பணியிட மனநலம்: துயரமாக உணரும் ஒரு பணியாளருடன் மேலாளர் அல்லது சகபணியாளர் தொடர்பு கொள்ள வேண்டுமா?

ஒரு சகபணியாளரின் நடத்தையில் திடீர் மாற்றங்களைக் கவனிக்கமுடிகிறதா? தங்களது பணியில் ஒழுங்கான முறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் திடீரெனத் துயரமானவராக, பணியில் கவனம் செலுத்தமுடியாதவராக மாறுகிறாரா? அல்லது, ஒரு சகபணியாளர் அடிக்கடி வேலைக்கு வரவில்லையா, அல்லது சுயதீங்கிழைப்பது குறித்துப் பேசுகிறாரா?

இந்தத் திடீர் நடத்தை மாற்றங்கள் ஒருவகை உணர்வுத் துன்பம் அல்லது மனநலக் குறைபாட்டின் அடையாளமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் துயரமுற்ற நபர் யாரையும் நாடி உதவி கேட்காமல் இருக்கலாம். ஒரு மேலாளர் அல்லது சகபணியாளர் அவருக்கு உதவ விரும்பினால் அவர் எடுக்கக்கூடிய முதல் படி, அவர்களை அணுகிக் காது கொடுத்துக் கேட்பதுதான். அடையாளங்கள் எப்போதும் உள்ளன, இருப்பினும் அவை முதலில் தெளிவில்லாமல் இருக்கலாம். அதேசமயம், ஒரு மேலாளர் அல்லது சகபணியாளர் இதைக் கவனித்து அவர்களைத் தொடர்புகொள்வதன்மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.   

எப்போது தொடர்பு கொள்ள வேண்டும்?

ஒரு மேலாளர் அல்லது சக பணியாளர் அவரைக் கீழ்கண்ட வேளையில் தொடர்புகொள்ளக் கருதலாம்:

·       அதிகமான மற்றும் விளக்க இயலாத அளவுக்கு விடுப்பு எடுக்கும் போது

·       பணியில் கவனம் செலுத்த இயலாமல் இருக்கும்போது

·       புறத்தோற்றம் குறித்து திடீரென கவனம் செலுத்தாமை அல்லது போதிய சுகாதாரமின்மை

·       கவனம் சிதறியவராக, தொலைந்துபோனவராக தோன்றுதல்

·       அடிக்கடி தனக்குள்ளே முணுமுணுத்தல்

·       சுய தீங்குபற்றிப் பேசுதல்

·       முன்னும் பின்னும் நடத்தல்

·       தன்னை மறந்தவராகத் தோன்றுதல்

·       முன்பை ஒப்பிடும்போது குறைந்த ஆற்றல் கொண்டிருத்தல் 

·       கோபத்தின் அடையாளங்களைக் காட்டுதல்

சக பணியாளரிடம் மேற்கண்ட அடையாளங்களில் எவற்றையேனும் குறிப்பிட்ட காலத்திற்குக் கவனித்தால் (குறைந்தது இரு வாரங்களுக்கு), அது அவரைத் தொடர்புகொள்வதற்கான நேரம். ஒரு மேலாளர் தொடர்ச்சியான குறைந்த உற்பத்திதிறன், அதிகரித்த தாமதம் அல்லது அதிகரித்த கோபத்தைக் கவனித்தால், அவர்களைத் தொடர்புகொள்ளலாம். ஆதரவான, புரிந்துகொள்ளக்கூடிய, உதவிசெய்ய விரும்புகிற, அவர்கள்மீது தீர்ப்புச்சொல்லாத மற்றும் மிரட்டாத மனப்பாங்குடன் ஒருவர் அவர்களைத் தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் உடனடியாக அமைதியாகலாம், இது அவர்கள் தங்களுடைய கதையைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கலாம். இப்படி அவர்கள் உரையாடும்போது அவர்களுடைய சொற்களையோ உடல்மொழியையோ மதிப்பிடவேண்டாம், அவர்களைக் கேட்பதற்குத் தயாராக இருப்பதை அறியச் செய்யலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் எப்படி உரையாடவேண்டும் என்பதுகுறித்து எந்த உறுதியான விதிமுறைகளும் இல்லாவிட்டாலும், உண்மையான அக்கறை மற்றும்  நிபந்தனையற்ற ஏற்றுக் கொள்ளல் ஆகியவை மிகவும் அவசியமானவை. எடுத்துக்காட்டாக, ஒருவர் துயரமுற்ற சக பணியாளரை இவ்வாறு அணுகலாம்:

"வணக்கம் ___________, எப்படி இருக்கிறாய்? ஏதோ ஒன்று உன்னைத் தொல்லை செய்வதுபோல் நான் உணர்கிறேன். நான் உன்னைப்பற்றிக் கவலைப்படுகிறேன் மேலும் நீ பேசவிரும்பினால் நான் அதைக் கேட்கத் தயாராக இருக்கிறேன் என்று நீ அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். நான் ஏதாவது ஒரு வகையில் என்னால் முடிந்த அளவு உதவ விரும்புகிறேன். 

