நலன்

தனிப்பட்ட கதை: வாழ்நாள்முழுவதும் தொடரும் ஒரு மனநலப் பிரச்னையுடன் வாழ்தல்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

நான் முதலில் சிறு விஷயங்களைதான் கவனித்தேன். வண்ணப்பென்சில்களால் வரையப்பட்ட அழகான ஓர் ஓவியம், அநேகமாக அது ஐந்து வயதுக்குக் குறைவான ஒரு குழந்தையால் வரையப்பட்டிருக்கவேண்டும்; சுவரில் ஒரு சிறிய பெயின்ட் துகள்; ‘நீங்கள் சிறப்பானவர்’ என்று அறிவிக்கும் ஒரு குவளை. அடடா. இதுதானா விஷயம். அந்தக் குவளைக்குள் பேனாக்களுக்குப்பதில் அதிகம் மார்க்கர்கள் இருந்தது ஏன்? கொஞ்சம் உற்றுக் கவனித்தால், அந்த மார்க்கர் அவருடைய நகத்தின் வண்ணத்துடன் ஒத்துப்போகிறதா? இல்லை, அவர் நகத்திலோ உதட்டிலோ எந்தச் சாயமும் பூசிக்கொள்ளவில்லை. அல்லது, அவர் மிகவும் தனித்துவமான ஒரு நிறமற்ற நிறத்தைப் பூசிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை, அவர் க்ளாஸ்மட்டும் பூசியிருக்கிறாரோ? இப்போது, உதடுகள் அசைகின்றன, அங்கிருந்து தடுமாறி வெளியேறும் சொற்கள், “நீங்கள் கேட்க விரும்பியது அநேகமாக இதுவாக இருக்காது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்." “போ…?"

என்னுடைய பெயரைக் கேட்டதும், நான் என்னுடைய கவனத்தை மீண்டும் அவருடைய முகத்துக்குத் திருப்பத்தொடங்குகிறேன். என்னுடைய உளவியலாளர், டாக்டர் A. அவர் தன்னுடைய 30களில் இருக்கும் ஓர் அழகிய பெண். அவருடைய முகம், அவர் தெளிவாக உணர்ந்த மிகுந்த பச்சாத்தாபத்தைக் காட்டியது. அவரிடம் ஓராண்டுக்குமேல் ஆலோசனை பெற்றபிறகு, என்னிடம் பெரிய மனச்சோர்வுக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, ஒரு திட்டத்தில் மிக நன்றாகச் செயல்பட விரும்பும் விடாமுயற்சியுள்ள ஒரு மாணவரைப்போல நான் என்னுடைய மனநலப் பிரச்னையைக் கையாள்வதற்கு என்னால் இயன்றவரை முயன்றேன். அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன், அதற்காகப் பிள்ளைப்பேற்றுக்குமுந்தைய யோகாசனங்களைச் செய்தேன், இரும்புச்சத்துத் துணை உணவுகளை உட்கொண்டேன், நடைப்பயிற்சியில் ஈடுபட்டேன், இன்னும் பலவற்றைச் செய்தேன், அதேபோல்தான் இந்தக் கண்டுபிடிப்பையும் நான் எதிர்கொண்டேன். என்னிடம் இந்தப் பிரச்னை உள்ளது கண்டறியப்பட்டிருப்பதைச் சமாளிப்பதற்காக, நான் பிற புதிய தாய்மார்களுடன் ஒரு குழுச் சிகிச்சைத் திட்டத்தில் கலந்துகொண்டேன், தனிநபர் அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை(CBT)யில் பங்கேற்றேன். இவற்றுடன், எனக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆன்ட்டி-டிப்ரசன்ட்களுடைய அளவு அதிகரித்துக்கொண்டே சென்றது. இவையெல்லாம் நடந்துவந்தபோது, என் மகளுக்கு ஒரு வயதானது.

என் உளவியலாளர் சொன்னதைக் கேட்டபோது, நான் எரிச்சலடைந்தேன். நான் கேட்டேன், “நான் எப்போது மேம்படுவேன்? அதாவது, நான் குணமாவதற்கு எத்தனை நாளாகும்?" என்னுடைய உளவியலாளர் சிறிதுநேரம் பேசவில்லை, பின்னர், அந்த வலிமிகுந்த சொற்களைச் சொன்னார், “போ, உங்களுடைய சூழ்நிலை எந்த அளவு தீவிரமானது என்பதை மனத்தில் வைத்துப் பார்க்கும்போது, நாங்கள் உண்மையிலேயே இதைச் சற்று வித்தியாசமாகக் காண்கிறோம். எங்களுடைய அணுகுமுறையில் மீட்சி அல்லது குணப்படுத்தலைவிட, உங்களுடைய நிலையை எப்படிச் சமாளிப்பது என்பதில்தான் அதிகக் கவனம் இருக்கிறது."

நான் கண்சிமிட்டினேன், பின்னர், “அப்படியானால், நான் எப்போதும் இந்நிலையிலிருந்து மேம்படமாட்டேன் என்று சொல்கிறீர்கள், இல்லையா?” என்றேன்.

