வளர் இளம் பருவம்

ஒரு பதின்பருவப் பெண்ணுடைய மனநலனைப் பாதிக்கக்கூடியவை எவை?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

வளர் இளம் பருவத்தின் தொடக்கமானது, உடலில், உணர்வுகளில், மனநிலையில், மதிப்பீடுகளில், அறிவாற்றலில் மற்றும் உறவுகளில் மிகப்பெரிய மாற்றங்களுடைய காலகட்டம். இந்த மாற்றங்களுக்கிடையில், பதின்பருவத்தில் உள்ளவருடைய தன்னைப்பற்றிய கருத்தாக்கம், பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் சக நண்பர்களுடன் அவருடைய உறவு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊடகத்திலிருந்து கல்வி அழுத்தம் போன்றவை அவருடைய மன நலனில் பாதிப்பு உண்டாக்கலாம். இதில் பங்களிக்கக்கூடிய, அவருடைய மன நலனைப் பாதிக்கக்கூடிய சில உளவியல் சமூகவியல் காரணிகள், இதோ.

  • நொறுங்கக்கூடிய சுயமதிப்பு:பல நேரங்களில், வளர் இளம் பருவத்தில் உள்ள ஒரு பெண்ணுடைய சுய மதிப்பானது, தோற்றத்தால், அல்லது, தான் எப்படித் தோன்றுவதாகத் தன்னுடைய சக நண்பர்கள் அல்லது தோழர்கள் நினைக்கிறார்கள் என்பதால் பாதிக்கப்படுகிறது. பல காரணிகளால் அவருடைய சுய மதிப்பு அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்: அவருடைய உடல்சார்ந்த வளர்ச்சி, ஹார்மோன் மாற்றங்கள், சக நண்பர் குழு உரையாடல்கள், இவற்றுடன், பெற்றோர் மற்றும் பிற முக்கியமான அதிகார நபர்களுடனான ஊடாடல்கள். உடல் எடை, தோற்றம் தொடர்பான கவலைகளால் வரும் குறைந்த சுய மதிப்பைக் கவனிக்காவிட்டால், அது அவரை உணர்வு அழுத்தத்துக்கு ஆளாக்கலாம். 

  • கல்விச் செயல்திறன் மற்றும் பணிவாழ்க்கை தொடர்பான கவலைகள்: பதின்பருவத்தில் உள்ள ஒருவருடைய அடையாள உணர்வின் உருவாக்கத்துக்குக் கல்விச் செயல்திறனும்  பங்களிக்கிறது. மிக அதிகக் கல்வி அழுத்தம் அல்லது, தன்னிடமிருந்து, பெற்றோரிடமிருந்து அல்லது ஆசிரியர்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகள் போன்றவை அவருடைய மன நலனைப் பாதிக்கலாம். அவருக்குப் படிப்பில் ஆர்வம் இருந்தால், அழுத்தமும் எதிர்பார்ப்புகளும் அவரைத் திகைக்கவைக்கலாம், பதற்றத்துக்கு வழிவகுக்கலாம். அவருக்குப் படிப்பில் ஆர்வம் இல்லாவிட்டால், அவர் பாதுகாப்பற்று உணரலாம், தன்னைப்பற்றியும் தன்னுடைய பணிவாழ்க்கையைப்பற்றியும் நிச்சயமற்று உணரலாம். 

  • பாலினம் மற்றும் பாலியல் அடையாளம் தொடர்பான தெளிவின்மை:  பாலியல் அடையாளம் தன்னைப்பற்றிய கருத்தாக்கத்துடன் சேர்ந்துகொள்கிறது. அவருடைய பாலியல் அடையாளத்தில் குழப்பம் இருந்தால், ஏற்கெனவே குறைந்துகொண்டிருக்கும் அவருடைய சுயமதிப்பில் இது இன்னோர் அடுக்கைச் சேர்த்துவிடலாம். இப்படிதான், ஒரு பெண் தற்கொலை உணர்வுகளுடன் ஓர் ஆலோசகரிடம் வந்தார். பின்னர், தனக்குத் தன்னுடைய பாலினம் மற்றும் பாலியல்பற்றிக் குழப்பம் இருந்ததையும், இணையத்தில் படித்து இதைப் புரிந்துகொண்டதையும் படிப்படியாக வெளிப்படுத்தினார் அவர். இதைத் தன்னுடைய பெற்றோருக்குச் சொல்லும் துணிவை அவர் திரட்டிக்கொண்டார். அவருடைய தந்தை இதை ஏற்றுக்கொள்ளவில்லை, இது ஏதோ இயல்புக்கு மீறியது என்று நினைத்தார். ஆகவே, வளர் இளம் பருவத்தினர் தங்களைப் பிறர் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று உணர்வதும், தானாக இருப்பதில் வசதியாக உணர்வதும் முக்கியம்.

