மனச்சோர்வுள்ள ஒருவருடன் வாழ்தல்

மனச்சோர்வு உள்ள ஒருவரிடம் எப்படி நடந்துகொள்வது என்று பலருக்குத் தெரிவதில்லை: அருணா சொல்கிறார்
மனச்சோர்வுள்ள ஒருவருடன் வாழ்தல்

மனச்சோர்வு என்பது, ஒரு விநோதமான விஷயம். நான் தினமும் மனச்சோர்வை, பதற்றத்தைச் சந்திக்கிறேன், ஆனால் எனக்குள் வாழும் இந்த நூறுதலைப் பாம்பை என்னால் இன்னும் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆழமாகச் சுவாசித்தால் என்னுடைய தேய்ந்துபோன நரம்புகள் அமைதியடையும் என்று நான் நினைக்கிறேன், அதேநேரம், எனக்குள்ளிருக்கும் சோர்வான உணர்வுகள் வெளிவரத் துடிக்கின்றன. எனக்கே என்னைப்பற்றி இப்படியொரு குழப்பம் இருந்தால், என்னோடு வாழ்கிறவர் என்ன செய்வார்? மனச்சோர்வு உள்ள ஒவ்வொருவருடனும் வாழ்கிறவர்கள் இந்தக் குழப்பத்துடனே இருப்பார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள இயலுகிறது. பல நேரங்களில் மக்கள் என் பிரச்னையை ஏற்க மறுக்கிறார்கள், நிராகரிக்கிறார்கள், விநோதமாகப் பார்க்கிறார்கள், என்னைவிட மோசமான பிரச்னை கொண்ட ஒருவரைச் சுட்டிக்காட்டுகிறார்கள், அல்லது, என்னவிடச் சிறப்பாக இதனைக் கையாள்கிற ஒருவரைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆரம்பத்தில் நான் இதற்காக நிறைய சண்டைபோடுவேன், அல்லது விலகிச்சென்றுவிடுவேன். இதனால், பெரிய சண்டைகள் நிகழும், அல்லது, என்னைச் சுற்றியிருப்பவர்கள் எரிச்சலடைவார்கள்.

அதேசமயம், என்னைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முயற்சியாக, நான் என்னைச் சுற்றியிருப்பவர்களின் பேச்சுகளைக் கவனிக்கத்தொடங்கினேன், அப்போதுதான் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது: அவர்கள் எனக்கு உதவ விரும்புகிறார்கள், ஆனால் எப்படி உதவுவது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். இப்போதெல்லாம் மனநலப் பிரச்னைகளைப்பற்றிப் பலர் பேசுகிறார்கள். அது ஒருவிதத்தில் எங்களுக்கு நன்மை செய்கிறது, இன்னொருவிதத்தில், எங்களுக்கு உதவ எண்ணுகிறவர்களின் மனங்களில் அது ஒரு குழப்பத்தை உண்டாக்குகிறது. சமீபத்தில் என்னிடம் ஒரு நண்பர் சொன்னார், "நாங்கள் உன்னை நேசிக்கிறோம். ஆனால், உனக்கு நாங்கள் எப்படி உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை." ஆகவே, அவர்கள் எதைச் செய்திருந்தால் எனக்கு உதவியாக இருந்திருக்கும் (அல்லது, உதவியாக இருக்கும்) என்று நான் சிந்திக்கத்தொடங்கினேன். இதனை ஒரு பெரிய தனிப்பட்ட ஆராய்ச்சி என்று நான் சொல்லமாட்டேன். இவை ஒவ்வொரு நாளும் பின்பற்றக்கூடிய சில எளிய படிநிலைகள்தான்.

படிநிலை 1, படிநிலை 2: ஒழுங்கு, ஒழுங்கின்மை

மனச்சோர்வு, பதற்றத்திற்குச் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு அடிக்கடி சொல்லித்தரப்படும் சமாளிப்பு வியூகம், ஓர் ஒழுங்கை அமைத்தல். இந்த வியூகம் எனக்குப் பிரமாதமாக வேலைசெய்கிறது: குழப்பமில்லாத ஓர் ஒழுங்கை அமைத்துக்கொண்டால், நான் திடமாக உணர்கிறேன். எனக்குள் பல எண்ணக் குழப்பங்கள் இருக்கலாம், ஆனால், எனக்கு வெளியே ஓர் ஒழுங்கு இருக்கிறது. ஆகவே, அதைக்கொண்டு நான் என் மூளைக்குள் இருக்கும் சிக்கல்களை ஒழுங்காக்கிக்கொள்வேன். தினமும் காலை நேரத்தில்தான் நான் மிகவும் கவலையாக உணர்கிறேன். அந்த நாள் எப்படிச் செல்லுமோ என்று அச்சப்படுகிறேன். என்னுடைய ஒழுங்கு, இந்தக் கவலைகளைச் சரிசெய்கிறது.

