மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

புனர்வாழ்வு மையத்தைத் தேர்ந்தெடுத்தல்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிற ஒவ்வொருவரும், ஒரு கட்டத்தில் இந்த முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருக்கும்: இப்போது அவர் குணமாகிவிட்டார் ஆனால் அவர் புனர்வாழ்வு பெறுவதற்குச் சில திறன்களை மீண்டும் கற்றுக்கொள்ளவேண்டும், அவர் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப ஒரு புனர்வாழ்வுமையத்தால் மட்டுமே உதவமுடியும். அப்படிப்பட்ட நல்ல புனர்வாழ்வு மையம் எது? இந்தக் கேள்விக்கு விடையளிக்க, இரண்டு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்: முதலாவதாக, பாதிக்கப்பட்டவருடைய தேவைகள் என்னென்ன? அதாவது எந்தவிதமான வசதிகள் அவருக்குத் தேவையான பலனை அளிக்கும்? இரண்டாவதாக அந்த மையம் இதற்குமுன் என்னென்ன பணிகளைச் செய்திருக்கிறது? அதற்குச் சமூகத்தில், மருத்துவர்களின் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறதா?

புனர்வாழ்வு மையங்களின் வசதிகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் அமைப்புகள் பலவிதமாக உள்ளன. அவற்றில் எந்த அமைப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் : மனநலப் பிரச்னையின் தன்மை, வசதிகள் கிடைத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவரால் அவற்றை அணுக இயலுதல் மற்றும் பாதிக்கப்பட்டவரின் தேவைகள் போன்றவை.

மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றவர்கள் புனர்வாழ்வு பெறுவதற்கு சிறந்த வழி சமூக அடிப்படையிலான புனர்வாழ்வுதான். அதாவது, மனநலம் பாதிக்கப்பட்டவர் எந்தச் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாரோ அங்கேயே அவரது புனர்வாழ்வும் தொடங்குகிறது. அதாவது மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றவர், அந்தச் சிகிச்சைக்குப் பிறகு தன்னுடைய சமூகத்திற்கே திரும்புகிறார். தன்னுடைய சொந்தச் சூழலில் தனது புனர்வாழ்வுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்கிறார் அல்லது முன்பு தன்னிடம் இருந்த திறன்களை மீண்டும் பழகிக்கொள்கிறார். இது போன்ற சமூகம் சார்ந்த புனர்வாழ்வில் மனநல நிபுணர்களின் பங்கு குறைவுதான். மாறாக பாதிக்கப்பட்டவருடைய சமூகத்தினர் அதாவது குடும்பத்தினர், நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் போன்றவர்கள், அவருடைய புனர்வாழ்விற்கு உதவுகிறார்கள், அவர்களை ஆதரிக்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்புகளை உண்டாக்கித்தருகிறார்கள். இப்படி சமூகம் சார்ந்த புனர்வாழ்விற்கு வழிசெய்வதன்மூலம் அந்தச் சமூகத்தின் மனநல பாதிப்புகளைப்பற்றிய விழிப்புணர்வும் வளர்கிறது. அதுபற்றிய களங்க உணர்வு குறைகிறது. ஒருவர் சமூகம் சார்ந்த புனர்வாழ்வைப் பெறும்போது அந்தச் சமூகத்தில் உள்ளவர்களே அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உண்டாக்கித்தருகிறார்கள், காரணம் அவர்களுடைய பலன்கள் என்ன வரம்புகள் என்ன என்பது அந்தச் சமூக உறுப்பினர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஏற்ற வேலைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதன்மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவரும் அவருடைய குடும்பத்தினரும் எளிதில் தங்களுடைய குடும்பத்தினருடன் ஒருங்கிணைகிறார்கள்.

இதுபோன்ற சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு அமைப்புகள் இந்தியாவில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஆனால் அவற்றின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை.

பகல் நேரப் பராமரிப்பு அமைப்புகள்: மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்குச் சிகிச்சைபெற்றுத் திரும்பியவர் இந்த மையங்களில் சுமார் 8 மணி நேரம் செலவிடுகிறார், சில வாரங்கள் , சில மாதங்களில் அவர் தன் புனர்வாழ்வைப் பெறுகிறார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு எந்தெந்தத் திறமைகளில் ஆர்வம் இருக்கிறதோ அந்தத் திறமைகளையும் பின்னர் அவர்கள் ஒரு வேலையைப் பெறுவதற்கு, தனது வாழ்க்கையின் லட்சியங்களை அடைவதற்கு என்னென்ன திறமைகள் அவருக்குத் தேவைப்படுமோ, அவை சொல்லித்தரப்படுகின்றன, உதாரணமாக பிறருடன் பழகுதல், ஒரு குறிப்பிட்ட பொழுதுபோக்கை உண்டாக்கிக்கொள்ளுதல் போன்றவை. இவை சொல்லித்தரப்படக்கூடிய சூழல், அவர்களை அவர்களுடைய பிரச்னைகளுடன் ஏற்றுக்கொள்கிறது, பாதிக்கப்பட்டவரும் பிறருடன் பழகத்தொடங்குகிறார்: அவர்கள் மனநலப் பிரச்னை உள்ளவர்களாகவும் இருக்கலாம், இல்லாதவர்களாகவும் இருக்கலாம். ஆகவே, அவர் தன்னைப்போன்ற பிரச்னை கொண்ட பிறரும் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார், பிறர் அவரை மதிப்பதை, இயல்பாக நடத்துவதைக் கவனிக்கிறார். இது அவரிடம் ஒரு நேர்விதமான தாக்கத்தை உண்டாக்குகிறது. இதுபோன்ற அமைப்புகளில் பயிற்சி பெற்ற பிறகு அவர் ஒரு வேலைக்குச் செல்லலாம், அதன்மூலம் அவர்களுடைய வாழ்வு ஒரு நோக்கத்துடன் இயங்குகிறது என்கிற ஒரு நோக்கத்தை அவர்கள் பெறுவார்கள், அவர்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் இது அமையும்.

