வேலை நீக்கமும் நம்பிக்கையின்மையும்

வேலை நீக்கமும் நம்பிக்கையின்மையும்

நேரங்கள் நிச்சயமாக இல்லாதபோது, நிறுவனங்கள் பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பவதன்மூலம் செலவைக் குறைக்கின்றன. இப்படி வேலையை இழந்தவர்கள் அதையெண்ணிக் கவலைப்படலாம், உதவியற்ற நிலையை உணரலாம், அதிலே மூழ்கிப்போனவராக உணரலாம்.

மக்களில் பலர் தாங்கள் செய்யும் வேலை மூலமே தங்களை வரையறுக்கிறார்கள், வேலையானது அவர்கள் ஒரு நோக்கம் மற்றும் வெற்றி உணர்வைக் கொண்டிருக்க உதவுகிறது. இதன் பொருள், வேலைஇழப்பு என்பது அவர்கள் நினைப்பதை விட அவர்கள்மீது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அப்படி வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் இவ்வாறு உணரலாம்:

  • நிகழ்வு திடீரென்று நடந்திருந்தால் தயாரிப்பின்றி அதிர்ச்சியடைந்தவர்களாக
  • என்ன செய்வது என்று தெரியாமல் உதவ யாருமில்லாதவர்களாக
  • தங்கள் எதிர்காலம் குறித்துக் கவலையுடன், தங்கள் பொறுப்புகள் மீது கவனத்துடன்
  • செய்தியைத் தங்கள் குடும்பத்துடன் எப்படி பகிர்வது, அடுத்த வேலையைக் கண்டுபிடிக்கும் வரை குடும்பத்தை எப்படிக் கவனித்துக்கொள்வது என்று சிந்தனையில் மூழ்கியவராக

அப்படிப்பட்டவர்கள் அழுத்தம் மற்றும் கவலையை எப்படிச் சமாளிக்கலாம்?

  • வேலை நீக்கத்துக்கு ஒருவருடைய செயல்திறன்மட்டுமே முக்கியக் காரணமாக அமைவதில்லை, அதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன என்பதை நினைவிற் கொள்ளலாம். அதனை ஒரு தனிப்பட்ட தோல்வியாக, தன்னுடைய செயல்திறனின் பிரதிபலிப்பாகப் பார்க்காமல் இருக்க முயற்சிசெய்யலாம். அது சூழ்நிலைக் காரணங்களான – வணிகக் காரணங்கள், நிர்வாகக் காரணங்கள், அவர்களுடைய வாழ்வில் அந்த நேரத்திலுள்ள அழுத்தக் காரணிகளால் அவர்களால் சரியாகச் செயல்பட இயலாமலிருத்தல் போன்றவற்றின் கலவை என எண்ணலாம்.
  • தங்களுடைய வலிமை மற்றும் திறன்களை ஏற்றுக் கொள்ளலாம்.
  • இந்த நிகழ்வு ஒரு சிறு பின்னடைவாக இருக்கலாம், ஆனால் சாலையின் முடிவில்லை என்பதை நினைவிற்கொள்ளலாம். இந்த நிகழ்வினால் தாங்கள் முழுமையாகத் தோல்வியின் பிரதிநிதி ஆகிவிடமாட்டோம், தாங்கள் அப்போது செய்துகொண்டிருப்பதில் தாங்கள் வெற்றிகரமாக இல்லை என்பதையே இது குறிக்கிறது என்பதை உணரலாம். தாங்கள் வெற்றிகரமாகச் செயல்படக்கூடியவை இன்னும் பல உண்டு என்பதை அறியலாம். 
  • தங்கள் வாழ்வுடைய சுய அடையாளம், சுய மதிப்பிற்குப் பங்களிக்கும் பிற அம்சங்களை நினைவுபடுத்தலாம். அது அவர்களுக்குப் பொருள் மற்றும் நோக்கம் அளிக்கும், எடுத்துக்காட்டாக, அது குடும்பம், நண்பர்கள், பொழுதுபோக்குகள், செயல்பாடுகளாக இருக்கலாம்.
  • நம்பிக்கையான நண்பர்களை நாடலாம். வேலை நீக்கத்தினால் எழும் சில உணர்ச்சி அல்லது நிதி அழுத்தங்களினால் அவர்களுடைய குடும்பத்தினர்ஆல் போதுமான ஆதரவு வழங்க இயலாமல் போகலாம். ஆகவே, அவர்கள் தாங்கள் நம்பக்கூடிய, தங்களை எடைபோடாத, பிரச்னையைக் கேட்க்க காதுகளை வழங்கக்கூடிய ஒருவரிடம் பேசலாம்.
  • ஒருவேளை, நிலைமையைத் தன்னால் சமாளிக்கவே இயலவில்லை என்று உணர்ந்தால், அவர்கள் ஆலோசகரை நாடலாம் அல்லது உதவி மையத்தை அழைக்கலாம்.

இந்த கட்டுரை பெங்களூரைச் சார்ந்த ஆலோசகர் மவுலிகா சர்மாவின் உள்ளீடுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org