மனநலம் மற்றும் நரம்புச் சிதைவு நோய்கள். அல்சைமர்ஸ், பார்கின்சன்’ஸ் மற்றும் டிமென்சியாவுடன் வாழ்தல்.

அல்சைமர்ஸ், பார்கின்சன்’ஸ் மற்றும் டிமென்சியா போன்ற நரம்புச் சிதைவு நோய்கள் சில பத்தாண்டுகளுக்குமுன்பு இருந்ததைவிட இப்போது அதிகம் காணப்படுகின்றன.   நரம்புச் சிதைவு நோய்கள் வருவது பெரும்பாலும் வயது சார்ந்ததாக இருக்கிறது, அல்லது, மரபு சார்ந்த நிலைகளாலும் இவை ஏற்படக்கூடும், பொதுவாக இவை 60 வயதுக்குப்பிறகு வருகின்றன.  சிலரிடம் இந்த நோய் 40களின் முற்பகுதியில் அல்லது 50களிலேயே வரக்கூடும். நரம்புச் சிதைவு நோய் கண்டறியப்பட்ட ஒருவருக்கு இணை நோய்களும் வரலாம், அதாவது முதன்மை நோயுடன் கூடுதல் நோய்கள் அல்லது குறைபாடுகள் ஒன்றோ பலவோ ஏற்படலாம். அல்சைமர்ஸ், பார்கின்சன் மற்றும் டிமென்சியா ஆகியவை மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பிற மனநலப் பிரச்னைகளுடன் சேர்ந்து வரலாம், எப்படி ஒருவருக்கு நீரிழிவு, அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் சார்ந்த நலப் பிரச்னைகள் வருகின்றனவோ அது போலதான் இதுவும். 

முதியோர் மனநல நிபுணர் டாக்டர் செளமியா ஹெக்டே இதுபற்றிக் கூறியது, “நரம்புச் சிதைவு நோய்கள் நீண்ட நாள் நீடிக்கக்கூடிய நோய்களாகும், நீண்ட நாள் நீடிக்கக்கூடிய பெரும்பாலான நோய்கள் ஒருவருக்கு மனநலப் பிரச்னை வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கலாம். இத்துடன், பாதிக்கப்பட்டுள்ள நபர் தன்னுடைய எதிர்காலத்தைப்பற்றிக் கவலை கொள்ளலாம், நிச்சயமற்ற தன்மையை உணரலாம், கூடுதல் அழுத்தத்தை உணரலாம், இதை எப்படிச் சமாளிப்பது என்பதுபற்றிப் பல சவால்கள் மற்றும் கேள்விகளைக் கொண்டிருக்கலாம்.”   இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாக எதிர்வினை புரிகிறார்கள், வெவ்வேறுவிதமாக அவற்றைச் சமாளிக்கிறார்கள் என்பதால், உணர்வு சார்ந்த அழுத்தத்தின் சின்னங்கள் மற்றும் அறிகுறிகளைத் தெரிந்து வைத்துக்கொள்வது உதவிகரமாக இருக்கும், குறிப்பாக ஆரம்பநிலைகளில் இவை எப்படி இருக்கும் என்று தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம் .   மனநலப் பிரச்னைகள் உயிரியல் அல்லது உளவியல் சமூகவியல் காரணங்களால், அல்லது இவை இரண்டின் கூட்டணியால் ஏற்படலாம்.    சிலர் ஒரு மன நலப் பிரச்னையை அனுபவிக்க உயிரியல் முன்காரணங்கள் இருக்கின்றன; மற்றவர்களுக்கு மன நலப் பிரச்னைகள் வருவதற்குப் பின்வருவனபோன்ற உளவியல் சமூகவியல் அனுபவங்கள் காரணமாகலாம்:

  • ஒரு துணைவருடைய மரணம்
  • குழந்தைகள் தன்னைக் கைவிடுதல்
  • நிதிசார்ந்த அழுத்தம் மற்றும் ஓய்வு
  • ஒரு வீட்டை இழத்தல்
  • நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடைய மரணம்

