பணியிடக் கொடுமைப்படுத்தல் அறிகுறிகள், அதை எப்படி எதிர்ப்பது

பணியிடக் கொடுமைப்படுத்தல் அறிகுறிகள், அதை எப்படி எதிர்ப்பது

“என்னுடைய அலுவல் தலைவர் என்னை மிகவும் ஊக்கமிழக்கச்செய்கிற மின்னஞ்சல்களை எனக்கு அனுப்புவார்; அவருடைய வேலையை என் தலையில் சுமத்துவார்; நான் செய்யும் வேலைக்கு அவர் பெயர் வாங்கிக்கொள்வார். காரணமே இல்லாமல் என்னைத் திட்டுவார், கத்துவார். நான் பல மோசமான நாட்களை அனுபவித்தேன். நான் எரிச்சலடைந்தேன். ஒரு நீண்ட நாளுக்குப்பின் வீட்டுக்குச் சென்றபிறகும் நான் பணிபுரியவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டேன். விரைவில், வேலைக்குச் செல்லவேண்டும் என்றே எனக்குத் தோன்றாத ஒரு நிலையை நான் அடைந்தேன். நான் சினம் கொண்டேன், குழம்பியிருந்தேன், அவருடன் பேசுவதைத் தவிர்க்க முயன்றேன். நான் பொதுவாக அமைதியுடன் இருப்பதால், அவர் என்னைக் கேலிசெய்வதும் உண்டு."

- நிகிதா என்ற ஓர் இளம் ஊடக வல்லுனர் தெரிவித்தது

“ஒரு கதையைப் பெறுவதற்காக நான் மிகவும் கடினமாக உழைப்பேன்; சிரமப்படுவேன். என்னுடைய அலுவல் தலைவர், என்னுடைய அந்தக் கதையை எடுத்துக்கொள்வார்; அது தன்னுடையது என்பார். என்னுடைய பணியிடத்தில் என்னால் யாரையும் நம்ப இயலவில்லை. அது என்னுடைய முதல் பணி. என்னுடைய அலுவல் தலைவர் எப்போதும் என்னிடம் கத்துவார், ‘இதையெல்லாம் உனக்கு அவர்கள் சொல்லிக்கொடுக்கவில்லையா?' நான் என்ன செய்தாலும் சரி, என்ன சொன்னாலும் சரி, சீண்டலுக்கு ஆளானேன். நான் எப்போதெல்லாம் ஒரு நல்ல கதையை எழுதுகிறேனோ, அப்போதெல்லாம் நான் கொடுமைப்படுத்தப்பட்டேன், கட்டுப்படுத்தப்பட்டேன், உணர்வுரீதியில் துன்புறுத்தப்பட்டேன். ஒவ்வொரு சிறு விஷயத்துக்கும் நான் அவருடைய அனுமதியைப் பெறவேண்டியிருந்தது. இவை அனைத்தும் கொஞ்சம்கொஞ்சமாகச் சேர்ந்துகொண்டு, வேலையை விடவேண்டும் என்று விரும்புகிற நிலைக்கு என்னைத் தள்ளியது. அது என்னுடைய சுயமதிப்பைக் காயப்படுத்தியது, என்னை நானே இவ்வாறு கேட்டுக்கொண்டேன், ‘நான் உண்மையில் இவ்வளவு முட்டாளா?’"

- ஓர் இளம் செய்தி நிருபர் தெரிவித்தது (அவருடைய கோரிக்கையின்பேரில் பெயர் தெரிவிக்கப்படவில்லை).

பணியிடத்தில் கொடுமைப்படுத்தப்படுவது ஒருவருடைய சுய மதிப்புக்குப் பெரிய அடியாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தங்களுடைய விழித்திருக்கும் நேரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியைப் பணியிடத்தில் செலவிடுகிறார்கள், அங்குதான் அவர்கள் நிறைய எண்ணங்களை, ஆற்றலைச் செலுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஓர் இடத்தில் மோசமாக நடத்தப்படுவது, ஒருவருடைய அலுவலகச் சூழலில் தீவிர மாற்றமொன்றை உண்டாக்குகிறது; அவருடைய மன மற்றும் உடல் நலத்தைப் பாதிக்கிறது. ஆகவே, இதுபோன்ற நடவடிக்கைகளை எல்லாரும் கவனிப்பது முக்கியம்.

