பணியிடம்

நிறுவனங்களில் தற்கொலைத் தடுப்புத் திட்டம்

ஒவ்வொரு நிறுவனமும், முன்னெச்சரிக்கையோடு தற்கொலைத் தடுப்புத் திட்டம் ஒன்றை அமல்படுத்துவதன்மூலம், தங்களது ஊழியர்களின் மனநலத்தைப் பாதுகாக்கலாம், செயல்திறனை மேம்படுத்தலாம்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

நாளுக்கு நாள் நமது தினசரி வாழ்க்கையில் அழுத்தம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆகவே, அலுவலகங்களில், பிற பணியிடங்களில் தற்கொலையெண்ணத்தைக் கண்டறிந்து தடுக்கவேண்டியது அவசியமாகிறது. பணியிடத்தில் தற்கொலையைத் தடுப்பதுபற்றி நாங்கள் வெளியிடவுள்ள நான்கு கட்டுரைகளில் இது முதலாவது. இதில் நிறுவனங்கள் தற்கொலையைத் தடுப்பது எப்படி, தற்கொலைபற்றிச் சிந்திக்கக்கூடிய தன் ஊழியர்களின் எண்ணத்தை மாற்றி, அவர்களுக்கு உதவுவது எப்படி என்று விளக்குகிறார் ஶ்ரீரஞ்சிதா ஜெய்ர்கர்.

நாம் ஒரு தற்கொலையைப்பற்றிக் கேள்விப்படும்போது, அதை நாம் ஒரே ஒரு காரணத்துடன் தொடர்புபடுத்திவிடுகிறோம்: அவருடைய உறவு முறிந்துவிட்டது, அவருக்குப் பெரிய பொருளாதாரப் பிரச்னை வந்துவிட்டது, அவருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கவில்லை... அதனால்தான் அவர் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டார் என்று சொல்கிறோம். உண்மையில், தற்கொலை என்பது ஒரு சிக்கலான விஷயம், அது பல காரணிகளின் அடிப்படையில் நிகழ்கிறது. தற்கொலை செய்துகொள்ள எண்ணும் ஒருவர், தான் சந்திக்கும் பல்வேறு சவாலான சூழ்நிலைகளால் அப்படித் தீர்மானித்திருக்கலாம்: பணி அழுத்தம், பணியில் திருப்தியின்மை, உறவுகள் அல்லது குடும்பத்தில் பிரச்னைகள், சுய-மதிப்புப் பிரச்னைகள், பொருளாதார இழப்பு, பதற்றம், மனச்சோர்வு, அல்லது பிற மனநலப் பிரச்னைகள். இந்தச் சவால்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அழுத்தும்போது, ஒருவர் தற்கொலையைப்பற்றி யோசிக்கலாம்.

பொதுவாக, தற்கொலை என்பது வெளியே தெரியாத ஒரு பிரச்னை ஆகும். காரணம், ஊழியர்கள் அதைப்பற்றிப் பேச விரும்புவதில்லை. பல பயங்களால், அவர்கள் தங்களுக்கு வேண்டிய உதவியைக் கேட்டுப் பெறுவதில்லை: "ஒருவேளை இது என் முதலாளிக்குத் தெரிந்துவிட்டால்?", "எனக்குப் பதவி உயர்வும் போனஸும் கிடைக்காமல்போய்விடுமோ?", "என் சக ஊழியர்கள், மேலாளருக்கு இந்த விஷயம் தெரிந்தபிறகு அவர்கள் என்னை எப்படி நடத்துவார்கள்?", "என்னை அவர்கள் வேலையிலிருந்து நீக்கிவிடுவார்களோ?"


