டிஸ்கிராபியா

Q

டிஸ்கிராபியா என்பது என்ன?

A

டிஸ்கிராபியா என்பது ஒரு விசேஷக் கற்றல் குறைபாடு. இது எழுதும் திறன்கள், ஸ்பெல்லிங் சொல்லுதல், கையெழுத்து மற்றும் புரிந்து கொள்ளுதல் (சொற்களை ஒழுங்குபடுத்துதல், வாக்கியங்களை, பத்திகளை அமைத்தல்) ஆகியவற்றைப் பாதிக்கிறது. ஒரு குழந்தை எழுதுவதற்குச் சிக்கலான, நுணுக்கமான இயந்திரவியல் மற்றும் மொழி செயல்படுத்தும் திறன்கள் தேவைப்படுகின்றன. டிஸ்கிராபியா பிரச்னை கொண்ட குழந்தைகளுக்கு எழுதும் செயல்முறை சிரமமாகவும் மெதுவாகவும் இருக்கிறது.

டிஸ்லெக்ஸியா அல்லது டிஸ்கால்குலியா போன்ற மற்ற கற்றல் குறைபாடுகளுடன் ஒப்பிடும்போது டிஸ்கிராபியா அதிகப்பேருக்குத் தெரிவதில்லை, இதை அதிகப்பேர் கண்டறிவதும் இல்லை. காரணம் மற்ற அறிகுறிகளைக் கவனித்துக் கொண்டிருக்கும்போது இந்தப் பிரச்னையை யாரும் கவனிக்காமல் போகலாம். அத்துடன் இந்தப் பிரச்னையைச் சரியாகக் கண்டறிவதற்குத் தரமுறைப்படுத்தப்பட்ட பரிசோதனைகளும் இல்லை.

Q

எது டிஸ்கிராபியா இல்லை?

A

மக்கள் முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் மெதுவாக எழுதுதல் அல்லது கிறுக்கலாக எழுதுதல் ஆகியவை டிஸ்கிராபியாவின் அறிகுறி அல்ல. குழந்தைக்குக் காது கேட்பதில் சிரமங்கள் இருக்கலாம், ஆகவே மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதனைத் தவறாக எழுதலாம். உண்மையில் குழந்தைக்குக் காது கேட்பதில் பிரச்னை இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஓர் ஆடியோ மெட்ரி பரிசோதனையை நிகழ்த்தலாம்.

Q

டிஸ்கிராபியாவின் அறிகுறிகள் என்ன?

A

டிஸ்கிராபியாவின் அறிகுறிகள் குழந்தைக்குக் குழந்தை மாறுபடலாம், அதன் தீவிரத்தன்மையும் நிலையைப் பொறுத்து மாறுபடலாம்.

பள்ளிக்கு முன்

  • ஒரு பென்சிலை எளிதாகப் பற்றுதல். குழந்தை பென்சிலை இறுக்கமாகப் பற்றலாம் அல்லது விநோதமான முறையில் பற்றலாம்.
  • எழுத்துகள் மற்றும் எண்களின் வடிவங்களை உருவாக்குதல்
  • எழுத்துகள் அல்லது சொற்களுக்கு இடையே ஒரே மாதிரியான இடைவெளியைப் பராமரித்தல்
  • பெரிய மற்றும் சிறிய எழுத்துகளைப் புரிந்து கொள்ளுதல்
  • ஒரு கோட்டில் அல்லது வரையறுக்கப்பட்ட ஒரு பகுதிக்குள் எழுதுதல்
  • நெடுநேரம் தொடர்ந்து எழுதுதல்

தொடக்க அல்லது நடுநிலைப் பள்ளி

  • புரியும்படி எழுதுதல்
  • கர்சிவ் மற்றும் பிரிண்ட் ஆகிய வகை எழுத்துகளைச் சேர்த்து எழுதுதல்
  • எழுதும்போது சொற்களை உரக்கச் சொல்லுதல்
  • தன்னால் சரியாக எழுத இயலவில்லையே என்கிற அதீதமான அழுத்தத்தால் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமலே இருத்தல்
  • குறிப்புகள் எடுத்தல்
  • எழுதும்போது புதிய சொற்கள் அல்லது இணைச்சொற்களைக் கண்டறிதல்
  • முழுமையான வாக்கியங்களை உருவாக்குதல் - சில சொற்கள் விடுபட்டிருக்கலாம் அல்லது அரைகுறையாக இருக்கலாம்

பதின்பருவத்தினர் மற்றும் வளர் இளம்பருவத்தினர்

  • எழுத்து வடிவத் தகவல் தொடர்பில் சிந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்
  • ஏற்கனவே எழுதப்பட்ட எண்ணங்களை நினைவில் வைத்திருத்தல்
  • இலக்கணப்படி சரியான, கட்டமைப்புள்ள வாக்கியங்களை உருவாக்குதல்

Q

டிஸ்கிராபியா எதனால் உண்டாகிறது?