பணியிடக் கொடுமைப்படுத்தல் என்பது பலவிதமான வழிகளில் வெளிப்படலாம். இதற்கான சில முக்கிய அடையாளங்களைச் சரிபார்ப்பதற்கான ஒரு பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

பணியிடக் கொடுமைப்படுத்தலுடைய சில அடையாளங்கள்:

  • ஒருவர் பணியிடத்தில் அவமானப்படுத்தப்படுகிறார், விமர்சிக்கப்படுகிறார்.
  • பணியில் அவர் செய்கிற எதுவும் எப்போதும் போதுமான அளவு சிறப்பாக இருப்பதில்லை என்று அவருக்குச் சொல்லப்படுகிறது.
  • அவர் தகுதியற்றவராக முத்திரை குத்தப்படுகிறார்; சில நேரங்களில் இப்படி முத்திரை குத்துகிறவருக்கு அவரைப்பற்றியோ அவருடைய பணியைப்பற்றியோ எதுவும் தெரிந்திருப்பதில்லை.
  • அவருடைய பணியில் தொடர்ந்து குறுக்கிடல்கள் நிகழ்கின்றன.
  • பிறரை அவரிடமிருந்து விலகியிருக்கச் சொல்கிறார்கள், அவருடன் உரையாடவேண்டாம், அவருடன் பணியாற்றவேண்டாம் என்கிறார்கள்.
  • கொடுமைப்படுத்துகிறவர் அவரிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்கிறாரோ, அவை அனைத்தும் கொடுமைப்படுத்துகிறவருடைய மனநிலை அடிப்படையில் அமைகின்றன. கொடுமைப்படுத்துகிறவர் தன்னுடைய சொந்த நலனுக்காக இப்படி நடந்துகொள்கிறார், நிறுவனத்தின் நலனுக்காக இல்லை.
  • அவர் எப்போதும் பதற்றமாக உணர்கிறார், எதுவும் சரியாக நடக்கவில்லை என்று அவருக்குத் தோன்றுகிறது.
  • பணியிடத்தில் அவர் தனிமையாக உணர்கிறார்; HR அல்லது சக ஊழியர்களிடமிருந்து அவருக்கு எந்த ஆதரவும் கிடைப்பதில்லை.
  • பிறர் அவரிடம் என்னவேண்டுமானாலும் சொல்லலாம், என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று அனுமதிக்கப்படுகிறது; ஆனால், அவர் திரும்பிச் சண்டை போடவோ, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவோ அனுமதி வழங்கப்படுவதில்லை.
  • அப்படி அவர் தன்னைப் பாதுகாத்துக்கொண்டால், தனக்காகப் பேசினால், கொடுமைப்படுத்தியவரைத் துன்புறுத்தியதாக அவர்மீது குற்றம் சாட்டப்படுகிறது.
  • வேறொரு பொறுப்பைக் கோருகிற, வேறொரு பதவிக்கு அல்லது துறைக்கு மாற்றப்படுகிற, அல்லது, இன்னோர் அலுவல் தலைவரிடம் நேரடியாகப் பணிபுரிகிற கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
  • அவருடைய மூத்த அலுவலர் அவர் செய்கிற எதற்காகவும் அவரை மதிப்பதில்லை, மாறாக, அவர் செய்துள்ள அனைத்துக்கும் இவர் பெயர் வாங்கிக்கொள்கிறார்.
  • கொடுமைப்படுத்துகிறவருக்கு அவர் தனிப்பட்ட, எடுபிடி வேலைகளை, அல்லது, அவருடைய தனிப்பட்ட நன்றியுணர்ச்சிக்கான வேலைகளைச் செய்யவேண்டும் என்று கொடுமைப்படுத்துகிறவர் எதிர்பார்க்கிறார். அவர் அவற்றைச் செய்யாவிட்டால், அல்லது செய்ய மறுத்தால், அவருடைய பணிவாழ்க்கையில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்துகிறார்.

பணியிடக் கொடுமைப்படுத்துதலைச் சமாளிப்பதை நோக்கிய முதல் படி, அதன் வெவ்வேறு அடையாளங்கள் எவை என்பதை நன்கு தெரிந்துகொள்வதுதான். அடுத்து, அதை எதிர்ப்பதற்குச் சில படிநிலைகளை எடுக்கவேண்டும். சின்னங்களை முன்கூட்டியே அடையாளம் காணாததில் எந்தத் தவறும் இல்லை என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்; அது அவருடைய தவறு இல்லை. அவருக்கு முக்கியமான விஷயம், தன்னுடைய நலனில் கவனம் செலுத்துவது, தேவைப்பட்டால், திரும்பி எதிர்வினையாற்றுவது.

பணியிடக் கொடுமைப்படுத்தலைச் சமாளிப்பதற்கான பொதுவான குறிப்புகள்: * தன்னுடைய எல்லைகளை மீறுவதற்குப் பிறரை அனுமதிக்கவேண்டாம் * ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒருவர் வசதியற்று உணர்ந்தால், என்ன தவறாகிவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள முயலவேண்டும் * கொடுமைப்படுத்தல் தொடர்பான நிறுவனத்தின் நிலைபாட்டைக் கண்டறியவேண்டும், அதன்மூலம் தன்னுடைய தெரிவுகள் என்ன என்று தெரிந்துகொள்ளலாம் * தான் சந்திக்கும் கொடுமைப்படுத்தல் நிகழ்வுகளைத் தேதி, நேரம், தகவல்களுடன் பதிவுசெய்யவேண்டும். பின்னர் அவர் அதிகாரப்பூர்வமான புகாரொன்றைச் சமர்ப்பித்தால், இந்தத் தரவுகள் அவருக்கு உதவும். * இயன்றால், தன்னுடைய மேலாளருடைய மேலாளரிடம் இதைப்பற்றித் தெரிவிக்க முயலலாம்.