ஒவ்வொரு நாளும் என்னுடைய வேலைகளை ஒரு குறிப்பிட்ட வரிசையில்தான் செய்யவேண்டும் என்று நான் சொன்னால், என்னுடைய அக்கறையான குடும்ப உறுப்பினர்கள் சிலர் அதைக் கேள்வி கேட்பார்கள். 'ஒருநாள் உடற்பயிற்சிக்குச் செல்லாவிட்டால் என்ன? அதனால் உன்னுடைய வேலைப்பளு குறையுமல்லவா?' என்று அவர்கள் கேட்கிறார்கள். அதேசமயம், இந்த ஒழுங்குதான் என்னைக் கவலையிலிருந்து தயார்நிலைக்குக் கொண்டுவருகிறது. ஆகவே, என் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் வட்டாரத்திடம் நான் கேட்கும் விஷயம், என்னுடைய ஒழுங்கைத் தடுக்கவேண்டாம். அது உங்களுக்குச் சிரமமாகத் தோன்றலாம். ஆனால், சிறிய, பெரிய தடைகளை வெல்லுவதற்கான ஒரு வழி அது. ஒருவருக்கு ரத்த அழுத்தத்துக்கான மருந்து தேவைப்படுகிறது என்றால், அதை அவரிடமிருந்து யாரும் பறிக்கமாட்டார்கள், இல்லையா?

"நான் மறந்துவிட்டேன்" என்ற எண்ணமும், மண்டைக்குள் குழப்பங்களும்

என்னுடைய ஞாபகசக்தி சரியாக இல்லை. சில நாள்களில் அது நன்கு கைகொடுக்கிறது, சில நாள்களில் கைவிட்டுவிடுகிறது. மனச்சோர்வு உள்ள ஒருவருடன் வாழ்கிறவர்கள் இதைக் கவனித்திருக்கலாம்: அவர்கள் ஒரே விஷயத்தை மூன்று வெவ்வேறு நாள்களில் செய்வார்கள், அதாவது, மளிகைசாமான்களை ஒரே நாளில் வாங்காமல், அடிக்கடி மளிகைக்கடைக்குச் சென்று வாங்குவார்கள். தர்க்கரீதியில் யோசித்தால் எல்லாவற்றையும் ஒரே நாளில் வாங்குவதுதான் சிறப்பான உத்தி! ஆனால், மனச்சோர்வானது தர்க்கத்தை மதிப்பதில்லையே!

நானும் மளிகைச்சாமான் பட்டியல் தயாரிப்பேன், அதை ஒழுங்காகப் படிப்பேன், ஆனால், வாங்க மறந்துவிடுவேன். அதன்பிறகு, மறுநாள் மீண்டும் அதே கடைக்கு ஓடுவேன். எங்களுடைய இந்தப் பிரச்னையைத் தீர்க்கிறேன் பேர்வழி என்று நீங்களே எங்களுக்கு மளிகைசாமான் வாங்கித்தராதீர்கள். அது சரியான தீர்வல்ல. தவிர, இன்னொருவருக்காக ஷாப்பிங் பட்டியல் தயாரிக்க இன்னும் அதிக ஆற்றல் தேவை. நான் ஷாப்பிங் செல்லும்போது, சுதந்தரமான ஒற்றுமைகள் மற்றும் பாணிகளைப் பயன்படுத்துகிறேன், எனக்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரியும், அதன்பிறகு, நான் பார்க்கிறவற்றை வைத்துப் பல விஷயங்களை என் மனத்தில் தொகுக்கத்தொடங்குகிறேன்.

என்னுடைய பார்வை-வரைபடத்தில் உள்ள விஷயங்கள் இடம்மாற்றிவைக்கப்பட்டாலும் நான் சிரமப்படுகிறேன். ஆகவே, செய்தித்தாள் மேஜையின்மீது இல்லாமல், அதற்குக்கீழே மடித்துவைக்கப்பட்டிருந்தால், சமையலறையிலுள்ள ஸ்பூன் எனக்குத் தெரியாத, ஆனால் வசதியான ஓர் இடத்துக்கு மாற்றிவைக்கப்பட்டிருந்தால், அது ஒரு தூண்டுதல். பொருள்களை அப்படியே இருக்கவிடுங்கள்!

