ஊழியர் தற்கொலை: எப்படிச் சமாளிப்பது?

ஒரு தற்கொலை, பல விளைவுகளைத் தூண்டலாம்! ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிற ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அந்நிறுவனம் என்ன செய்யவேண்டும்? அவரது மரணத்தால் வருந்தும் சக ஊழியர்களை எப்படி ஆதரிக்கவேண்டும்?

நாளுக்கு நாள் நமது தினசரி வாழ்க்கையில் அழுத்தம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆகவே, அலுவலகங்களில், பிற பணியிடங்களில் தற்கொலையெண்ணத்தைக் கண்டறிந்து தடுக்கவேண்டியது அவசியமாகிறது. பணியிடத்தில் தற்கொலையைத் தடுப்பதுபற்றிய நான்கு கட்டுரைகளைக்கொண்ட தொடரில் இது கடைசிக்கட்டுரை. இதில், நிறுவனங்கள் எப்படித் தற்கொலையைத் தடுக்கலாம், தற்கொலை எண்ணங்களுடன் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு எப்படி ஆதரவளிக்கலாம் என்பதுபற்றி ஶ்ரீரஞ்சிதா ஜெய்ர்கர் விவரிக்கிறார்.

அஜய் 35 வயது இளைஞர், ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் ஐந்தாண்டுகளாகப் பணிபுரிகிறார். அவர் கடின உழைப்பாளி, அலுவலகத்தில் எல்லார்மத்தியிலும் அவருக்கு நல்ல பெயர். திடீரென்று, அஜய் ஒருவாரம் அலுவலகத்துக்கு வரவில்லை. அவருக்கு உடல்நலம் சரியில்லைபோல என அவருடைய சக ஊழியர்கள் நினைத்துக்கொண்டார்கள். வேறு எந்தக் காரணத்துக்காகவும் அஜய் அலுவலகத்துக்கு நீண்டநாள் விடுமுறை போடமாட்டார் என்று அவர்கள் நினைத்தார்கள். அஜய் ஏன் அலுவலகத்துக்கு வரவில்லை என்று தெரிந்துகொள்வதற்காக, அவருடைய நிறுவனம் அவரது குடும்பத்தைத் தொடர்புகொள்ள முயன்றது. அப்போதுதான், அஜய் தற்கொலை செய்துகொண்ட விவரம் அவர்களுக்குத் தெரியவந்தது.

விரைவில், அஜயின் சக ஊழியர்களுக்கு அவருடைய மரணத்தைப்பற்றித் தெரியவந்தது. பணியிடத்தில் அவருடைய நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் அதிர்ந்துபோனார்கள், அவர்களால் வேலையில் கவனம் செலுத்தவே இயலவில்லை. அஜயின் தற்கொலையைப்பற்றிப் பல வதந்திகள் எழுந்தன; அவர் பணி அழுத்தத்தால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று சிலர் சொன்னார்கள், வேறு சிலர், அவருடைய உறவுகளில் பிரச்னை இருந்ததாகச் சொன்னார்கள். இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று அவருடைய நிறுவனத்துக்குத் தெரியவில்லை.

(இது ஒரு கற்பனைக்கதை, இந்தப் பிரச்னை நிஜவாழ்க்கையில் எப்படி அமையும் என்பதைச் சுட்டிக்காட்டி, அதைப் புரியவைப்பதற்காக நிபுணர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.)

ஒரு நிறுவனத்தின் பணிபுரிகிற ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அது பலவிதமாகப் பரவி அந்த நிறுவனத்தைப் பாதிக்கும். இறந்தவருடன் பணிபுரிந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள், அவருடைய மேலாளர்கள், மனிதவளத்(HR) துறை, நிறுவனத்தை நிர்வகிப்போர் என எல்லாரும் பாதிக்கப்படுவார்கள். தங்களுடன் நெருங்கிப்பழகிய ஒருவருடைய மரணத்தை அந்த ஊழியர்களும் மேலாளர்களும் எதிர்கொள்ளவேண்டும், அப்போது அவர்கள் குற்றவுணர்ச்சி கொள்ளலாம் ("நான் அவருக்கு உதவியிருக்கலாமோ..." அல்லது "ஒருவேளை நான் இப்படிச் செய்திருந்தால் அவர் பிழைத்திருப்பாரோ..."), சோகம் (ஒரு நண்பரை இழந்ததுபற்றி) அல்லது கோபம் (அவரைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிய சூழ்நிலைகளைப்பற்றி) கொள்ளலாம்.

