நலன்

உணர்வு அதிர்ச்சியின் பொருளைப் பிரித்துப்பார்த்தல்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

*முன்னெச்சரிக்கை - இந்தக் கட்டுரையிலுள்ள தகவல்கள் சில நபர்களுக்குத் துயரத்தை உண்டாக்கலாம்”

அதிர்ச்சி என்ற சொல்லை வாசிக்கும்போது மக்கள் எதை நினைக்கிறார்கள்? தலையில் காயம், கார் விபத்துகள், நிலநடுக்கம், குழந்தைத் துன்புறுத்தல்? அதிர்ச்சி அல்லது அதிர்ச்சிகரமான நிகழ்வுடன் மக்கள் இணைத்துப்பார்க்கும் சில விஷயங்கள் இவை. அதேசமயம், அதிர்ச்சி என்ற சொல் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது, நிச்சயமற்றதன்மையை உருவாக்குகிறது. அதிர்ச்சி என்பதற்கு அடுக்குகளைக் கொண்ட ஒரு சிக்கலான பொருள் உள்ளது, அது நெடுங்காலத்துக்குக் கவனிக்கப்படாமல், அடையாளம் காணப்படாமல் போகலாம்.

அதிர்ச்சி அல்லது அதிர்ச்சி அழுத்தம் (அதிர்ச்சியால் நேரடியாக உருவாகும் அழுத்தம்) ஆகியவற்றை PTSD (அதிர்ச்சிக்குப்பிந்தைய அழுத்தக் குறைபாடு) பின்னணியில் புரிந்துகொள்ளலாம்; ஆனால், அதிர்ச்சியின் தாக்கம் இந்தக் கண்டறிதலினால் எப்போதும் முழுமையாக விளக்கப்படுவதில்லை, ஏனெனில், அதிர்ச்சிகரமான ஒன்றைச் சந்தித்த பல தனிநபர்கள் PTSDக்கான முழு அடிப்படையை எட்டுவதில்லை. அதேசமயம், அதிர்ச்சிகரமான அல்லது துயரமான நிகழ்வு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குத் தங்களுடைய சமாளிக்கும் திறனைத் திகைக்கவைத்துப் பாதிப்புண்டாக்கியது என்று பெரும்பாலான தனிநபர்கள் ஏதோ ஒருகட்டத்தில் நினைக்கிறார்கள்.

ஓர் உளவியலாளர் என்றமுறையில், மிகவும் கடினமான அல்லது துயரமான ஒன்றைத் தங்களுடைய வாழ்க்கையில் சந்தித்ததாகச் சொல்லும் நோயாளிகளை நான் அடிக்கடி காண்கிறேன். அந்த அனுபவத்தைப்பற்றி நான் அவர்களிடம் கேட்கும்போது, சில நேரங்களில் அவர்கள் இதுபோன்ற விஷயங்களைச் சொல்கிறார்கள், “என்னுடைய மாமா என்னிடம் தவறாக நடந்துகொண்டார்” அல்லது “என்னுடைய முந்தைய உறவு மிகவும் சிக்கலாக இருந்தது” அல்லது “என்னுடைய சகோதரி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டார், ஆனால், அது நெடுங்காலத்துக்குமுன் நடந்தது." இதைப்பற்றி அதிகத் தகவல்களை ஆராயும்போது, நான் பொதுவாகக் காண்கிற விஷயம், ஒரு நிகழ்வை அவர்கள் அதிர்ச்சிகரமாக அடையாளம் காணாவிட்டாலும், அந்த நிகழ்வு அவர்களுடைய உறவுகளில், அவர்களுடைய சுய மதிப்பில், பதற்றத்தில், அவர்களுடைய ஒட்டுமொத்த நலனில் ஆழமான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதேசமயம், அவர்கள் சந்தித்தவற்றின் அம்சங்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை: சமாளிப்பதற்கான தங்களுடைய வளங்களை அவர்கள் பயன்படுத்தித் தீர்த்துவிட்டார்கள், அவர்கள் அச்சம், அதிர்ச்சி, தங்களுக்கு உதவ யாருமே இல்லை என்கிற உணர்வு போன்ற எதிர்வினைகளை நிகழ்த்துகிறார்கள், அந்த அழுத்தமூட்டி அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து விலகியபிறகும்.

