பணியிட மனநலம்: அழுத்தம் குறித்து மேலாளரிடம் பேசலாமா

காலக்கெடுவை நிறைவுசெய்யும் அழுத்தம், பணியிடத்திற்குப் பயணம் செய்யும் அழுத்தம், பணிப்பளு மற்றும் அலுவலகச் சூழல் போன்றவை பல பணியாளர்கள் தினமும் எதிர்கொள்ளும் அழுத்தக்காரணிகள் ஆகும். இவை ஒரு நபரின் மனநலனில் குறிப்பிட்ட அளவில் தாக்கம் ஏற்படுத்தலாம். 

பலர் தங்களுடைய பணியிட மன அழுத்தம் குறித்துத் தங்களுடைய சக பணியாளர்களுடன் பேசுவதைத் தவிர்க்கின்றனர் ஏனெனில் மதிப்பிடப்படுவோமோ, கேலி செய்யப்படுவோமோ, வலிமையற்றவராக பார்க்கப்படுவோமோ மற்றும் இந்தத் தகவல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுமோ என்று பயப்படுகிறார்கள். மறுபுறம், அவர்கள் தங்களுடைய உணர்வுத் துன்பத்தை எதிர்கொள்ளாமல் இருப்பது அவர்களுடைய தொழில் வாழ்க்கையைப் பாதிக்கலாம் மேலும் குறைந்த பணி உற்பத்தித் திறன், மோசமான தீர்மானித்தல் மற்றும் புரிந்துகொள்ளலுக்கு இட்டுச் செல்லலாம். 

ஒருவர் சமாளிக்க இயலாதபடி உணர்ந்தாலும், தன்னுடைய முழுத்திறனுக்குச் செயல்பட இயலவில்லை என்று உணர்ந்தாலும், அவர்கள் அதுபற்றி எவருடனாவது உரையாட விரும்பலாம். இதுதொடர்பான சில பொதுவான கேள்விகளுக்கு இங்கு பதிளிக்கப்பட்டுள்ளது.

பிறர் உதவி தேவையா? ஒருவர் நிலைமையைத் தானே சமாளித்துக்கொள்ள இயலாதா?

ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வாழ்வின் ஒருபுள்ளியில் உதவி தேவை. ஒருவருக்கு உடல் வலி அல்லது இலேசான காய்ச்சல் இருந்தால், அவர்கள் உணவு மற்றும் ஓய்வுடன் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள முடியும். அந்தப் பிரச்னை தொடர்ந்து இருந்தாலோ மோசமானாலோ, அவர்களுக்குச் சிகிச்சை மற்றும் மருந்துகள் தேவைப்படும். மனநலமும் அதுபோல்தான். ஒருவர் சுய கவனிப்பு மற்றும் சூழ்நிலையைச் சிறப்பாக கையாள வாழ்க்கைமுறை மாறுதல்களை மேற்கொள்ளலாம். ஆனால் பிரச்னை தொடர்ந்து இருந்தால், உதவியை நாடவேண்டியிருக்கும், அது அவர்கள் தங்கள் சூழ்நிலையைச் சிறப்பாக எதிர்கொள்ள உதவலாம்.

மனநலம் குறித்துப் பணியிடத்தில் பேசுவது ஒருவருக்கு எப்படி உதவும்? அவர் வெளியே உதவி பெறலாம்...

மக்கள் பணியிடத்தில் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார்கள், மேலும் பணிச் சூழல் ஒருவருடைய மனநலத்தைப் பாதிக்கிறது. அவர்கள் ஆதரவான மேலாளரைக் கொண்டிருந்தால், செயல்முறை மற்றும் உணர்வு ஆதரவைப் பணியிடத்தில் பெறலாம். அவருக்குக் குறிப்பிட்ட வகை உதவி தேவைப்பட்டால் (எடுத்துக்காட்டாக, பணிநேரத்தில் நெகிழ்வுத்தன்மை, விடுமுறை, அல்லது சிறந்த பணி, வாழ்க்கைச் சமநிலையை ஏற்படுத்த அவருடைய வேலையை மறுமதிப்பீடு செய்தல்), மேலாளர்கள் சூழ்நிலையைத் தெரிந்திருந்தால் அவர்களுடைய கோரிக்கை ஏற்கப்படுவது எளிது. தன்னுடைய பணியிடத்தில் அதுபோன்ற உரையாடல்களுக்கு இடமுண்டா என்பதைத் தீர்மானிக்க, ஒருவர் தன்னுடைய உணர்வுகள் கூறுவதைக் கேட்பது முக்கியமானதாகும்.

உதவியை நாட என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?