இறந்தவர் வேலைதொடர்பான காரணங்களால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்பட்டால், அதன் தாக்கம் மிகப்பெரிதாகிவிடலாம். இறந்தவருடைய சக ஊழியர்களும் அவருடைய குழு உறுப்பினர்களும் சிரமமான உணர்வுகளை அனுபவிக்கலாம், இது அவர்களுடைய செயல்திறனை எதிர்மறையாகப் பாதிக்கலாம். பெரும்பாலான நேரங்களில், ஓர் அகாலமரணம் பல வதந்திகள் மற்றும் ஊகங்களுக்கு வழிவகுக்கிறது. இறந்தவர் ஏன் இறந்தார் என்பதுபற்றிப் பலரும் பலவிதமாகப் பேசத்தொடங்குவார்கள். இவை அனைத்தும் ஊழியர்களின் மனவலிமையை, நிறுவனத்தின் நற்பெயரைப் பாதிக்கலாம்.

தற்கொலை போஸ்ட்வென்ஷன் என்றால் என்ன?

தற்கொலை போஸ்ட்வென்ஷன் என்பது, ஒருவருடைய தற்கொலையால் வருந்திக்கொண்டிருக்கும் ஒருவருக்கு உணர்ச்சிநிலை ஆதரவு அளித்தல் ஆகும். பெரும்பாலான தற்கொலை போஸ்ட்வென்ஷன் திட்டங்கள் இறந்தவருடைய குடும்பத்தினர் அல்லது நண்பர்கள்மீது கவனம் செலுத்துகின்றன. ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறபோது, அவர் இறந்ததற்கான காரணங்கள் எப்படி இருந்தாலும் சரி, அவருடன் பணிபுரிந்தவர்களும் பெரும் தாக்கத்துக்கு ஆளாகலாம்.

ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு போஸ்ட்வென்ஷன் திட்டத்தை வழங்கினால், துயரத்தில் உள்ள ஊழியர்களை ஆதரித்ததாகவும் இருக்கும்; வேறு தற்கொலைகள் நிகழ்த்தாமல் தடுத்ததாகவும் இருக்கும்; காரணம், ஒருவருடைய தற்கொலைக்கு வருந்துகிறவர்கள் தாங்களே தற்கொலைக்கு முயற்சி செய்கிற அபாயம் அதிகம். போஸ்ட்வென்ஷனின் இலக்குகள்:

  • ஓர் ஊழியரின் மரணத்துக்கான காரணங்களைத் தெளிவாகச் சொல்லுதல், அவருடைய மரணம் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிற அல்லது வதந்திகள் கட்டுக்கடங்காமல் பரவுகிற வாய்ப்புகளைத் தடுத்தல்.
  • இந்தத் தற்கொலையால் துயரத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு ஆதரவளித்தல், அவர்கள் தங்களுடைய அதிர்ச்சியைத் தாங்க உதவுதல். இதனால், அந்நிறுவனத்தில் மேலும் தற்கொலைகள் நிகழாதபடி தடுக்கப்படுகிறது.
  • தற்கொலையுடன் இணைக்கப்பட்டுள்ள களங்கவுணர்வைத் துடைத்தல்.
  • ஊழியர்கள் ஓர் இயல்புநிலைக்குத் திரும்ப உதவுதல், அவர்கள் மேலும் ஆரோக்கியமாகி, தங்களுடைய பொறுப்புகளுக்குத் திரும்ப ஆவன செய்தல்.

இந்த நோக்கங்களை வைத்துப்பார்க்கும்போது, போஸ்ட்வென்ஷன் என்பது ஒரு நிறுவனத்தின் தற்கொலைத் தடுப்புத் திட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியாகலாம். காரணம், அது மேலும் தற்கொலைகள் நிகழாதபடி தடுக்கிறது.