A

டிஸ்கிராபியாவிற்கான சரியான காரணத்தை ஆய்வாளர்கள் இன்னும் கண்டறியவில்லை. ஆனால் சிலருடைய மூளையால் விவரங்களைத் துல்லியமாகச் செயல்முறைப்படுத்த இயலாததால் இது ஏற்படலாம் என நம்பப்படுகிறது.

Q

டிஸ்கிராபியாவை எப்படிக் கண்டறிகிறார்கள்?

A

பிரிஸ்கூல் நிலையிலிருக்கிற ஒரு குழந்தையிடம் டிஸ்கிராபியாவிற்கான அறிகுறிகளை பெற்றோரோ ஆசிரியர்களோ கவனிக்கலாம், ஆனால் பல நேரங்களில் இந்த அறிகுறிகளை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இந்த அறிகுறிகளை எவ்வளவு சீக்கிரமாகக் கண்டறிந்து சரிசெய்கிறோமோ அவ்வளவு சீக்கிரமாகக் குழந்தை இயல்பாக எழுதத் தொடங்கிவிடும்.

இந்த நிலையைக் கண்டறிவதற்கு முன்னால் நிபுணர்கள் சில குறிப்பிட்ட மதிப்பீடுகளையும் எழுத்துத் தேர்வுகளையும் நடத்தி குழந்தையின் நுணுக்கமான செயல்பாட்டுத்திறன்கள் மற்றும் எழுதும் செயல்முறையை அளவிடுவார்கள்.

Q

டிஸ்கிராபியாவிற்குச் சிகிச்சை பெறுதல்

A

டிஸ்கிராபியாவிற்கு எந்தக் குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லை. அதே சமயம் குழந்தை தன்னுடைய எழுதும் திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவுவதற்கு மாற்று முறைகள் இருக்கின்றன. பெற்றோர் சிறப்புக் கல்வி நிபுணர்களின் உதவியைப் பெற்று குழந்தைக்குப் பல்வேறு கற்கும் முறைகளை அறிமுகப்படுத்தி அவற்றில் எது தங்கள் குழந்தைக்குச் சரியாகப் பயன்படுகிறது என்பதைக் கண்டறியலாம்.

Q

டிஸ்கிராபியா கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

பெற்றோரும் நிபுணர்களும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றி பின்வரும் மாற்று முறைகளில் சிலவற்றைப்  பயன்படுத்தலாம்:

  • பல பென்சில்கள் மற்றும் பேனாக்களை முயன்று பார்த்து அவற்றில் எது குழந்தைக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்தலாம்.
  • தெளிவான கோடுகளும் போதுமான இடமும் கொண்ட தாள்களைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் குழந்தையால் எழுத்துகளைச் சரியாக எழுத இயலும், கோட்டுக்குள் எழுத இயலும்.
  • எழுதுவதற்கான எழுத்துகள் மற்றும் சொற்களைக் குழந்தை அடையாளம் காண உதவுவதற்காகப் படங்கள், ஓவியங்கள் மற்றும் ஒலிப்பு முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
  • எழுதும் திறன்களை மேம்படுத்துவதற்கான உதவித் தொழில்நுட்பம் அல்லது குரல் மூலம் தூண்டப்படுகிற மென்பொருள்களைப் (வேர்ட் பிராஸசிங் கருவிகள் மற்றும் ஒலிக்கருவிகள்) பயன்படுத்தலாம்.
  • இந்தப் பிரச்னை கொண்ட குழந்தைகளுக்கு எழுதும் பணிகள் மற்றும் தேர்வுகளில் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் வழங்கலாம்.
  • பாடங்களை டேப்ரெக்கார்டர்களில் பதிவு செய்து குழந்தைகள் அவற்றை மெதுவாகக் கேட்டு எழுதச் செய்யலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org