நோயாளியைp பாதிக்கக்கூடிய சில பொதுவான மனநலப் பிரச்னைகள், மனச்சோர்வு, பதற்றம், சரிசெய்துகொள்ளல் குறைபாடுகள் (வாழ்க்கையின் அடையாளம் காணக்கூடிய ஓர் அழுத்தத்துக்கு அசாதாரணமான, மிகையான எதிர்வினை).    சிலர் சில வாரங்களுக்குள் நோயின் தன்மையைப் புரிந்துகொண்டு அதற்குப் பழகிவிடுகிறார்கள், மற்றவர்களுக்கு நோய்க்குப் பழகிக்கொள்ளச் சில மாதங்கள் ஆகின்றன.  சிலர் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு, அதைச் சமாளித்து, வாழ்க்கையில் முன்னேறுவதற்குச் சில ஆண்டுகள்கூட ஆகலாம்.     இந்த அறிகுறிகளை ஒருவர் கவனித்தால், அல்லது, ஏதோ பிரச்னை இருக்கிறது என்று உணர்ந்தால் அவர் ஒரு மனநல மருத்துவரை அல்லது ஆலோசகரை சந்திப்பது நல்லது.சிகிச்சை மனநலப் பிரச்னையின் அறிகுறிகள் குறிப்பிடத்தக்க சேதத்தை உண்டாக்கியிருந்தால், அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்குமேல் தொடர்ந்து, செயல்பாடுகளில் சேதத்தை உண்டாக்கினால், அதாவது ஒருவர் தன்னுடைய வழக்கமான செயல்பாடுகளைச் செய்ய இயலாமலிருத்தல், இந்த அறிகுறிகள் வருவதற்குமுன்னால் அவர்கள் செய்துகொண்டிருந்த எளிய விஷயங்களைச் செய்ய இயலாமலிருத்தல் போன்றவை காணப்பட்டால், மருத்துவர் அவர்களுக்கு மருந்துகள், சிகிச்சையைப்  பரிந்துரைக்கக்கூடும்.       உளவியல் அல்லது உளவியல் சமூகவியல் காரணங்களுக்கு, அனுபவமிக்க ஓர் உளவியலாளர் அல்லது ஆலோசகர் வழங்குகின்ற உளவியல் சிகிச்சை அல்லது ஆலோசனைபோன்ற தலையீடுகள் தேவைப்படும், இந்தச் சிகிச்சைகள் பாதிக்கப்பட்டவருடைய நாளைக் கட்டமைப்பது, நோய் மற்றும் அதன் வரம்புகளை அவர் ஏற்றுக்கொள்ள உதவுவது போன்றவற்றில் கவனம் செலுத்தும்.  

பாதிக்கப்பட்டவருக்கு அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முதன்மையாக அவரைக் கவனித்துக்கொள்பவருடைய தொடர்ச்சியான ஆதரவு தேவை.    குடும்பத்தினர் மற்றும் முதன்மையாகக் கவனித்துக்கொள்பவர்களுக்கு இதுபற்றிய கல்வியை வழங்குவதும் முக்கியம்.   இவர்களும் ஒரு தகுதிமிக்க, பச்சாத்தாபம் கொண்ட ஆலோசகரைச் சந்தித்தால், நல்ல பலன் இருக்கும்.

ஆலோசனையானது எப்படிப் பலன் தருகிறது? ஆலோசனையானது, நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவளிக்க உதவுகிறது.    ஆரம்பத்தில் அவர் அடிக்கடி ஆலோசகரைச் சென்று சந்திக்கவேண்டியிருக்கலாம், ஆனால் காலம் செல்லச் செல்ல, அவர் நோயின் தன்மையைப் புரிந்து கொள்வார், தன்னுடைய வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வார், அதன்பிறகு அவர் ஆலோசகரை அடிக்கடி சந்திக்கவேண்டியிருக்காது.  பார்க்கின்சன்’ஸ் போன்ற பிரச்னைகளைக் கொண்டவர்களுக்கு ஒரு பணி சார்ந்த சிகிச்சையாளருடைய உதவியும் தேவைப்படலாம், இவர் அவருடைய வாழ்க்கைச்சூழலில் சில மதிப்புமிக்க மாற்றங்களை உண்டாக்கி, அவர் தொடர்ந்து செயல்படவும், தன்னுடைய சுதந்தரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் உதவுவார்.கண்டறிதலை ஏற்றுக்கொள்ளுதல் ஒருவர் தனக்கு அல்சைமர்’ஸ், பார்கின்சன்’ஸ் அல்லது டிமென்சியா வந்திருக்கிறது என்று தெரிந்துகொள்ளும்போது, அதனை ஏற்றுக்கொள்வது சவாலான விஷயமாக இருக்கலாம்.     சில சூழ்நிலைகளில் இந்தக் கண்டறிதலுடன் வருகிற அழுத்தம் மற்றும் நிச்சயமற்றதன்மையால் மனச்சோர்வு தூண்டப்படலாம்.  அடுத்து என்ன நடக்கும் என்பதையோ அடுத்த கட்டம் எந்த அளவு சவாலானதாக இருக்கும் என்பதையோ ஒருவரால் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இயலாது, என்றாலும், எது வரப்போகிறதோ அதற்குத் தயாராக இருப்பது உதவிகரமாக இருக்கும்.    ஒருவருக்கு இந்தப் பிரச்னைகளில் ஏதேனும் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர் ஒரு நிபுணருடன் பேசவேண்டும்.   இந்த நோய் தீவிரமடையும்போது, அதற்கேற்பத் தான்  தன்னை எப்படிச் சிறப்பாகத் தயார்செய்துகொள்ளுவது என்று அவர் அந்த நிபுணரைக் கேட்கலாம். தன்னைக் கவனித்துக்கொள்ளுதல், இப்போதும், பிறகும் ”நோயின் பயணம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக அமைகிறது, அவர்கள் அதனைச் சமாளிக்கும்விதமும் மாறுபடுகிறது. இதில் முக்கியமான விஷயங்கள், நேர்ச் சிந்தனையுடன் இருப்பது, அன்றைய நாளில் என்ன செய்யவேண்டுமோ அதில் கவனம் செலுத்துவது,” என்கிறார் டாக்டர் செளமியா ஹெக்டே.   இந்தப் பிரச்னை கொண்டோர் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்வதற்கான சில வழிகள்: 