  • சுதந்தரம், இடம் மற்றும் வளர்ந்துவரும் சுய அடையாளத்துக்கான தேவை: பதின்பருவத்தினர் தங்களுடைய சுதந்தரத்தை வலியுறுத்துகிறார்கள்; அத்துடன், பல நேரங்களில் அவர்கள் தங்களைத்தாங்களே இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கான இடத்தையும் விரும்புகிறார்கள், அது அவர்களுக்குத் தேவையும்கூட. பெற்றோர் தங்களுடைய மதிப்பீடுகள், எண்ணங்கள் மற்றும் கருத்துகளை வலியுறுத்த முயலும்போது, பதின்பருவத்தினர் விலகிக்கொள்ளலாம், எதிர்த்து நிற்கலாம். அதுபோன்ற நேரங்களில், பெற்றோர் அவர்களுடைய இடத்தை மதிப்பது முக்கியம்.

  • மனிதர்களுக்கிடையிலான உறவுகளை மாற்றுதல்: வளர் இளம் பருவத்திலிருக்கும் பெண்கள் மனிதர்களுக்கிடையிலான தங்களுடைய உறவுகளை மதிக்கிறார்கள், குறிப்பாக, தங்களுடைய சக நண்பர்களுடன் உள்ள உறவுகளை. மதிப்புபற்றிய அவர்களுடைய உணர்வில் அது ஒரு முக்கியப் பங்கை ஆற்றுகிறது. ராணித்தேனீக் கருத்தாக்கத்தில் இதைக் காணலாம். வளர் இளம் பருவப் பெண்களுக்கிடையிலான இந்தப் புகழ் விளையாட்டு மிகவும் நுட்பமானது, ஆகவே, பெற்றோர் இதைக் கவனிப்பதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு பெண் ஓர் அறைக்குள் நுழைகிறார்; மற்ற பெண்கள் அவரைப்பற்றிப் பேசுவார்கள். அவர் விருந்துகளுக்கு அழைக்கப்படுகிறாரா, அவருடன் பிறர் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார்களா என்பதுபோன்றவற்றின் அடிப்படையில்தான் அவருடைய புகழ் அமைகிறது. ராணித்தேனீயின் பார்வைக்கோணம், ஒரு பெண் தன்னுடைய குழுவின் ஒரு பகுதியாக இருந்தால், அவர் கவனிக்கப்படுவார், புகழ் பெறுவார். எதார்த்தம் என்னவென்றால், ராணித்தேனீக்கும் சில பாதுகாப்பின்மைகள் உண்டு; தன்னுடைய பாதுகாப்பின்மைகளைக் கையாள்வதற்கு அவருக்குப் பிற பெண்கள் தேவைப்படுகிறார்கள்.

  • பண்பாட்டு இயல்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள்மீதான உறுதித்தன்மை: சில நேரங்களில், வெவ்வேறு மாற்றங்களால் வளர் இளம் பருவப் பெண்ணொருவர் சந்தித்துக்கொண்டிருக்கக்கூடிய அழுத்தம், பதற்றத்தைப் பண்பாட்டுக் காரணிகள் அதிகமாக்கிவிடுகின்றன. பொதுவாக, ஒரு பெண் பருவத்துக்கு வரும்போது, பண்பாட்டுப் பழக்கவழக்கங்களால் அவர் அதிகம் பாதுகாக்கப்படலாம்; அவர் வெளியே சென்றுவருவது, உடுத்துவது, அவருடைய பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். இதுபோன்ற பண்பாட்டுக் காரணிகள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நடுவிலான இடைவெளியையும் அதிகப்படுத்தலாம். அதுபோன்ற ஒரு சூழலில், வளர் இளம் பருவப் பெண்கள் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டிய தேவை இருந்தபோதும், மாற்றங்களைப்பற்றிப் பெற்றோரிடம் பேசுவதற்கு முன்பைவிட அதிகச் சவாலை உணரலாம்.

இந்தக் கட்டுரை, பெங்களூரைச் சேர்ந்த, ரீச் க்ளினிக்கில் ஆலோசகராகப் பணிபுரியும் மௌலிகா சர்மா வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

PCOS வந்தாலே உணர்ச்சிக்கொந்தளிப்புதானா?

அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை