மனநலமும் திருமணமும்: சட்ட விவரங்கள்

Q

எனக்கு ஒரு மனநலக்குறைபாடு இருந்தால் அல்லது என் மனம் தெளிவில்லாத நிலையில் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தால், நான் திருமணம் செய்துகொள்ள இயலுமா?

A

இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி திருமணச்சட்டங்கள் இருக்கின்றன. சில மதங்களில் திருமணம் செய்துகொள்கிற இருவரில் ஒருவர் மனத்தெளிவு இல்லாவிட்டால், அந்தத்திருமணம் செல்லாது, அந்தத் திருமணம் நடைபெறவே இல்லை என்று அர்த்தமாகிவிடும். வேறு சில மதங்களில் திருமணம் செய்துகொண்ட இருவரில் ஒருவருக்கு மனத்தெளிவு இல்லை என்று தெரிந்தால், அதைக்காரணம் காட்டி விவாகரத்து பெறலாம்.

வெவ்வேறு மதங்கள் இப்பிரச்சனையை எப்படிக்கையாளுகின்றன என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இந்துக்களுக்கு

இந்துத் திருமணச்சட்டத்தின் 5வது பிரிவு, எந்தெந்தச் சூழ்நிலைகளில் ஒரு இந்துத்திருமணம் செல்லும், எந்தெந்தச் சூழ்நிலைகளில் செல்லாது என்று தீர்மானிக்கிறது. அதன் (ii) வது பகுதி மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு திருமணம் செய்து வைத்தலைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது.

திருமணத்தின் போது, திருமணம் செய்து கொள்ளப்போகும் இருவரும், பின்வரும் சூழ்நிலைகளில் இருக்கக்கூடாது:

  • மனத்தெளிவு இல்லாத காரணத்தால் திருமணத்திற்குச் சம்மதம் கொடுக்க இயலாத நிலை.
  • திருமணம் மற்றும் குழந்தைப் பேற்றுக்குத் தகுதி இல்லாத படி ஒரு மனநலப்பிரச்சனைக்கு ஆளாகி இருத்தல்.
  • மனநலப்பிரச்சனைகளால் திரும்பத் திரும்ப தாக்கப்படுதல்.

இந்தச் சட்டத்தின் 12வது பிரிவின் படி, மேற்சொன்ன சூழ்நிலைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால், அந்தத் திருமணத்தை செல்லாது என அறிவித்து விடலாம். இதற்கு அவருடைய துணைவர் (கணவன் / மனைவி) ஒரு நீதிமன்றத்தை அணுகி தங்களுடைய திருமணத்தை இந்தக் காரணங்களுக்காகச் செல்லாததாக அறிவிக்கக்கோரலாம்.

முஸ்லீம்களுக்கு

முஸ்லீம் திருமணச்சட்டத்தின் படி தெளிவில்லாத மனத்தைக் கொண்டவர்களும், திருமண வயதை எட்டாதவர்களும் திருமணம் செய்து கொள்ளலாம். இது அவர்களின் சட்டப்பூர்வமான பாதுகாவலரின் ஒப்புதலோடு செய்யவேண்டிய விஷயம். அத்தகைய ஒரு திருமணம் சட்டப்படி செல்லும்.

பார்ஸிகளுக்கு

பார்ஸி திருமணச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்கிற இருவரில் ஒருவருக்கு மனநிலை சரியில்லாவிட்டாலும் அத்திருமணம் சட்டப்படி செல்லும்.

கிறித்துவர்களுக்கு

கிறித்துவர்களின் திருமணச்சட்டங்கள் திருமணம் செய்துகொள்கிற இருவரில் ஒருவருக்கு மனநலப்பிரச்சனை இருந்தால் என்ன செய்வது என்பது பற்றிப் பேசுவதே இல்லை. ஆகவே திருமணம் செய்துகொள்கிறபோது இருவரில் ஒருவருக்கு மனநிலை சரியில்லாவிட்டால் அந்தத்திருமணம் செல்லாததாகிவிடாது.

விசேஷ திருமணச்சட்டத்தின் கீழ் செய்யப்படுகிற மத நல்லிணக்கத் திருமணங்களுக்கு

இந்தச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்கிற இருவரில் ஒருவருக்கு மனநலம் சரியில்லாவிட்டால், அந்தத்திருமணம் செல்லாது.

இந்தச் சட்டம் பின்வரும் சூழ்நிலைகளை விவரித்து, அந்தச் சூழ்நிலைகளில் ஒரு திருமணம் செல்லாததாகிவிடும் என கூறுகிறது:

  • திருமணம் செய்து கொள்கிற இருவரில் ஒருவர் அந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கிற தெளிவான மனநிலையில் இல்லை.
  • அவர்களால் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்க இயலுகின்றது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட மனநிலை பாதிப்பினால் அவர்கள் திருமணத்திற்கோ அல்லது குழந்தை பெறுவதற்கோ தகுதியற்றவர்கள் ஆகிறார்கள்.
  • அவர்களுக்கு திரும்பத் திரும்ப மனநலப் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன.