இந்தப் பயங்களால், ஓர் ஊழியர் தனது தற்கொலை எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளாமலிருக்கக்கூடும். சில நேரங்களில், இதுதொடர்பாக அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சேவைகளைப்பற்றிப் பலர் அறிந்திருப்பதில்லை, ஆகவே, தற்கொலையைப்பற்றி எண்ணுபவருடைய நம்பிக்கை குறைகிறது, அவர்கள் பிறரிடம் உதவி கேட்கும் சாத்தியங்களும் குறைகின்றன; பல நிறுவனங்களில், மனநலப் பிரச்னை கொண்ட ஊழியர்கள் விடுமுறையில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (பல நேரங்களில், இது சம்பளமல்லாத விருமுறையாக அமைகிறது), அல்லது, அவர்களுக்குத் தேவைப்படும் ஆதரவு கிடைக்கிற அல்லது கிடைக்காத ஒரு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

ஆனால், எங்களுக்கு அந்தப் பிரச்னை இல்லை!

பெரும்பாலான நிறுவனங்கள் கட்டமைப்பான தற்கொலைத் தடுப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மறுத்துவிடுகின்றன. காரணம், அவர்களுடைய நிறுவனத்தில் நடைபெற்ற தற்கொலை எப்போதாவது நிகழ்கிற ஒன்று என அவர்கள் நினைத்துவிடுகிறார்கள். இதுபற்றிப் பல தவறான நம்பிக்கைகள் உள்ளன: "ஒரே ஒருவர்தானே தற்கொலை செய்துகொண்டார்?" அல்லது "அவருடைய தற்கொலைக்கும் அவருடைய வேலைக்கும் சம்பந்தமே இல்லாமலிருக்கலாம்" அல்லது "என் ஊழியர்களால் இதைக் கையாள இயலும், அது எனக்குத் தெரியும்!"

நடந்தது ஒரே ஒரு தற்கொலைதான் என்றாலும், தன் தாக்கங்கள் நீண்டநாள் தொடரும். அது தற்கொலையால் தன் உயிரை முடித்துக்கொண்டவரைமட்டுமல்ல, பிற ஊழியர்கள், அந்த நிறுவனத்தையே பாதிக்கும். தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டவருடைய சக ஊழியர்கள் அவர் பணி தொடர்பான காரணங்களால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று கருதக்கூடும்; வருங்காலத்தில் அதே காரணிகள் தங்களையும் பாதிக்கக்கூடும் என அவர்கள் எண்ணலாம். இதனால், மேலாண்மைக்குழுவினர், அல்லது, ஒட்டுமொத்த அமைப்பைப்பற்றி ஒரு பொதுவான நம்பிக்கையின்மை உருவாகக்கூடும்.

பொதுவாக, ஒரு தற்கொலை என்பது பெரிய பனிப்பாறையின் நுனிமட்டும்தான். அந்த நிறுவனத்தில் இன்னும் பல ஊழியர்கள் தற்கொலையைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கக்கூடும். அதற்கான காரணங்கள் பணியிடம் சார்ந்ததாகவும் இருக்கலாம், பணியிடம் சாராததாகவும் இருக்கலாம். பாதிக்கப்படக்கூடிய இந்த ஊழியர்கள், தங்களுடைய சிரமமான சூழ்நிலையிலிருந்து தப்ப ஓர் எளிய வழியாகத் தற்கொலையைக் கருதலாம்.

ஊழியர்கள் நிறுவனத்தைப்பற்றிய ஓர் எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிக்கொள்ளலாம், அதனால், நிறுவனத்திலிருந்து விலகத்தொடங்கலாம். இதனால், அந்நிறுவனம் மனிதசக்தி, லாப சாத்தியம், வருவாய் மற்றும் நற்பெயர் ஆகியவற்றை இழக்கிறது.