பணியிடக் கொடுமைப்படுத்தலை எதிர்க்க இயலுமா? அதை எப்படிச் செய்வது?

வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் ஆலோசகர், இயக்குநரான மௌலிகா ஷர்மா, “பணியிடக் கொடுமைப்படுத்தல் ஒருவருடைய படைப்புணர்வை, சுறுசுறுப்பை, ஊக்கத்தை, பணியில் மகிழ்ச்சியை, சுயமதிப்பை, சுயமரியாதையை அழித்து அவருடைய செயல்திறனில் ஓர் எதிர்மறைத் தாக்கத்தை உண்டாக்கலாம்” என்கிறார்.

பணியிடக் கொடுமைப்படுத்தலை எதிர்ப்பதற்கு அவர் சுட்டிக்காட்டும் வழிகள், “அந்த நிறுவனம் கொடுமைப்படுத்தலுக்கெதிரான, அதைச் சிறிதும் சகித்துக்கொள்ளாத ஒரு கொள்கையைக் கொண்டிருந்தால், ஊழியரால் பல விஷயங்களைச் செய்ய இயலலாம். எடுத்துக்காட்டாக, உயர்மேலாளரிடம் (பாதிக்கப்பட்டவருடைய உடனடி மேலாளருக்கு ஓரிரு நிலைகள் மேலே உள்ள ஒரு மேலாளர்) அதிகாரப்பூர்வமான ஒரு புகார் அல்லது அதிகாரப்பூர்வமற்ற ஒரு புகார் கொடுக்கலாம். ஆனால், ஊழியர்கள் தங்களுடைய பிரச்னைகளைப்பற்றிப் பேசுவதற்கு, அல்லது, இதுபோன்ற நடவடிக்கைகளைப்பற்றிப் புகார் சொல்வதற்கு அந்த நிறுவனம் சுதந்தரம் வழங்காவிட்டால், ஊழியரால் அதிகம் செய்ய இயலாது. மேலாளர், CEO மற்றும் HR ஆகியோர் கொடுமைப்படுத்தலுக்குப் பொறுப்பாளியான மேலாளருடன் இணங்கிப்போனால், ஊழியருக்குத் தன்னுடைய பணியை மாற்றுவதைத்தவிர வேறெந்தத் தெரிவும் உண்மையில் இல்லை.

இந்த நேரத்தில் அவர் தன்னுடைய சொந்த நலனில் கவனம் செலுத்துவதும், தனக்கு என்ன தேவை என்பதில் கவனம் செலுத்துவதும் மிக முக்கியம்.

பணியிடக் கொடுமைப்படுத்தலை எதிர்ப்பதற்கான பொதுக் குறிப்புகள்: * ஒருவர் தன்னுடைய எல்லைகளைக் கவனத்தில் வைக்கவேண்டும்; பிறர் (அவர்கள் யாராக இருந்தாலும் சரி) தன்னுடைய சொந்த எல்லைகளில் நுழைய அனுமதிக்கக்கூடாது. * ஒரு குறிப்பிட்ட சூழலில் அவர் வசதியற்று உணர்ந்தால், ஏதோ தவறு என்பதற்கான ஓர் அறிகுறியாக அதைப் பயன்படுத்தலாம், என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயலலாம். * தான் சந்திக்கும் கொடுமைப்படுத்தல் நிகழ்வுகளைத் தேதி, நேரம், தகவல்களுடன் பதிவுசெய்யவேண்டும். பின்னர் அவர் அதிகாரப்பூர்வமான புகாரொன்றைச் சமர்ப்பித்தால், இந்தத் தரவுகள் அவருக்கு உதவும். * இயன்றால், தன்னுடைய மேலாளருடைய மேலாளரிடம் இதைப்பற்றித் தெரிவிக்க முயலலாம். * கொடுமைப்படுத்தல்பற்றிய தன்னுடைய நிறுவனத்தின் நிலைபாட்டைக் கண்டறிய முயலலாம். இதன்மூலம், ஒருவரால் தன்னுடைய தெரிவுகளை அறிந்திருக்க இயலும்.

வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் இயக்குநர் மௌலிகா ஷர்மா வழங்கிய குறிப்புகளுடன்.

காண்க:

https://www.workplacebullying.org/individuals/problem/early-signs/ 

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org