நெருங்கிய கூட்டாளி வன்முறை: ஓர் அறிமுகம்

நெருங்கிய கூட்டாளியின் வன்முறை (IPV) என்பது, உலகெங்கும் லட்சக்கணக்கான பெண்களைப் பாதிக்கிற பொதுநலப் பிரச்னை, இதைத் தவிர்ப்பது சாத்தியமே

டாக்டர் வ்ருந்தா M N

WHO (2010) அமைப்பு நெருங்கிய கூட்டாளியின் வன்முறை (IPV) என்பதை இவ்வாறு வரையறுக்கிறது: ஒரு நெருங்கிய உறவில் உடல்சார்ந்த, பாலியல்சார்ந்த அல்லது உள்ளம்சார்ந்த காயத்தை உண்டாக்கக்கூடிய நடவடிக்கை. உடல்சார்ந்த எல்லைமீறல், பாலியல் வற்புறுத்தல், உள்ளம் சார்ந்த துன்புறுத்தல், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவையும் இதில் உண்டு.  நெருங்கிய கூட்டாளியின் வன்முறை என்பது யாருக்கும் நடக்கலாம், எந்த இனத்திலும், எந்த வயதிலும், எந்தப் பாலியல் நாட்டம் கொண்டோருக்கும், எந்த மதத்தைச் சேர்ந்தோருக்கும், எந்தப் பாலினத்தவருக்கும் நடக்கலாம். திருமணமானவர்கள், சேர்ந்து வாழ்கிறவர்கள், நெருங்கிய உறவில் இருக்கிறவர்கள் என யாருக்கும் இது நடக்கலாம். அனைத்துச் சமூகப் பொருளாதாரப் பின்னணியிலிருந்து வருகிறவர்களும், அனைத்துக் கல்விநிலைகளில் இருக்கிறவர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.  

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு தீவிரமான பொதுநலப் பிரச்னையாகும். இந்தியாவின் தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு  (NFHS-3) அறிக்கை, இந்நாட்டில் 15 முதல் 49 வயதுள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் உடல்சார்ந்த வன்முறையைச் சந்திப்பதாகவும் பத்தில் ஒருவர் பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. திருமணமான பெண்களைப்பொறுத்தவரை, அவர்களுடைய கணவன்களால் அவர்கள் உடல்சார்ந்த அல்லது பாலியல் வன்முறையைச் சந்திக்கும் வாய்ப்பு அதிகம். திருமணமான பெண்களில் ஆறில் ஒருவர் தங்கள் கணவனால் உணர்வு வன்முறையை அனுபவித்துள்ளார்கள் என்கிறது இந்த அறிக்கை.

IPVக்கு ஆளாகும் பெண்களுக்கு நாள்பட்ட மற்றும் தீவிர மனநலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. மனச்சோர்வு, பதற்றம், விலகியிருத்தல், சொமடோஃபார்ம் குறைபாடு, அறிவாற்றல் குறைபாடுகள், போதைப்பொருள்களை அதிகம் பயன்படுத்துதல் மற்றும் அதிர்ச்சிக்குப்பிந்தைய அழுத்தக் குறைபாடு போன்றவையும் இவர்களை அதிகம் பாதிக்கின்றன.

பெண்களிடையே தற்கொலை எண்ணங்கள் தூண்டப்படுவதற்கும் IPV முக்கியக் காரணமாக அமைகிறது. IPVயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களைத் துன்புறுத்துகிற, தங்கள்மீது வன்முறை செலுத்துகிற உறவிலிருந்து வெளியே வந்துவிடலாமே என்றால், பல நேரங்களில் அது அத்துணை எளிதல்ல. தாங்கள் விலகிவந்துவிட்டாலும், தங்கள் கூட்டாளி தங்களைக் கண்டறிந்து துன்புறுத்துவார் என்று பல பெண்கள் பயப்படுகிறார்கள். தங்கள் குழந்தைகளைவிட்டுப் பிரிய நேர்ந்துவிடுமோ என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள். இதனால், தங்கள் துணைவருடைய நடவடிக்கைகள் மாறிவிடும் என்ற நம்பிக்கையுடன், இவர்கள் அந்த உறவிலேயே சிக்கிக்கொள்கிறார்கள், அதனால் தொடர்ந்து வன்முறைக்கு ஆளாகிறார்கள்.  

IPVயை அனுபவிக்கும் பெண்களை அடையாளம் காண்பதற்கு உடல்நல மற்றும் மனநல நிபுணர்கள் உதவலாம், அவர்களுக்கு உரிய உளவியல், சமூகவியல் சிகிச்சையை அளிக்கலாம்.  ஒரு செயல்திறன்வாய்ந்த மற்றும் முழுமையான உளவியல் சிகிச்சையானது இவற்றில் கவனம் செலுத்தவேண்டும்:

  • பழக்கங்கள், இதன்மூலம் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை அதிகரிக்கச்செய்யலாம்.
  • அறிவாற்றல் சிகிச்சைகள், தான் ஏன் துன்புறுத்தப்படுகிறோம் என்பதுபற்றிப் பாதிக்கப்பட்டவர் என்ன நினைக்கிறார், அவரது பார்வைக்கோணங்கள், அறிவாற்றல் முறைமை, சுய மதிப்பு, எதிர்பார்ப்புகள், தானே செயல்படும் தன்மை, பண்புகள் போன்றவற்றை இது கவனிக்கிறது.
  • உளவியல் சிகிச்சைகள், பாதிக்கப்பட்டவரின் பதற்றம், மனச்சோர்வு, அதிர்ச்சி போன்ற துயரம்சார்ந்த பிற காரணிகளை இது கையாள்கிறது.

இவைதவிர, பாதுகாப்புத் திட்டமிடலுக்கு அந்தப் பகுதியின் சமூக ஆதரவுகளை மதிப்பிடுவதும் முக்கியம். உதாரணமாக, நெருக்கடி மையங்கள், ஆதரவு இல்லங்கள், சட்ட ஆதரவு மற்றும் காவல்துறை போன்றவற்றைப்பற்றிய விவரங்களை இவர்களுக்கு வழங்கலாம், இதுவும் முழுமையான சிகிச்சைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும்.

டாக்டர் வ்ருந்தா M N, NIMHANSன் மனநலச் சமூகப் பணி(PSW)த்துறையில் உதவிப் பேராசிரியர். அவரும் அவரது குழுவினரும் AWAKE என்ற பெயரில் ஒரு விசேஷ க்ளினிக்கை நடத்துகிறார்கள், நெருங்கிய கூட்டாளியின் வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கான இந்த க்ளினிக் NIMHANS நல மையத்தில் (NCWB) இயங்கிவருகிறது. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து இந்த எண்ணை அழைக்கவும் 080 2668 5948.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org