பனிப்பாறையின் நுனி

ஒரு குறிப்பிட்ட சூழலில் நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை - பல ஆண்டுகளில் ஒரே ஒரு தற்கொலை என்று இருந்தால்கூட - எப்போதும் ஒரு பனிப்பாறையின் நுனிதான். தற்கொலை எப்படி நிகழ்கிறது என்பதை விளக்குவதற்கு, நிபுணர்கள் ஒரு வண்ணப்பட்டியின் உதாரணத்தைப் பயன்படுத்துகிறார்கள். "தற்கொலை என்பது எப்போதும் ஒரு வண்ணப்பட்டிதான், தற்கொலை அல்லது தற்கொலை முயற்சியாக நாம் காண்பது, அந்த வண்ணப்பட்டியின் ஒரு முனை. ஒருவர் தற்கொலைமூலம் தன் உயிரை முடித்துக்கொள்கிறார் என்றால், குறைந்தபட்சம் 10 முதல் 15 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள், நூற்றுக்கணக்கானோர் தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கிறார்கள், இன்னும் பலர் அந்த ஆபத்தில் சிக்கியிருக்கிறார்கள் என்று பொருள்" என்கிறார் டாக்டர் குருராஜ் கோபாலகிருஷ்ணா, இவர் NIMHANS நோய்த்தொற்றியல் பிரிவுப் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆவார்.

உதாரணமாக, ஓர் ஊழியருக்குப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. இப்போது அவர் செய்யப்போகும் வேலைக்காக அவர் பயிற்சிபெறவில்லை, ஆகவே, அவரால் அதைச் சிறப்பாகச் செய்ய இயலவில்லை. இதனால், அவர் மிகுந்த அழுத்தத்தை அனுபவிக்கிறார். குடிப்பது, புகை பிடிப்பது போன்றவற்றில் மனத்தைத் திருப்புகிறார், அவரிடம் இருக்கும் பணத்தில் பெரும்பகுதி சிகரெட், மது வாங்கச் செலவாகிவிடுகிறது. இதனால், அவர் சூதாடத் தொடங்குகிறார், ஆகவே, அவரது கடன் மேலும் அதிகரிக்கிறது. அவரால் தன்னுடைய குடும்பத்தைப் பராமரிக்க இயலவில்லை. அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இல்லை; அவர் அடிக்கடி தன் மனைவியுடன் சண்டையிடுகிறார். அவர் மேலும் குடிக்கிறார், மனச்சோர்வுக்கு ஆளாகிறார். அவர் தனிமையாக உணர்கிறார், எல்லா வேலைகளிலும் அவருக்கு ஆர்வம் போய்விடுகிறது, வாழ்க்கையை வாழ்வதில் ஏதேனும் பிரயோஜனம் உண்டா என்று யோசிக்கிறார். அவர் திரும்பத் திரும்ப இதையே எண்ணுகிறார், அந்த எண்ணம் தீவிரமடைகிறது. ஒருகட்டத்தில், அவர் தற்கொலையைப்பற்றி வெறுமனே சிந்திப்பதோடு நிறுத்தாமல், அதற்குத் திட்டமிடத் தொடங்குகிறார்.

(இது ஒரு கற்பனை விவரிப்பு. இந்தப் பிரச்னை நிஜவாழ்க்கையில் எப்படி அமையும் என்பதைக் காண்பிப்பதற்காக உருவாக்கப்பட்டது.)

தற்கொலைகள் பல சமூக, கலாசார, உயிரியல், பணி-தொடர்பான மற்றும் அமைப்பு-தொடர்பான காரணிகளால் நிகழ்கின்றன, இந்தக் காரணிகள் ஒவ்வொன்றும் மற்றதைப் பாதிக்கின்றன, இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தும் செயல்படக்கூடும். பலகாலமாக, இந்தக் காரணிகள் ஒன்றாகச் சேரலாம், மிகுந்த மனத்துயரத்தை உண்டாக்கலாம், பாதிக்கப்பட்டவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்வதுபற்றிச் சிந்திக்கலாம்.

தற்கொலைத் தடுப்புத் திட்டம் ஏன் முக்கியமாகிறது?

