மதிப்பிடல் உரையாடலை எண்ணிப் பதற்றமா? அதற்குத் தயாராவது எளிதுதான்!

மதிப்பிடல் உரையாடலை எண்ணிப் பதற்றமா? அதற்குத் தயாராவது எளிதுதான்!

மதிப்பிடல் பருவம் தொடங்கியதும் பலருக்குப் பதற்றம் ஏற்படக்கூடும்: சென்ற ஆண்டில் தங்களுடைய பணியைத் தங்கள் மேலாளர் எப்படி மதிப்பிடுவாரோ என்கிற கவலை, செயல்திறன் மற்றும் சம்பளம்பற்றி மேலதிகாரிகளுடன் உரையாடுவதுபற்றிய பதற்றம் ஆகியவை உண்டாகும். பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்றால், பணிப் பாதுகாப்புபற்றிய அச்சங்களும் இருக்கலாம். இந்தக் கவலைகள் இயல்பானவையா? ஒருவர் இதற்கு இன்னும் சிறப்பாகத் தயாராவது எப்படி?

இந்த அழுத்தத்தை எப்படிக் கையாள்வது, அதிகபட்சத் தன்னம்பிக்கையுடன் மதிப்பிடல் உரையாடல்களை நிகழ்த்துவது எப்படி என்பதுபற்றி, வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸில் சர்வதேச மருத்துவ மேலாளராக இயங்கிவரும்  மௌலிகா ஷர்மாவுடன்பேசினார்  ஶ்ரீரஞ்சிதா ஜெயுர்கர்.

மதிப்பிடல் நேரத்தில் பதற்றம் அல்லது அழுத்தத்தை உணர்வது இயல்பா? இந்தப் பதற்றங்கள் எவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்?

மதிப்பிடல் நேரம் என்பது பெரும்பாலும் முந்தைய ஆண்டின் மதிப்பீடாகப் பார்க்கப்படுவதில்லை, வருங்காலப் பாதை எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்கிற விஷயமாக எண்ணப்படுகிறது. பலருக்குத் தன்னைப்பற்றிய ஐயம் இருக்கிறது, ஆகவே, தன்னுடைய வருங்காலப் பாதை மோசமாக இருக்கும் என்று ஊகிக்கிறார்கள். மதிப்பிடல் செயல்முறை என்பதை மக்கள் ஒரு வெளி மதிப்பீடாகக் காண்கிறார்கள், தங்களுடைய வருங்காலப் பாதையை இந்த வெளி மதிப்பீடுதான் தீர்மானிக்கிறது என்று எண்ணுகிறார்கள்; ஆனால் உண்மையில் அது ஒருவருடைய பழைய செயல்திறனை மதிப்பிடும் வெளி மதிப்பீடாகும். மக்கள் தங்களுடைய எதிர்காலம் மோசமாகதான் இருக்கும் என்று மனத்தளவில் எண்ணுகிறார்கள், ஆகவே, வெளி உலகமும் தங்களுடைய எதிர்காலத்தை மோசமாகதான் மதிப்பிடும் என்று கருதுகிறார்கள். பொதுவாக ஒருவருடைய நம்பிக்கைகளைதான் சுற்றுச்சூழல் பிரதிபலிக்கிறது. இத்துடன், மதிப்பிடல் என்பது தங்களுடைய மதிப்பின் ஓர் அளவு என்றும் மக்கள் கருதுகிறார்கள். மதிப்பிடல் தங்களைப்பற்றி என்ன சொல்கிறதோ அதுதான் உண்மை என்று எண்ணுகிறார்கள்; அந்த அளவுதான் தாங்கள் சிறந்தவர்கள், அந்த அளவுதான் தகுதியுள்ளவர்கள் என்று நம்புகிறார்கள்.

உண்மை என்னவென்றால், மதிப்பிடலின் முடிவுகள் பகுதியளவுதான் ஒருவருடைய மதிப்பைச் சார்ந்திருக்கின்றன. அவை இன்னும் பல காரணிகளால் பாதிக்கப்படுகின்றன: மேலாளரால், மேலாளர் தன்னை எப்படி மதிப்பிடுகிறார் என்பதால், நிறுவன அரசியலால், நிறுவன இலக்குகளால், போட்டி மற்றும் சந்தை ஆற்றல்களால், இன்னும் பலவற்றால். ஆகவே, அவை ஒருவருடைய மதிப்பை முழுமையாகவும் ஐயத்துக்கு இடமில்லாமலும் கணக்கிடுவதில்லை.

ஆகவே, அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய சில கேள்விகள்:

·       எதிர்காலத்தை யாராலும் கணிக்க இயலாது; ஆகவே, நாளைக்கு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியானால், எதிர்காலத்தில் மோசமான விஷயங்கள்தான் நடக்கும் என்று ஏன் ஊகிக்கவேண்டும்?

·       ஒருவருடைய பணிவாழ்க்கையில் ஒரு மதிப்பிடல் சுழல் சரியாக நடக்கவில்லை என்றால், அவருடைய ஒட்டுமொத்த எதிர்காலமும் மோசமாகிவிடும் என்று பொருளா? அந்தத் தோல்வியிலிருந்து தன்னால் மீளவே இயலாது என்று அவர் நினைப்பது ஏன்?

·       மக்கள் பணி மதிப்பிடலைத் தங்களுடைய ஒட்டுமொத்தச் சுய மதிப்பின் அளவாக நாம் நினைப்பது ஏன்?

