ஸ்கிஜோஃப்ரெனியா என்றால் என்ன?
ஸ்கிஜோஃப்ரெனியா என்பது ஒரு தீவிரமான மனக் குறைபாடு. இந்தப் பிரச்னை கொண்டவர்கள் பலவிதமான அசாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்: குரல்களைக் கேட்டல் (பிரமைகள்), சிதைந்த எண்ணங்கள் அல்லது, தவறாகப் புரிந்துகொள்ளுதல், விநோதமான நம்பிக்கைகள் போன்றவை. இவர்கள் நிறைய விஷயங்களைக் கற்பனை செய்துகொள்வார்கள், எது நிஜம், எது கற்பனை என்று பிரித்துப்பார்க்கவே இவர்களால் இயலாது. இந்த விஷயங்கள் மற்றவர்களுக்குதான் அசாதாரணமானவை, அவர்களைப்பொறுத்தவரை இவை நிஜமாகவே தோன்றுகின்றன. இதனால், பிறர் அவர்களைத் 'தங்களுடைய உலகில் வாழ்கிறவர்கள்' என்று எண்ணிவிடுகிறார்கள்.
இந்தக் குறைபாட்டின் அறிகுறிகளால், ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்ட ஒருவர் எதார்த்தத்தை வேறுவிதமாகப் புரிந்துகொள்ளக்கூடும், அது பிறருக்கு அசாதாரணமாகத் தோன்றக்கூடும். பிறர் தங்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள், தங்களைக் காயப்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்று அவர்கள் எண்ணலாம், இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் செய்கிற செயல்கள் மற்றவர்களுக்குப் புரியாமல்போகலாம். உதாரணமாக, பக்கத்துவீட்டுக்காரர்கள் தன்னுடைய குடும்பத்தினரைக் கொல்லப்பார்க்கிறார்கள் அல்லது காயப்படுத்தப்பார்க்கிறார்கள் என்று அவர்கள் எண்ணலாம், அதிலிருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக எல்லாக் கதவுகள், ஜன்னல்களையும் எப்போதும் மூடியே வைக்கலாம்.
ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்களுக்குத் தங்களுடைய நடவடிக்கைகள் மாறியுள்ளன என்பது தெரிவதில்லை. தாங்கள் வித்தியாசமாக நடந்துகொள்கிறோம் என்பதை அவர்கள் ஏற்க மறுக்கலாம். காரணம், அவர்களைப்பொறுத்தவரை வெளி எதார்த்தம் மற்றும் உள் எதார்த்தம் இடையிலான கோடுகள் மிகவும் மழுங்கிவிட்டன, அவர்களால் இந்த இரண்டையும் பிரித்துப்பார்க்க இயலுவதில்லை. இதனால், அவர்கள் தங்களுடைய குடும்பத்தினர், நண்பர்களிடம் பேச மறுக்கலாம், தங்களுடைய பிரச்னைக்கு மருத்துவ சிகிச்சை பெற மறுக்கலாம்.
எது ஸ்கிஜோஃப்ரெனியா அல்ல?
'ஸ்கிஜோஃப்ரெனியா' என்று சொன்னவுடன் நமக்குள் வரும் பொதுவான பிம்பங்கள்: கலைந்த தலை, கிழிந்த ஆடைகளுடன் நிற்கிற ஒருவர்; தன்னுடைய செயல்களைத் தானே கட்டுப்படுத்த இயலாத ஒருவர்; யாரும் எதிர்பாராதபடி, வன்முறையாக நடந்துகொள்கிற ஒருவர்; UFOக்களுடன் பேசுகிற ஒருவர்; பித்துப்பிடித்ததுபோல் நடந்துகொள்கிற ஒருவர்... இப்படி. ஸ்கிஜோஃப்ரெனியா வந்தவர்களைத் திரைப்படங்கள் பலவிதமாகச் சித்திரித்துள்ளன: விநோதமாக நடந்துகொள்ளும் மேதாவிகள், குழப்பமான, தீவிரமான நபர்கள், அவர்களை வாழ்க்கைமுழுவதும் மனநல மருத்துவமனையில் அடைத்துவைக்கவேண்டும்... இப்படி.