  • தன்னைக் கவனித்துக்கொள்ளுதல்: தனக்கு இப்படி ஒரு பிரச்னை வந்திருப்பது கண்டறியப்பட்டிருப்பது அவருக்கு ஒரு பெரிய மாற்றமாக இருக்கும், அதன்மூலம் அவர் களைப்பாக உணரலாம்.    அதேசமயம் அவர் தன்னுடைய மனநலனை மற்றும் உடல்நலனை இயன்றவரை சிறப்பாகக் கவனித்துக்கொள்ளுவது முக்கியம், தன்னைக் கவனித்துக்கொள்ளுகிறவர்கள், குடும்ப உறுப்பினர்கள் தன்னைச் சிறப்பாக கவனித்துக்கொள்ள அனுமதிப்பதும் முக்கியம்.  
  • உதவியை நாடுதல்: தனக்கு ஏதாவது ஒரு நரம்புச் சிதைவு நோய் வந்திருப்பது கண்டறியப்பட்டால், அதனால் சமூக ஊடாடல்கள் மற்றும் குடும்பச் சந்திப்புகள் முடிவடைந்துவிடுவதில்லை என்பதை அவர் நினைவில்கொள்ளவேண்டும்.      இந்தக் கண்டறிதலை எண்ணி அவர் அஞ்சவேண்டியதில்லை, களங்கப்பட்டுவிட்டதாக உணரவேண்டியதில்லை.   அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் தன்னுடைய நோயைப்பற்றி அவர் பேசலாம், உதவியை நாடலாம்.  இந்த நோய் தீவிரமடையும்போது ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளின்போது தனக்கு உதவுவதற்கு ஓர் ஆதரவு அமைப்பு இருப்பதை அவர் உறுதிப்படுத்தவேண்டும். 
  • சமூக ஊடாடல்கள்: இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டதுபற்றி அவர் திறந்த மனத்துடன் இருக்கவேண்டும்.  தனக்கு நெருக்கமாக உள்ளவர்களிடம், ‘நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து பார்க்கலாம், அதில் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று அவர் தெரிவிக்கவேண்டும்.  இயன்றபோதெல்லாம் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் அவ்வப்போது வெளியே செல்ல முயலலாம்.   சிலநேரங்களில் அது ஒரு மிகப்பெரிய வேலையைப்போலத் தோன்றலாம், ஆனால் இப்படி வெளியே செல்லும் காலகட்டங்களைச் சுருக்கமாக வைத்துக்கொண்டால் அது மிக எளிதாகவும், மிக அனுபவிக்கக்கூடியதாகவும் இருக்கலாம்.   
  • நிதி நிலைமையைச் சமாளித்தல்: நம்பிக்கையான குடும்ப உறுப்பினர்கள் அல்லது முதன்மையாகத் தன்னைக் கவனித்துக்கொள்ளுபவருடன் தன்னுடைய நிதி நிலைமையைச் சமாளிப்பதுபற்றி அவர் பேசவேண்டும்.   தன்னுடைய வங்கிக் கணக்கு ஒரு சேமிப்புக் கணக்காக இருப்பதை அவர் உறுதிசெய்துகொள்ளவேண்டும், தன்னுடைய வாரிசுகளைத் தெளிவாக குறிப்பிடவேண்டும்.    ஓர் உயில் எழுதுவது அல்லது ஒரு செயலுரிமை (POA) ஆவணத்தை உருவாக்குவதுபற்றிச் சிந்திப்பதற்கு இது நல்ல நேரமாக இருக்கலாம், அதற்கான செயல்முறையையும் அவர் தொடங்கலாம். 

பெங்களுரைச் சேர்ந்த முதியோர் உளவியலாளர் டாக்டர் செளமியா ஹெக்டே  வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org