சலிப்போடு இருப்பது

“மனிதனின் மகிழ்ச்சிக்கு இரண்டு மிகப்பெரிய எதிரிகள், வலியும் சலிப்பும்,”

“மனிதனின் மகிழ்ச்சிக்கு இரண்டு மிகப்பெரிய எதிரிகள், வலியும் சலிப்பும்,” என்றார் அமெரிக்காவின் மதிப்புமிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன். மார்க் ட்வைன் (நீ சாமுவெல் க்ளெமென்ஸ்) உளவியல் நிபுணர் அல்லர், அவர் படித்தது பத்திரிகைத்துறை. ஆனால், மனித ஆளுமைபற்றிய அவருடைய பார்வைகள் ஒரு நூற்றாண்டுக்கும்மேலாக வாசிக்கப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. மார்க் ட்வைனின் புகழ்பெற்ற நாவல் டாம் சாயரின் சாகசங்கள். அந்த நாவலிலும், மற்ற பல நாவல்களிலும் நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்த பல அமெரிக்க இளைஞர்களை அவர் காட்சிப்படுத்தினார், பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்கச் சிறு நகரங்கள் அவர்களுடைய உணர்வுநிலையை எப்படிப் பாதித்தன என்று எழுதினார். பள்ளியாகட்டும், தேவாலயமாகட்டும், அவர்களைப் பணிக்குச் சேர்க்கிற "மது ஒழிப்பு" இயக்கத்தின் வெளித் தாக்கங்களாகட்டும்... டாம் சாயரும் அவனுடைய நண்பர்களும் தங்களுடைய சமூக உலகத்தால் வலிதரும் அளவுக்குச் சலிப்படைந்தார்கள். மாபி டிக் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர் ஹெர்மன் மெல்வில்லெ. அந்த நாவலிலும், அவருடைய பிற படைப்புகளிலும்கூட, சலிப்பு ஒரு முக்கியமான கருப்பொருளாக இருந்தது. இத்தனைக்கும் மாபி டிக் கதை நிகழும் நியூ இங்கிலாந்துத் திமிங்கில வேட்டைப் பயணங்களிலிருந்து அவருடைய முந்தைய கதைகளின் சூழல் பெரிதும் மாறுபட்டிருந்தது. ஆனால், சலிப்புமட்டும் எல்லாவற்றிலும் இருந்தது. அப்படியானால், சலிப்பு என்பது அமெரிக்காவுக்குமட்டும் தனித்துவமான ஒரு விஷயமா என்றால்... இல்லை. சொல்லப்போனால் 'சலிப்பு' என்ற வார்த்தையைப் பிரபலமாக்கியதே சார்லஸ் டிக்கென்ஸின் 1852 நாவலான ப்ளீக் ஹவுஸ்தான். அதில் லண்டனில் வாழ்ந்த பணக்காரர்களின் மனநிலை விவரிக்கப்பட்டிருந்தது.

சலிப்பைப்பற்றிய ஒரு நீட்டிக்கப்பட்ட கோட்பாட்டை உருவாக்கிய ஆரம்ப உளவியல் ஆய்வாளர்களில் ஒருவர், சிக்மண்ட் ஃப்ராய்டின் மாணவரான ஒட்டோ ஃபெனிசெல். சலிப்பின் உளவியலைப்பற்றி என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த அறிக்கை, 1934ல் லண்டனில் பிரசுரிக்கப்பட்டது. ஃபெனிசெல் சலிப்பை இருவிதமாகப் பார்த்தார்: "வழக்கமான" சலிப்பு, "நோயியல்" சலிப்பு. இதில் வழக்கமான சலிப்பு என்பது, நாம் செய்ய விரும்பும் ஒன்றைச் செய்ய இயலாதபோது, அல்லது, நாம் செய்ய விரும்பாத ஒன்றைச் செய்தாகவேண்டியபோது ஏற்படுவது. இந்த இரு சூழ்நிலைகளிலும், எதிர்பார்க்கப்படுவது அல்லது விரும்பப்படுவது நிகழ்வதில்லை என்றார் ஃபெனிசெல். ஆனால், நோயியல் சலிப்பில், "[பழகுமுறையானது] நிகழ்வதில்லை. காரணம், [பாதிக்கப்பட்டவர்] தன்னுடைய அனிச்சையான [ஆசைகளைப்] பதற்றம் காரணமாகத் தனக்குள் வைத்துக்கொள்கிறார்."

