மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

ஆலோசனை வழங்குதல் என்றால் என்ன? அது எப்போது உதவலாம்?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

ஒருவருடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நேரத்தில், அவருக்குப் பழக்கமான அல்லது அவரால் கையாள இயலுகிறவற்றைவிடப் பெரிதாகத் தோன்றுகிற சவால்களை அவர் சந்திக்கவேண்டியிருக்கிறது. இதனால் அவர்கள் திகைத்துப்போகிறார்கள், களைத்துப்போகிறார்கள், சினமடைகிறார்கள், தனக்கு யாரும் உதவுவதற்கு இல்லை என்று உணர்கிறார், அஞ்சுகிறார்கள், விரக்தியடைகிறார்கள், சோகமாகிறார்கள் அல்லது ஆற்றலிழந்ததைப்போல்கூட உணர்கிறார்கள். சில நேரங்களில், சில சூழ்நிலைகளுக்கு ஒருவர் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார் என்பது அவரையே குழப்பலாம் அல்லது, தடுமாறவைக்கலாம். அவருடைய வாழ்க்கை ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றலாம். அப்படிப்பட்ட நேரங்களில், ஆலோசனைபெறுதல் என்பது அவருடைய பிரச்னைகளைப்பற்றி ஒரு பச்சாத்தாபமான மற்றும் ரகசியமான இடத்தில் பேசுவதற்கு, அவருடைய சவால்களை இன்னும் அதிகச் செயல்திறனுடன் அல்லது பொருளுடன் சமாளிப்பதற்கு உதவும் ஒரு வழியாக இருக்கலாம்.

இதைப் புரிந்துகொள்வதற்காக, சில மக்கள் மற்றும் அவர்களுடைய சூழ்நிலைகளுடைய பதிவுகள் இங்கே தொகுத்துத்தரப்பட்டுள்ளன.

ராஜனுக்கு வயது 43, அவர் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர். அவர் நிதியளவில் பாதுகாப்பானவர்; ஓர் அன்பான குடும்பம் அவருக்குண்டு. அவர் தன்னுடைய குழந்தைப்பருவத்தில் நிறைய துன்பங்களைச் சந்தித்துள்ளார்; தன்னுடைய போராட்டங்களை வெல்வதற்கு, தன்னுடைய வாழ்க்கையில் இந்தச் சூழ்நிலைக்கு வருவதற்குக் கடினமாக உழைத்துள்ளார். அதேநேரம், அவரால் இயல்பாக இருக்க இயலுவதில்லை, வாழ்க்கையை அனுபவிக்க இயலுவதில்லை, தான் விரைவுபடுத்தப்படுவதுபோல் எப்போதும் தொல்லையாக உணர்கிறார், தொடர்ந்து அழுத்தத்தைச் சந்திக்கிறார். சமீபத்தில், சில நேரங்களில் அவர் சினத்துடன் வெடித்துள்ளார்; இது அவரை, அவருடைய தனிப்பட்ட, தொழில்முறை உறவுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

லட்சுமிக்கு வயது 35. கூட்டங்கள், அழுத்தம் மிகுந்த பயணம் நிறைந்த ஒரு நீண்ட மற்றும் களைப்பை உண்டாக்கும் நாளிலிருந்து திரும்பிவருகிறார். வீட்டுக்கு வந்தபின் அவர் செய்யவிரும்பியதெல்லாம், தூங்கச்செல்வதும் தன்னுடைய கவலைகளை மறப்பதும்தான். அவர் செய்யவிரும்பிய கடைசி விஷயம், தன்னுடைய கணவருடன் உரையாடுவதுதான். அது எப்போதும் அப்படிதான் தொடங்கியது: இயல்பாகத் தொடங்கும் உரையாடல்கள் பெரிய சண்டையில் சென்று முடியும். அவர் வீட்டுக்கு வருவதை வெறுத்தார்; வேறு எங்கேனும் சென்றுவிடலாமா என்று ஆசைப்பட்டார்.

