ஏன் அதையே திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள்?

ஆலோசனையின் மூலம் அவரது குடும்பம் அவரைப் புரிந்துகொண்டது, அவரை இன்னும் நன்றாகக் கவனித்துக் கொண்டது.

ஆனந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 71 வயதான முதியவர், ஆறு பேர் கொண்ட ஒரு கூட்டுக் குடும்பத்தில் அவர் வசிக்கிறார். ஓர் அரசாங்க நிறுவனத்தில் பல ஆண்டுகள் எழுத்தராகப் பணியாற்றிய பிறகு பத்து ஆண்டுகளுக்கு முன் ஆனந்த் ஓய்வு பெற்றார். அவர் அதிகம் பேச மாட்டார், ஆனால் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வார், தன்னுடைய வேலையைக் கச்சிதமாகச் செய்வார்.

ஆனந்த் ஓய்வு பெற்றுச் சில நாள்களான பிறகு அவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளச் சிரமப்படுகிறார் என்பதை அவருடைய குடும்பத்தினர் கவனித்தனர். அவர் பொருட்களை எங்கேயாவது வைத்துவிட்டு வீடு முழுக்க அவற்றைத் தேடிக்கொண்டிருக்க ஆரம்பித்தார். ஆனந்த்க்கு வயதாகிவிட்டதால் தான் அவர் இப்படி நடந்துகொள்கிறார் என்று அவருடைய குடும்பம் அலட்சியமாக இருந்துவிட்டது. காரணம் அவர் தன்னுடைய மற்ற செயல்பாடுகள் அனைத்தையும் சுதந்தரமாகச் செய்துகொண்டுதான் இருந்தார்.

நாளாக ஆக ஆனந்த் சமீபத்திய உரையாடல்களையும் மறக்கத் தொடங்கினார், சில விஷயங்களைப் பற்றித் திரும்பத் திரும்பக் கேட்க ஆரம்பித்தார். முன்பு அவர் வழக்கமாகச் சென்று கொண்டிருந்த இடங்களுக்கு எப்படிப் போவது என்கிற வழியையே அவர் மறந்துபோக ஆரம்பித்தார். அவர் தன்னுடைய தினசரி வேலைகளைச் செய்வதும் மிக மெதுவாகி விட்டது. அவர் ஏதாவது ஒரு வேலையைச் செய்யவில்லை என்று யாராவது நினைவுபடுத்தினால் ஆனந்த் எரிச்சலடையத் தொடங்கினார். 'என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும், நீங்கள் எனக்கு எதையும் சொல்ல வேண்டியதில்லை' என்று கோபமாகச் சொல்லத் தொடங்கினார். அவர் இப்படி நடந்து கொள்வதால் வீட்டில் பல பிரச்னைகள் ஏற்பட்டன.

ஒரு நாள் வெளியே சென்ற ஆனந்த் மாலை வரை திரும்பிவரவில்லை. அவரது மனைவி அவருடைய மொபைல் போனைப் பலமுறை அழைத்துப் பார்த்தார், ஆனால் ஆனந்த் பதில் சொல்லவே இல்லை, அவர் எங்கே இருக்கிறார் என்றும் யாருக்கும் தெரியவில்லை. பதற்றமான குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினார்கள். ஆனந்த்-ன் வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி உள்ள ஓர் இடத்தில் அவரைக் கண்டுபிடித்தார்கள், ஆனந்த் மிகவும் குழப்பத்துடனும் எதுவும் தெரியாதவர் போலவும் திகைப்புடன் காணப்பட்டார். 'என்ன ஆயிற்று ஏன் இங்கே இப்படி நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று குடும்பத்தினர் அவரைக் கேட்டபோது 'எனக்கு வீட்டிற்கு வரும் வழி மறந்துவிட்டது, ஆகவே என்ன செய்வது என்று தெரியாமல் இங்கேயே நின்று கொண்டிருந்தேன்' என்று ஆனந்த் பதில் சொன்னார். இப்போது ஆனந்த்க்கு நிபுணரின் உதவி தேவை என்பதை அவருடைய குடும்பம் புரிந்து கொண்டது, ஒரு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறத் தீர்மானித்தது.