1960களில் மனிதத்தன்மைசார்ந்த உளவியல் வளர்ந்தது. இதன்மூலம் சலிப்புபற்றிய இன்னும் நவீனமான பார்வை தோன்றியது. ஆளுமை வளர்ச்சி மற்றும் நம்பகத்தன்மையை வலியுறுத்தி ஆபிரஹாம் மாஸ்லௌ உண்டாக்கிய கோட்பாடுகள், கற்றல், படைப்புணர்வு, ஒரு சிறந்த உலகை உருவாக்கப் பங்களித்தல் போன்ற உயர்ந்த தேவைகளை நோக்கி நாம் நகரும்போது, சலிப்பைத் தவிர்ப்பது கிட்டத்தட்ட இயலாத ஒன்று என்று தெரிவித்தன. உதாரணமாக, மாஸ்லௌ எழுதிய தாக்கம் மிகுந்த ஒரு கட்டுரை "அறியும் தேவை மற்றும் அறிந்திருத்தல்பற்றிய பயம்". இந்தக் கட்டுரையில் அவர் 25 ஆண்டுகளுக்குமுன் சந்தித்த ஒரு புத்திசாலி இளம்பெண்ணைப்பற்றிச் சொல்கிறார். அப்போது உலகைப் பெருமந்தநிலை சூழ்ந்திருந்தது. அந்த நேரத்தில் இந்தப் பெண் தன்னுடைய ஒரு பிரச்னையைப்பற்றி மாஸ்லௌவிடம் பேசினாள், தனக்கு வழிகாட்டுமாறு கேட்டாள், அவர் அதிகாரப்பூர்வமற்றமுறையில் அவளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அவளுடைய பிரச்னை என்ன? வாழ்க்கைமீது தீவிரச் சலிப்பு, அதோடு உடல்சார்ந்த சலிப்பும். இவை தூக்கமின்மை, பசியின்மை, குறைந்த பாலுணர்ச்சி போன்ற பல அறிகுறிகளாக அவளிடம் வெளிப்பட்டன. இத்தனைக்கும், அவள் அப்போது நல்ல வேலையில் இருந்தாள். நியூ யார்க் நகரத்திலிருந்த சூயிங்கம் தொழிற்சாலையொன்றில் உதவி ஊழியர் மேலாளராகப் பணியாற்றிய அவள் நன்கு சம்பாதித்துக்கொண்டிருந்தாள். ஆனால், இந்த வேலையில் தான் தன்னுடைய "வாழ்க்கையை வீணடித்துக்கொண்டிருப்பதாக" (மாஸ்லௌவின் விவரிப்பு இது) அவள் உணர்ந்தாள். தன்னுடைய திறமையையும் அறிவையும் உளவியலில் பயன்படுத்ததை எண்ணி அவள் "மிகவும் விரக்தியுடனும் கோபத்துடனும் இருந்தாள்". தினமும் பணிக்குச் சென்று திரும்பியபிறகு, இரவு நேரத்தில் தன்னுடைய படிப்பைத் தொடருமாறு மாஸ்லௌ அவளுக்குப் பரிந்துரைத்தார். இதனால் "அவள் இன்னும் உயிரோட்டத்துடன் இருப்பதாக உணர்ந்தாள், அதிக மகிழ்ச்சி, ஆர்வத்தை வெளிப்படுத்தினாள். அவர்களுடைய கடைசி ஆலோசனைச் சந்திப்புக்குள், அவளுடைய உடல்சார்ந்த அறிகுறிகளில் பலவும் மறைந்துவிட்டன". இதுகுறித்து மாஸ்லௌ சொல்வது, நாம் தனிப்பட்டமுறையில் அர்த்தமுள்ள அறிவை அல்லது திறன்களைத் தேடும்போது சலிப்பு மறைந்துவிடுகிறது.