பணியிடத்தில், ஒருவர் தன்னுடைய சக பணியாளரை நாடலாம், அவர் நல்ல புரிதல் இருக்கும் ஒருவரைக் கொண்டிருந்தால், அவர்களுடன் பேச முயற்சிசெய்யலாம். மாறாக, அவர் தன்னுடைய மேலாளருடனும் பேசலாம். சக பணியாளர் அல்லது மேலாளர் தனக்கு உதவ இயலாது என்று அவர் நினைத்தால், தன்னுடைய HR நபருடன் பேசலாம். சில நிறுவனங்கள் EAP அல்லது பணியாளர் உதவித் திட்டங்களைக் கொண்டுள்ளன. அவை ஊழியர்களுக்கு உதவச் சில அழுத்த நிர்வாக வளங்களை, அவற்றில் பயிற்சி பெற்ற ஆலோசகர்களுடன் கொண்டுள்ளன. 

ஆனால் ஒருவர் தன்னுடைய துன்பம் குறித்துத் தன்னுடைய மேலாளாருடன் பேசுவது உண்மையில்  சரியானதா?

அது மேலாளர் மற்றும் அவருடனான ஊழியருடைய புரிதலைப் பொறுத்தது – அவர் புரிந்துகொள்ளக்கூடியவரா, அவர் ஊழியர்களுடைய மனத்துன்பத்தைப் புரிந்துகொள்ளும் திறனைக் கொண்டிருக்கிறார் என்று ஊழியர் நம்புகிறாரா, மேலாளர் கவனமாகக்கேட்டு ஊழியர்களுடைய பிரச்னையைப் புரிந்துகொள்கிறாரா, அதுபோன்ற சூழ்நிலைக்கு அவர் எப்படிப் பதிலளிப்பார் (அல்லது கடந்தகாலத்தில் அதுபோன்ற சூழ்நிலைக்கு அவர் எப்படிப் பதிலளித்துள்ளார்), மற்றும் அவர் இந்த விஷயத்தைக் கவனமாகக் கையாள்வார் என்று ஊழியர் நம்புகிறாரா என்பதைப் பொருத்தது. பெரும்பாலும் மேலாளர்களுடைய எதிர்வினை நிறுவனத்துடைய கொள்கை மற்றும் கலாசாரத்தால் வடிவமைக்கப்படுகிறது. எனவே நிறுவனத்துடைய கலாசாரம் மனநலப் பிரச்னைகளைப் பேசுவதை ஊக்குவித்து, ஏற்றுக்கொண்டு, மேலாளரும் அதையே செய்யவேண்டுமெனில், மேலாளரும் பதிலளிக்கக்கூடியவராகவும் ஆதரவளிப்பவராகவும் இருக்க வேண்டும்  .

பணியிடம் ஒருவருக்கு உதவப் போதிய வளம் கொண்டிருக்கவில்லையெனில் என்ன செய்வது?

பல பணியிடங்கள், பணியாளர்கள் தங்களுடைய உணர்வுத் துன்பத்தைப்பற்றிக் கலந்துரையாட வசதிகளை உருவாக்குவதில்லை; பணியாளர்கள் தங்களுடைய துன்பம் குறித்துப் பேசுவது தங்களை வலிமையற்றவராக, பொருத்தமில்லாதவராகப் பார்க்கச்செய்யும் என்று கருதிக்கொள்கிறார்கள். இதற்குச் சிறந்த வழி, பணியாளர்கள் தங்களுடைய அழுத்தங்கள் குறித்துப் பேசப் பல வசதிகள் இருக்க வேண்டும், மேலும் அதுபோன்ற உரையாடல்கள் நிகழ வசதிகளை வழங்குவது நிறுவனத்தின் பொறுப்பாகும். ஒருவர் தன்னுடைய அழுத்தத்தை எதிர்கொள்ள அது போதாது என்று நினைத்தால், பணியிடத்துக்கு வெளியே ஒரு நிபுணரின் உதவியை நாடலாம். அதேவேளையில், நிறுவனம் தங்கள் பணியாளர்களுக்குச் செய்யக்கூடிய சில விஷயங்கள் இவை:

·       சமநிலை முன்னெடுப்புகளை எடுத்தல், அத்துடன் மனநலப் பிரச்னைகளின் முக்கியத்துவம் குறித்துப் பணியாளர்களுடன் தொடர்ந்து உரையாடல்

·       நிறுவனத்தின் பல்வேறு முன்னெடுப்புகள் வழியாக, மனநலத்தின் முக்கியத்துவம் குறித்துப் பணியாளர்களுடன் உரையாடல்

·       பணியாளர்கள் உதவியை நாடப் பல்வேறு இடங்களை உருவாக்குதல்

இந்த உள்ளடக்கம், வொர்க்பிளேஸ் ஆப்ஷன்ஸ், பெங்களூரின் மருத்துவப்பிரிவுத் தலைவர் மவுலிகா சர்மா மற்றும் ஐகால் உளவியல் உதவி மையம், மும்பையின் திட்ட இணை இயக்குநர தனுஜா பாப்ரே ஆகியோரின் உள்ளீடுகளால் உருவாக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org