மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

R U OK?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

-  செப்டம்பர் 9, 2015

R U OK? என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லாபநோக்கற்ற ஒரு நிறுவனம், இது தற்கொலைகளைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த அமைப்பு 2009ல் கேவின் லார்கினால் உண்டாக்கப்பட்டது. அதற்குப் பதினான்கு ஆண்டுகளுக்குமுன், கேவினின் தந்தையார் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டிருந்தார். இந்த அமைப்பின் செயல்பாடுகளுடைய ஒரு பகுதியாக, ஒவ்வொரு செப்டம்பர் மாதத்திலும் இரண்டாவது வியாழக்கிழமையை 'R U OK?' தினமாகக் கொண்டாடுகிறார்கள் . 2015ம் ஆண்டில், இது செப்டம்பர் 10ம் தேதி கொண்டாடப்பட்டது. அதே நாளில் உலகத் தற்கொலைத் தடுப்பு தினமும் வந்தது.

R U OK? அமைப்பு பல்வேறு தற்கொலைத் தடுப்பு மற்றும் மனநலப் பிரச்னை நிபுணர்கள், அரசாங்கப் பிரிவுகள், தொழில்துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் மற்றும் சமூகக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. R U OK? நாளின் நோக்கம், நாம் ஒவ்வொருவரும் நம் அன்புக்குரியவர்களிடம் 'நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?' என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டுவதுதான். சிரமத்துடன் போராடிக்கொண்டிருக்கிறவர்களிடம் அவ்வப்போது அர்த்தமுள்ளவிதத்தில் பேசிவந்தால், அது அவர்களுக்குப் பெரிய மாற்றமாக அமையும், இதை உணர்த்துவதற்காகவே இந்த நாள் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டின் கருப்பொருள், "கேட்டதற்கு நன்றி". மக்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதை ஊக்குவிப்பதுதான் இந்த அமைப்பின் லட்சியம். அந்தவகையில், இந்த ஆண்டு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டியது: சிரமமான காலகட்டத்தில் நமக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். நீங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்க விரும்பினால், ட்விட்டர்மூலம் இணையலாம். #ruok மற்றும் #ruokday என்ற குறிச்சொற்களைப் பயன்படுத்தி ட்வீட்களை எழுதுங்கள், அதன்மூலம் உங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கலாம், இந்த நிகழ்ச்சியையும் பிரபலமாக்கலாம்.

கற்றல் குறைபாடு