மனிதத்தன்மை சார்ந்த உளவியலை நிறுவியவர்களில் இன்னொருவர், ரொல்லோ மே.  சலிப்பாக உணர்கிற மனநிலையானது ஒருவருடைய குழந்தைப்பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது என்று இவர் வாதிட்டார். இது இனிமையானதாக இல்லாவிட்டாலும், படைப்புணர்வோடும் ஆர்வத்தோடும் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்வதற்கு இது அவசியம். "வளர்ந்தபிறகு நீங்கள் சலிப்பைத் தவிர்க்கவேண்டுமென்றால், குழந்தைப்பருவத்திலிருந்தே அதைக் கற்றுக்கொள்ளவேண்டும்" என்றார் அவர். "சலிப்பானது உங்களை உங்களுடைய சொந்தக் கற்பனைக்குள் இழுக்கிறது. நீங்கள் தனிமையில் இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும், உங்களுடைய கற்பனையை இன்னும் ஆழமான நிலையில் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளவேண்டும்." மே அவர்களின் பார்வையில், ஒருவர் குழந்தைப்பருவத்தின்போது சலிப்பைச் சிறப்பாகக் கையாளக் கற்றுக்கொள்ளாவிட்டால், அவர் வளர்ந்தபிறகு அவருக்கு முக்கியமான சில விளைவுகள் ஏற்படும், இதன்மூலம் பிறருடன் அனுசரித்துச் செல்லுதல், தேங்கிநிற்றல் போன்றவை ஏற்படலாம்.      

 இன்றைக்கு, பலவகையான அடிமையாதல் பழக்கவழக்கங்களின் பின்னே நாள்பட்ட சலிப்பு இருக்கிறது என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் அதிகரித்துவருகின்றன. உதாரணமாக, மதுப்பழக்கம், போதைமருந்துப்பழக்கம், அதீத சூதாட்டம், அதிகம் உண்ணுதல் ஆகியவை.  UKயில் 1,300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ஓர் ஆய்வில், சலிப்பானது அதிகம் உண்ணுதலுக்கு ஒரு முக்கியமான காரணம் என்று கண்டறிந்தார் டாக்டர் க்ளென் வில்ஸன். குறிப்பாக, பெண்களிடையே இது அதிகம் காணப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில், "பெண்களிடையே அதிகம் உண்ணுதலைத் தூண்டும் ஒரு முக்கியமான அம்சம், ஒரேமாதிரியான/சலிப்பூட்டும் வேலைகளைச் செய்தல். இல்லத்தரசியின் வாழ்க்கைமுறையானது, பொதுவாக ஆண்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் பணிக்குச் செல்லுகிற வாழ்க்கைமுறையைவிடக் குறைவான பரிசுகளையே வழங்குவது என்கிற பரவலாக அறியப்பட்டுள்ள நம்பிக்கையை இத்துடன் இணைத்துப்பார்க்கலாம்" என்றார் வில்ஸன். சமீபத்தில் ஹாலந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ரெம்கோ ஹவெர்மன்ஸ் தலைமையில் ஒரு பரிசோதனை ஆய்வு நடைபெற்றது. இதில் இரு வெவ்வேறு குழுவினருக்கு வெவ்வேறு படங்கள் காட்டப்பட்டன. அதில் ஒரு குழுவினர் 60 நிமிடங்கள் ஓடிய சலிப்பூட்டும் படமொன்றைப் பார்த்தார்கள். இன்னொரு குழுவினர் சுவையான ஆவணப்படமொன்றைப் பார்த்தார்கள். இதில் சலிப்பான படத்தைப் பார்த்த குழுவினர் விறுவிறுப்பான படத்தைப் பார்த்த குழுவினரைவிட சுமார் இருமடங்கு அதிக சாக்லெட்களை உண்டிருந்தார்கள். இதன் அடிப்படையில் ஆய்வாளர்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள், "சலிப்பு என்பது ஒரு வலுவான உணர்வுநிலை, இதனால் உண்ணுவதற்கான தூண்டுதல் ஏற்படுகிறது."