சிலர், தங்களுடைய மேலாளர் அல்லது கண்காணிப்பாளரிடம் தங்கள் செயல்திறனைப்பற்றிப் பேசுவதை எண்ணியும் பதற்றமடையக்கூடும். இதை எப்படிச் சமாளிக்கலாம்? முதலில், தொலைநோக்கில் சிந்திக்கவேண்டும். ஒருவருடைய வாழ்க்கையில் இப்படிச் சுமார் 30 மதிப்பிடல்கள் நடைபெறவிருக்கின்றன; அவற்றில் ஒன்றுதான் இது. இது அவருடைய வாழ்க்கையை வரையறுக்கப்போவதில்லை. நினைவிருக்கட்டும், வாழ்க்கையை ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தயம்போல் எண்ணக்கூடாது (அதனை முழுமையாகப் பூர்த்திசெய்யும் இலக்குடன் செயல்படக்கூடாது), அதற்குப்பதிலாக, பல 100-மீட்டர் ஓட்டப்பந்தயங்களின் வரிசையாக அதைக் கருதவேண்டும் (அவை ஒவ்வொன்றையும் வெல்லும் இலக்குடன் முன்னேறவேண்டும்).

இரண்டாவதாக, அவர் தன்னுடைய வலிமைகளை நினைவில்கொள்ளவேண்டும். ஒவ்வொரு வலிமையாக அவர் எண்ணிப்பார்க்கவேண்டும், தான் இன்றைக்கு இருக்கும் நிலைமைக்கு வருவதற்கு அந்த வலிமைகள் எப்படி உதவின என்று நினைக்கவேண்டும், வருங்காலத்தில் தான் இருக்கவிரும்பும் இடத்துக்குச் சென்றுசேர அவை எப்படி உதவும் என்று யோசிக்கவேண்டும்.

மூன்றாவதாக, அவர் தன்னைத்தானே இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளவேண்டும் – அப்படி என்ன மோசமாக நடந்துவிடும்? இந்தக் கேள்விக்கு அவர் நேர்மையாகப் பதில் சொன்னால், குழப்பம் தீர்ந்துவிடும். இருப்பதிலேயே மிக மோசமான நிலைமை வந்தாலும் தன்னால் சமாளித்து முன்னேற இயலும், அதற்கான மன வலிமை தனக்கு உண்டு என்பதை அவர் உணர்வார்.

ஒருவர் மதிப்பிடலின்போது பதற்றத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? எப்படித் தயாராகலாம்?

·       தான் என்ன சாதித்திருக்கிறோம், எதைச் சாதிக்கவில்லை என்பதை எதார்த்தமாக முன்கூட்டியே சிந்தித்துத் தயாராகலாம். தான் சில இலக்குகளை வெற்றிகரமாக எட்டியிருக்கிறோம் என்றால், அதற்கு என்னென்ன காரணம் என்று அறிந்திருக்கவேண்டும்; வேறு சில இலக்குகளை எட்டவில்லை என்றால், அதற்கு என்னென்ன காரணம் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்

·       தான் சந்தித்த சவால்களை அவர் எண்ணிப்பார்க்கவேண்டும், வருங்காலத்தில் தான் சந்திக்கப்போகும் சவால்களையும் கருதவேண்டும், இவற்றையெல்லாம் அவர் விவாதிக்கவேண்டியிருக்கும்

·       அடுத்து வரும் காலகட்டத்துக்கான தன்னுடைய இலக்குகளைப்பற்றிச் சிந்திக்கவேண்டும்

·       உரையாடலை அவர் கட்டுப்படுத்தவேண்டும், அதை நேர்விதமாக வழிநடத்தவேண்டும், எதுவும் செய்யாமல் உரையாடல் செல்லும் திசையில் தானும் செல்லக்கூடாது

·       தன்மீதும் தன்னுடைய மதிப்பின்மீதும் நம்பிக்கை வைக்கவேண்டும். தன்னுடைய பலங்கள், பலவீனங்களை அறிந்திருக்கவேண்டும்

தேவைப்பட்டால், மதிப்பிடல் சந்திப்பின்போது தான் விவாதிக்க விரும்பும் அனைத்துத் தலைப்புகளைப்பற்றியும் அவர் சிந்திக்கலாம்; அவற்றை ஒரு சிறு தாளில் எழுதிக்கொள்ளலாம்; பின்னர் கூட்டத்தின்போது அவற்றைப் பார்த்துப் பேசலாம், கேள்விகளைக் கேட்கலாம், எதையேனும் மறந்துவிடுவோமோ என்கிற கவலை இல்லை.

மதிப்பிடல் பதற்றத்துக்கு உதவி கோருவதற்குச் சரியான நேரம் எது?

எப்போது வேண்டுமானாலும் உதவி கோரலாம்; சில நேரங்களில், தன்னுடைய குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ளக்கூட ஒருவருக்கு உதவி தேவைப்படலாம். ஒருவேளை அவர் பதற்றமாக உணர்ந்தால், அவரால் தூங்க இயலாவிட்டால், வயிற்றைப் பிசையும் உணர்வு ஏற்பட்டால், அழுத்தத்துக்கான வெளி அறிகுறிகள் எவையேனும் தென்பட்டால், வேலையில் கவனம் செலுத்த இயலாவிட்டால், அவர் கண்டிப்பாகப் பிறரிடம் உதவி கோரவேண்டும். அப்படி உதவி கேட்பது பலவீனமில்லை. உண்மையில், உதவி கேட்பதற்குத் துணிச்சல் தேவை, அது ஒரு பெரிய வலிமையின் அடையாளம், ஒருவர் தன்னுடைய வரம்புகளைப் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும் அடையாளம்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org