இந்தப் பகல்நேரப் பராமரிப்பு அமைப்புகளுக்குச் செல்கிறவர்கள் நோயாளிகள் என்ற நிலையிலிருந்து செயல்திறனுள்ள ஒரு மனிதராக மாறுகிறார்கள் அதற்கான ஒரு தினசரி ஒழுங்கை கட்டமைத்துக்கொள்கிறார்கள்.

சில நேரங்களில், மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்குச் சிகிச்சை பெற்று குணமானவர்களுக்குப் புனர்வாழ்வுச் செயல்முறைகளில் ஈடுபட விருப்பமில்லாமல் இருக்கலாம். அதுபோன்ற நேரங்களில் அவர்களை மருத்துவமனையில் சேர்க்கவேண்டியிருக்கலாம், அங்கே அவர்களுக்குப் புனர்வாழ்வின் நன்மைகளைப் புரியவைக்கவேண்டியிருக்கலாம். இதன்மூலம் தாங்களும் அதில் பங்குபெறவேண்டும் என அவர்கள் ஊக்கம் பெறலாம். புனர்வாழ்வு என்பது ஒருவருடைய விருப்பமில்லாமல் நடைபெற இயலாது. புனர்வாழ்வின் நன்மைகளை அவர் படிப்படையாக உணர்ந்துகொண்டு அதற்குத் தயாராகும் வரை அவர்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளைத் தரவேண்டும்.

தீவிர மனநலக்குறைபாடுகளைக்கொண்ட மிகச்சிலருக்குப் பகல்நேரப் பராமரிப்பு மையங்களின்வாயிலாகப் புனர்வாழ்வை வழங்குவது சாத்தியமில்லாமல் போகலாம். அதுபோன்ற நேரங்களிலும் அவர்களுக்குப் புனர்வாழ்வுச் செயல்முறைகளை அமல்படுத்தவேண்டும். அந்தச் செயல்பாடுகள், பகல்நேரப் பராமரிப்பாகக் குறுகியகால நோக்கங்களுடன் அமையலாம் அல்லது வீட்டில், நீண்டகால நோக்கில் அமையலாம், இந்தச் செயல்பாடுகள் அவர்களைக் கவனித்துக்கொள்ளுவதில் கவனம் செலுத்தும், அவர்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுத்தந்து தயார்செய்வதில் கவனம் செலுத்தாது. வேறு எதுவுமே பயனளிக்காதபோதுமட்டுமே இதைப் பின்பற்றவேண்டும்.

மையத்தின் தரத்தை உறுதிசெய்துகொள்ளுதல்

புனர்வாழ்வின் முக்கிய நோக்கம், பாதிக்கப்பட்டவருக்கு தேவையான திறன்களைக் கற்றுத்தந்து அவர்களை ஆற்றலுடையவர்களாக மாற்றுவதுதான். அதேசமயம் பல புனர்வாழ்வு மையங்கள் பாதிக்கப்பட்டவரை வெறுமனே கவனித்துக்கொள்கின்றன, அவர்களுக்கு வேண்டிய திறன்கள் எவற்றையும் கற்றுத்தருவதில்லை. பல புனர்வாழ்வு மையங்கள் சட்டவிரோதமாக நடத்தப்படுகின்றன, அதில் பணிபுரிகிறவர்களுக்கு உரிய பயிற்சியோ தகுதியோ இருப்பதில்லை, சில புனர்வாழ்வு மையங்கள் தருகின்ற சிகிச்சைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய பலன் ஏதும் கிடைப்பதில்லை. சில புனர்வாழ்வு மையங்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பூட்டி வைக்கிறார்கள், மனித உரிமையை மீறும் அளவிற்கு அவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். இவர்களுடைய குடும்பத்தினர், எப்படியாவது தங்கள் அன்புக்குரியவர்கள் நலன் பெற்று விடமாட்டார்களா என்ற துடிப்பில் இருப்பார்கள் ஆகவே இதுபோன்ற விஷயங்கள் அவர்களின் நன்மைக்காகத்தான் செய்யப்படுகின்றன என்று நம்புவார்கள்.

