பெருநிறுவனப் பிரிவில் மனநலப் பிரச்னைகள் எப்படிப் பார்க்கப்படுகின்றன

பெருநிறுவனப் பிரிவில் மனநலப் பிரச்னைகள் எப்படிப் பார்க்கப்படுகின்றன

உலக அளவில் ஊனத்தை உருவாக்கும் காரணங்களில் மனநலப் பிரச்னைகள் முன்னணியில் இருக்கின்றன, ஆகவே பணியிடங்கள் தங்களுடைய ஊழியர்களுடைய மனநலப் பிரச்னைகளையக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய, அவர்களுடைய நலனில் கவனம் செலுத்தவேண்டிய ஓர் அவசரத்தேவை உள்ளது.   

210 பெருநிறுவன ஊழியர்கள் மத்தியில் ASSOCHAM நடத்திய ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில் ஏப்ரல் 2015ல் வெளியான ஓர் அறிக்கை, இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற ஊழியர்களில் 48% பேர் பொதுவான பதற்றத்தினால் களைப்பை அனுபவிக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அபூர்வமாகவே உதவியை நாடுகிறார்கள் என்பதையும் கண்டறிந்தது.   ஊழியர் உதவித் திட்டத்தை (EAP) வழங்கும் ஆப்டம் என்ற நிறுவனம், இந்தியப் பணியாளர்களில் 46% பேர் ஏதோ ஒரு வகையான அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள் என்று மதிப்பிடுகிறது (OPTUMன் இணைய நல ஆபத்து மதிப்பீடு 2016).

முன்னாள் ராணுவ அதிகாரி, 20 ஆண்டுகளுக்கும் மேல் வியூகம், HR, வள மேலாண்மை, பொது மேலாண்மை மற்றும் செயல்பாடுகளில் அனுபவம் மிக்க ஒரு பெரு நிறுவனத் தலைவரான மேஜர் வந்தனா சர்மாவுடன் வொயிட் ஸ்வான் அறக்கட்டளையைச் சேர்ந்த லலிதாஸ்ரீ கணேஷ் இதுபற்றிப் பேசினார்.    ஸ்டார்டப் பீப்புள் கன்சல்டிங் என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ள வந்தனா சர்மா, பெருநிறுவனப் பிரிவானது மனநலனை எப்படிப் பார்க்கிறது என்பதுபற்றியும், பணியிடங்களை மனநலனுக்கு உகந்தவையாக ஆக்குவதற்கு HR நடைமுறைகள் எப்படி உதவலாம் என்பதுபற்றியும் தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.பணியிடங்களில் மனநலன்பற்றிய உரையாடல்கள் நிகழ்கின்றனவா? பணியிடங்களில்மட்டுமில்லை, பொதுச் சமூகம் மற்றும் மக்கள் வாழ்கிற இடங்களில் மனநலப் பிரச்னைகள் இன்றும் நிறைய களங்கத்துடனேயே பார்க்கப்படுகின்றன.  மக்கள் இதுபற்றிப் பேச அஞ்சுகிறார்கள், தங்களுக்கு முக்கியமானவர்கள் தங்களை வேறுவிதமாகப் பார்ப்பார்களோ என்று அச்சப்படுகிறார்கள், எதிர்மறையாக, மனச்சோர்வாக, அல்லது தீவிரமாக ஒலிக்கக்கூடிய எந்த ஒர் உரையாடலாலும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் தங்களைத் தவிர்க்கத் தொடங்கிவிடுவார்களோ என்று அவர்களுக்கு அச்சமாக இருக்கிறது.    ஆகவே அவர்கள் எதிர்மறையாக அல்லது சலிப்பூட்டுபவராக முத்திரை குத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு கூண்டுக்குள் நுழைந்துகொண்டுவிடுகிறார்கள்.பணியிடத்தில் மனநலப் பிரச்னைகள் தூண்டப்படலாமா? மனச்சோர்வு, பதற்றம் மற்றும் அழுத்தக் குறைபாடுகள்போன்ற சில பிரச்னைகள் கண்டிப்பாகப் பணியிடங்களில் தூண்டப்படலாம்.   கவலைகளை எழுப்புவதற்கான இடம் இல்லாத ஓர் ஆதரவற்ற பணிச்சூழல், ஒத்துழைக்காத ஒரு மேலாளருடன் பணியாற்றுதல் அல்லது ஊழியர்கள் அளவுக்கதிகமாக வேலை செய்து களைப்பாவது போன்ற மக்கள் செயல்பாடுகள்/கொள்கைகள் மற்றும் அதிக வேலைப் பளு காரணமாக நியாயமற்ற வேலைப் பகிர்தல் போன்றவற்றிலிருந்து இந்தப் பிரச்னைகள் தொடங்கலாம்.      இந்தத் தூண்டிகள் துயரத்துக்குப் பங்களிக்கின்றன, இதனால் மனநலப் பிரச்னைகள் உண்டாகின்றன.    மேலாளர்கள் வேலைப் பளுவை நியாயமானமுறையில் சமநிலைப்படுத்துவது முக்கியம், இதுபற்றிய தொடர்ச்சியான பின்னூட்டங்களைப் பெறுவது அல்லது கண்காணிப்பதற்கான அமைப்புகளை HR கொண்டிருக்கவேண்டும்.  