அமித்துக்கு வயது 19; கல்லூரியில் அவர் ஒரு புத்திசாலி மாணவர். அவர் சுறுசுறுப்பானவர், நட்பானவர். அதேசமயம், அவருடைய தந்தைக்கு ஒரு தீவிர நோய் வந்திருப்பது கண்டறியப்பட்டபோது, வீட்டில் சூழ்நிலை திடீரென்று மாறியது: அவருடைய தாய் அவருடைய தந்தையின் பராமரிப்பில் மூழ்கிவிட்டார், அவருடைய தாத்தா, பாட்டி அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வந்து வாழத்தொடங்கினார்கள், தன்னுடைய குடும்பம் ஒரு நிதி நெருக்கடியில் இருப்பதை அவரால் காண இயன்றது. தன்னுடைய படிப்பைக் கவனிக்கவேண்டும் என்று தன்னால் இயன்றவரை முயன்றார் அவர்; ஆனால், அவர் துண்டிக்கப்பட்டதாக, நம்பிக்கையற்று உணர்ந்தார், நாட்கள் செல்லச்செல்ல, அவர் தனிமையை உணர்ந்தார், தன்னுடைய நண்பர்களிடமிருந்து தன்னை விலக்கிக்கொள்ளத்தொடங்கினார். தன்னுடைய தந்தை இறந்துவிடலாம் என்று அவர் அஞ்சினார்; தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் என்ன ஆகுமோ என்று திகைத்தார். ஆனால், வீட்டில் யாரும் அதைப்பற்றிப் பேசவில்லை. அது, அறையிலிருந்த யானையாகத் தோன்றியது.

ராஜன், லட்சுமி, அமித்துக்கு ஆலோசனைபெறுதல் உதவுமா? இந்தச் சூழ்நிலைகள் அனைத்திலும், இந்தக் கேள்விக்கு எளிய பதில், ஆம், ஆலோசனைபெறுதல் உதவும்.

எல்லாரும் ஆலோசனைபெறலாம்.

எல்லாரும் ஆலோசனைபெறலாம், குறிப்பாக, நிலைமை சிரமமாக அல்லது திகைக்கவைப்பதாகத் தோன்றும்போது இது மிகவும் உதவலாம். ஆலோசனைபெறுதல் என்பது ஒரு செயல்முறை, ஒரு பயணம், இதன்மூலம் ஒருவர் தன்னைத்தானே இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளலாம், தான் கையாளும் சூழ்நிலையைப்பற்றிய தெளிவை, பார்வைக்கோணத்தை வளர்த்துக்கொள்ளலாம். ஒருவர் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைப் புரிந்துகொள்ள, தன்னுடைய சவால்களைக் கையாள்வதற்கான இன்னும் சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான வழிகளை அடையாளம் காண, மாற்றத்தை ஏற்படுத்த, சுயமதிப்பை மேம்படுத்த மற்றும் விரிதிறனைக் கண்டறியவும் இது அவருக்கு உதவலாம். இவை அனைத்தும் அவருடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு, இன்னும் மனநிறைவான ஒரு வாழ்க்கையை நடத்துவதற்குத் தன்னுடன் இன்னும் ஆழமான ஓர் இணைப்பை உண்டாக்கிக்கொள்வதற்குப் பங்களிக்கலாம்.

சில நேரங்களில், அழுத்தம் தரும் கவலைகள் அல்லது எரியும் பிரச்னைகளுக்கு ஒருவருடைய கவனம் தேவைப்படலாம். மற்ற நேரங்களில், முன்பு எப்போதோ கடந்துசென்ற காலத்தின் அனுபவங்கள் அவருடைய இப்போதைய அனுபவங்களை, நடவடிக்கைகளை, உறவுகளைப் பாதிக்கலாம். வேறு ஒருகட்டத்தில், வருங்காலத்துக்கான சாத்தியங்களை ஆராய்கிற, அல்லது, இன்னும் ஒருங்கிணைந்தவராக, இன்னும் அறிந்தவராகத் தன்னை உணர்கிற ஒரு தேவை இருக்கலாம். கவலையின் இயல்பு எதுவாக இருந்தாலும் சரி, ஆலோசனைபெறுதல் என்பது, தீர்ப்புகளை வழங்காமல் தன்னுடைய பேச்சைக் கேட்கிற ஒருவரைக் கொண்ட, சிந்திப்பதற்கான, தன்னுடன் தொடர்பில் இருப்பதற்கான சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது.