Q

என்னுடைய துணைவருக்கு ஒரு மனநலப் பிரச்சனை இருக்கிறது. எங்களால் இந்த உறவைத் தொடர இயலவில்லை. இதைக் காரணமாகக் காட்டி நான் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற இயலுமா?

A

மேலே குறிப்பிட்ட படி, சில சூழ்நிலைகளில் உங்களுடைய திருமணம் தானே செல்லாததாகிவிடலாம். அதே சமயம் வேறு சில சூழ்நிலைகளில் அந்தத்திருமணம் செல்லுபடியாகவும் கூடும். காரணம் நம்நாட்டில் வெவ்வேறு மதங்களுக்கான சட்டங்கள் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி உங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தபோதே உங்கள் துணைவருக்கு இந்தப் பிரச்சனை இருந்ததா என்பதையும் கவனிக்க வேண்டும். அப்போது அவருடைய மனநிலை தெளிவாக இருந்து, திருமணத்திற்குப் பிறகு இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருந்தால், திருமணச் சட்டத்தின் படி அந்தத் திருமணத்தை செல்லாததாக கருத இயலாமல் போகலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்:

இந்துக்களுக்கு

இந்துத் திருமணச்சட்டத்தின் 13வது பிரிவின் படி, உங்களுடைய துணைவருக்குத் தீவிரமான மனநலப் பிரச்சனைகள் தொடர்ச்சியாக அல்லது விட்டுவிட்டு வந்தால் அதன் காரணமாக அவருடன் தொடர்ந்து   வாழ இயலாது என நீங்கள் கருதினால், விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கலாம்.

இஸ்லாமியர்களுக்கு

நீங்கள் ஓர் இஸ்லாமியப் பெண்ணாக இருந்தால் உங்கள் கணவருக்கு இரண்டு ஆண்டுகளாக மனநலப் பிரச்சனைகள் தொடர்ந்தால், இஸ்லாமிய திருமணங்களைச் செல்லாததாக்குகிற சட்டங்களின்கீழ் உங்களுடைய திருமணத்தைச் செல்லாததாக்குமாறு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பார்ஸிக்களுக்கு

உங்களுடைய துணைவர் திருமணத்தின் போதே தெளிவற்ற மனத்துடன் இருந்து அதன்பிறகு தொடந்து தெளிவற்ற மனத்துடனே காணப்பட்டால், நீங்கள் விவாகரத்துக்கோரி நீதிமன்றத்தை அணுகலாம், நீங்கள் நீதிமன்றத்தை அணுகும்வரை அவர் தெளிவற்ற மனத்துடன் காணப்பட்டால் உங்களுக்கு விவாகரத்து வழங்கப்படும். அதே சமயம் அவருக்கு மனநிலை சரியில்லை என்ற உண்மை திருமணத்தின்போது உங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் நிரூபிக்கவேண்டும். அதுபோன்ற சூழ்நிலைகளில், திருமணம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் விவாகரத்துக் கோரவேண்டும்.

ஒருவேளை உங்களுடைய துணைவர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நிலையற்ற மனத்துடன் காணப்பட்டால், அவருடன் இனியும் வாழ்க்கையைத் தொடர்வது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைத்தால், அந்தச்சூழ்நிலையிலும் விவாகரத்துக் கோரி நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.

கிறிஸ்தவர்களுக்கு

இந்திய விவாகரத்துச் சட்டங்களின் படி பின்வரும் சூழ்நிலைகளில் ஒருவர் விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கலாம்:

  • அவரின் துணைவரின் மனநலப்பிரச்சனையைக் ‘குணப்படுத்தவே இயலாது’. இதை நிரூபிப்பதற்கான மருத்துவச் சான்றிதழ்களை அவர் சமர்ப்பிக்கவேண்டும்.
  • அவருடைய துணைவரின் மனநலப்பிரச்சனை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்திருக்க வேண்டும், அதன்பிறகுதான் விவாகரத்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப் பட்டிருக்க வேண்டும்.  

விசேஷத் திருமணச்சட்டத்தின் கீழ் செய்யப்படுகின்ற மத நல்லிணக்கச் சட்டங்களுக்கு

இந்தச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்கிற இருவரில் ஒருவர் குறிப்பிடத்தக்க காலத்திற்கு     மிகத் தீவிரமான ஒரு மனநலப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருடன் தொடர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்று அவர் துணைவர் கருதினால், அவரது துணைவர் விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org