நலன்

உங்கள் மனம் நலமா?

மனநல ஆரோக்கியத்தோடு இருத்தல் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளுங்கள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

எழுதியவர்: டாக்டர் எஸ் கல்யாணசுந்தரம்

நல்ல மனநலம் மற்றும் மனநல ஆரோக்கியம் ஆகிய சொற்கள் ஒரே பொருளில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன. ஆரோக்கியம் என்பது, வெறும் மகிழ்ச்சி அல்ல. உலகச் சுகாதார அமைப்பு (WHO) மனநலத்தை இவ்வாறு வரையறுக்கிறது: ஒவ்வொரு தனிநபரும் தனது சொந்த சாத்தியங்களை உணருகின்ற, வாழ்க்கையின் சாதாரணமான அழுத்தங்களைச் சமாளிக்க இயலுகின்ற, செயல்திறனோடும் பலன்களோடும் பணிபுரிய இயலுகின்ற, தனது சமூகத்துக்குப் பங்களிக்க இயலுகின்ற ஆரோக்கிய நிலை.

ஒருவர் நல்ல மனநிலையில் இருப்பதை உணர்த்துவது எது? ஒருவர் தன்னை உள்ளபடி புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதுதான் நல்ல மனநிலையின் தொடக்கம். அப்போதுதான், தன்னால் எது சாத்தியம் என்பதை அவர் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பு உண்டாகும், அவர் அந்தச் சாத்தியத்தை எட்டுவதற்காகத் தன்னை முன்னேற்றிக்கொள்வார். மனநல ஆரோக்கியம் என்றால், எப்போதும் நேர்விதமாகச் சிந்திப்பது, மகிழ்ச்சியாக இருப்பது அல்ல. வாழ்க்கையில் ஏதாவது பிரச்னைகள் வந்தால், ஒவ்வொருமுறையும் எதிர்த்துநிற்பது, பிரச்னைகளைச் சமாளித்து முன்னேறுவதுதான் மனநல ஆரோக்கியம் ஆகும்.

ஒருவர் மனநல ஆரோக்கியத்தைத் தன்னந்தனியே பெற இயலாது. நாம் பிறருடன் பழகும்விதம் நமது ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது, நம்மைப்பற்றிய நேர்விதமான உணர்வுகளை உண்டாக்குகிறது. நாம் மனத்தளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால், அதற்குப் பிறர் முக்கியமான பங்களிக்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். நமக்கு நாமே இசைவளிக்கும் இந்தக் கண்ணியம், பிறர் நமக்கு அளிக்கும் கண்ணியம் மனநல ஆரோக்கியத்துக்கு முக்கியமானது.

ஒருவருக்குத் தீவிரமான மற்றும் நாள்பட்ட மனநலப் பிரச்னை இருந்தால், அவரது வாழ்க்கைமுறையில் தீவிர வரம்புகள் ஏற்பட்டுவிடக்கூடும். மனநல ஆரோக்கியத்தின் இன்னொரு பொருள், இத்தகைய சவால்களைக் கண்ணியத்துடன் ஏற்றுக்கொண்டு, சமாளித்து வெல்லுதல். இதனை ஓர் உதாரணத்துடன் காண்போம்.

ஶ்ரீராமுக்கு வயது 52. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அவர் தீவிர ஸ்கிஜோஃப்ரெனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவில் வேதிப் பொறியியல் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, முதன்முதலாக இந்தப் பிரச்னையின் அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன. அவருக்கு எல்லாவற்றின்மீதும் சந்தேகம் ஏற்பட்டது, அவருக்குள் எப்போதும் சில குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன, அவர் என்ன செய்தாலும் அதைப்பற்றிக் கருத்துச் சொல்லின, அவரை மிரட்டின, இதனால், அவர் எங்கும் செல்லாமல் முடங்கிப்போனார். அவரால் இதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை, இந்தியா திரும்பிவிட்டார். இங்கே அவரால் எந்த வேலையையும் செய்ய இயலவில்லை, வீட்டிலேயே இருந்தார். ஆரம்பத்தில் அவருக்கு உளவியல் சிகிச்சை தரப்பட்டது. அதன்மூலம் அவர் படிப்படியாகத் தொடர்ந்து முன்னேறினார், தனது வாழ்க்கையை ஒன்றுதிரட்டிக்கொள்ளத் தொடங்கினார். அவருடைய துறையில் அவருக்கு ஒரு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை. ஆனால், ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. அவருக்குத் திருமணமானது. அவருடைய மனைவியும் குடும்பத்தினரும் அவரைத் தொடர்ந்து ஆதரித்தார்கள், கொஞ்சம்கொஞ்சமாகத் தன்னுடைய தன்னம்பிக்கை, கண்ணியத்தைத் திரும்பப் பெறத்தொடங்கினார். இப்போதும் அவர் மருந்துகளைச் சாப்பிட்டுக்கொண்டுதானிருக்கிறார், எப்போதாவது, அவருக்குப் பழைய அறிகுறிகள் வருகின்றன, ஆனால், இப்போது அவர் தன் தலையை நிமிர்த்தி நடக்கிறார், அவரைப் பாழாக்கியிருக்கக்கூடிய ஒரு நோயைப் பொறுமையாக வென்றுவிட்டோம் என்று பெருமைப்படுகிறார்.