மோசமான ஞாபகசக்தியின் நெருங்கிய தோழன், மண்டைக்குள் குழப்பங்கள். குதிரையேறும் ஒருவர், குதிரையை மெல்ல உதைப்பார், உடனே குதிரை வேகமாகப் பாயும். மோசமான ஞாபகசக்திதான் அந்த உதைப்பு, மண்டைக்குள் குழப்பங்கள்தான் அந்தப் பாய்ச்சல். மண்டைக்குள் குழப்பங்கள் என்றால், அங்கே பல எண்ணங்கள் ஒருங்கிணைந்து குழம்பிக்கிடத்தல் என்று பொருள். பலர் என்னிடம் குப்பைத்தொட்டியைத் தந்து வெளியே வைக்கச்சொல்வார்கள், அதற்காக நான் புறப்படும்போது, குழாய் பழுதுபார்ப்பவரை அழைக்கச்சொல்வார்கள், என்னுடைய உறவினர் ஒருவருக்கு வாட்ஸ்ஆப் செய்தியனுப்பச்சொல்வார்கள், நல்ல காஃபி போடுவது எப்படி என்றும் கேட்பார்கள். நிறுத்துங்கள்! ஒருகட்டத்துக்குமேல், இவையெல்லாம் அர்த்தமற்ற பேச்சுகள். எனக்குள் ஏதோ முடங்கிக்கொள்வதை என்னால் உணர இயலுகிறது. சிலர், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வார்கள், அதைப் பெருமையாகவும் சொல்வார்கள். ஆனால், என்னால் ஒரு நேரத்தில் சில கட்டளைகளைதான் செயல்படுத்த இயலும். நான் தகவல்களை எனக்குப் புரிகிறவகையில் பாணிகளாக ஒழுங்குபடுத்தினால், என்னாலும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய இயலும். இதற்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரு நல்ல உதவி, நான் செய்யவேண்டியவற்றை எனக்கு எழுதிக்கொடுத்துவிடுங்கள். அதன்பிறகு, என் மனத்தில் இடைவெளி இருக்கும்போது, நான் அவற்றை வாசித்துப் புரிந்துகொள்வேன்.

அகலத் திறந்த வெளிகள்

மாதத்துக்குச் சில நாள்கள், நான் என்னுடைய தினசரி ஒழுங்கிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்கிறேன், வீட்டிலிருந்து பணிபுரிகிறேன். இதனால், நான் என்னை மீட்டுக்கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது, என்னால் என்னுடைய வேகத்தில் பணிபுரிய இயலுகிறது, தியானம்போல் சிந்திக்க இயலுகிறது. சிலர் "வீட்டிலிருந்து வேலைசெய்வது" என்றால், அன்றைக்குப் பல வீட்டுவேலைகளைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால், என் நோக்கம் அதுவல்ல, என்னுடைய தலைக்குள் இருக்கும் முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான தனிப்பட்ட நேரமாக நான் அதைக் கருதுகிறேன். பொதுவாக, நான் என்னுடைய ஆற்றல் குறைந்திருப்பதாக உணரும்போது, அல்லது, ஏதோ குறைந்திருப்பதாக எண்ணும்போது, இதுபோல் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன், அந்த நாள்களில் நான் கூடுதல் சுமைகளை ஏற்றுக்கொண்டால், அப்படி வீட்டிலிருந்து வேலை செய்கிற நோக்கமே அடிபட்டுவிடும். இது ஓர் ஆடம்பரம்போல் சிலருக்குத் தோன்றலாம். இருக்கட்டுமே, நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கு ஷுகர்-ஃப்ரீ இனிப்புகளைப்போல, எங்களுக்கு இந்த வியூகங்கள் உதவுகின்றன!

சில சந்தர்ப்பங்களில், நான் சமூகத்தில் தோன்ற விரும்பாமலிருக்கலாம். உதாரணமாக, நண்பர்களுடன் இரவு உணவு, ஒரு குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளுதல் போன்றவை. பல நல்ல நண்பர்கள், 'நீ இவற்றில் கலந்துகொண்டால், நீ இன்னும் நன்றாக உணர்வாய்' என்கிறார்கள், இன்னும் சிலர் 'X அல்லது Yக்காக இதைச் செய்' என்கிறார்கள். இதுபோன்ற வாதங்கள் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. நான் சொல்ல விரும்புவது இதுதான்: ஒருவர் டெங்கு ஜுரம் வந்து படுத்திருக்கிறார் என்றால், அவரை ஒரு விருந்துக்கு அழைப்பீர்களா?

'ஆம், உன்னால் முடியும்' என்று சொல்லுங்கள்.

