COVID-19ன்போது முதியோர் மன நலன்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கொரோனாவைரஸால் முதியவர்களுக்கு ஆபத்து மிகுதி என்கிறார்கள், இது அவர்களுடைய மன நலனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருக்கலாம்.
COVID-19ன்போது முதியோர் மன நலன்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இப்போதைய COVID-19 நோய்ப்பரவலானது ஒவ்வொருவருடைய மன நலனிலும் குறிப்பிடத்தக்க ஒரு தாக்கத்தைக் கொண்டுள்ளது. கொரோனாவைரஸ் நோய்ப்பரவல் பலவிதமானவர்களையும் பாதிக்கிறது என்றாலும், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதயப் பிரச்னைகள் அல்லது நீரிழிவு போன்ற மருத்துவ நிலைகளைக் கொண்டவர்கள் தீவிரமான நோய்ப்பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. இந்த வைரஸ் முதியவர்களைப் பாதிக்கிற வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன என்கிற உண்மை, அவர்களுடைய மன நலனில் குறிப்பிடக்கூடிய ஒரு தாக்கத்தை உண்டாக்கலாம்.

நாங்கள் இதைப்பற்றி நரம்பியல் உளவியலாளரும் தன்வி மால்யா முதியோர் பராமரிப்புச் சேவைகள் அமைப்பைச் சேர்ந்தவருமான தன்வி மால்யா அவர்களிடம் பேசினோம், COVID-19ன்போது முதியோர் மன நலன் மற்றும் பராமரிப்பைப்பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கு (FAQக்கள்) அவர் பதிலளித்தார்.

Q

இந்தச் சூழலைப்பற்றிப் பதற்றம் கொள்கிற முதியவர்களுக்கு உதவுவதற்கு மற்றவர்கள் என்ன செய்யலாம்?

A

COVID-19ஆல் பாதிக்கப்படும் ஆபத்து முதியவர்களுக்குதான் மிகக் கூடுதலாக உள்ளது என்பதைப் பெரும்பாலான முதியவர்கள் அறிந்திருக்கிறார்கள், இதனால், தொடர்ந்து செய்திகளைக் காண்பது அவர்களுடைய பதற்றத்தை மிகுதியாக்கலாம். ஆகவே, சுற்றிச்சுற்றி நோய்ப்பரவலைப்பற்றியே பேசிக்கொண்டிருக்காமல், மற்ற நேர்விதமான தலைப்புகளை அவர்களிடம் பேசுவது உதவியாக இருக்கும். ஒருவேளை, அவர்களிடம் COVID-19ஐப்பற்றிப் பேசவேண்டியிருந்தால், அல்லது, அவர்கள் குறிப்பிடக்கூடிய அளவுக்கு அழுத்தத்துடன் காணப்பட்டால், நம்பிக்கையளிக்கிற, சரியான பல தகவல்களை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட முயலலாம்.

Q

என்னுடைய முதிய பெற்றோர் தங்களைச் சுற்றி ஒரு சமூகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய அன்றாடச் செயல்பாடுகள் இதைச் சுற்றியே அமைகின்றன. ஆகவே, இந்த முடக்கத்தின்போது, உணர்வு ஆதரவுக்கான தங்களுடைய முதன்மையான மூலம் கிடைக்காமல் அவர்கள் சிரமப்படுகிறார்கள். அவர்கள் இதைச் சமாளிக்க நான் எப்படி உதவலாம்?

A

இதுபோன்ற ஒரு நேரத்தில் முதியவர்களுக்கு உதவுவதற்கான ஒரு வழி, அவர்களுடைய சமூக ஊடாடல் செயல்பாடுகளை இயன்றவரை இணையத்துக்குக் கொண்டுசெல்ல முயல்தல். இளவயது, நடுத்தர வயதில் உள்ளவர்களுக்குத் தங்களுடைய அன்றாடச் செயல்பாடுகளை இணையத்துக்குக் கொண்டுசெல்லலாம் என்கிற எண்ணம் தானே வருகிறது, ஆனால், முதியவர்களுக்கு அப்படி வருவதில்லை: ஆகவே, அவர்களுடைய வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களை இணையத்துக்குக் கொண்டுசெல்வதற்கு அவர்களுக்கு உதவினால், அவர்கள் இந்த நிலைமையைச் சமாளிக்க உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் நண்பர்களைச் சந்திக்கிறார்கள் என்றால், அதற்குப் பதிலாக அவர்கள் அந்த நண்பர்களைத் தொலைபேசியில் அழைக்கலாம், அல்லது, வீடியோ அழைப்பில் பேசலாம். யோகாசனம் அல்லது அறிவாற்றல் சிகிச்சை போன்ற செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்றால், அவற்றை ஆன்லைனுக்கும் நகர்த்தவும் வழிகளைக் கண்டறியலாம். மற்ற குடும்ப உறுப்பினர்கள் மாற்றி மாற்றி அவர்களை அழைக்கலாம், அல்லது, வீடியோ அழைப்பின்மூலம் பேசலாம், அதன்மூலம், அவர்கள் சமூகரீதியில் தனித்து இல்லை என்பதை உறுதிப்படுத்தலாம்.

