ஆளுமைக் குறைபாடுகள்: உண்மை அறிவோம்

தவறான நம்பிக்கை: ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவருக்கு உண்மையில் எந்தப் பிரச்னையும் இல்லை, மற்றவர்கள் தன்னிடம் எளிதில் பழக இயலாதபடி அவர் நடந்துகொள்கிறார், அவ்வளவுதான்.

உண்மை: ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரைப் பார்க்கிற மற்றவர்கள் அவருடன் பழகுவது மிகவும் சிரமமாக உள்ளது என்று எண்ணலாம், காரணம் பொதுமக்கள் 'வழக்கமான' பழக்கவழக்கங்கள் என்று எவற்றை நினைக்கிறார்களோ அவற்றிலிருந்து இவர்களுடைய பழக்கவழக்கங்கள் மாறி இருக்கின்றன, ஒழுங்கற்று இருக்கின்றன, பிறருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் அவர்கள் பழகுவதில்லை. ஆனால் அவர்கள் இப்படி ஒழுங்கற்றோ அசாதாரணமாகவோ பழகுவதற்குக் காரணம் அவர்களுக்குள் இருக்கிற உண்மையான மனநலப் பிரச்னைதான், அவர்கள் வேண்டுமென்றே இப்படி நடந்துகொள்ளவில்லை என்பதைப் பிறர் உணரவேண்டும்.

தவறான நம்பிக்கை: ஆளுமைக் குறைபாடுகளைக் கொண்டவர்கள் வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கிறார்கள், மாற மறுக்கிறார்கள், அதனால்தான் அவர்களுடைய பிரச்னை எளிதில் குணமாவதில்லை.

உண்மை: நாம் எல்லாருமே மாற்றத்தை எதிர்க்கிறவர்கள்தாம், நம் எல்லாருக்குமே குறிப்பிட்ட விருப்பங்கள் இருக்கும், சில குறிப்பிட்ட வகையில் தான் நமது வேலைகளைச் செய்யவிரும்புவோம், யாராவது அதை மாற்றச் சொன்னால் நாம்  மறுப்போம். நல்ல மன நலத்தைக் கொண்ட ஒருவரே மாறுவதற்குத் தயங்குகிறார் என்றால் ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவருக்கு இது இன்னும் பெரிய பிரச்னையாக இருக்கும், அவர்கள் தங்களுடைய பழகுமுறையை மாற்றிக்கொள்ள இயலாமல் மிகவும் சிரமப்படுவார்கள். மனச் சோர்வு கொண்ட ஒருவருக்கு மருந்துகளும் சிகிச்சையும் கொடுத்தால் அவர் குணமாவதுபோல ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவருக்கும் சிகிச்சை வழங்கப்படவேண்டும், அது அவர்களைப் படிப்படியாகக் குணமாக்கும்.

தவறான நம்பிக்கை: ஆளுமைக் குறைபாடு கொண்டவர்கள் தங்களைச் சுற்றி இருக்கிறவர்களைப்பற்றி அக்கறைப்படுவதில்லை, தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் மட்டும்தான் எப்போதும் கவனம் செலுத்துகிறார்கள்.

உண்மை: ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களுக்கும் தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீது அக்கறை உண்டு. ஆனால் அவர்களுடைய ஆளுமைக் குறைபாடு உண்டாக்கும் பிரச்னைகள் மிகத் தீவிரமானவையாக அமைகின்றன, அதனால் தாங்கள் பழகும்முறை தங்களுடைய அன்புக்குரியவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதையே அவர்கள் உணர்வதில்லை. உதாரணமாக மனநிலை மாற்றங்கள், பிறருடன் தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்ள இயலாமல் இருத்தல், அனிச்சையாகச் செயல்படுதல், நிலையற்ற சுயமதிப்பு போன்றவற்றால் இவர்கள் சிரமப்படுகிறார்கள். இவர்கள் சில நேரங்களில் அன்பாகவும் கருணையாகவும் நடந்துகொள்வார்கள், வேறு சில நேரங்களில் தங்களுடைய பழகுமுறையால் மற்றவர்கள் சிரமப்படுகிறார்களே என்று குற்ற உணர்ச்சி கொள்வார்கள், மனச் சோர்வு அடைவார்கள். அதே சமயம் அவர்களுக்குள் எழுகிற போராட்டங்களை அவர்களால் தாங்க இயலுவதில்லை, ஆகவே அவர்கள் பிறருக்கு உதவுவதில்லை, அவர்களுடன் தன்னைச் சரியாகத் தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை.

தவறான நம்பிக்கை: ஆளுமைக் குறைபாடு கொண்டவர்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்யும்போது, அவர்கள் உண்மையில் சாக விரும்புவதில்லை, மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்க மட்டுமே முயற்சி செய்கிறார்கள்.

உண்மை: ஒருவருக்கு ஆளுமைக் குறைபாடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர் தற்கொலை செய்துகொள்ள முக்கிய காரணம் அவர்கள் மனத்தில் எழும் துயரம் மிகவும் தாளமுடியாததாக இருக்கிறது, தங்களுடைய வாழ்க்கை பயனற்றது என்கிற தீர்மானத்திற்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். அவர்களுக்குத்  தீவிரமான, வலி மிகுந்த உணர்ச்சிகள் ஏற்படலாம், தற்கொலை செய்துகொண்டால் மட்டும்தான் இதிலிருந்து தப்ப இயலும் என்று அவர்கள் எண்ணிவிடலாம். உண்மையில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்கிறார் என்றால் அவர் வேறுவழியில்லாமல்தான் அவ்வாறு செய்கிறார், அதன்மூலம், பிறர் தனக்கு எப்படியாவது உதவமாட்டார்களா என்கிற எண்ணத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org