உண்மையில், ஒவ்வொரு நிறுவனத்தில் ஒரு தற்கொலை நிகழ்வதற்குமுன்பாகவே போஸ்ட்வென்ஷன் திட்டங்கள் செயலில் இருக்கவேண்டும். அந்நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவினரும் HR குழுவினரும் பல மனநல நிபுணர்களுடன் பேசி ஒரு கட்டமைப்பை உருவாக்கலாம், அவர்களுடைய ஊழியர்களில் யாராவது தற்கொலை செய்துகொண்டால் (அல்லது, தற்கொலைக்கு முயற்சிசெய்தால்) என்ன செய்யவேண்டும் என்று இது அவர்களுக்கு வழிகாட்டும். இந்தக் கட்டமைப்பை உருவாக்கும் நிறுவனம் அதை அதிகம் பயன்படுத்தாமலிருக்கலாம், அல்லது, பயன்படுத்தாமலேபோகலாம்; அதேசமயம், அதை உருவாக்குவது அவசியம், காரணம், இந்தக் கட்டமைப்புதான் ஒரு தற்கொலைக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என மேலாண்மைக்குழுவினருக்கும் ஊழியர்களுக்கும் சொல்லித்தந்து வழிகாட்டுகிறது, ஊழியர்கள் அதிர்ச்சியைக் கையாள உதவுகிறது.

நெருக்கடிக்கு எதிர்வினையாற்றுதல்

ஒரு நிறுவனம் உருவாக்கும் போஸ்ட்வென்ஷன் திட்டங்களின் ஒரு பகுதியாக, நெருக்கடி நேரத்தில் பொறுப்பேற்றுக்கொள்ளக்கூடிய ஓர் உடனடி எதிர்வினைக் குழு உருவாக்கப்படுகிறது. இந்தக் குழுவின் உறுப்பினர்களுக்குத் (HR, மேலாண்மைக்குழு அல்லது பிற துறைகள்) தெளிவாக வரையறுக்கப்பட்ட பணிகளும் பொறுப்புகளும் இருக்கும், ஆகவே, ஒரு தற்கொலைச்செய்தியைக் கேள்விப்பட்டால், இவர்கள் உடனடியாகச் செயலில் இறங்குவார்கள். நெருக்கடி நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்கிற வழிமுறைகள் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. போஸ்ட்வென்ஷன் திட்டத்தில் இவற்றுக்கான குறிப்புகள் இருக்கும்:

  • இறந்தவருடைய குடும்பத்தினருடன் தொடர்புகொள்ளக்கூடிய ஒருவரை அடையாளம் காணுதல்
  • இந்த விவரத்தைப் பிற ஊழியர்களிடம், குறிப்பாக, இறந்தவருடைய நெருங்கிய நண்பர்கள் அல்லது குழு உறுப்பினர்களிடம் சொல்லக்கூடிய ஒருவரை அடையாளம் காணுதல்
  • ஊடகங்களுடன் பேசக்கூடிய ஒருவரை அடையாளம் காணுதல், எந்தெந்த விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படவேண்டும் என்பதற்கான கொள்கைகளை அவர்களுக்கு வழங்குதல்
  • நிறுவனத்தின் பிற உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் ஆதரவுபற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் திட்டம், உதாரணமாக, நிறுவனத்திலேயே ஓர் ஆலோசகர், அல்லது, இன்னொரு மனநல நிபுணரை அணுகும் வசதி போன்றவை)

ஒரு நிறுவனத்தின் பணிபுரிந்த ஓர் ஊழியர் இறந்துவிட்டால், அந்த நிறுவனம் அவரது குடும்பத்தினருடன் பேசியபிறகு, அந்த விவரத்தைப் பிற ஊழியர்களுக்குத் தெரிவிக்கலாம். பல நேரங்களில், சமூகத்தின் களங்கவுணர்வு காரணமாக, இறந்தவருடைய குடும்பத்தினர் அவரது மரணத்துக்கான காரணத்தை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதுபோன்ற சூழ்நிலைகளில், அவர்களுடைய விருப்பங்களுக்கு நிறுவனம் இணங்கவேண்டும். இறந்தவரைப்பற்றி எந்த அளவு விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்பதை அவருடைய குடும்பத்தினரின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கலாம்.

ஒரு தற்கொலையைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, நிறுவனங்கள் WHOவின் 'தற்கொலையை அறிவிப்பதற்கான வழிகாட்டுதல்'களைப் பின்பற்றலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்:

  • தற்கொலையைப் பரபரப்பான ஒரு நிகழ்வாகச் சித்திரிப்பது, பிரச்னைகளுக்கு அது ஒரு தீர்வாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிற சொற்களைப் பயன்படுத்துவது கூடாது.
  • ஒருவர் எப்படித் தற்கொலை செய்துகொண்டார், எப்படி இறந்தார் என்பதை விவரிக்கவேண்டாம்
  • புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வேண்டாம்
  • தற்கொலையால் துயரம் அனுபவிப்பவர்கள்மீது அக்கறை காட்டவும்
  • இந்த வாய்ப்பைத் தற்கொலைபற்றிய உணர்வாக்கத்தை உருவாக்கப் பயன்படுத்தவும்
  • ஊழியர்கள் எங்கே உதவி பெறலாம் என்கிற விவரங்களைத் தரவும்