அதிர்ச்சிகரமான, அல்லது ஒருவருக்கு மிகவும் துன்பத்தைத் தரக்கூடிய ஒன்றைச் சந்தித்தல், ஒருவருடைய வாழ்க்கைமுழுவதும் காணக்கூடிய ஒரு பொதுவான விஷயமாகும். அதிர்ச்சியைச் சந்திக்கும் தனி நபர்கள் அவர்களுடைய முந்தைய அனுபவங்கள், அவர்களுடைய உயிரியல் தன்மை மற்றும் அவர்களுடைய சூழலால் பலவிதமான எதிர்வினைகளை நிகழ்த்தக்கூடும். என்னுடைய மருத்துவ அனுபவத்தில், சிலர் ஓர் அதிர்ச்சியான அனுபவத்தைச் சந்தித்தபின், தங்களுடைய தனிப்பட்ட, உடல்சார்ந்த மற்றும் உணர்வு நலனுக்குக் குறைந்தபட்சத் தாக்கத்துடன் மிகவும் விரைவாக விரிதிறனைக் காட்டுகிறார்கள். மற்றவர்கள் ஓரளவு பாதிக்கப்படுகிறார்கள், இவர்கள் அந்த நிகழ்வின் சில குறிப்பிட்ட நினைவூட்டிகளைத் தவிர்க்கக்கூடும், அடிக்கடி அச்சமாக அல்லது சோகமாக உணரக்கூடும், கவனம் செலுத்தச் சிரமப்படக்கூடும், பிறரை, உலகைச் சற்று மாறுபட்டவகையில் பார்க்கத் தொடங்கக்கூடும். இந்தத் தனிநபர்கள் பொதுவாகக் குறுகிய கால வல்லுனர் உதவி அல்லது ஆலோசனைபெறுதலின்மூலம் பலன் பெறுகிறார்கள், விரிதிறனையும், அவர்கள் எட்ட விரும்பும் வளர்ச்சியையும் வளர்த்துக்கொள்வதற்கான திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.

சிலர் அதிகத் தீவிரமான எதிர்வினைகளை நிகழ்த்துகிறார்கள், இங்கு PTSDபோன்ற ஒன்று பொருத்தமான கண்டறிதலாக இருக்கலாம்.  அவர்கள் இவற்றைச் செய்யக்கூடும்:

  • மனச்சோர்வான, பதற்றமான மற்றும் சினம் கொண்ட மனநிலை மாற்றங்களை அனுபவிக்கலாம்

  • அதிர்ச்சிதரும் நிகழ்வை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து காணலாம்

  • பாதுகாப்பாக உணரச் சிரமப்படலாம்

  • தொந்தரவுள்ள தூக்கம் அல்லது கெட்ட கனவுகளைக் கொண்டிருக்கலாம்

  • பரபரப்பாக உணரலாம்

  • நிலைமையைச் சமாளிப்பதற்காக அதீதமாக மது அருந்தலாம்

  • தங்களிடமிருந்தும் பிறரிடமிருந்தும் சிறிது துண்டிக்கப்பட்டிருப்பதாக உணரலாம்

  • பிறருடனான தங்களுடைய தனிப்பட்ட உறவுகளில் சிரமங்களைக் கொண்டிருக்கலாம்.

குழந்தைப் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல் அல்லது நீண்ட கால உணர்வுத் துன்புறுத்தல் போன்ற பிறருடனான உறவுத் தன்மையைக் கொண்ட அதிர்ச்சிகளில், தனிநபர்களுக்குச் சிக்கலான அதிர்ச்சி, அல்லது C-PTSD வரலாம், இவர்கள் பிறரை நம்ப, பொருளுள்ள உறவுகளில் ஈடுபடச் சிரமப்படலாம், தன்னைப் பிறருடைய அன்புக்குத் தகுதியுள்ளவராகக் காணச் சிரமப்படலாம், அல்லது, தங்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில், அன்றாட அழுத்தமூட்டிகளைப் பொறுத்துக்கொள்வதில் சிரமம் கொண்டிருக்கலாம்.