மனச்சோர்வு உண்டாக்கும் டோமினோ விளைவு மிகவும் கவனத்துக்குரியது: நான் எப்போது எப்படி மாறுவேன் என்று தங்களுக்குப் புரிவதே இல்லை என்று என் நண்பர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, அவர்கள் என்னுடன் எச்சரிக்கையாகவே பழகவேண்டியிருக்கிறது. இதை எண்ணும்போது, எனக்குள் வலி பெருகுகிறது. ஒருவர் இந்த மனநிலையில் இருந்தால், தொடர்ந்த குற்றவுணர்வு உண்டாகும், அவரது சுய மதிப்பு கெட்டுப்போகும். ஆகவே, இப்படிப்பட்டவர்களுடைய ஈகோவை மீண்டும் கட்டமைக்க நீங்கள் சில எளிய விஷயங்களைச் செய்தாலே போதும். உதாரணமாக, இந்த உணவகத்துக்குச் சாப்பிடப்போகலாம் என்று நான் சொல்லும்போது யாராவது அதை மறுத்துப்பேசினால், நான் மிகவும் சோர்வாக உணர்ந்ததுண்டு. இது ஓர் எளிய விஷயம்தான், ஆனால், சுயமதிப்பைப் பாதிக்கிறது. அதுபோன்ற நேரங்களில், மற்றவர்களுக்குப் பாதிப்பில்லாத சூழ்நிலைகளில், நான் சொல்வது ஏற்றுக்கொள்ளப்பட்டால், என் சுயமதிப்பு அதிகரிக்கும்.

ஒரு பெரிய அச்சு

நம் மக்களுக்கு ஒப்பிட்டு உறுதிப்படுத்துவது மிகவும் பிடிக்கும்: அவனைப்பார், உன்னைவிடச் சிரமப்படுகிறான், அவனைப்பார், உன்னைவிட நன்றாக இருக்கிறான் என்பார்கள். இவையெல்லாம், 'அதீதச் சட்டங்களின்படி' சொல்லப்படுபவை. ஒருவர் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டபடி வேலைக்கும் செல்கிறார், ஓய்வுநேரத்தில் ஒரு புத்தகம் எழுதுகிறார் என்றால், அது ஒரு பெரிய வெற்றிக்கதைதான். ஆனால், தன்னுடைய மூளைக்குள் ஓர் இனம்புரியாத, அருவமான சண்டையைச் சமாளித்துக்கொண்டிருக்கும் ஒருவரை அவரோடு ஒப்பிட இயலுமா? என்மீது அன்புசெலுத்தும் எல்லாருக்கும் நான் வைக்கும் கோரிக்கை, என்னுடைய தேர்வுகளை நீங்கள் மறுக்கலாம், ஆனால், அவற்றை ஒப்புக்கொள்ளுங்கள் (உங்களுக்கு மனமில்லாவிட்டாலும்). ஒருவேளை என் மனநிலை மோசமானால், இந்தத் தெரிவுகள் ஆபத்தைக் குறைக்கும் என்ற உணர்வுடன், எனக்குச் சரியாகத் தோன்றிய சில வாழ்க்கைத் தீர்மானங்களை நான் எடுத்திருக்கிறேன். அந்தத் தெரிவுகளைப் பிறருக்கு விளக்குவது அல்லது அவற்றின்சார்பாக வாதம்செய்வது எனக்குக் களைப்புத்தரும் ஒரு விஷயம். சில நேரங்களில், ஒருவர் என்னுடைய வாழ்க்கைமீது தொடர்ந்து ஆக்கப்பூர்வமற்ற ஆர்வத்தைக் காட்டிவருவதைவிட, ஆர்வம்காட்டாமலிருப்பதே சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது.

நான் சொல்கிறவற்றையெல்லாம் 'தவறான நம்பிக்கைகளை உடைக்கும் முயற்சி' என்று கருதவேண்டாம். நானும் உங்களைப்போலவே குழம்பியிருக்கிறேன். ஆனால், இந்தப் பாதையில் என்னுடன் நடந்துவர முயற்சிசெய்யுமாறு உங்களைக் கோருகிறேன்.

அருணா ராமன் ஒரு சமூகக் கண்டுபிடிப்பு நிபுணர். தற்போது ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் பணியாற்றிவருகிறார். இவர் தனது மனச்சோர்வு மற்றும் பதற்றத்தைச் சமாளிப்பதற்காக, மனமுழுமை வாழ்க்கையைத் தினமும் பின்பற்ற முயன்றுவருகிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர் என்றமுறையில் வரக்கூடிய பதற்றம் மற்றும் மனச்சோர்வை எப்படிக் கையாள்வது என்பதுபற்றி இந்தக் கட்டுரையில் அவர் பேசுகிறார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org