ஒரு வலுவான காரணம் இருந்தாலன்றி, ஒருவருடைய மரணம்பற்றிய விவரங்களை அவரது நெருங்கிய உறவினர்களைத்தவிர வேறு யாருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டாம் என்று நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.  இந்த விவரங்களைப் பிறருக்குத் தெரிவிக்காமலிருந்தால், அது இறந்தவருடைய குடும்பத்தினரின் தனிநபர் உரிமையைப் பாதுகாக்க உதவுகிறது, தங்கள் சக ஊழியரின் மரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிற நபர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது.  இன்னொரு முக்கியமான விஷயம், தற்கொலையைப்பற்றித் தெரிவிக்கும்போது, இறந்தவரைத் தற்கொலைக்குத் தூண்டியவர் இவர்தான் என்று ஒருவரைப் பொறுப்பாக்குவதுபோல் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரையும் தனித்துக் குற்றம்சாட்டக்கூடாது.

ஒரு நிறுவனம் தனது ஊழியர்களிடம் பேசும்போது, தற்கொலை எப்போதும் ஒரே ஒரு காரணத்தால் நிகழ்வதில்லை என்பதை வலியுறுத்துவது முக்கியம். இந்தத் துயரமான, சிக்கலான நிகழ்வு பல காரணங்களின் தொகுப்பால் நிகழ்கிறது.

இப்படியொரு சோகமான செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்போது, இறந்தவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள், அவரது மரணத்தால் துயரப்படக்கூடியவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவைப்பற்றிய விவரங்களையும் தெரிவிக்கவேண்டும். இதுபோன்ற நேரங்களில், அந்நிறுவனம் வதந்திகளையும் மறைமுகமாகக் கையாளவேண்டும். இதற்கு அவர்கள் இறந்தவருடைய குடும்பத்தின் தனிநபர் உரிமைத் தேவைகளை வலியுறுத்தலாம், ஊழியர்கள் நிறுவனத்தினுள் அல்லது வெளியே பேசும்போது எந்த விவரங்களைக் குறிப்பிடாமலிருப்பது நல்லது என்று நினைவுபடுத்தலாம், சமூக ஊடகங்களில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவற்றை நினைவுபடுத்தலாம்.

இழப்புக்குத் துக்கப்படுதல்

இறந்தவருடைய சக ஊழியர்கள் மற்றும் மேலாளரிடம் இந்த விவரத்தைப் பகிர்ந்துகொண்டபிறகு, ஊழியர்கள் அவருடைய இறுதிச்சடங்கு அல்லது நினைவுகூரல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அந்த நிறுவனம் நேரம் தரலாம். இதனால், பிற ஊழியர்கள் தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும், அவர்களால் உணர்வுச் சிரமங்களைச் சமாளிக்க இயலும். ஊழியர் ஒருவருடைய மரணத்தைப்பற்றிய அதிகாரப்பூர்வமான அறிக்கையில், இறந்தவரைத் தவறாகச் சித்திரிக்கக்கூடாது, அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதைப் பரபரப்பான செய்தியாக்கக்கூடாது. அவருடைய வாழ்க்கையின் நேர்விதமான அம்சங்களையும், அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்ட விதத்தையும் தெளிவாகப் பிரித்துக்காட்டவேண்டும். ஒரு வாழ்க்கை சீக்கிரத்தில் முடிந்துவிட்டதே என அந்நிறுவனம் பிறரிடம் பேசலாம், அதேசமயம், இறந்தவர் தானே தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டார் என அவரைப்பற்றிய தீர்மானங்களுடன் பேசாமல் கவனமாக இருக்கவேண்டும்.

நிறுவனம் நுண்ணுணர்வான அணுகுமுறையுடன் செயல்பட்டால், ஊழியர்களால் தங்களுடைய சிரமத்தை மேலும் எளிதாகக் கையாள இயலும். இந்த நேரத்தில், இறந்தவருடைய சக ஊழியர்களில் யாருக்கெல்லாம் ஆலோசனை தேவை என்று அந்த நிறுவனம் அடையாளம் காணலாம், அவர்களை அணுகி, அவர்கள் சொல்லும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், அவர்களுக்கு முழு ஆதரவு தரப்படும் என்றும் உறுதிசொல்லித் தேற்றலாம், அவர்கள் பாதுகாப்பாக உணர்வதை உறுதிசெய்யலாம்.