இந்தியாவில், ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை வந்தவர்களைப் பித்தர்களாக, யாராலும் கட்டுப்படுத்த இயலாத மனநோயாளிகளாகதான் பார்க்கிறார்கள். அவர்களால் அவர்களுக்கும் ஆபத்து, சுற்றியிருக்கிற மற்றவர்களும் ஆபத்து என்று எண்ணுகிறார்கள். ஊடகங்கள் இந்தப் பிரச்னையைக் காட்சிப்படுத்தும் முறை சரியல்ல என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஸ்கிஜோஃப்ரெனியா எப்படி வருகிறது?
பொதுவாக, ஒருவர் பருவத்துக்கு வரும் காலகட்டத்தில் தொடங்கி, அவர் வயதுவந்தோராக ஆகும் ஆரம்பக்கட்டத்துக்குள் ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை தொடங்குகிறது. இந்தப் பிரச்னை படிப்படியாக வளர்கிறது, பெரும்பாலும் சில வாரங்கள் தொடங்கி சில மாதங்களுக்குள் இது பெரிதாகிறது. ஸ்கிஜோஃப்ரெனியாவின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள், தங்களை மாற்றிக்கொள்வதில் சிரமங்கள், மனச்சோர்வு அல்லது பதற்றம் போன்ற மற்ற மன நலப் பிரச்னைகளைப்போலவேதான் இருக்கும்.
இந்தப் பிரச்னையின் ஆரம்பநிலையில், பாதிக்கப்பட்டவர் சில 'எதிர்மறை அறிகுறிகளை' வெளிப்படுத்தக்கூடும். உதாரணமாக, யாருடனும் சேராமல் தனித்திருத்தல், விட்டேத்தியாக நடந்துகொள்ளுதல், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து விலகியிருத்தல் போன்றவை. இவர்கள் முன்பு விரும்பிச் செய்த செயல்பாடுகள், பொழுதுபோக்குகளில் இப்போது ஆர்வம் காட்டாமல் இருக்கலாம், முன்பு தங்களைச் சுத்தமாக, அழகாகப் பார்த்துக்கொண்டவர்கள் இப்போது அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். அவர்கள் பழகும்விதமும் மாறுகிறது. உதாரணமாக, எந்தக் காரணமும் இல்லாமல் அவர்கள் சிரிக்கக்கூடும்.
இதைக் கண்டறிந்து சிகிச்சை தராவிட்டால், இந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாகலாம், பாதிக்கப்பட்டவர் பேச்சிலும் உடல்ரீதியிலும் வன்முறையை வெளிப்படுத்தத் தொடங்கலாம்.
உலகம்முழுவதும் உள்ள மக்கள்தொகையில் சுமார் 1%பேரை ஸ்கிஜோஃப்ரெனியா பாதிக்கிறது. ஆண்கள், பெண்கள் என இருபாலர்களிடமும் இதனைக் காணலாம். ஸ்கிஜோஃப்ரெனியா தொடங்கும் பொதுவான வயது, 15 முதல் 25 ஆண்டுகள். ஆனால், ஒருவர் இந்த வயதைக்கடந்து பல ஆண்டுகளானபிறகும்கூட, அவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை வரக்கூடும்.
ஸ்கிஜோஃப்ரெனியாவின் அறிகுறிகள் என்ன?
ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவர் எப்போதும் விநோதமாக நடந்துகொள்ளமாட்டார். இந்தப் பிரச்னையின் அறிகுறிகள் எப்போது வரும், எப்போது வராது என்று கணிக்க இயலாது. அவர்கள் விநோதமாக நடந்துகொள்கிற தீவிரத்தன்மையும் அவ்வப்போது மாறும். மிகவும் பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள்:
இதுவரை சொல்லப்பட்ட அறிகுறிகளை, 'நேர்விதமான அறிகுறிகள்' என்பார்கள்.
சைக்கோசிஸ் மற்றும் சைக்கோடிக் நிகழ்வுகள் என்றால் என்ன?