அந்த மருத்துவர் ஆனந்த்-ன் குடும்ப வரலாற்றைப் பற்றி விசாரித்தார், அப்போது ஆனந்த்-ன் தாய்க்கும் வயதான காலத்தில் இதே போன்ற பிரச்னைகள் இருந்தது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் ஆனந்த்-ன் அப்போதைய நிலைமையைப் பற்றி ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட்டு அவரது மருத்துவ வரலாறு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு ஒரு விரிவான நரம்பியல் சார்ந்த உளவியல் மதிப்பீடு நடத்தப்பட்டது, மேக்னடிக் ரிசோனன்ஸ் இமேஜிங் (MRI) ஸ்கேனும் செய்யப்பட்டது, இவற்றின் மூலம் அவர் விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவருவதில் தாமதமும் பிழைகளும் ஏற்படுவது கண்டறியப்பட்டது, சில குறிப்பிட்ட கட்டளைகளைப் புரிந்துகொள்வதில் அவருக்குச் சிரமங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. ஆனந்தை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அல்சைமர் நோய் வந்திருப்பதாகக் கண்டறிந்தார், இது இந்தப் பிரச்னையின் முதற்கட்டம் ஆகும். இந்தச் செய்தியைக் கேட்ட ஆனந்த்-ன் குடும்பத்தினர் மிகவும் கவலைப்படத் தொடங்கினார்கள். அவர்கள் மருத்துவரிடம் இந்தப் பிரச்னை வளரக்கூடுமா, ஆனந்தை எப்படிக் கவனித்துக் கொள்வது என்றெல்லாம் கேட்டார்கள். அவர்கள் தங்களுடைய பாட்டிக்கு வந்த பிரச்னையை யாரும் கவனிக்காததையும் அதனால் அவர் பட்ட துயரங்களையும் நினைத்துப் பார்த்தார்கள், அதன்மூலம் இப்போது தங்களுடைய தந்தையை மிகவும் அக்கறையாகக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று அதீத பாதுகாப்பு உணர்வுடன் எண்ணினார்கள்.

ஆனந்த்-ன் மகள்கள் தங்கள் தந்தைக்கு இந்த நோய் வந்திருப்பதை ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் ஆனந்த்-ன் மனைவி தன் கணவருக்கு அல்சைமர் நோய் வந்திருப்பதை ஏற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டார். ஒவ்வொரு நாளும் அவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டுமே என்று நினைக்கும்போது அவருக்கு மிகவும் திகைப்பாக இருந்தது, காரணம் அவருக்கே 68 வயதாகிவிட்டது, அவர் தீவிர கீல்வாதத்தினாலும் அவதிப்பட்டு வந்தார். 'என் பிரச்னையை யாரும் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறீர்கள்' என்றார் அவர். தன் கணவர் தன்னைத் தானே கவனித்துக் கொள்வது தான் சரி என்று அவர் எண்ணினார். ஆனந்த்-ன் மகள்களால் இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கவே இயலவில்லை.

ஆனந்த்-ன் குடும்பத்துக்குப் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன, அதன்பிறகு ஆனந்த்-ன் மனைவி தன் கணவரின் நோயை ஏற்றுக் கொண்டார். அவரும் அவரது மகள்களும் சேர்ந்து ஆனந்த்க்காக ஒரு நிலையான செயல் அட்டவணையை உருவாக்கினார்கள், அதன்படி அவர் தனது பொழுதுபோக்குகள் சிலவற்றை ஆர்வத்துடன்  செய்யத் தொடங்கியிருக்கிறார், இதன்மூலம் அவர் தன்னைத் தானே சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறார். குடும்பத்தின் ஆதரவு மற்றும் அரவணைப்பினால் ஆனந்த் தன்னுடைய நிலையைச் சமாளித்து வாழ்ந்து வருகிறார்.

இது ஒரு நிஜ நபரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம், இதனை NIMHANSல் PhD ஆய்வு நடத்திவரும் பிரபுல்லா.S பதிவு செய்துள்ளார், இதைப் பதிவு செய்வதற்காக சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் பெறப்பட்டது. அவருடைய தனி உரிமையைக் காப்பதற்காகப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org