உனக்கான பதில் என்னிடம் இல்லாமலிருக்கலாம், ஆனால், சிலநேரங்களில் ஒருவருடன் பேசுவதே உதவியாக இருக்கும், அப்படிச் செய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். நம்பிக்கையுடன் பேசுவதற்கு ஒருவரைக் கண்டறிவது எவ்வளவு கடினமானது என்பது எனக்குத் தெரியும், எனவே, உனக்கு ஏற்புடையதாக இருக்குமானால் நான் அந்த நபராக இருப்பதில் மகிழ்ச்சியடைவேன்." 

சிறிதளவு சொந்த வெளிப்பாடும் அந்த நபர் மனம் திறக்க உதவும். ஒருவர் தான் கொண்டிருந்த அதேபோன்ற அனுபவத்தைப் பகிரலாம், அல்லது தான் எதிர்கொண்டு வெற்றியடைந்த சிக்கலான சூழ்நிலையைப் பற்றிப் பேசலாம், இது அந்த நபருக்கு உறுதியளித்து நம்பிக்கை உணர்வினைக் கட்டமைக்கும். அந்த நபர் மதிப்பிடப்படும் பயமில்லாமல் பேசவும் உதவும். அதேசமயம், பேச்சின்போது ஒருபோதும் அவர்களைக் கைவிடக்கூடாது, அல்லது உரையாடலைத் தன்னைப்பற்றியும் தன்னுடைய பிரச்னைகளைப் பற்றியதுமாக மாற்றிவிடக்கூடாது. அவர்களைக் குறிப்பிட்ட வழியில் மோசமாகவோ வலிமையற்றவராகவோ உணரச்செய்யக்கூடாது, அவர்களிடம் "உன்னை நீயே பார்த்துக் கவனித்துக் கொண்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும்” என்று சொல்லக்கூடாது. இதுபோன்ற பேச்சுகள் வேண்டாம்: “இதுபோல் இருக்காதே. இதெல்லாம் வாழ்வின் ஒரு பகுதிதான், எனவே உற்சாகமாக இரு!” அல்லது “நான் உனது நடத்தையால் சோர்ந்துவிட்டேன். அதனைப்பற்றி நினைப்பதை விட்டுவிட்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்.” அல்லது “அழுவதை நிறுத்து. நீ இதைப் பெரிதுபடுத்தவதாக நான் நினைக்கிறேன். கோழையாக இருக்காதே."  இப்படிப்பட்ட பேச்சுகள் அந்த நபருக்கு உதவாது, நிலைமையை இன்னும் மோசமாகதான் ஆக்கும்.

நிறுவனம் துயருற்ற பணியாளருக்கு உதவ முடியுமா?  

அவர்கள் தங்கள் நிறுவனத்தின் EAP(பணியாளர் உதவித் திட்டம்)-ஐ நாடுவதற்குச் சக பணியாளர்கள் வழிகாட்டலாம். பணியாளர்கள் வாழ்வின் உணர்வு மற்றும் இருப்பிடச் சவால்களை எதிர்கொள்ள உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சேவை இது. சில EAPகள், பணியாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குத் தீர்வை நோக்கிய குறுகிய கால மன நல ஆதரவிற்கான இலவச அணுகலையும், தினசரி வாழ்க்கை மற்றும் பணிச் சவால்கள் தொடர்பான ஆதரவையும் கொடுக்கின்றன.  இந்தச் சேவைகள் அனைத்தும் இரகசியத்தன்மைக்கு உறுதியளிக்கின்றன, ஒருவர் தனக்குத் தானே மற்றும் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும் ஆபத்து நிகழ்வுகளில்மட்டும் இது பொருந்தாது. பணியாளர்கள் தங்கள் நிறுவனத்திடமோ மேலாளர்களிடமோ இதை வெளிப்படுத்தப் பயப்படுத்தத் தேவையில்லை. அவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் எந்த மனத்துயரத்திற்கும், அது தங்களுடைய பணிவாழ்க்கை அல்லது சொந்த வாழ்க்கை எதனுடன் தொடர்புடையதாக இருந்தாலும், இந்தச் சேவைகளைத் தொடர்பு கொண்டு அணுகலாம். 

நிறுவனத்தில் EAP இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?  

மேலாளர்கள் தங்களுடைய பணியாளர்களை ஓர் ஆலோசனை நிறுவனம் அல்லது மனநல ஆலோசகரிடம் பரிந்துரைக்கலாம். வழக்கமாக இது பணியாளரின் சொந்தச் செலவாகும். எல்லாப் பணியாளர்களும் செய்யக்கூடிய மற்றொரு விஷயம், நிபந்தனையற்ற மற்றும் மதிப்பிடாத ஆதரவை வழங்குவதன்மூலம் முன்னெச்சரிக்கை நிலையை எடுப்பதாகும்.  மனத்துயருற்ற பணியாளர் மனநல நிபுணரிடம் செல்லத் தயங்கினால் சக ஊழியர்கள் அவருடன் உடன் செல்லலாம்.  கூடுதலாக, உதவிமையத்தை அழைக்கவும்  சக பணியாளருக்குப் பரிந்துரைக்கலாம்.

வொர்க்பிளேஸ் ஆப்ஷன்சின் மருத்துவப்பிரிவுத் தலைவர் மவுலிகா சர்மாவின் உள்ளீடுகளுடன். 

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org