அதிர்ச்சியின் தாக்கத்தைப்பற்றிச் சிந்திக்கும்போது, இன்னொரு வேறுபாட்டையும் கருத்தில் கொள்ளவேண்டும்: அதிர்ச்சிகரமான நிகழ்வை அவர் சந்தித்தது ஒருமுறைமட்டுமா, அல்லது, அது திரும்பத்திரும்ப நிகழ்கிறதா. அதிர்ச்சியின் தாக்கம் அடுக்கடுக்காக அதிகரிக்கலாம், இதன் பொருள், ஒருவர் அதிக அதிர்ச்சி நிகழ்வுகளைச் சந்திக்கச் சந்திக்க, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது நிகழ்வின் தாக்கம் காலப்போக்கில் அதிகமாகிக்கொண்டே செல்லும்.  நினைவில் கொள்ளவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், ஒருவர் PTSDன் எல்லா அறிகுறிகளையும் சந்திக்காவிட்டாலும், நடந்ததைப் புரிந்துகொள்ள அல்லது சமாளிக்க அவர் முயலலாம். என்னிடம் இப்படிச் சொல்லும் நோயாளிகளை நான் எப்போதும் சந்திக்கிறேன், “ஆனால், நான் சந்தித்தது மற்றவர்கள் சந்தித்ததைப்போல் அல்லது, இப்போதெல்லாம் செய்தித்தாள்களில் நாம் படிப்பதைப்போல் மோசமாக இல்லை.” ஒரு குறிப்பிட்ட அளவு “தீவிரத்தன்மை” இருந்தால்தான் உதவி தேவை என்று பொருளில்லை என்று நான் அவர்களுக்குச் சொல்கிறேன். எடுத்துக்காட்டாக, சமீபத்தில் ஒரு புதிய காதல் உறவைத் தொடங்கியிருக்கும் ஒரு தனிநபர், தன்னுடைய காதலர் அவர்களுடைய உறவில் சில கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைக் காட்டத் தொடங்கியிருக்கிறார் என்பதைக் காணத் தொடங்குகிறார். இது உடனடியாகச் சில PTSD அறிகுறிகளுக்கு வழிவகுக்காவிட்டாலும், அந்தத் தனிநபருடைய அடையாளம், அவர் தன்னைப்பற்றி எப்படி உணர்கிறார் என்பவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்கலாம், குறிப்பாக, இதுபோன்ற ஒரு சூழ்நிலை அடிக்கடி நடந்தால்.

ஒரு துயரம் தரும் நிகழ்வுக்குப்பிறகு தன்னுடைய உணர்வு நலன் சரிகிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண இயலுவது, இது கவலைகொள்ளவேண்டிய ஒன்றா என்பதைப்பற்றி அவருக்கு வழிகாட்டக்கூடிய ஒரு தொழில்வல்லுனரை நாடுதல் ஆகியவை, ஒருவர் தன்னுடைய மன நலனைக் கவனித்துக்கொள்வதற்கான ஒரு செயல்திறன் மிக்க வழியாகும். குறிப்பாக, அதிர்ச்சி தரும் நிகழ்வு நடைபெற்று ஒருமாதத்துக்குமேல் ஆனபிறகும் அவருடைய உணர்வு நலன் தொடர்ந்து சரிந்துவந்தால், இதை அவசியம் செய்யவேண்டும். அவர் தன்னுடைய பலங்களையும் ஆதரவு அமைப்பையும் நினைவில்கொள்வது, அதிர்ச்சியிலிருந்து மீளும் செயல்முறையின்போது அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள இயலுவது ஆகியவையும் முக்கியம். எடுத்துக்காட்டாக, அன்புக்குரியவர்கள், செல்லவிலங்குகளைச் சென்று பார்ப்பது, உடற்பயிற்சி, தன்னைக் கவனித்துக்கொள்ளுதல், தான் பாதுகாப்பாக உணரும் சூழல்களில் இருத்தல், அழுத்தத்தைக் கையாள அவர் பயன்படுத்தக்கூடிய பிற வழிகளைப் பயன்படுத்துதல் போன்றவை.

டாக்டர் திவ்யா கண்ணன் ஒரு மருத்துவ உளவியலாளர். USA நாஷ்வில்லெயிலுள்ள வான்டெர்பில்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக, வன்முறையிலிருந்து தப்பிப்பிழைத்த வயதுவந்தோருடன் பணியாற்றிய இவர், சமீபத்தில் பெங்களூருக்கு இடம் மாறியுள்ளார். இவர் தற்போது பெங்களூரில் சேவை புரிந்துவரும் மருத்துவ வல்லுனர்.

புகைபிடிப்பதை நிறுத்துவது எப்படி?

மீள்திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?

தன் கதையைச் சொல்லுவது எப்படி?

தனக்கோ தன் அன்புக்குரிய ஒருவருக்கோ மனநலப் பிரச்னை இருப்பதை ஒருவர் எப்படித் தெரிந்துகொள்வது?