டாக்டர் A உடனே பதில் சொன்னார், “நிச்சயம் அப்படி இல்லை. பல வழிகளில், உங்களுடைய முன்னேற்றத்துக்காக நாம் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். அதை நீங்களே பதிவுசெய்திருக்கிறீர்கள்." நான் பேசாமல் இருந்தேன்.

“போ, நான் என்ன சொல்ல முயல்கிறேன் என்றால், நானும் டாக்டர் M(துறையின் தலைவர்)-ம் உங்களுடைய சூழ்நிலையைப்பற்றிப் பேசினோம்; உங்கள் நிலை மிகவும் ஆழமானது, தீவிரமானது என்று விவாதித்தோம். ஆகவே, மனச்சோர்வைக் கையாளுதல் என்பது அநேகமாக உங்களுக்கு வாழ்நாள்முழுவதும் தொடர்கிற ஒரு நிலையாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்."

குறிப்பு: மங்குதல்.

நான் கேட்பேன் என்று எதிர்பார்த்தது நிச்சயம் இது இல்லை. இது நான் சிறிதும் எதிர்பாராத ஒன்று. மனச்சோர்வு என்பது ஒரு நீண்ட, எரிச்சலூட்டும் காய்ச்சலைப்போல் இருக்கும் என்று நான் எண்ணினேன்: அது தாக்கும்போது என்னை வீழ்த்திவிடும், சிறிது நேரத்தை வீணடிக்கும். ஆனால், அதன்பிறகு அது நிச்சயமாகச் சென்றுவிடும். நான் அதை ஒரு நிரந்தரப் பொருளாகக் கொண்டிருப்பேன் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஓர் அட்டையைப்போல. ஒரு கழுத்துப்பட்டையைப்போல. ஓர் ஆயுள்தண்டனையைப்போல.

“இது என்னுடைய வாழ்நாள்முழுக்கத் தொடரும் என்பதை நீங்கள் எப்போது தெரிந்துகொண்டீர்கள்?" சில நேரங்களில், நம்பிக்கையில்லாத நோயாளிக்கும் ஐயப்படும் துப்பறிவாளருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

“அதாவது, தொடக்கத்திலிருந்தே நாங்கள் உங்களுடைய சூழலைக் கவனமாகக் கண்காணித்துக்கொண்டிருந்தோம். காலப்போக்கில், முன்கணிப்பாக நாங்கள் கண்டறிந்தது இதுதான்."

“சரி.”

அந்த உரையாடலின் பிற்பகுதி, வாழ்நாள்முழுக்கத் தொடரும் ஒரு நிலையைக் கொண்டிருப்பது என்றால், காய்ச்சலில் வருவதுபோல் நான் தொடர்ந்து மூக்குறிஞ்சிக்கொண்டிருப்பேன் என்று பொருளாகாது என்று டாக்டர் A எனக்குச் சொல்வதில் கவனம் செலுத்தியது. உண்மையில், முறையான வாழ்க்கைமுறை, மருந்துகள் மற்றும் பிற மேலாண்மை உத்திகளின்மூலம் அது பின்னணிக்குச் சென்று மங்கிவிடும். உண்மையில் அது இருக்கிறது என்பதே தெரியாமல் நான் பல நாட்கள், மாதங்களைக்கூடக் கடக்கலாம்.

சுய இரக்கம் என்பது ஒரு பெருமைக்குரிய உணர்வு இல்லை. ஆனால், நான் சிறிதுநேரம் அதில் புரண்டேன். ஆம், நான் என்னையே அந்தக் கேள்வியையும் கேட்டுக்கொண்டேன், “இது ஏன் எனக்கு நிகழ்ந்தது?"

நான் நிறைய சாக்லெட் உண்டிருக்கலாம், உண்ணாமலும் இருந்திருக்கலாம். எனக்கு மிகவும் ஆதரவளிக்கும் நல்ல நண்பரிடம் இதைப்பற்றி  நெடுநேரம் ஆத்திரப்பட்டேன். அந்த நேரத்தில் அவர் எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம், ஆனால், அதற்குப்பதிலாக அவர் என்னுடன் நேரம் செலவிட்டார், கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்.