Q

இதுபோன்ற ஒரு நேரத்தில் முதியவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்வதற்காகப் பின்பற்றக்கூடிய குறிப்புகள் என்னென்ன?

A
  • முதியவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை இயன்றவரை இணையத்துக்குக் கொண்டுசென்றால், ஒருவிதமான இயல்புநிலை உணர்வு தொடர்வதற்கு அது உதவியாக இருக்கும்.

  • தாங்கள் நாள்தோறும் சந்திக்கிற நண்பர்கள், குடும்பத்தினரை அவர்கள் அழைத்துப் பேசலாம்.

  • செய்திகளை மிகுதியாகப் பார்க்கவேண்டாம், ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குமட்டும் செய்திகளைப் பார்ப்பது நல்லது. இப்போதைய செய்திகள் அவர்களுக்குத் திகைப்பூட்டலாம், பதற்றத்தைத் தூண்டலாம்.

  • வீட்டுக்குள் உள்ள வேலைகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபடலாம்.

  • கலை, இசை, படித்தல் போன்ற தங்களுடைய பிற ஆர்வங்களை ஆராய்வதற்காக அவர்கள் இந்த நேரத்தைப் பயன்படுத்தலாம், அல்லது, தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளலாம்.

Q

பல முதியவர்கள் தனியாக வாழ்கிறார்கள். அவர்கள் தங்களுடைய தனிமையைக் கையாள்வதற்கு மற்றவர்கள் எப்படி உதவலாம்?

A
  • குடும்பத்தினரும் நண்பர்களும் முறை வைத்துக்கொண்டு அவர்களை அடிக்கடி அழைக்கலாம்.

  • ஒவ்வொருமுறையும், குறைந்தது 30லிருந்து 60 நிமிடங்களுக்கு அவர்களுடன் தொலைபேசியில் உரையாடலாம்.

  • அவர்களுடன் பலவிதமான தலைப்புகளைப் பேசலாம். எடுத்துக்காட்டாக, அவர்களுடைய இளமை நாட்கள், அல்லது, அவர்களுக்குப் பிடித்த சமையல் குறிப்புகள் போன்றவற்றைப் பேசலாம்.

மற்றகுடும்பஉறுப்பினர்களுடன்சேர்ந்துஒருகுழுவீடியோஅழைப்புக்கும்ஏற்பாடுசெய்யலாம், எல்லாரும்ஒன்றாகச்சேர்ந்துசமைக்கலாம்அல்லதுஓவியம்வரையலாம், இதன்மூலம், ஒன்றுபட்டிருக்கிறஓர்உணர்வைவலுவாக்கலாம்.

Q

பல வீடுகளில் வழக்கமான பணியாட்கள் இப்போது வருவதில்லை. முதியவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் ஒருபக்கம் வீட்டிலிருந்து வேலை செய்வது, இன்னொருபக்கம் வீட்டு வேலைகள், இன்னொருபக்கம் முதியோரைக் கவனித்துக்கொள்வது என்று அனைத்தையும் சமநிலைப்படுத்தவேண்டியிருக்கிறது. அவர்கள் இந்த நிலைமையைச் சமாளிப்பதற்காகத் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்வது எப்படி?

A

இந்த நேரத்தில் முதியவர்களைக் கவனித்துக்கொள்வது என்பது வெறும் உடல் உழைப்புமட்டுமில்லை, அறிவு மற்றும் உணர்வு உழைப்பும்கூட என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இது மிகவும் களைப்பைத் தரக்கூடியதாக இருக்கலாம்.

  • ஒருவேளை இடம் ஒரு தடை என்றால், முதியவரை ஒரு திரைப்படம் பார்க்கச் செய்யலாம், அல்லது, அவர் விரும்புகிற இன்னொரு வேலையைச் செய்யச் சொல்லலாம், அதன்மூலம், கவனித்துக்கொள்கிறவர் தனக்கென்று சிறிது எநெரத்தைப் பெறலாம்.

  • இந்தத் ‘தனிமை நேர’த்தில் அவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்வதற்கான உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம், படம் வரையலாம், இன்னும் பலவற்றைச் செய்யலாம்.

  • நேர மேலாண்மை மற்றும் அன்றாடச் செயல்பாடுகளைத் திட்டமிடுதல்.

சிகிச்சையளிப்போர் அல்லது நண்பர்களை நாடி ஆதரவு பெறுதல்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org