சில மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்பவை சில மாதங்கள்மட்டுமே நடைபெறும்; ஆனால், வேறு சில மனநலப் பிரச்னைகளைக் கொண்டவர்களுக்குப் பல மாதங்கள் புனர்வாழ்வும் ஆதரவும் தேவைப்படலாம். இந்தப் புனர்வாழ்வு சேவையை அளிக்கும் மையங்கள் வெவ்வேறு விதமான கட்டணங்களை வசூலிக்கின்றன. அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்துள்ள புனர்வாழ்வு மையங்கள் ஒரு நியாயமான கட்டணத்தை விதிக்கலாம். தனியார் மையங்கள் மிக அதிகமான மாதக்கட்டணத்தை விதிக்கக்கூடும். பாதிக்கப்பட்டவரை கவனித்துக்கொள்கிறவர், தன்னுடைய அன்புக்குரியவரின் தேவையை நிறைவேற்றக்கூடிய வசதிகளை உடைய, தன்னுடைய நிதிநிலைமைக்கு பொருத்தமாக உள்ள ஒரு மையத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

ஒரு புனர்வாழ்வு மையம் சட்டப்படி செயல்படுகிறதா களங்கமற்று செயலாற்றுகிறதா என்பதை எப்படிக்கண்டுபிடிப்பது?

  • பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை வழங்குகிற மனநல நிபுணர் சிபாரிசு செய்கிற ஒரு புனர்வாழ்வு மையத்தைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பான விஷயம்.

  • சட்டப்படி அனுமதியும் அங்கீகாரமும் பெற்ற ஒரு புனர்வாழ்வு மையம், மருத்துவமனையாகவோ அல்லது புனர்வாழ்வு மையமாகவோ செயல்பட உரிமம் பெற்றிருக்கவேண்டும். இந்த உரிமத்தை தேசிய மருத்துவமனைகள் மற்றும் நலப்பராமரிப்பு வழங்குநர்கள் அங்கீகார மையம் (NABH) அல்லது இந்தியப் புனர்வாழ்வுக் கழகம் போன்ற ஓர் அமைப்பு வழங்கியிருக்கவேண்டும்.

  • சட்டப்படி இயங்குகிற ஒரு புனர்வாழ்வு மையத்தில், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சில பார்வையாளர்கள் இருப்பார்கள், அவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திடீரென்று இந்த மையங்களுக்குச் சென்று பார்ப்பார்கள், அவைகள் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க செயல்படுகிறதா என்பதை உறுதி செய்வார்கள். ஒருவேளை ஏதாவது மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதை இவர்கள் கண்டறிந்தால், அந்த மையத்தை மூடிவிடுகிற அதிகாரம் இவர்களுக்கு உண்டு.

  • இதுபோன்ற மையங்களில் ஓர் ஆலோசனைப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கும். அது எல்லோரும் பார்க்ககூடிய ஓரிடத்தில் இருக்கும். நோயாளிகள், பார்வையாளர்கள் என யார்வேண்டுமானலும் இந்தப் பெட்டியில் தங்களது ஆலோசனைகளை எழுதிப்போடலாம், இதனை மேற்கண்ட அதிகாரப்பூர்வமான பார்வையாளர்களால் மட்டுமே திறந்து படிக்க இயலும்.

  • ஒரு புனர்வாழ்வு மையம் ‘ நீங்கள் எப்போது வேண்டுமானலும் உங்கள் அன்புக்குரியவரை வந்து பார்க்கலாம், அவர்களோடு பேசலாம்’ என்று சொல்கிறார்கள், அப்படியானால் அவர்கள் எதையும் மறைப்பதில்லை என்று பொருள், வேறொரு புனர்வாழ்வு மையம் அப்படி யாரும் வரக்கூடாது என்று தடுக்கிறார்கள் எனில் அவர்கள் எதையோ மறைக்கிறார்கள், சட்டவிரோதமாகச் செயல்படுகிறார்கள் என்று பொருள். இதைவைத்தும் சரியான புனர்வாழ்வு மையத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

  • எந்த ஒரு புனர்வாழ்வு மையமும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் தங்களுடைய வளாகத்தை வந்து பார்க்கலாம், தங்களுக்கு இருக்கிற சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ளலாம் என்று ஊக்கப்படுத்தவேண்டும். அந்தப் புனர்வாழ்வு மையத்தில் தங்கள் அன்புக்குரியவர்களைச் சேர்க்க விரும்புகிறவர்கள் ஏற்கனவே அங்கே சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்கள், அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசலாம். அதன் அடிப்படையில் அது தங்களுக்குச் சரிப்பட்டுவருமா இல்லையா என்று தீர்மானிக்கலாம்.

விரிதிறன் என்றால் என்ன?

உங்கள் குழந்தையின் சுய எண்ணக்கருவை மேம்படுத்த நீங்கள் எப்படி உதவலாம்?

கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)

கற்றல் குறைபாடு

சைக்கோசொமாடிக் நோய்/ சோமடோஃபார்ம் குறைபாடு