வயதானோருக்கு வரும் ஞாபகமறதி, கவலைக்குரிய விஷயமா?

நமக்கு வயதாகும் போது நமது உடல் பல மாறுதல்களுக்கு உள்ளாகிறது, நமது மூளையும் அப்படிதான். ஆகவே, ஒருவருக்கு வயதாகும் போது சிறிதளவு புலன் உணர்வுச் சிரமங்கள் மற்றும் மறதி தோன்றுகிறது. இருப்பினும், வயது தொடர்பான ஞாபக மறதிக்கும் அல்சீமர் நோய், பிற டிமென்ஷியா வகைகளுடன் தொடர்புடைய ஞாபக மறதிக்கும் வித்தியாசம் உள்ளது.

வயதாவதால் ஏற்படும் ஞாபக மறதி ஒரு நபரை முழுமையாக மற்றும் ஆக்கப்பூர்வமாக வாழ்வதிலிருந்து தடுப்பதில்லை. எடுத்துக்காட்டாக, வயதான நபர் தனது கண்ணாடி அல்லது சாவியை எங்கு வைத்தார் என்று மறக்கலாம், அல்லது அவர்கள் சிறிது காலம் பார்க்காத ஒருவருடைய பெயரை மறக்கலாம். பெரும்பாலும் இதுபோன்ற நினைவு மாற்றங்கள் தினசரிச் செயல்பாடுகளான, வேலை செய்யும் திறன், சார்பின்றி வாழுதல் அல்லது சமூக வாழ்க்கையை மேற்கொள்ளுதல் போன்றவற்றைப் பாதிக்காது.

ஞாபக மறதி எப்போது டிமென்ஷியாவின் அறிகுறியாகும்?

எல்லா ஞாபகப் பிரச்னைகளும் வயதாவதால் ஏற்படுவதில்லை. வழக்கமாக ஒருவர் டிமென்ஷியாவின் அறிகுறிகளைக் காட்டும்போது, நினைவு தவிர பிற புலன் உணர்வுச் செயல்பாடுகள் பாதிக்கப்படும் – கற்றல்,  நோக்குநிலை, மொழி, விவரித்தல், திட்டமிடுதல், பிரச்னையைத் தீர்த்தல் மற்றும் மதிப்பிடுதல். ஒருவருடைய பெற்றோர் இப்படி இருப்பின் அவர்கள் உதவியை நாட வேண்டி இருக்கலாம்:

  • அடிக்கடி மற்றும் அதிகமாகப் பெயர்கள், பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் போன்றவற்றை மறத்தல்
  • அண்மைய நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை நினைவுக்குக் கொண்டுவருவதில் சிரமம், எடுத்துக்காட்டாக, அன்றைய காலை உணவு என்ன என்று மறத்தல்.
  • தெரிந்த பெயர்கள் அல்லது நிகழ்வுகளை முழுமையாக வெளிக்கொண்டுவர இயலாமை. எடுத்துக்காட்டாக,  பேரன், பேத்தியின் பெயரை மறத்தல் அல்லது உறவினர் வீட்டுக்குச் செல்வது நினைவில் இருந்து, எந்த உறவினர் என்பதை மறத்தல் போன்றவை
  • குறிப்புகள் கொடுக்கப்பட்ட பிறகும் பெயர்கள்/இடங்கள்/நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டு வர இயலாமை 
  • பேசும் போது அல்லது முகமன் கூறும்போது பொதுவான சொற்களை மறத்தல்
  • தீடீரெனப் பழக்கவழக்கங்கள் அல்லது மனநிலையில் மாற்றம் காட்டுதல் மற்றும் அதிகரித்த பதற்றத்தைக் வெளிப்படுத்துதல்
  • மறதியின் காரணமாக அவர்களுடைய தினசரிச் செயல்களைச் செய்வதற்குச் சிரமப்படுதல்
  • பொருத்தமில்லாத இடங்களில் பொருட்களை மாற்றி வைத்தல், எடுத்துக்காட்டாக, பணப்பையைச் சமையலறைப்பெட்டியில் அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்தல்
  • வழி கண்டுபிடிப்பதில் கடினம் அல்லது தெரிந்த இடங்களில் நடக்கும்போது அல்லது வாகனம் ஓட்டும்போது தொலைந்து போவது
  • ஓர் இடத்திற்கு செல்ல இயலாமல் அல்லது திசைகாட்டுதல்களைப் பின்பற்ற இயலாமல் போதல்
  • தீர்மானங்களை மேற்கொள்வதற்குச் சிரமப்படுதல் 

