குறைபாடுகள்

அவர் ஏன் விநோதமாக நடந்துகொள்கிறார்?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

என்னுடைய சகோதரிக்கு இருதுருவக் குறைபாடு உள்ளது தெரியவரும்வரை அப்படி ஒரு பெயரைக்கூட நான் கேள்விப்பட்டதில்லை.

என்னுடைய சகோதரி படித்து முடித்துவிட்டு ஆசிரியை ஆனார். அவருக்கு 24 வயதாகியிருந்தபோது, அவருடைய நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை எங்கள் குடும்பம் கவனித்தது. அவர் இரவில் மிகக் குறைவாகவே தூங்கினார், அப்படியே தூங்கினாலும் 5 மணி நேரத்துக்குமேல் தூங்கவில்லை. இரவு முழுக்க அவர் தன்னுடைய அறையில் நாற்காலிகளை நகர்த்திக்கொண்டிருக்கும் ஓசை கேட்டது. சில நாள், அவர் மிக வேகமாகப் பேசுவார், அவர் பேசும் பல வார்த்தைகளுக்குப் பொருளே இருக்காது. பல நாள் அவர் குளிக்கவே மாட்டார், பள்ளிக்குப் பொருந்தாத உடைகளை அணிந்து செல்வார். அவருடைய பள்ளியில் ஆசிரியைகள் இதுபோலதான்  ஆடை அணியவேண்டும் என்று குறிப்பிட்ட நெறிமுறை உள்ளது. இது அவருக்கு நன்றாகத் தெரியும், ஆனாலும், அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார்?

கொஞ்சம்கொஞ்சமாக, அவருடைய நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிந்தது. எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று மிகவும் ஆவேசப்படத் தொடங்கினார். இப்படி ஒரு சகோதரியை நான் இத்தனை ஆண்டுகளில் பார்த்ததில்லை. அவர் மிகவும் மாறுபட்டவராக தோன்றினார்.

சில நாள்களுக்குப்பிறகு, பள்ளி முதல்வர் என்னுடைய பெற்றோரை அழைத்தார், என்னுடைய சகோதரியைப்பற்றியும் அவருடைய நடவடிக்கைகள் மாறி விட்டதைப்பற்றியும் புகார் சொன்னார். அவரிடம் எந்த மாற்றமும் தெரியாததால், பள்ளி நிர்வாகிகள் அவரை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டார்கள்.

ஒரு நாள், அவர் திடீரென்று மிகவும் கோபப்பட்டுக் காரணமே இல்லாமல் என் தாயுடன் சண்டை போடத் தொடங்கினார். அப்போதுதான் நாங்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது, அவரை மருத்துவமனையில் அனுமதிப்பது என்று தீர்மானித்தோம்.

மருத்துவமனையில் சேர்ந்த அவர், தான் சொர்க்கத்திலிருந்து வந்திருக்கும் ஒரு விசேஷ தூதுவர் என்றும், மருத்துவர்கள் தன்னை வெளியே செல்ல அனுமதிக்கவேண்டும் என்றும் சொன்னார். இந்த அறிகுறிகள் அனைத்தையும் மதிப்பிட்டுப் பார்த்து, அவரது மருத்துவ வரலாறையும் கவனித்தபிறகு, மருத்துவர்கள் அவருக்கு இருதுருவக் குறைபாடு வந்திருப்பதாகக் கண்டறிந்தார்கள். அதற்குரிய மருந்துகளைக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

அவர் ஒரு மாதத்துக்கு மருத்துவமனையில் இருந்தார். நல்லவேளையாக, முந்தைய சில மாதங்களாக நாங்கள் பார்த்து வந்த அவரது பழக்கங்கள் நின்றுவிட்டன, அவர் அமைதியாகக் காணப்பட்டார், இதனால் திருப்தியடைந்த மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள். வீட்டுக்கு வந்தபிறகு, தொடக்கத்தில் அவர் மருந்துகளைச் சாப்பிட மறுத்தார், மேலும் இரண்டு வாரங்களுக்கு அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது. இந்த முறை அவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பியபோது, மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது என அவர் புரிந்துகொண்டார், அதன்மூலம் தன்னால் இந்தக் குறைபாட்டுக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்தி தனது நிலையைநன்கு கையாள இயலும் என அவர் புரிந்துகொண்டார்.

அதன்பிறகு, அவர் விசேஷக் கல்வியில் ஒரு சான்றிதழ் படிப்பைப் பூர்த்தி செய்தார், இப்போது ஒரு சிறிய பள்ளியில் வேலை செய்கிறார். இன்றுவரை அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவருக்குத் திருமணமாகிவிட்டது, ஒரு குழந்தையும் இருக்கிறது.

இந்தப் பிரச்னை கொண்ட பல நபர்களிடம் காணப்பட்ட அறிகுறிகள், அவர்களுடைய அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, மனநல நிபுணர்களின் உதவியுடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட நபரின் உண்மை அனுபவம் அல்ல, இந்தப் பிரச்னை கொண்ட ஒருவருடைய நிலையைப் புரியவைக்கும் நோக்கத்துடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆலோசனை வழங்குதல் என்றால் என்ன? அது எப்போது உதவலாம்?

மனச்சோர்வு

தன்னை அறிதலின் முக்கியத்துவம்