ஆலோசனையை நாடுவதற்குப் பல தூண்டிகள் இருக்கலாம்; எனினும், இந்தப் பகுதிகளில் ஆலோசனைபெறுதல் மிகவும் உதவிகரமாக அமையலாம்.

  • உறவுப் பிரச்னைகள்: மனிதர்களுக்கிடையிலான உறவுகளில் முரண்கள், பிரிவுகள், திருமண மற்றும் குடும்ப முரண்கள்.
  • சிரமமான உணர்வுகளைச் சமாளித்தல்: சினம், அச்சம், பதற்றம், வலி, தனிமை, அழுத்தம்
  • துன்புறுத்தலைக் கையாளுதல்: உடல்சார்ந்தவை, பாலியல்சார்ந்தவை, சொல்சார்ந்தவை அல்லது உளவியல் சார்ந்தவை
  • குடும்ப வன்முறையைக் கையாளுதல்
  • பாலின அடையாளத்தை, பாலியல் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளுதல்
  • வாழ்க்கையின் நிலை மாற்றங்கள் மற்றும் சவால்களைக் கையாளுதல்: வேலை, திருமணம், பிரிவு, மணமுறிவு, குழந்தைவளர்ப்பு, வயதாதல், ஓய்வு
  • பணியிடப் பிரச்னைகள்: முரண்களைக் கையாளுதல், செயல்திறன், பணிவாழ்க்கை ஆர்வங்கள் & மனநிறைவு, துன்புறுத்தல்
  • மனச்சோர்வு, ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற மனநலப் பிரச்னைகளைச் சமாளித்தல்
  • உடல் நோய்களைச் சமாளித்தல்
  • தீய பழக்கங்களுக்கு அடிமையாதல், தன்னைத் துன்புறுத்திக்கொள்ளுதல் மற்றும் தற்கொலை எண்ணங்களைக் கையாளுதல்
  • மரணம், இழப்பு மற்றும் சோகத்தைச் சமாளித்தல்
  • அதிர்ச்சி மற்றும் ஊனத்தைச் சமாளித்தல்
  • உடல் அல்லது மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதலைச் சமாளித்தல்
  • குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருடைய பிரச்னைகள்: பழக்கவழக்கச் சவால்கள், கல்வி அழுத்தம், குடும்ப முரண்களுடைய தாக்கம், சக மனிதர்களுடைய அழுத்தம், கொடுமைப்படுத்தப்படுதல் போன்றவை.

ஒருவர் தன்னுடைய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருடன் பேசலாமே, ஏன் ஆலோசகருடன் பேசவேண்டும்? ஓர் ஆலோசகரிடம் எதை எதிர்பார்க்கலாம்?

தேவை உள்ளது என்பதை அடையாளம் கண்டதும் ஓர் ஆலோசகரை அணுகும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், ஆலோசகரை அணுகுவது களங்கமானது என்று நம்புகிறவர்கள், அதை வசதியற்ற ஒன்றாக உணர்கிறவர்கள் பலர் இன்னும் உள்ளார்கள்.  பல நேரங்களில், ஆலோசனைபெறுவது என்பது இளைஞர்கள், தொந்தரவுக்கு ஆளானவர்கள், வலுவற்ற மனத்தை உடையவர்கள் அல்லது, மன நலப் பிரச்னை கொண்டவர்களுக்கானது என்று நினைக்கப்படுகிறது. ஆலோசனை வழங்குதல் என்பதும் அறிவுரை வழங்குதல் என்பதும் ஒன்றுதான் என்று சிலர் நினைக்கிறார்கள், தங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரிடமாவது (நெருங்கிய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம்) பேசுவது சிறந்தது என்று நினைக்கிறார்கள்.

