பணியிடம்

தாய்மார்களுக்கு ஆதரவான பணியிடம்

பல நிறுவனங்கள் தங்களிடம் பணி புரிகிறவர்கள் குழந்தை பெறும் போது, தங்களுடைய கொள்கைகளை அதற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொண்டிருக்கிறார்கள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

பணிக்குச் செல்லும் ஒரு பெண் கர்ப்பமாகும்போது, அது அவருக்கு மிகவும் முக்கியமான ஒரு காலகட்டம் ஆகும். முழு நேரம் வேலை செய்யும் பெண்கள் கர்ப்பமானால் அவர்களுக்கு நிறுவனத்தின் ஆதரவு தேவை, உதாரணமாக கர்ப்ப கால விடுமுறை மற்றும் பிற ஆரோக்கியம் சார்ந்த பலன்கள் ஆகியவற்றை அவர்கள் நாடுகிறார்கள். இது போன்ற நன்மைகளை ஊழியர்களுக்கு எப்படி வழங்குவது என்பது நிறுவனத்தின் HR கொள்கைகளைப் பொறுத்துதான் அமையும். அதேசமயம் சட்டப்படி சில குறைந்த பட்சப் பலன்களை அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

தாய்மை பலன்கள் சட்டம் 1961  

இந்த சட்டத்தின் படி குழந்தை பெறப்போகும் ஒரு பெண்ணுக்கு பன்னிரண்டு வாரங்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படவேண்டும்: குழந்தை பெறுவதற்கு முன் ஆறு வாரங்கள், குழந்தை பெற்ற பின் ஆறு வாரங்கள்.

ஒரு பெண் கர்ப்பமாக உள்ள போது அதைக் காரணம் காட்டி அந்தப் பெண்ணுக்கு எதிராக பாரபட்சமாக எந்த நடவடிக்கையையும் ஒரு நிறுவனம் எடுக்கக்கூடாது என்றும் இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. இதன்படி ஒரு பெண் கர்ப்பமாக உள்ளார் என்ற காரணத்திற்காக எந்த நிறுவனமும் அவரை வேலையிலிருந்து நீக்க இயலாது. கர்ப்பமாக உள்ள ஒரு பெண் எத்தனை காலம் பணிக்கு வர இயலாது என்பதை எழுத்து பூர்வமாகத் தெரிவித்து விட்டு, விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த விடுமுறையுடன், கர்ப்பமாக உள்ள ஒரு பெண் உடல்நிலையைக் காரணம் காட்டி ஒரு மாதம் வரை கூடுதல் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதற்கு அவரது கர்ப்பத்தின் காரணமாக ஏற்பட்ட ஓர் ஆரோக்கியப் பிரச்சனை காரணமாக அமைய வேண்டும், அதற்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். ஒருவேளை அவரது கர்ப்பம் கலைந்துவிட்டால் அந்தத் தேதியிலிருந்து அவருக்கு ஆறுமாதம் விடுமுறை உண்டு.

HR கொள்கைகள்

மேற்சொன்னபடி அவசியமான சட்டபூர்வமான தேவைகளைப் பூர்த்திசெய்தபிறகு, ஒவ்வொரு நிறுவனமும் தான் விரும்பிய வகையில் தம்முடைய ஊழியர்களுக்கு கர்ப்ப காலப் பலன்களை அளிக்கலாம் அதற்கேற்ப தங்களுடைய HR கொள்கைகளை வகுத்துக்கொள்ளலாம். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, அவருக்கு ஏற்படக்கூடிய அழுத்தம், அவருடைய உடல்நிலை, மனநிலை, அவருக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் நலன் ஆகியவை எந்த அளவு பாதிக்கப்படக்கூடும் என்பதை எல்லாரும் புரிந்துகொள்கிறார்கள், அதற்கேற்ப தங்களது நிறுவனத்தின் கொள்கைகளை மேலும் தளர்வாக்குகிறார்கள், குழந்தை பெறப்போகும் ஊழியர்களுக்கு அதிகப்பலன்களைத் தருகிறார்கள்.