ஸ்கிஜோஃப்ரெனியாவுடன் அடிக்கடி இணைத்துப் பேசப்படும் ஒரு சொல், சைக்கோசிஸ், வேறு சில தீவிரமான மனநலப் பிரச்னைகளைப்பற்றிப் பேசும்போதும், இந்தப் பெயரைப் பயன்படுத்துவார்கள். சைக்கோசிஸ் என்பதன் பொருள், ஒருவர் எதார்த்தத்திலிருந்து விலகிவிடுகிறார் என்கிற மனநிலை. அதாவது, அவரால் எது நிஜம், எது கற்பனை என்று உணர இயலுவதில்லை. இது அவர்களுடைய மனோநிலையையும் நடவடிக்கைகளையும் பாதிக்கிறது, இதனால் அவர்கள் யாருடனும் சேராமல், அல்லது மனச்சோர்வுடன் காணப்படலாம். ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்ட ஒருவர் மாயத்தோற்றங்கள் மற்றும் பிரமைகளை அனுபவிக்கிறார், இதனால் அவருக்குப் பயம், சந்தேகம், எழுச்சி மற்றும் மனச்சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன.
சைக்கோடிக் நிகழ்வு என்பது, ஒருவருக்கு வலுவான மாயத்தோற்றங்கள் அல்லது பிரமைகள் தோன்றுகிற ஒரு நிகழ்வு. இந்த சைக்கோடிக் நிகழ்வுகளின் தீவிரத்தன்மை, அவை எத்தனைநாளைக்கு ஒருமுறை நடைபெறுகின்றன போன்ற விவரங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மற்ற நேரங்களில் அவர் எந்தப் பாதிப்பும் இல்லாதவரைப்போல், சாதாரணமாகத் தோன்றலாம்.
சிலநேரங்களில், பாதிக்கப்பட்டவர் மிகவும் வன்முறையாக நடந்துகொள்ளலாம், அல்லது, அவர்களுக்கும் பிறருக்கும் உடல்ரீதியில் ஆபத்து விளைவிக்கக்கூடியவரைப்போல் தீவிரமாக நடந்துகொள்ளலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்டவருடைய விருப்பம் இல்லாமலே அவரை மருத்துவமனையில் சேர்க்கலாம். இதற்கு, அவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் மேஜிஸ்ட்ரேட் ஒருவருடைய ஆணையைப் பெறவேண்டும்.
சூழ்நிலை எல்லைமீறுகிறது, பாதிக்கப்பட்டவருடைய, அல்லது, அவருடைய குடும்பத்தினரின் பாதுகாப்பை எண்ணி நீங்கள் கவலைகொள்கிறீர்கள் என்றால், உடனடியாக ஒரு மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.
ஸ்கிஜோஃப்ரெனியா எதனால் ஏற்படுகிறது?
ஸ்கிஜோஃப்ரெனியாவுக்கான உண்மைக்காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டறியவில்லை. இதுபற்றி நிகழ்ந்துள்ள ஆராய்ச்சிகளைத் தொகுத்துப்பார்க்கும்போது, மூளையின் கட்டமைப்பில் உள்ள அசாதாரணமான பகுதிகளால் இந்தக் குறைபாடு ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. ஒருவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வரும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய வேறு சில காரணிகள்:
ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்கள் அதீத அழுத்தத்துக்கு ஆளானால், போதை மருந்துகள், மது போன்றவற்றைத் தவறாகப் பயன்படுத்தினால், அதனால் இந்தப் பிரச்னையின் அறிகுறிகள் மோசமாகக்கூடும்.
ஸ்கிஜோஃப்ரெனியா எப்படிக் கண்டறியப்படுகிறது?
ஸ்கிஜோஃப்ரெனியாவைக் கண்டறிகிற தனி பரிசோதனை என்று எதுவும் இல்லை. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களிடம் பலவிதமான அறிகுறிகள் காணப்படுவதால், மருத்துவநிபுணர் அவரை முழுமையாகப் பரிசோதித்தபிறகுதான் ஒரு தீர்மானத்துக்கு வருவார். இந்தப் பரிசோதனையின்போது, பாதிக்கப்பட்டவருடைய நடவடிக்கை மாற்றங்கள், உயிரியல் செயல்பாடுகளின் மாற்றங்கள் (தூக்கமின்மை, சாப்பிடுதல் அல்லது பிறருடன் பழகுதலில் ஆர்வமின்மை போன்றவை) ஆகியவற்றைக் கண்டறிய மனநல நிபுணர் முயற்சி செய்கிறார். பாதிக்கப்பட்டவருடைய உறவினர்கள் அல்லது அவரைக் கவனித்துக்கொள்கிறவர்களிடமும் மருத்துவ நிபுணர் பேசலாம், அதன்மூலம் அவருடைய நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் பலவும் ஒருவரிடம் குறைந்தபட்சம் ஒருமாதத்துக்கு வெளிப்பட்டிருந்தால்மட்டுமே அவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருப்பதாகக் கண்டறியப்படுகிறது.
உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருப்பதாக நீங்கள் நினைத்தால், ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது. சில பழக்கங்களுக்கு அடிமையாதல், இருதுருவக் குறைபாடு மற்றும் மனச்சோர்வு போன்ற பிற மனநலக் குறைபாடுகளையும் ஸ்கிஜோஃப்ரெனியாவையும் சிலர் குழப்பிக்கொள்ள வாய்ப்புண்டு. காரணம், இந்த மனநலக் குறைபாடுகளைக் கொண்டவர்களுக்கும் மாயத்தோற்றங்கள், பிரமைகள் வரலாம், அவர்கள் சமூகத்திலிருந்து விலகியிருக்கலாம். ஒருவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருக்கிறதா, அல்லது வேறொரு மனநலப் பிரச்னை வந்திருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறியவேண்டுமானால், முறையாக ஒரு மனநல நிபுணரை அணுகுவது நல்லது.
ஸ்கிஜோஃப்ரெனியாவுக்குச் சிகிச்சை பெறுதல்
ஸ்கிஜோஃப்ரெனியாவை முழுமையாகக் குணப்படுத்தும் சிகிச்சை எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. அதேசமயம், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய வாழ்க்கையைச் சுதந்தரமாக வாழ்வதற்கு உதவும் சிகிச்சைகள் நிறைய உண்டு. ஸ்கிஜோஃப்ரெனியா என்பது, நீண்டநாள் தொடரக்கூடிய ஒரு பிரச்னை. நீரிழிவு, ரத்த அழுத்தம்போல, இதையும் கவனமாகக் கையாளவேண்டும்.
இந்தச் சிகிச்சையின் நோக்கம், அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர் தன் செயல்களைச் செய்துகொண்டு ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ உதவுவதும்தான்.
”பொதுவாக ஸ்கிஜோஃப்ரெனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருபங்குப்பேர் வழக்கமான செயல்பாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள், இன்னொரு பங்குப்பேர் வழக்கமான நிலையைவிடக் குறைவான ஒரு நிலைக்குத் திரும்புவார்கள். அவர்களும் தங்கள் வாழ்க்கையை ஓரளவு சமாளித்துக்கொள்வார்கள். மீதமுள்ள ஒரு பங்குப்பேர் செயல்பாட்டுடன் வாழ்வதற்கு அவர்களுக்கு அதிக உதவி தேவைப்படும். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவர் எப்போது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவார் என்று யாராலும் ஊகிக்க இயலாது. ஆகவே, இந்தப் பிரச்னையை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ, அவ்வளவு நல்லது. மருத்துவர் சிபாரிசு செய்கிற சிகிச்சையைக் கவனித்துப் பின்பற்றுவதன்மூலம், ஒருவர் விரைவில் குணமாகும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே, சிகிச்சைத் திட்டத்தை அக்கறையோடு பின்பற்றவேண்டும்" என்கிறார் ரிச்மண்ட் ஃபெல்லோஷிப் கழகத்தின் பெங்களூரு கிளை MD, CEOவான உளவியல் நிபுணர் டாக்டர் எஸ் கல்யாணசுந்தரம்.