இந்த அறிகுறிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவை ஒருவருக்கு இருந்தால், டிமென்ஷியா காரணத்தால் ஏற்படுகிற நினைவு இழப்பின் அடையாளமாக இருக்கலாம்.

அறிகுறிகள் டிமென்ஷியாவை அடையாளம் காட்டினால் என்ன செய்வது?

டிமென்சியா, புலன் உணர்வை, குறிப்பாக நினைவைப் பாதிக்கக்கூடிய ஒரு வளரும் சிதைவு மூளை நோய். டிமென்ஷியாவை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துத் தடுப்பதன்மூலம் ஆபத்துகளைக் குறைக்கலாம் மற்றும் டிமென்ஷியாவின் வெளிப்பாட்டைச் சில ஆண்டுகள் தாமதப்படுத்தலாம். ஒருவர் தன்னுடைய வயதான பெற்றோரிடம் காணப்படும் மறதித்தன்மை டிமென்ஷியாவைக் குறிப்பதைக் கவனித்தால், சூழ்நிலையை மதிப்பிடுவதற்காக ஒரு மனநல நிபுணர் அல்லது நரம்பியல் நிபுணருடன் ஆலோசிக்கவேண்டும்.

நினைவிழப்பானது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மனச்சோர்வு, பதற்றம், வைட்டமின் பி குறைபாடு மற்றும் ஹைப்போதைராய்டிஸத்தாலும் நிகழலாம். இந்தச் சூழ்நிலைகளாலும் டிமென்ஷியா ஆபத்து அதிகமாகலாம் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

தீவிர நினைவு இழப்பின் ஆபத்தை இவற்றின் மூலம் குறைக்க அல்லது தடுக்க முடியும்:

  • நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம், கொழுப்பு, ஹைப்போதைராய்டிஸம் மற்றும் வைட்டமின் பி குறைபாடு போன்ற சாத்தியமுள்ள ஆபத்துக் காரணிகளைத் தொடர்ந்து கவனிப்பது.
  • மன அழுத்தத்தைக் குறைப்பது, புகைப்பதைத் தவிர்ப்பது மற்றும்/அல்லது மது உட்கொள்வதைக் குறைப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள்.
  • மூளைச் செயல்பாடு மற்றும் புலன் உணர்வைத் தக்கவைக்கிற அல்லது மேம்படுத்துகிற செயல்பாடுகளில் ஈடுபடுவது. எடுத்துக்காட்டாக ,எழுத்து அல்லது எண் புதிர்களைத் தீர்ப்பது, சதுரங்கம் போன்ற பலகை விளையாட்டுகளை விளையாடுவது, ஒரு பொழுதுபோக்கை மேம்படுத்துவது போன்றவை
  • உடல் செயல்பாட்டை அதிகரிப்பது, மூளைக்குச் செல்லும் மற்றும் மூளையிலிருந்து வரும் இரத்தச் சுழற்சியை அதிகரிப்பதில் உதவுகிறது. அது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.
  • பழங்கள், காய்கறிகள் மற்றும் வைட்டமின் பி நிறைந்த உணவுகளைச் சாப்பிடுதல், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுதல்

NIMHANS முதியோர் மனநலத் துறைப் பேராசிரியர் மரு P T சிவகுமார் அவர்களுடைய உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org