சில நிறுவனங்களில் கூடுதல் வேலைநேரம் அல்லது ஊக்கத்தொகை அமைப்புகளால் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்வார்கள், அதன்மூலம் தங்களால் அதிகம் சம்பாதிக்கமுடியும் என்று கருதுவார்கள், இதுபோன்ற சூழல்களை நான் பார்த்திருக்கிறேன்.   அதேசமயம், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் தங்களுடைய நலனை முற்றிலும் புறக்கணித்துவிடுகிறார்கள், அமைப்பானது அவர்களுடைய நிலையைக் கண்காணிப்பதில்லை அல்லது சரிபார்ப்பதில்லை, ஏதாவது ஓர் உடைப்புப்புள்ளி நிகழும்வரை யாரும் எதுவும் செய்யாமல் இருந்துவிடுகிறார்கள்.  

பணியிடங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படவேண்டுமென்றால் அவை என்ன செய்யவேண்டும்? நேர்மையாகச் செயல்படும் எந்த ஒரு பணியிடத்தின் செயல்பாட்டிலும் பச்சாத்தாபம் என்பது அவசியமான மற்றும் உள்ளார்ந்த ஒரு பகுதியாக இருக்கவேண்டும்.  ஊழியர்களின் நலன்தான் தங்களுக்கு முதன்மையானது என்பதை உறுதிசெய்யவேண்டியது மேலாண்மைக் குழுவின் பொறுப்பு, அவர்கள் அப்படிச் செய்தால் ஊழியர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள், அதன்மூலம் தங்களுடைய நலன், பரிசுகள் மற்றும் அங்கீகாரம் ஆகியவை சரியாக வழங்கப்படும் என்று நம்புவார்கள்.   இதனால்தான் சில நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வாழ்நாள்முழுக்க ஒரே பணியிடத்தில் பணியாற்றச்செய்யும்படி மைய மதிப்பீடுகளை கொண்டிருக்கிறார்கள் – எடுத்துக்காட்டாக, இந்தியாவில் டாட்டாக்கள், ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான்; உலக அளவில் கூகுள், ஃபேஸ்புக், BCG, பெயின் & நிறுவனம் போன்றோர் தங்களுடைய இரக்கமிக்க மக்கள் கொள்கைகளுக்காக அறியப்பட்டிருக்கிறார்கள், அதன்மூலம் அவர்களுடைய ஊழியர்களுடைய செயல்திறன் மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது. 

நிறுவனங்களை மனநலனுக்கு உகந்தவையாக ஆக்க உதவக்கூடிய சில HR நடைமுறைகள் என்ன? நிறுவனத்தின் மனநலன் நன்றாக இருப்பதை உறுதிப்படுத்துவதில் HR நடைமுறைகள் ஒரு மிக முக்கியமான பங்கை ஆற்றுகின்றன.

  • ஒரு வெளிப்படையான, திறந்த கலாசாரத்தைக் கொண்டிருப்பதும், ஊழியர்கள், மேலாண்மைக் குழுவினருக்கிடையில் அச்சமில்லாத உரையாடலை அனுமதிப்பதும் முக்கியமானவை. 
  • ஊழியர்கள் தங்களுடைய மனத்தைத் தளர்வாக்கிக்கொள்வதற்கான வசதிகளைக் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்கவேண்டும், எடுத்துக்காட்டாக உடல்சார்ந்த மற்றும் இசைபோன்ற விஷயங்களைச் சார்ந்த பல நடவடிக்கைகளை கொண்ட பொழுதுபோக்கு இடங்கள், அல்லது படைப்பூக்கத்தை/தூண்டுதலை வெளிவிடக்கூடிய செயல்பாடுகளைக் கொண்ட இடங்கள் போன்றவை.
  • ஊழியர்களை ஆதரிப்பதற்காக  நிறுவனங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கான 'க்ரெச்’க்கான இடத்தை வழங்குதல், இளம் பெற்றோருடைய கவலை/பதற்றத்துக்குப் பெரிய காரணமாக இருக்கக்கூடிய குழந்தைப் பராமரிப்புப் பொறுப்புகளை உறுதிசெய்வது, வழிபடுவதற்கான இடத்தை வழங்குவது போன்றவை.    
  • பல நல்ல நிறுவனங்கள் நாள்முழுக்க ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குகிறன. ஊழியர்களை ஆதரிப்பதற்காக இந்த வசதி பகலிலும் இரவிலும் கிடைக்கிறது, சரியாகவும் சரியான நேரத்திலும் சாப்பிடுகிற அடிப்படைத் தேவைகளை உறுதிசெய்வதற்கான ஒரு மிகச் சிறந்த வழி இது.     
  • இவற்றுடன், உடல் தகுதிப் பிரச்சாரங்கள், உடற்பயிற்சிக் கூடம், ஜும்பா, யோகாசன வகுப்புகள், துணிகரச் செயல்கள் போன்றவற்றை ஆதரிக்கும் பொழுதுபோக்குச் சமூகங்களை உருவாக்குவதும் ஓர் ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதற்கு உதவுகிறது, தொலைநோக்கில், பல செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறவர்களுக்கிடையே குழு உருவாக்கத்திலும், நிறுவனம்முழுவதிலும் சமூக உணர்வை உருவாக்குவதிலும் இவை பணியாற்றுகின்றன.      

மேஜர் வந்தனா சர்மா ராணுவத்தில் பணிபுரிந்தவர், விருது வென்றுள்ள மூத்த தொழில்துறைத் தலைவர், தொழில்முனைவோர், மற்றும் TEDx பேச்சாளர்.    ஸ்டார்ட்டப் பீப்புள் கன்சல்டிங் என்ற பெயரில் அவர் உருவாக்கியுள்ள நிறுவனம், பன்முகத்தன்மை மற்றும் கலாசாரத்தை மையத்தில் கொண்ட ஆற்றல் மிக்க நிறுவனங்களை உருவாக்குவதற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது, இந்த நிறுவனத்தில் அவர் இளைஞர்கள் மற்றும் தொடக்க நிலை நிபுணர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டுகிறார்.    

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org