ஆன்டிசைக்கோடிக் மருந்துகள் மற்றும் ECT
பாதிக்கப்பட்டவரிடம் காணப்படும் குறைபாட்டின் அறிகுறிகள், அது முன்னேறியுள்ளதன்மையைப்பொறுத்து, அவருக்கு மருந்துகளைத் தருவதா, சிகிச்சை தருவதா, புனர்வாழ்வுக்கு ஏற்பாடு செய்வதா, இவற்றைக் கலந்து செய்வதா என்று மருத்துவர் தீர்மானிப்பார், சரியான சிகிச்சைமுறையைச் சிபாரிசு செய்வார். இந்தப் பிரச்னை கொண்டவர்களுக்குச் சிபாரிசு செய்யப்படும் மருந்துகளை ஆன்டிசைக்கோடிக் மருந்துகள் என்பார்கள். இவை அவரிடம் காணப்படும் நேர்விதமான அறிகுறிகளான மாயத்தோற்றங்கள், பிரமை மற்றும் சந்தேக எண்ணங்களைக் குறைக்க உதவும். சில சூழ்நிலைகளில், மனநல நிபுணர் எலக்ட்ரோ கன்வல்சிவ் தெரபி (ECT)யைச் சிபாரிசு செய்யலாம்.
"ஆன்டிசைக்கோடிக் மருந்துகளைப்பற்றியும், அவற்றின் பக்கவிளைவுகளைப்பற்றியும் நிறைய தவறான நம்பிக்கைகள் உள்ளன. எந்த ஒரு மருந்துக்கும் சில பக்கவிளைவுகள் இருக்கும், அது உண்மைதான். ஆனால், இன்றைக்குப் பயன்படுத்தப்படும் ஆன்டிசைக்கோடிக் மருந்துகள் மிகவும் திறன்வாய்ந்தவை, இவற்றால் நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கிறது, பக்கவிளைவுகள் மிகவும் குறைவு. உதாரணமாக, பாதிக்கப்பட்டவர் உடல் இறுகியிருப்பதுபோல், விறைத்திருப்பதுபோல், அல்லது நடுங்குவதுபோல் உணரக்கூடும். தேவைப்பட்டால், இந்தப் பக்கவிளைவுகளைச் சமாளிப்பதற்கும் நாங்கள் மருந்துகளைச் சிபாரிசு செய்கிறோம்” என்கிறார் டாக்டர் லஷ்மி வி பண்டிட், இவர் பெங்களூரில் உள்ள KIMSல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
ECTபற்றியும் பல தவறான நம்பிக்கைகள் உண்டு, ஆனால், அவற்றை நம்பவேண்டியதில்லை. பயிற்சிபெற்ற நிபுணர்கள் ECTயைச் செய்தால், அது மிகவும் பாதுகாப்பான சிகிச்சையாகும். “சிலருக்கு மிகவும் தீவிரமான தொந்தரவுகள் ஏற்படும்போது, அல்லது, மருந்துகளால் அவர்கள் குணமாகாதபோது, இந்தப் பாதுகாப்பான சிகிச்சைமுறையை நாங்கள் சிபாரிசு செய்கிறோம். இந்தமுறையில் சிகிச்சை பெறுகிறவருக்கு மயக்கமருந்து வழங்கப்படுகிறது. இது மிகவும் மிதமான ஒரு சிகிச்சைதான், இதனால், பாதிக்கப்பட்டவருடைய நேர்விதமான அறிகுறிகள் சரியாகக்கூடும், அவருக்கு இதன்மூலம் எந்தத் துன்பமும் ஏற்படாது" என்கிறார் டாக்டர் பண்டிட்.
ஸ்கிஜோஃப்ரெனியாவைக் கையாள்வதற்கு, மருந்துகள்மட்டும் போதாது. அவை உள்பட, பல சிகிச்சைமுறைகளைப் பின்பற்றவேண்டும். முக்கியமாக, பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவருடைய ஆதரவும், கட்டமைக்கப்பட்ட புனர்வாழ்வும் அவர்கள் குணமடையப் பெரிதும் உதவும்.
ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்
ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட தங்களுடைய அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்ளுவது பெரிய சவால்தான். நீங்கள் மிகவும் நேசிக்கிற ஒருவர், திடீரென்று விநோதமாகவும் எதிர்பாராதவிதமாகவும் நடந்துகொண்டால், அது பெரிய அதிர்ச்சியாக இருக்கும், சங்கடத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், குறிப்பாக, அவருடைய பெற்றோர் சோக உணர்வுகளுடன் காணப்படலாம், அந்தக் குறைபாட்டுக்குத் தாங்களும் காரணமோ என்று குற்றவுணர்ச்சி கொள்ளலாம். இவர்களிடம் பொதுவாகக் காணப்படும் உணர்வுகள்: "எனக்கு ஏன் இப்படி நடக்கிறது?", "நான் என்ன தவறு செய்தேன்?", "நான் என் குழந்தையைச் சரியாக வளர்க்கவில்லையோ?"
