற பிரச்னைகளைக் கொண்ட மற்றவர்களுடன் பழகுகிற வாய்ப்புக் கிடைக்கிறது, அவர்களுடன் ரோல் ப்ளே எனப்படும் ஒருவரைப்போலப் பின்பற்றிச் செய்கிற முறையைப் பயன்படுத்தி உரையாடுகிறார்கள், பிறருக்கு கருத்துகளைச் சொல்கிறார்கள், அல்லது மற்ற குழு உறுப்பினர்களிடமிருந்து கருத்துகள் அல்லது சிந்தனைகளை அறிந்துகொள்ளலாம். தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் அல்லது போதை மருந்துகளை மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறவர்கள் போன்றவர்களுக்கு இந்தச் சிகிச்சை நல்ல பலன் தருகிறது. காரணம், ஒருவர் ஒரு குழுவின் பகுதியாக இருக்கும்போது, அங்கே பகிர்ந்துகொள்ளப்படும் விவரம் அவரை ஊக்கத்துடன் செயல்படத்தூண்டுகிறது, சம்பந்தப்பட்ட பழக்கத்தை விடவைக்கிறது.

தெரபிகளைப்பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் எவ்வளவு நாள் தெரபி எடுத்துக்கொள்ளவேண்டும்?

பொதுவாக தெரபி என்பது சில நாட்கள் அல்லது சில வாரங்கள் நீடிக்கும், சில நேரங்களில் இது மாதக்கணக்கிலும் செல்லலாம், இந்தக் காலகட்டத்தில் சைக்கோ தெரபி நிபுணர் ஒருவர் பாதிக்கப்பட்டவருடைய பிரச்னை சரியாக உதவுவார். ஒருவேளை பாதிக்கப்பட்டவருக்கு வந்திருக்கிற மனநலப் பிரச்னை தீவிரமானதாக இருந்தால், தெரபி ஒரு வருடங்களுக்குமேல் நீடிக்கலாம். ஒருவர் எத்தனை முறை தெரபி எடுத்துக்கொள்ளவேண்டும், எப்போதெல்லாம் தெரபி பெறவேண்டும் என்பது பல விஷயங்களைப் பொறுத்து அமையும் :

 • மனநலப் பிரச்னையின் அறிகுறிகள் எந்த அளவு தீவிரமாக இருக்கின்றன.
 • இந்த அறிகுறிகள் எவ்வளவு காலமாக இருக்கின்றன அல்லது இந்தப் பிரச்னை எவ்வளவு காலமாக இருக்கிறது.
 • பாதிக்கப்பட்டவர் சிகிச்சையில் பங்கேற்று பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள எந்த அளவு ஊக்கத்துடன் இருக்கிறார்.
 • பாதிக்கப்பட்டவருடைய குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு எந்த அளவு ஆதரவு வழங்குகிறார்கள், பலவிதமான சைக்கோ தெரபிகளில் இது ஒரு முக்கியமான அம்சம் ஆகும்.
 • பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து சிகிச்சைக்கு வருகிறாரா, அங்கே சொல்லித்தரப்படும் விஷயங்களைப் பின்பற்றுகிறாரா.

தெரபிக்கு வருகிறவருடைய விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படுமா?

பாதிக்கப்பட்டவர் தெரபிஸ்டுடன் நிகழ்த்தும் உரையாடல்கள் அனைத்தும் ரகசியமானவை. அதேசமயம், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இந்த விவரங்கள் பாதிக்கப்பட்டவருடைய குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பிற நிபுணர்களோடு பகிர்ந்துகொள்ளப்படலாம். அதாவது, பாதிக்கப்பட்டவர் சொல்லும் ஒரு விஷயத்தால், அவருடைய உயிருக்கோ பிறருடைய உயிருக்கோ ஆரோக்கியத்திற்கோ ஆபத்து ஏற்படக்கூடும் என்று தெரிந்தால், நிபுணர் அதைப்பற்றிப் பிறருடன் பேசலாம், சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யலாம்.

தெரபியா, மருந்துகளா எது சிறந்தது?

தெரபி மற்றும் மருந்துகள் இரண்டுமே மனநலப் பிரச்னையைக் குணமாக்குவதில் நல்ல பலன் தருகின்றன என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், பிரச்னையின் தன்மையைப் பொறுத்தும், அது எந்த அளவு தீவிரமாக இருக்கிறது என்பதை பொறுத்தும்தான் நிபுணர்கள் ஒருவருக்கு எந்தவகைச் சிகிச்சையை வழங்குவது என்று தீர்மானிப்பார்கள். பொதுவாக, தீவிர மனச்சோர்வு, ஸ்கிஜோஃப்ரெனியா, இருதுருவக் குறைபாடு அல்லது பயக் குறைபாடு போன்ற பெரிய பிரச்னைகளுக்கு மருந்துகளைக்கொண்டு சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த மருந்துகள், அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிற அதே நேரத்தில் சைக்கோ தெரபியானது பாதிக்கப்பட்டவர் தன்னுடைய நிலையைப்பற்றி தெரிந்துகொள்வதற்கும், தன்னுடைய அறிகுறிகளை எப்படிக் கையாள்வது என்பது பற்றி கற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org