எந்தவொரு பணியிடத்திலும் மனநலம் மற்றும் தற்கொலைத் தடுப்புத் திட்டங்கள் அவசியம். இதன்மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன:

  • ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் மேம்படுகிறது
  • யாருக்கெல்லாம் மனநலப் பிரச்னை வரக்கூடும் என்று அடையாளம் காணவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் இயலுகிறது
  • யாரெல்லாம் தீவிரச் சூழலில் உள்ளார்கள் என்று அடையாளம் காண இயலுகிறது, அதாவது, தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள் அல்லது, அதைப்பற்றிச் சிந்திக்கிறவர்களைக் கண்டறிய இயலுகிறது, அவர்களுக்குச் சரியான நேரத்தில் ஆதரவு தந்து, அவர்கள் மனத்தை மாற்ற இயலுகிறது, அந்த ஆதரவை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்களா, பழைய பிரச்னைகள், சிந்தனைகள் இன்னும் உள்ளனவா என்று அவ்வப்போது கவனித்து, வேண்டியவற்றைச் செய்ய இயலுகிறது.
  • மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தற்கொலை எண்ணம் கொண்டவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்கள் பழையபடி செயல்திறனுடன் இயங்குவதற்கு உதவுகிறது.

நிறுவனத்தின் கோணத்திலிருந்து பார்த்தால், முன்னெச்சரிக்கையான ஒரு தற்கொலைத் தடுப்புத் திட்டம் ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. ஊழியர் ஒருவருக்குத் தற்கொலை எண்ணங்கள் இருந்தால், அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படலாம், அதன்மூலம் அவர்கள் தங்கள் வேலையைச் சமாளித்துச் செய்யலாம், செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளலாம். ஊழியர்களை அணுகிப்பேசி அவர்களுக்கு உதவுகிற திட்டமொன்றைச் செயல்படுத்தினால், நிறுவனம் தங்களை நன்கு கவனித்துக்கொள்கிறது என்று அவர்கள் உணர்வார்கள், அவர்களது சவுகர்ய நிலை மேம்படும். ஆக, மன ஆரோக்கியமும் செயல்திறனும் மிகுந்த ஊழியர்களால் நிறுவனத்துக்கு நன்மைதான்.

ஊழியரைப்பொறுத்தவரை, தனது நிறுவனத்தில் ஒரு மனநல, தற்கொலைத் தடுப்புத் திட்டம் இருக்கிறது என்றால், தன் நிறுவனம் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனில் ஆர்வம் காட்டுகிறது என்று அவர் புரிந்துகொள்வார்; இதன்மூலம் மேலாண்மைக்குழுவின்மீது அவர் வைக்கும் நம்பிக்கை அதிகரிக்கலாம். பின்னர் அந்த ஊழியருக்கு ஏதாவது ஒரு பிரச்னை வரும்போது, அல்லது, சக ஊழியர் அல்லது குடும்பத்தினர் ஒருவருடைய பிரச்னையைப்பற்றி அவர் மேலும் தெளிவடைய விரும்பினால், அதுபற்றி அவர் நிபுணர்களுடன் பேசலாம், பலன் பெறலாம். இந்த அணுகல், தற்கொலையைத் தடுப்பதன் ஒரு முக்கியமான பகுதி ஆகும். தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவருக்கு உதவி கிடைக்கிறது, அவரால் தன்னுடைய பிரச்னைகளை நிபுணர்கள் உதவியுடன் கையாள இயலுகிறது என்றால், அவர் அந்தத் தற்கொலை எண்ணத்திலிருந்து வெளியே வரும் வாய்ப்புகள் அதிகம்.

தற்கொலைத் தடுப்புத் திட்டமானது ஒரு நீண்ட-காலப் பராமரிப்பு மற்றும் ஆதரவுத் திட்டமாகவும் செயல்படுகிறது; ஊழியர்கள் நிறுவனத்துக்குச் சிறப்பாகப் பங்களிக்க இது உதவலாம்.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு சிறந்த மனநல மற்றும் தற்கொலைத் தடுப்புத் திட்டத்தை உருவாக்குவதன்மூலம் நிறுவனமும் பலன்பெறுகிறது, ஊழியர்களும் பலன்பெறுகிறார்கள்.

ஓர் அமைப்பை உருவாக்குதல்

ஒரே ஒரு தற்கொலைதானே என்று ஒருவர் அலட்சியமாகச் சொன்னால், அவர் பனிப்பாறையின் நுனியைமட்டும் கவனிக்கிறார் என்றூ பொருள். இப்படிப்பட்ட எந்த நிகழ்வையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும். சில நிறுவனங்கள் பிரச்னை வந்தபிறகுதான் அதைக் கவனித்துச் சரிசெய்கிறார்கள். அதாவது, ஓர் ஊழியர் தற்கொலைமூலம் தன் வாழ்வை முடித்துக்கொண்டபிறகு, அதனால் தங்களுக்கு ஏற்பட்ட சேதத்தைக் கட்டுப்படுத்த முனைகிறார்கள். நியாயப்படி பார்த்தால், எந்தவொரு நெருக்கடியும் எதையாவது செய்தால் போதும் என்கிற நிலைக்குச் சென்றூவிடாதபடி அவர்கள் முன்னெச்சரிக்கையாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்" என்கிறார் டாக்டர் குருராஜ் கோபாலகிருஷ்ணா.

ஊழியர்களின் தற்கொலைகளைத் தடுக்க விரும்பும் ஒரு நிறுவனம், இரண்டு வழிகளில் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யலாம்:

  • பொதுவான மனநலக் குறைபாடுகளான மனச்சோர்வு, பதற்றம் மற்றும் போதைப்பழக்கம் ஆகியவற்றைக் கையாளக்கூடிய ஓர் ஒட்டுமொத்த மன நலத் திட்டத்தை உருவாக்குதல்.
  • தனியே அல்லது, பணியிட மனநலத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்கொலைத் தடுப்புத்திட்டமொன்றை உருவாக்குதல்.

தற்கொலைத் தடுப்பு மற்றும் மனநலம் ஆகியவற்றைப் பெரிய ஊழியர் நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது அவசியம். அதேசமயம், தற்கொலையை ஒரு பிரச்னையாகவும் அங்கீகரிக்கவேண்டியது அவசியம், ஒரு நிறுவனத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மதிப்பிடவேண்டும், அதைக் கையாள்வதற்கான கட்டமைப்பான திட்டமொன்றை உருவாக்கவேண்டும்.

ஒரு நிறுவனம் எந்தவொரு தற்கொலைத் தடுப்புத் திட்டத்தை அமல்படுத்தினாலும் சரி, அதன் சேவைகள் அந்நிறுவனத்தில் எந்த ஊழியருக்கெல்லாம் தேவைப்படுகின்றனவோ, அவர்கள் எல்லாருக்கும் சென்றுசேரவேண்டும். உதவி நாடி அங்கே வரும் ஊழியர்களை மேலாண்மைக்குழுவினர் ஆதரிக்கவேண்டும். இந்தத் திட்டத்தின் நுண்ணுணர்வு மற்றும் சிக்கல்தன்மை காரணமாக, இதனை நன்கு கட்டமைக்கவேண்டும், இதைப்பற்றிச் சிந்திக்கவேண்டும். நிறுவனமும் ஊழியர்களும் மற்றவரின் தேவைகளை அங்கீகரிக்கவேண்டும், உதவத் தயாராக இருக்கவேண்டும்.

இந்தத் தொடர் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனால் தொகுக்கப்பட்டது. இதற்கான கருத்துகளை வழங்கியவர்கள்: டாக்டர் குருராஜ் கோபாலகிருஷ்ணா, தொற்றுநோயியல் பிரிவுத் தலைவர், NIMHANS, டாக்டர் பிரபா சந்திரா, உளவியல் பேராசிரியர், NIMHANS, டாக்டர் சீமா மெஹ்ரோத்ரா, மருத்துவ உளவியல் கூடுதல் பேராசிரியர், NIMHANS, டாக்டர் பூர்ணிமா போலா, உதவிப் பேராசிரியர், மருத்துவ உளவியல் துறை, NIMHANS, மற்றும் டாக்டர் செந்தில் குமார் ரெட்டி, உளவியல் துணைப் பேராசிரியர், NIMHANS.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org