உங்கள் அன்புக்குரிய ஒருவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அவர்களுடைய நடவடிக்கைகளில் இருக்கும் மாற்றங்களைக் கவனியுங்கள், அவைபற்றிய முழு விவரங்களையும் மருத்துவருக்குச் சொல்லுங்கள். அவருக்கு என்ன பிரச்னை என்று மருத்துவரிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய அதிர்ச்சி, சோகம் அல்லது குற்றவுணர்வைச் சமாளிக்க உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், அதுபற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள், உங்கள் பகுதியில் ஏதேனும் ஆதரவுக் குழுக்கள் அல்லது ஆலோசகர்கள் இருக்கிறார்களா என்று விசாரியுங்கள். பாதிக்கப்பட்டவரை நீங்கள் நன்றாகக் கவனித்துக்கொள்ளவேண்டுமென்றால், இந்தப் பிரச்னையைப்பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும், உங்களுடைய அதிர்ச்சியைச் சமாளித்து, வேண்டிய ஆதரவைப் பெறவேண்டும்.
பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாவதற்கு, வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒருவருடைய குறைபாட்டை அவரது குடும்பம் எப்படிக் கையாள்கிறது என்பதிலிருந்து அவர் தெரிந்தோ தெரியாமலோ உணர்வுத் தூண்டல்களைப் பெற இயலும். குடும்பத்தினர் அவரை அக்கறையோடு கவனித்துக்கொண்டால், அவர் விரைவில் குணமடையக்கூடும். அப்படியில்லாமல், அவருக்கு வந்திருக்கும் பிரச்னைக்கு அவரேதான் காரணம் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினால், அல்லது விமர்சித்தால், அவர் குணமடைய இயலாமல் சிரமப்படக்கூடும். ஏற்கெனவே குணமடைந்துகொண்டிருப்பவர் மீண்டும் பழைய நிலைக்குச் சென்றுவிடக்கூடும்.
பாதிக்கப்பட்டவரைப் பார்த்துக்கொள்கிறவர் என்றமுறையில், நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயம், பாதிக்கப்பட்டவருக்குத் தன்னுடைய அறிகுறிகள் தெரிந்திருக்காது, தான் நடந்துகொள்ளும் விதம் அசாதாரணமாக உள்ளது ஏன் என்று அவர்களுக்குத் தெரியாது, அல்லது, புரியாது. அவர்கள் காணும் மாயத்தோற்றங்களும் பிரமைகளும் உண்மையான அனுபவங்கள்தான் என்று சொல்லும் சமிக்ஞைகளை அவர்களுடைய மூளை அனுப்பிக்கொண்டிருக்கிறது. இதனால், அவர்கள் அதை நம்புகிறார்கள். ஆகவே, இவர்கள் சிகிச்சையை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். காரணம், அவர்களைப்பொறுத்தவரை அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தங்களுக்கு மனநலப் பிரச்னை இருப்பதையே அவர்கள் உணர்வதில்லை. பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொள்ளும் சிலர், அவர்கள்மீது வைத்துள்ள அக்கறையால், 'நீங்கள் பார்ப்பவை உண்மையல்ல' என்று சொல்லக்கூடும், அவர்கள் இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய நிபுணரின் உதவியைப் பெறவேண்டும் என்று வற்புறுத்தக்கூடும். இதனால், பாதிக்கப்பட்டவர் தன்னைக் கவனித்துக்கொள்கிறவரிடமிருந்து விலகிவிடுகிறார். மாயத்தோற்றங்கள்/ பிரமைகளால் அவருக்கு ஏற்படும் பயம்/ சந்தேகத்தன்மை இப்போது மேலும் அதிகரிக்கக்கூடும். நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உதவ விரும்பினால், இவற்றைச் செய்யலாம்: