உதவி கேட்பது பலவீனமல்ல

உதவி கேட்பது பலவீனமல்ல

மனநலப் பிரச்னைகளைத் தடுக்க அல்லது கண்டறிய உதவக்கூடிய விஷயங்களை, திறன்களைத் தெரிந்துகொள்வதன்மூலம், இளைஞர்களுக்குப் பெரிய சக்தி கிடைக்கிறது

எழுதியவர்:  டாக்டர் சீமா மெஹ்ரோத்ரா

'மகிழ்ச்சியாகவும் அழுத்தமற்றும் உணர்தல்', 'உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல்' மற்றும் 'வாழ்க்கையின் சவால்களைத் தன்னால் சமாளிக்க இயலுகிறது என்ற உணர்வு'. : கல்லூரிசெல்லும் இளைஞர்கள்மத்தியில், 'மனநல ஆரோக்கியம் என்றால் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?' என்று கேட்டு நாங்கள் ஒரு பெரிய கணக்கெடுப்பை நடத்தியபோது, அதற்குக் கிடைத்த சில பதில்கள் இவை. இந்த இளைஞர்களின் புரிந்துகொள்ளல், கிட்டத்தட்ட மனநலம்பற்றிய அறிவியல் கொள்கையைப்போலவேதான் இருக்கிறது.

இந்திய மக்கள்தொகையில் இளைஞர்களின் சதவிகிதம் குறிப்பிடத்தக்கது. பல காரணங்களால், இளைஞர்களின் மனநலப் பிரச்னைகளை நாம் விசேஷமாகக் கவனிக்கவேண்டியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், அவர்கள் சாதிக்கக்கூடியதும் அதிகம், அவர்களுக்கு வரக்கூடிய பாதிப்புகளும் அதிகம். மனநலப் பிரச்னைகளில் பெரும்பாலானவை, 24 வயதுக்குமுன்பாகதான் வருகின்றன. ஆனால், இந்தப் பிரச்னைகளைச் சந்திப்பவர்களில் மிகச்சிலர்தான் நிபுணர்களைச் சந்தித்து உதவி பெறுகிறார்கள். இது வருத்தத்துக்குரிய விஷயம். இந்த இடைவெளிக்குப் பல காரணங்கள் உண்டு: பிரச்னையைப்பற்றி அறியாமலிருத்தல், எதைச்செய்வது என்கிற குழப்பம், சமூகம் உண்டாக்குகிற களங்கவுணர்வு, நிபுணர்களின் சேவைகள் எளிதில் கிடைக்காமலிருத்தல் போன்றவை.

பட்டப்படிப்பு முடிக்கப்போகும் இளைஞர்களிடையே இதுபற்றி நாங்கள் பல குழு விவாதங்களையும் நடத்தினோம். இந்த விவாதங்களில், இளைஞர்களின் அழுத்தத்துக்குப் பல காரணங்கள் தெரியவந்தன. முக்கியமாக, கல்வி, வேலை மற்றும் சமூக வட்டங்களில் ஏற்படும் அழுத்த உணர்வு மற்றும் போட்டி.

'எப்போதும் அழுத்தமில்லாமல் இருக்கவேண்டும்' என்று அதிகம் எதிர்பார்த்தால், அதுவே அழுத்தத்தைக் கொண்டுவந்துவிடும். காரணம், தினசரி வாழ்க்கையில் எரிச்சல்களைத் தவிர்க்க இயலாது, அதுதான் எதார்த்தம். பல இளைஞர்கள் தங்களுடைய சமூக உலகம் உண்டாக்கும் சவால்களைப்பற்றித் தங்கள் பெற்றோர், ஆசிரியர்களுடன் தங்களால் 'உணர்வுரீதியில் இணைந்துபேசுவது' சிரமமாக இருக்கிறது என்றார்கள். மனநலம்பற்றி இளைஞர்களிடம் பேசியபோது, திரும்பத்திரும்ப வந்த ஒரு விஷயம், 'எங்களை யாரும் புரிந்துகொள்வதில்லை' என்கிற எரிச்சல். கல்லூரிகளில் உள்ள நகர்ப்புற இளைஞர்களில் பலரைப் பாதிக்கும் வேறு சில பிரச்னைகள், சிறிய நகரங்களிலிருந்து பெரிய நகரத்தின் கலாசாரத்துக்கு மாறுதல், தனிமையாக உணர்தல், குறிப்பாக, ஆரம்பகாலத்தில் தன்னுடன் பழக யாருமே இல்லை என உணர்தல் போன்றவை. இத்தனை பிரச்னைகள் இருந்தாலும், இளைஞர்கள் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் பேசினார்கள். தங்களால் நிலைமையைச் சமாளிக்க இயலும், சூழ்நிலைக்கேற்ப மாற இயலும் என்று தெரிவித்தார்கள்.

தங்களுடைய மனநலப் பிரச்னைகளைப்பற்றிப் பேசினால், தாங்கள் பலவீனமானவர்கள் என்று பொருள் இல்லை, அதன்மூலம் தங்களுக்குத் தீவிரமான ஒரு மனநலப் பிரச்னை வந்துள்ளது என்று அர்த்தமில்லை என்பதை இன்றைய இளைஞர்கள் அதிகம் உணர்ந்துள்ளார்கள். நாங்கள் கவனித்தவரை, நகர்ப்புற இளைஞர்கள் நிபுணர்களின் உதவியை நாடும் பொதுவான சில பிரச்னைகள்: 'நெருங்கிய உறவுகளின் பின்னணியில் மனச்சோர்வு மற்றும் உணர்வுக்கொந்தளிப்பைச் சமாளித்தல்', 'பணி இலக்குகளைப்பற்றிய குழப்பம்' மற்றும் 'சமூகச் சூழல்களில் பதற்றம்.'

இளைஞர்கள் ஆதரவை நாடும்போது, பெரும்பாலும் அவர்களுக்கு முதலில் உதவுகிறவர்கள் அவர்களுடைய நண்பர்கள்தான். இதனால், பல தாக்கங்கள் உண்டாகின்றன. முதலில், சக இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய உளவியல் துயரைப் புரிந்துகொண்டு, அதற்கு வேண்டிய ஆதரவை அளிப்பது எப்படி என்று இன்றைய இளைஞர்களுக்குக் கற்றுத்தரவேண்டும். இரண்டாவதாக, மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர், நண்பர்களின் ஆதரவே போதும் என்றோ, நிபுணரைச் சந்தித்தால் போதும் என்றோ எண்ணிவிடக்கூடாது, இந்த இரண்டும் தேவை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும். நிறைவாக, நமது சமூகத்தில் மனநலப் பிரச்னைகளைச்சார்ந்து உண்டாகியிருக்கிற களங்கவுணர்வை எதிர்ப்பதில் இளைஞர்கள் முக்கியப் பங்காற்றலாம். மனநலப் பிரச்னை கொண்ட இளைஞர்களிடம், 'நாங்கள் சொல்வதைக் கேள், அதன்படி நட, அதுபோதும்' என்று சொன்னால், நாம் அவர்களுடைய ஆற்றலை, முயற்சிகளை, ஊடாடல்களைக் கட்டுப்படுத்தி முடக்கிவிடுகிறோம். அதற்குப்பதிலாக, நேர்விதமான சமூக மாற்றங்களைக் கொண்டுவர அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும், அவர்களையும் இதில் பங்கேற்கச்செய்யவேண்டும்.

மனநலப் பிரச்னைகளைத் தடுப்பது அல்லது முன்கூட்டியே கண்டறிவது, மனநல ஆரோக்கியத்தை வலியுறுத்துவது ஆகியவற்றில் இளைஞர்களுக்குப் பயிற்சி தரலாம். இதன்மூலம் அவர்களுக்கும் அவர்களுடைய சக இளைஞர்களுக்கும் நன்மை கிடைக்கும். இந்தப் பிரச்னையைச் சமாளிப்பதற்கான அறிவும் திறன்களும் கிடைக்கும். Youth Pro என்பது, பெங்களூரிலுள்ள மனநலம் மற்றூம் நரம்பு அறிவியல் தேசியக் கல்விநிறுவனத்தின் (NIMHANS) மருத்துவ உளவியல் பிரிவின் ஒரு முயற்சி ஆகும். மனநலத்தை முன்னிறுத்துவதில் இளைஞர்கள் ஆற்றக்கூடிய சக்திவாய்ந்த பங்களிப்பை இது முன்வைக்கிறது.

டாக்டர் சீமா மெஹ்ரோத்ரா NIMHANSல் மருத்துவ உளவியல்துறையில் துணைப் பேராசிரியர். அவர் தனது துறையிலிருக்கும் நேர்வித உளவியல் பிரிவின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறார், இந்தப் பிரிவு மனநலத்தை முன்னிறுத்தும் ஆராய்ச்சி, சேவை மற்றும் பயிற்சிகளைப்பற்றியது, இதில் இளைஞர்கள்மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org