ஆதரவு வழங்குதல்

எதிர்வினைக் குழுவானது, இறந்தவருடைய சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆதரவு வழங்கி உதவுகிறது. பாதிப்புக்குள்ளாகக்கூடிய ஊழியர்களை(அல்லது, தங்களுடைய சக ஊழியரின் இழப்பால் பாதிக்கப்பட்டவர்களை)ச் சிறு குழுக்களாக அணுகி, அவர்களுடைய இழப்பை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு என்ன ஆதரவு கிடைக்கும் என்று தெரிவிப்பதன்மூலம், நிறுவனம் ஒரு தெளிவான செய்தியைச் சொல்கிறது: ஊழியர்களின் நலனில் அதற்கு அக்கறை உள்ளது, தற்கொலையைப்பற்றிய களங்கவுணர்வு இல்லை!

இறந்தவருடைய இறுதிச்சடங்கு அல்லது நினைவுகூரல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஊழியர்களுக்கு நேரம் தரப்பட்டால், அவர்களால் தங்களுடைய இழப்பை இன்னும் சிறப்பாகக் கையாள இயலாம். எதிர்வினைக் குழுவானது கூடுதல் ஆதரவு தேவைப்படும் ஊழியர்களையும் அடையாளம் காணலாம், அவர்களுடன் பேசி, அவர்கள் குறிப்பிடத்தக்க வருத்தத்தில் இல்லை என்பதை உறுதிசெய்யலாம்.

நலத்தை உறுதிசெய்தல்

நெருக்கடி கடந்தபிறகு, தற்கொலை போஸ்ட்வென்ஷன் திட்டங்களைத் தொடர்ந்து செய்வதால், ஒரு நிறுவனம் தனது வழக்கமான ஒழுங்குக்குத் திரும்புவது எளிதாகும். மக்கள் வெவ்வேறுவிதமாகத் துக்கத்தை அணுகுகிறார்கள்; சிலருக்குத் துக்கம் தீரச் சில வாரங்களாகலாம், சிலருக்குப் பல மாதங்களாகலாம். இந்தக் காலகட்டத்தில், போஸ்ட்வென்ஷன் குழு ஊழியர்களுடன் அடிக்கடி பேசலாம், இழப்பைச் சந்திக்க அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு தேவையா என்று பரிசோதிக்கலாம்.

உங்கள் நிறுவனத்தில் போஸ்ட்வென்ஷன் பிரச்னைகளைக் கையாள்வதுபற்றி மேலும் விவரங்களுக்கு, நீங்கள் உங்களுடைய ஊழியர் உதவித் திட்ட (EAP) வழங்குநரைத் தொடர்புகொள்ளலாம். NIMHANS நல மையம் மற்றும் NIMHANS மருத்துவ உளவியல் துறை இணைந்து, நிறுவனங்களுக்கான மனநலம், தற்கொலைத் தடுப்பு மற்றும் போஸ்ட்வென்ஷன் பிரச்னைகளைப்பற்றிய பயிற்சிப்பட்டறைகளை நடத்துகின்றன. அவர்களைத் தொடர்புகொள்வதற்கான மின்னஞ்சல் முகவரி: workshops.nimhans@gmail.com.

இந்தத் தொடர் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனால் தொகுக்கப்பட்டது. இதற்கான கருத்துகளை வழங்கியவர்கள்: டாக்டர் குருராஜ் கோபாலகிருஷ்ணா, தொற்றுநோயியல் பிரிவுத் தலைவர், NIMHANS, டாக்டர் பிரபா சந்திரா, உளவியல் பேராசிரியர், NIMHANS, டாக்டர் சீமா மெஹ்ரோத்ரா, மருத்துவ உளவியல் கூடுதல் பேராசிரியர், NIMHANS, டாக்டர் பூர்ணிமா போலா, உதவிப் பேராசிரியர், மருத்துவ உளவியல் துறை, NIMHANS, டாக்டர் செந்தில் குமார் ரெட்டி, உளவியல் துணைப் பேராசிரியர், NIMHANS.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org