நிறைவாக, ஏற்றுக்கொள்ளல் நிலைக்கு நான் வரும்வரை நான் இவை அனைத்தையும் செய்தேன். என்னுடைய மனச்சோர்வு நீரிழிவைப்போன்றது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதை யாரும் வரவேற்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இப்போது அது இங்கு வந்துவிட்டது, இங்கு தங்கப்போகிறது, ஆகவே, அது என்னைத் தடுக்க நான் விடமாட்டேன். நீரிழிவு கொண்ட பலர் நம்மைச்சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் நம்மோடு சேர்ந்து வாழ்கிறார்கள். நானும் அவர்களைப்போல் இருக்கப்போகிறேன். அவர்கள் தங்களுடைய இன்சுலீனை எடுத்துக்கொள்ள நாணப்படுவதில்லை, அதுபோல, என்னுடைய மருந்துகளை எடுத்துக்கொள்ள நான் நாணப்படப்போவதில்லை. அத்துடன், நான் என்னுடைய உடல்நலனை இன்னும் கவனமாகப் பார்த்துக்கொள்ளப்போகிறேன். ஒருவருக்கு இருக்கக்கூடிய மற்ற பிரச்னைகளை (இதயப் பிரச்னைகள், ரத்த அழுத்தம் போன்றவை) மாற்றக்கூடிய, மோசமாக்கக்கூடிய சாத்தியம் நீரிழிவுக்கு உண்டு. மனநலனைப் பொறுத்தவரை, மனச்சோர்வைப்பற்றியும் இதையே சொல்லலாம்: பதற்றம், இருதுருவக் குறைபாடு, மற்ற பல மனநலப் பிரச்னைகளை மனச்சோர்வு மோசமாக்கலாம். தன்னை அறிந்திருத்தல் இந்த விஷயத்தில் உதவும். ஒருவர் எப்படி உணர்கிறார் என்பதைப்பற்றி அடிக்கடி பேசுவதும் உதவும்.

எனக்கு அன்பான, ஆதரவான கணவர் இருக்கிறார், என்னுடைய கல்லூரித் தோழி ஒரு மிகச்சிறந்த நண்பராக இருக்கிறார், இதை எண்ணி நான் நன்றியுடன் இருக்கிறேன். இவர்கள் இருவரும்தான் நான் சோர்ந்துபோகும்போது சாய்கிற தோள்கள்; இவர்களால்தான் நான் நொறுங்காமலிருக்கிறேன். நான் பேசவேண்டும் என்று உணரும்போது, அவர்கள் காதுகொடுத்துக் கேட்கிறார்கள், சிறிதும் சலிப்பை வெளிப்படுத்துவதில்லை.

மனமுழுமைப் பயிற்சிகள் எனக்கு உதவுகின்றன. யோகாசனமும் எனக்கு உதவுகிறது; ஆனால், உண்மையில் அதை நான் நாள்தோறும் செய்வதில்லை. தன்னைத்தானே பராமரித்துக்கொள்வது பல வியப்பூட்டும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. சில அசட்டுத்தனமான விஷயங்களும் நல்ல மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. எடுத்துக்காட்டாக, மளிகைச்சாமான் வாங்கச் செல்லும்போதுகூட, எனக்குப் பிடித்த சிவப்பு உதட்டுச்சாயத்தை அணிந்துகொள்ளுதல். அதேசமயம், இந்தப் பட்டியலில் முதலாவதாக உள்ள விஷயம், நான் எவ்வாறு உணர்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்ளுதல். ஆகவே, ஒருவேளை நான் சோர்வாக உணர்ந்தால், பொறுமையில்லாமல் செயல்படுவதில்லை, கவனச்சிதறல்களின்மூலம் அந்த உணர்வை உலுக்கி வெளியேற்ற முயல்வதில்லை, அது போகாதபோது எரிச்சலடைவதில்லை, அதற்குப்பதிலாக, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன், என்னைச் சோர்வாக உணர அனுமதிக்கிறேன். வழக்கமான முயல் வளையில் என்னை இழுத்துக் கீழே தள்ளுகிற இருண்ட எண்ணங்களை நான் பட்டியல் போட்டுவைத்திருக்கிறேன், உண்மையில் அவற்றை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்க்கிறேன். பிறகு, எனக்கு நானே இவ்வாறு சொல்லிக்கொள்கிறேன்: இந்த எண்ணங்களையெல்லாம் தாண்டியும், நான் இங்கு இருக்கிறேன். இன்னும் நின்றுகொண்டுதானிருக்கிறேன்.

வாழ்நாள்முழுவதும் தொடரக்கூடிய துன்பங்களைக் கொண்டவர்களைச் சமூகம் பலவிதங்களாக அழைக்கிறது. உயிர்பிழைத்தவர்கள் என்கிறது, போராளிகள் என்கிறது, நல்லெண்ணத்துடன் வேறு பல வெற்றுப்பெயர்களைச் சூட்டுகிறது. நான் அந்த வகையா என்று எனக்குத் தெரியவில்லை. சில நாட்கள் இருண்டிருக்கின்றன, அல்லது, வெறுமையாக இருக்கின்றன. ஆனால், அவ்வாறு இல்லாத நாட்களைவிட அவை குறைவுதான். சில நாட்களில், நான் கண்ணாடியைப் பார்க்கிறேன், அங்கு ஒரு களைத்த பெண் தெரிகிறாள், அவளுடைய கர்ப்பத்துக்குப்பிந்தைய வயிறு குறைய மறுக்கிறது, அவளுடைய கண்களைச்சுற்றிக் கருவளையங்கள் தெரிகின்றன. மற்ற நாட்களில் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன், “நான் போ, நான் ஒரு பாண்டா, அதைத்தான் இந்தச் சின்னங்கள் அனைத்தும் காட்டுகின்றன.”  

இந்தத் தனிப்பட்ட கதையுடைய ஆசிரியர் தன்னுடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. 

கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)

ஆட்டிச நிறமாலைக் குறைபாடு