நோயியல் அல்லது பிரச்னையான சூதாட்டமும் சலிப்போடு இணைக்கப்பட்டுள்ளது.  இதுபற்றி அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஓர் ஆய்வு, ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. டாக்டர் அலெக்ஸ் ப்ளாஸ்ஜ்சின்ஸ்கி தலைமையில் நிகழ்ந்த இந்த ஆய்வில், கட்டுப்படுத்த இயலாத அளவுக்குச் சூதாடும் துடிப்பை/பழக்கத்தைக் கொண்டவர்கள் மற்றவர்களைவிடக் குறிப்பிடத்தக்க அளவு அதிகச் சலிப்புணர்வோடும் மனச்சோர்வோடும் இருப்பது தெரியவந்தது.  இத்தகைய ஆய்வுகளின் அடிப்படையில், ப்ளாஸ்ஜ்சின்ஸ்கியும் அவரது சக ஆய்வாளர்களும் பல தனித்துவமான ஆளுமை வகைகளுக்குச் சூதாடுதல் போன்ற சிரமங்கள் வரக்கூடும் என்று வாதிட்டார்கள், குறிப்பாக, விரைவில் சலிப்படைகிறவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம் என்றார்கள். இந்த ஆய்வாளர்களின் கருத்து, "இந்த நபர்கள் தீவிரச் சலிப்போடு இருப்பதுமட்டுமல்ல, சூதாட்டம் போன்ற நடவடிக்கைகளும் இவர்களுக்குச் சலிப்புத்தட்டிவிடுகின்றன, அதன்பிறகு, ஒரு புதுமையான, மாறுபட்ட, அதிக தூண்டுதலை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுகளைத் தேடுகிறார்கள்."  

சலிப்பின் அபாயங்களைப்பற்றிய மருத்துவ ஆராய்ச்சிகள் பெரும்பாலும் வளர்இளம்பருவத்தினர்மீது கவனம் செலுத்தியுள்ளன. மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் செப்போ ஐசோ-அஹோலா தலைமையில் நடைபெற்ற ஒரு முக்கியமான ஆய்வில், போதைப்பொருள்களை அதீதமாகப் பயன்படுத்தும் பதின்பருவத்தினர்கள், மற்றவர்களைவிட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகச் சலிப்படைகிறவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது. ஓய்வுநேர நடவடிக்கைகள் இவர்களை எளிதில் சலிப்புக்குள்ளாக்கின. 2003ம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில், அடிமையாதல் மற்றும் போதைப்பொருள்களைத் தவறாகப் பயன்படுத்துதலுக்கான தேசிய மையம் (CASA) ஓர் ஆய்வை நடத்தியது. இதன்படி, தாங்கள் அடிக்கடி சலிப்புக்குள்ளாவதாகச் சொல்லும் பதின்பருவத்தினர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகும் வாய்ப்பு மற்றவர்களைவிட (அபூர்வமாகச் சலிப்படைகிறவர்கள் அல்லது எப்போதும் சலிப்படையாதவர்களைவிட) 50% அதிகம் என்று தெரியவந்தது.