லட்சுமி தன்னுடைய வீட்டில் நடக்கும் சண்டைகளைப்பற்றி ஒரு நெருங்கிய நண்பரிடம் பேசினார். அப்போது, அந்த நண்பர் சொன்னது, “இது எல்லா உறவுகளிலும் நடப்பதுதான். உன்னுடைய பிரச்னைகள், நீ நினைப்பதைவிட மிகவும் குறைந்த அளவு சிக்கலானவை. எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதே.’ ஆனால் ஏனோ, இதைக் கேட்பது லட்சுமிக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. மாறாக, அவர் தன்னைத்தானே குற்றம் சொல்லிக்கொள்ளத் தொடங்கினார்: நான் ஒரு மடுவை மலையாக நினைத்துக்கொள்கிறேனோ? தான் புறக்கணிக்கப்பட்டதாக லட்சுமி உணர்ந்திருக்கலாமா?

ராஜன் தன்னுடைய போராட்டங்களைப்பற்றித் தன்னுடைய உறவினர் ஒருவரிடம் பேச முயன்றார். அந்த உறவினர் சொன்னார், “என்னிடம் இப்படிப் பேசாதீர்கள்! நம் குடும்பத்தில் நீங்கள்தான் லட்சிய பிம்பம், எங்களுக்கெல்லாம் ஊக்கம் தருகிறவர். உங்களால் ஒரு நிறுவனத்தையே நடத்த இயலுகிறது, இது என்ன பெரிய விஷயமா? எந்நேரமும் அமைதியாக இருக்க நீங்கள் என்ன முனிவரா? கவலைப்படாமல் மகிழ்ச்சியாக இருங்கள்!" இதனால் ராஜனுக்குக் கலவையான உணர்ச்சிகள் வந்தன: அவருடைய பேச்சில் இருந்த நகைச்சுவை ராஜனுக்கு நிம்மதியைத் தரவில்லை; தனக்கு எந்தவிதமான ஆபத்தும் இருக்கக்கூடாது அல்லது, தான் அதைப்பற்றிப் பேசக்கூடாது என்பதுபோல் உணர்ந்தார்.

நண்பர் ஒருவர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் பேசுவது உதவலாம்; நட்பான அறிவுரை நல்ல நோக்கத்துடன் வழங்கப்படலாம்; ஆனால், தனிப்பட்ட சாய்வு அல்லது தீர்ப்புச்சொல்கிற குறுக்கீட்டுக்கான ஆபத்து அதில் உள்ளது. சில நேரங்களில், பிறரிடம் பேசுவது அவர்களுக்குச் சுமையாகிவிடுமோ என்ற கவலையும் உண்டாகலாம். பிறர் இவருடைய சூழ்நிலையைப் போதுமான அளவு புரிந்துகொள்கிற அல்லது பச்சாத்தாபத்துடன் சிந்திக்கிற நிலையில் இல்லாமலிருக்கலாம், அல்லது, அவர்களுக்கு வேறு முக்கியமான வேலைகள் இருக்கலாம். நண்பர் ஒருவர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, வலி மிகுந்த உணர்வுகளைக் கேட்பது அல்லது வசதியற்ற உணர்வில்லாமல் அதைக் கையாள்வது கடினமாக இருக்கலாம்.