தனக்கு ஒரு தீவிர மனநலப் பிரச்னை வந்துள்ளது என்று தெரிந்தபோது, ஶ்ரீராம் அந்தப் பிரச்னையை அடையாளம் கண்டார், நிபுணர் உதவியுடன் அதனைச் சரியாகக் கையாண்டார். எல்லாருக்கும் அந்த அளவு தீவிரப் பிரச்னைகள் வரப்போவதில்லை, ஆனால், அவர்களும் தங்களுடைய மனநலத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும். பல நேரங்களில், தினசரிப் பரபரப்பில் நாம் நம்முடைய ஆன்மாவைக் கவனிக்காமலிருந்துவிடுகிறோம். சிறிதுநேரம் செலவழித்து நம்மை நாமே அறியாமல் இருந்துவிடுகிறோம், உதாரணமாக, எது நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறது, எது நம்மைச் சோகப்படுத்துகிறது, எது நம்மைக் கோபப்படுத்துகிறது, எது நம்மைப் புத்துணர்வுடன் வைக்கிறது... இப்படிப்பட்ட எளிய விஷயங்களைக் கவனிப்பதில்லை. இதை நாம் உணர்வதற்குள், இந்த அழுத்தம் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது, நமது உடல்நலத்தைப் பாதித்துவிடுகிறது. துரதிருஷ்டவசமாக, நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால்தான் நாம் அதைக் கவனிக்கிறோம். பல நேரங்களில், மனநலப் பிரச்னைக்கான எச்சரிக்கை அறிகுறிகளை நாம் கவனிப்பதில்லை, இது நமக்கே துன்பமாகிவிடுகிறது.

இந்த விஷயத்தில் நாம் கவனிக்கவேண்டிய எச்சரிக்கைச் சின்னங்கள் நிறைய உண்டு. அவை: மகிழ்ச்சியின்மையுணர்வு அதிகரித்தல், நம்மைப்பற்றிய திருப்தியின்மை, நம்மைச்சுற்றியுள்ளவைபற்றிய திருப்தியின்மை, எதிர்மறையாகவும் தன்னம்பிக்கையின்றியும் உணர்தல், எதிலும் மகிழ்ச்சியுணர்வு இல்லாமலிருத்தல், மக்களிடமிருந்து விலகியிருக்க, அல்லது தனித்திருக்க நினைத்தல், சுற்றியுள்ளவற்றிலிருந்து ஒதுங்கியிருக்க நினைத்தல், காரணமற்ற பதற்றம் அல்லது பயம்... இப்படிப் பல.

நாம் மனத்தளவில் ஆரோக்கியமாக இருப்பதை எப்படி உறுதிசெய்வது?

  • உடலளவிலும் மனத்தளவிலும் நாம் 'பிஸி'யாக, பரபரப்பாக இருக்கவேண்டும்
  • வேலை, குடும்ப வாழ்க்கை இடையே ஓர் ஆரோக்கியமான சமநிலையைப் பராமரிக்கவேண்டும்
  • நாம் மகிழ்ச்சியுடன் செய்யும் செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் (உதாரணமாக, ஒரு விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு)
  • நம்மை மதிப்புள்ளவர்களாக, நேர்விதமாக உணரச் செய்பவர்களுடன் அதிகநேரம் செலவிடுதல்
  • பகிர்தல், கொடுத்தலின் மகிழ்ச்சியை அனுபவித்தல், உதாரணமாக, ஏழைகளுக்கு உதவ முன்வருதல்
  • தன்னை அறிந்திருத்தல்: நாம் என்ன உணர்கிறோம், என்ன சிந்திக்கிறோம், எதைச் செய்கிறோம், எதை விரும்புகிறோம் என்பதை அறிந்திருத்தல்

டாக்டர் எஸ் கல்யாணசுந்தரம் பெங்களூரைச் சேர்ந்த உளவியலாளர், ரிச்மண்ட் ஃபெலோஷிப் கழகத்தின் (இந்தியா) CEO.

புகைபிடிப்பதை நிறுத்துவது எப்படி?

மீள்திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?

தன் கதையைச் சொல்லுவது எப்படி?

தனக்கோ தன் அன்புக்குரிய ஒருவருக்கோ மனநலப் பிரச்னை இருப்பதை ஒருவர் எப்படித் தெரிந்துகொள்வது?