உதாரணமாக சில நிறுவனங்கள், சட்டப்படி வழங்கக்கூடிய கர்ப்பகால விடுமுறைகளுக்கு மேல் கூடுதல் விடுமுறைகளை வழங்குகிறார்கள், விடுமுறை காலத்தின் ஊழியர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்குகிறார்கள். அவர்களுடைய பயண செலவுகள் போன்றவற்றை நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது, அவர்கள் விரும்பிய நேரங்களில் வேலை பார்க்கலாம் என்று அனுமதி அளிக்கப்படுகிறது. பகல் நேரத்தில் அவர்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அதற்கும் நிறுவனங்கள் வழி செய்கின்றன.

சமீபத்திய போக்குகள்

சமீப காலமாக, பல நிறுவனங்கள், தங்களிடம் பணி புரியும் பெண்கள் குழந்தை பெற விரும்பினால், அவர்களுக்கு பல விதமான பலன்களை வழங்கிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, கூகுள், ஃபிளிப்கார்ட், இன்மொபி, அக்சென்சர் போன்ற நிறுவனங்களில் ஐந்துமுதல் ஆறுமாதங்கள் வரை கர்ப்பகால விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்பிறகும் ஊழியர்கள் தாங்கள் விரும்பிய நேரங்களில் வேலை செய்யலாம், அல்லது தங்களுடைய வீட்டிலிருந்தே வேலை செய்யலாம். இதன்மூலம் அவர்கள் குழந்தையைக் கவனித்துக்கொண்டே வேலையையும் கவனித்துக்கொள்ள இயலுகிறது. கர்ப்பகாலத்தின் ஒரு பெண்ணின் காப்பீடு மற்றும் அவருடைய பயணச்செலவுகள் போன்றவற்றையும் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

இதுகுறித்து ஏற்பட்டுள்ள ஒரு முக்கியமான மாற்றம் பணியிடங்களிலேயே குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் குழந்தைகள் காப்பகங்களை('க்ரச்') அமைத்தல். சில நேரங்களில் குழந்தைகள் காப்பகங்களுக்கு உள்ளேயே வேலை செய்வதற்கான ஏற்பாடும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே குழந்தையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே தாய் வேலை செய்யலாம். பல நிறுவனங்கள் பகல் நேரத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தங்களுடைய ஊழியர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றன, அலுவலகத்திற்குள்ளேயே பால் கொடுப்பதற்கான அறைகளை அமைத்துத் தரும் அலுவலகங்களும் உள்ளன.

இந்தக் கொள்கைகளின் நோக்கம், புதிய தாய்மார்கள் எளிதில் தங்கள் பணியிடத்திற்குத் திரும்பி தங்களுடைய வேலையைச் செய்ய உதவுவதுதான். கர்ப்பகாலத்தின் நிறைவிலும், குழந்தை பிறந்த புதிதிலும், அவர்கள் தங்களுடைய நேரம் முழுவதையும் குழந்தைகளுக்காக ஒதுக்கியிருப்பார்கள். இப்போது அவர்கள் பணிக்குத் திரும்புவதற்கான ஆதரவு தேவை. இப்படி நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகள், தாய்மார்களின் மன அழுத்தத்தைக் குறைத்து மனநலனை அதிகரித்து, பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டத்தில் ஏற்படும் மனநலக் குறைபாடுகளுக்கான  அபாயத்தைத் தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆண்களுக்குப் பேறுகால விடுமுறை

மத்திய அரசு மற்றும் மாநில அரசில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் அனைவருக்கும் குழந்தை பெறும் போது 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை இதுபோன்ற எந்தச்சட்டமும் இல்லை, அதே சமயம் பல நிறுவனங்கள் கர்ப்பத்திலும், குழந்தை பிறந்த பிறகும் ஒரு தந்தை ஆற்றுகின்ற பங்கைப் புரிந்துகொள்கின்றன, அவர் தன்னுடைய குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக, சம்பளத்துடன் விடுமுறை வழங்கத்தொடங்கியுள்ளன. உதாரணமாக ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் நான்கு மாதங்கள் வரை ஆண்களுக்குப் பேறுகால விடுமுறை வழங்குகின்றன.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org