அதேசமயம், ஆலோசனை வழங்குபவர் ஒரு தனித்துவமான நிலையில் உள்ளார்: அவர் நண்பரோ குடும்ப உறுப்பினரோ இல்லை, அவர் சமூகரீதியில் தன்னுடைய வாடிக்கையாளருடன் இணைந்திருப்பதில்லை. ஆலோசனை வழங்குபவர் ஒரு நோக்கமுள்ள உறவை, ஒருவர் தன்னுடைய அனுபவங்களைப்பற்றிப் (அவை எந்த அளவு கடினமானவையாக அல்லது வலிமிகுந்தவையாக இருந்தாலும் சரி) பேசுவதற்கான ஒரு பாதுகாப்பான, தீர்ப்புச் சொல்லாத, ரகசியமான இடத்தை வழங்குகிறார். ஆலோசனை வழங்குபவர் என்பவர் ஒரு பயிற்சிபெற்ற தொழில்வல்லுனராவார்; இவரிடம் கருத்தாக்கம் சார்ந்த பின்னணி இருக்கும்; சிகிச்சையளிக்கும் திறன்களைப்பற்றிய புரிந்துகொள்ளல் இருக்கும்; வாடிக்கையாளருடைய தேவைகளுக்கு நன்கு பொருந்துகிற கருவிகள், அணுகுமுறைகளை இவர் பயன்படுத்துவார். ஆலோசனை வழங்குகிற ஒருவர் பச்சாத்தாபம், ஆதரவு, ரகசியத்தன்மையை வழங்குகிறார், முக்கியமாக, பொருந்தும் நேரத்தில் வாடிக்கையாளருக்குச் சவால்விட்டு ஊக்குவிக்கிறார். ஆலோசனை வழங்குதல் என்பது, ஒரு பிரச்னையைத் தீர்ப்பதற்கான அறிவுரை வழங்குதல் இல்லை என்பதை அறிந்திருப்பது முக்கியம். மாறாக, அது ஒருவருடைய சிந்தனையை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறை; ஒருவர் தன்னுடைய பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு, தனக்கு ஆற்றல் சேர்த்துக்கொள்வதற்கு ஒரு பாதையைக் கண்டறிய இது உதவலாம்.

ஆலோசனை வழங்குபவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமான பாணியில் பணியாற்றலாம்; எனினும், தொடக்கத்தில், ஆலோசனை வழங்குகிற ஒருவர் தன்னுடைய வாடிக்கையாளருடைய சிரமத்தின் தன்மையை, தன்னுடைய வாடிக்கையாளர் ஏன் ஆலோசனை பெறுவதற்கு வந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தைச் செலவிடுவார்.  ஆலோசனை வழங்குபவர் தன்னுடைய வாடிக்கையாளருடைய குடும்பம், உறவுகள் மற்றும் நலப் பின்னணியை ஆராய்வார்; சிகிச்சைக்கான இலக்குகளை அடையாளம் காண்பதற்காக அவர்களுடன் பணியாற்றுவார். அதன்பிறகு, ஆலோசனை வழங்குபவர் தன்னுடைய வாடிக்கையாளருடன் சிகிச்சைச் செயல்முறையைத் தொடங்குவார், தங்களுடைய இலக்குகளின் திசையில் நகர்வார்.

ஆலோசனை வழங்குபவர் என்பவர் ஒரு மருத்துவ வல்லுனர் இல்லை; அவர் எதையும் கண்டறியமாட்டார்; மருந்துகளைப் பரிந்துரைக்கமாட்டார். ஆலோசனை வழங்குபவர், தன்னுடைய வாடிக்கையாளருடைய சிகிச்சைத் தேவைகளைப் பொறுத்து, மனநல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உளவியலாளர்கள் போன்ற பிற மன நல வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்றலாம்.

**மக்களை விவரித்து இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சொற்றொடர்கள், காட்சிப்படுத்தல் நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன; இவை உண்மையான வாடிக்கையாளர்களைப் பிரதிபலிக்கவில்லை.

அர்ச்சனா ராமநாதன், பரிவர்த்தன் ஆலோசனை வழங்குதல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் சேவைவழங்கும் ஆலோசகர். 

மனநலப் பிரச்னைகளை ஆயுர்வேதம் குணமாக்குமா?