இதேபோல் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, UK என்று பலவிதமான நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகளெல்லாம் சலிப்புக்கும் பதின்பருவத்து போதைப்பழக்கத்துக்கும் உள்ள வலுவான இணைப்பைக் கண்டறிந்துள்ளன. பிரிட்டனைச்சேர்ந்த தொண்டு நிறுவனமான ட்ரிங்கவேர் 1,000க்கும் மேற்பட்ட வளர்இளம்பருவத்தினரிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதில் 16 மற்றும் 17 வயது கொண்டோரில் 8% பேர் வாரம் ஒருமுறையாவது, 'சலிப்பாக இருக்கிறது' என்பதற்காகமட்டுமே மது அருந்துகிறார்கள் என்பது தெரியவந்தது. இந்தக் கணக்கெடுப்பில் கலந்துகொண்டோரில் 29% பேர் ஒருமுறையேனும் சலிப்பு காரணமாக மது அருந்தியிருப்பதாகக் குறிப்பிட்டார்கள். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட வளர்இளம்பருவத்தினர் மத்தியில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் "ஓய்வுச் சலிப்பு" என்பது கணக்கிடப்பட்டது. "சும்மா இருப்பது சலிப்பாக உள்ளது", "சும்மா இருக்கும்போது நேரம் நகர மறுக்கிறது" என்பதுபோன்ற கேள்விகளுக்கு இவர்கள் பதிலளித்தார்கள். இந்தப் பதில்களைத் தொகுத்துப்பார்த்தபோது, ஒருவருடைய ஓய்வுச் சலிப்பை வைத்து, முந்தைய நான்கு வாரங்களில் அவர்கள் மதுப்பழக்கம், புகைப்பழக்கம், மரிஜுவானா(போதை)ப் பழக்கம் போன்றவற்றில் ஈடுபட்டார்களா என்பதைக் குறிப்பிடத்தக்க அளவு ஊகிக்கமுடிந்தது. அதைவிட ஆச்சர்யம், ஒருவர் தானே குறிப்பிடும் சலிப்பின் அளவானது ஓர் அலகு அதிகரிக்கும்போது, அந்தக் காலகட்டத்தில் அவர்கள் மது அருந்தக்கூடிய சாத்தியம் 14% அதிகரித்தது, அவர்கள் புகைபிடிக்கக்கூடிய சாத்தியம் 23% அதிகரித்தது, அவர்கள் மரிஜுவானா பயன்படுத்தக்கூடிய சாத்தியம் 36% அதிகரித்தது.    

சலிப்பை விரட்டுதல்: வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு செயல்பாடு

சலிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி?  அநேகமாக எல்லாருக்குமே அவ்வப்போது சலிப்பு வருகிறது. ஆனால், தீவிர சலிப்பானது தினசரி ஆரோக்கியத்துக்கு ஒரு பெரிய தடையாகும்.  ஒருவருடைய பணியிடம் அல்லது வீடு அவரைப் போதுமான அளவு தூண்டவில்லை என்றால், அவர்களுக்காக ஒரு பயனுள்ள செயல்பாடு:

அவர்கள் இதுவரை பார்த்திராத, ஆனால், தெரிந்துகொள்ள விரும்புகிற ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அடுத்த மூன்று வாரங்கள், அந்த நாட்டின் வரலாறு, கலாசாரம், பாரம்பரியம், இப்போதைய இசை, கலை, உணவுப்பழக்கம், தொழில்துறை, மொழி, அரசியல் மற்றும் இயற்கைச்சூழல்பற்றி அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். இணையத்தில் தாங்கள் படிக்கிற விஷயங்களில் சுவையானவற்றைக் குறித்துவைத்துக்கொள்ள ஒரு தனி நோட்டுப்புத்தகத்தைப் பயன்படுத்தலாம். அந்த விவரங்களைச் சேமித்துவைக்கக் கணினியில் ஒரு கோப்புறையை உருவாக்கலாம். இதன்மூலம் அவர்கள் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்வார்கள், அவர்களுடைய ஆர்வம் அதிகரிக்கும். அந்த நாட்டைப்பற்றி நன்கு தெரிந்துகொண்டபிறகு, அங்கே செல்வதுபற்றி அவர்கள் யோசிக்கலாம் - அந்த நாட்டைப்பற்றிய பல விஷயங்களில் எது தங்களுடைய ஆர்வத்தைத் தூண்டுகிறது என்று அவர்கள் சிந்திக்கலாம்.  

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன், நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் உளவியல் கூடுதல் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தனியே ஆலோசனை வழங்கும் உரிமம் பெற்ற உளவியல் மருத்துவ நிபுணரான இவர், உளவியல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  டாக்டர். ஹாஃப்மன் சமீபத்தில், டாக்டர். வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து எழுதியுள்ள நூல், நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்ச்சியின் அறிவியல். நேர்வித உளவியலுக்கான இந்திய சஞ்சிகை மற்றும் மனிதத்தன்மை சார்ந்த உளவியல் சஞ்சிகைக்கான ஆசிரியர் குழுவிலும் இவர் பணியாற்றுகிறார். நீங்கள் அவருக்கு எழுத இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org