தாய்மை

குழந்தையுடன் அன்புப்பிணைப்பு

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

பல பெண்களுடைய வாழ்வில் மிக இனிமையான தருணங்கள், குழந்தையைச் சுமப்பதும் தாயாவதும்தான். தாய்மார்கள் தங்கள் குழந்தையைக் கையில் ஏந்தி மகிழ்வதும், அதனை அன்போடு கவனித்துக்கொள்வதும் இயற்கையான விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், சில நேரங்களில், சில பெண்கள் இந்த 'இயல்பான' விஷயங்களைச் செய்யாமலிருக்கலாம். அதைச் சரியான பின்னணியோடு புரிந்துகொள்ளவேண்டும், அதாவது, மனநலப் பிரச்னைகளின் பின்னணியில் காணவேண்டும். இந்தப் பெண்களுக்குத் தங்களுடைய குழந்தையின் தேவைகள் புரியாமலிருக்கலாம்.

குழந்தையோடு அன்புப்பிணைப்பு எப்போது தொடங்குகிறது?

தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான அன்புப்பிணைப்பு பல நிலைகளில் நிகழ்கிறது. சில பெண்கள், தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று எண்ணி, அதற்குத் தயாராகும்போதே அதனுடன் ஓர் அன்புப்பிணைப்பை உருவாக்கிக்கொள்கிறார்கள், வேறு சில பெண்கள், கர்ப்பமானபின் அத்தகைய அன்புப்பிணைப்பை உருவாக்கிக்கொள்கிறார்கள். சில பெண்கள் வாடகைத்தாய்மார்களின்மூலம் குழந்தை பெறுகிறார்கள். இவர்களுக்குக் குழந்தையுடனான அன்பு, அதனைக் கையில் வாங்கியபிறகு தொடங்கக்கூடும்.

இதில் இருவகையான பிணைப்புகள் உள்ளன:

·கருவோடு பிணைப்பு: ஒரு குழந்தை தன்னுடைய தாயின் வயிற்றில் இருக்கும்போது இந்தப் பிணைப்பு தொடங்குகிறது. தன் குழந்தை எப்படி இருக்கும், ஆணா, பெண்ணா என்றெல்லாம் அந்தப்பெண் சிந்திக்கிறார், கற்பனை செய்கிறார். அவர் தனது வயிற்றை மெதுவாகத் தொட்டுப்பார்க்கக்கூடும், மென்மையாகத் தடவக்கூடும், அதோடு பேசக்கூடும், குழந்தைக்குக் கதைகளைப் படித்துக்காட்டக்கூடும், அது எப்படி வளர்கிறது என்பதைக் கவனிக்கக்கூடும், குழந்தையின் செயல்பாடுகளைக் கவனிக்கக்கூடும். உதாரணமாக, அது வயிற்றில் உதைப்பது போன்ற நிகழ்வுகளைக் கவனிக்கக்கூடும்.

·குழந்தையோடு பிணைப்பு: ஒரு குழந்தை பிறந்தபிறகு, அதற்கும் தாய்க்கும் இடையே இந்தப் பிணைப்பு தொடங்குகிறது. தாய் தன்னுடைய குழந்தையைக் கவனித்துக்கொள்கிறார், அதனை வளர்க்கிறார். அதற்கு எப்போது பசிக்கிறது, எப்போது தூக்கம் வருகிறது, எப்போது சங்கடமாக உணர்கிறது என்பதையெல்லாம் அவர் கற்றுக்கொள்ளத்தொடங்குகிறார், அதற்கேற்ப வேண்டியவற்றைச் செய்கிறார். தாய், குழந்தை இடையிலான பிணைப்பைப் பராமரிக்கும் ஒரு முக்கியமான விஷயம், தாய்ப்பால் ஊட்டுதல்.

குழந்தை வளர வளர, அது தனது வளர்ச்சி நிலைகளை எட்ட எட்ட (0-5 ஆண்டுகள்) தாயின் செயல்பாடுகள் வலுப்பெறுகின்றன: குழந்தைக்கு உணவூட்டுதல், அணைத்தல், கொஞ்சுதல், அழுதால் அதனைச் சமாதானப்படுத்துதல்... இப்படி. இப்படி அவர் வெளிப்படையாகச் செய்கிற அனைத்து விஷயங்களும் இயல்பான பிணைப்பாகும். இங்கே ஒரு தாய் தன் குழந்தையை நன்கு புரிந்துகொள்கிறார், அது எப்போது என்ன செய்யும் என்று உணர்கிறார், அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்கிறார்.  

இதில் எப்போது பிரச்னை வருகிறது?

புதிதாகக் குழந்தைபெற்ற ஒவ்வொரு தாயும் பல உணர்வுகளைக் கடந்துவருகிறார்: பதற்றம், விரக்தி, சோகம், குற்றவுணர்ச்சி... இவையனைத்தும் தன் குழந்தையைப்பற்றிய உணர்வுகளாக உள்ளன. குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் புதிய பொறுப்பு, எந்நேரமும் அதைக் கவனித்தபடியிருக்கவேண்டிய சூழ்நிலை, 'நல்ல தாயாக' இருக்கவேண்டும் என்கிற அழுத்தங்கள், தூக்கம் கெடுதல், தாய்ப்பால் கொடுத்தல், மணவாழ்க்கை, பிற உறவுகளை மாற்றியமைத்துக்கொள்ளுதல்... இவை அனைத்தும் சேர்ந்து அந்தத் தாயை உடல்ரீதியில், மனரீதியில் பாதிக்கலாம். இந்தப் பதற்றம் இயல்பானதுதான். ஆனால், அது எல்லை மீறினால், அதாவது, இந்த உணர்வு எழுச்சிகள் தொடர்ந்து நீடித்தால், தாயின் தினசரிப் பணிகள், அவருக்கும் குழந்தைக்கும் இடையிலுள்ள உறவுகளைப் பாதித்தால், அதனைக் கவனிக்கவேண்டும்.          

இயல்பாகக் கருதப்படும் அறிகுறிகள்

கவனிக்கவேண்டிய, நிபுணரின் உதவியை நாடவேண்டிய அறிகுறிகள்

அவ்வப்போது விரக்தி, எரிச்சல் வருதல்

தாய் குழந்தைமீது அடிக்கடி கோபப்படுதல்

களைப்பு வருகிறது, தூங்கினால்/ஓய்வெடுத்தால் சரியாகிவிடுகிறது

தாய் அடிக்கடி தன்னுடைய குழந்தையைத் தன் தாயிடம் அல்லது வேறு உறவினர் ஒருவரிடம் தந்து கவனித்துக்கொள்ளச்சொல்லுதல்.

தாயால் தன் பணியைச் சரியாகச் செய்ய இயலுகிறது. குழந்தையுடன் சகஜமாகப் பழக இயலுகிறது.

தாய்ப்பாலூட்டுதல் ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகக் கருதப்படுவதில்லை, அதுவும் ஒரு வேலை என்றே பார்க்கப்படுகிறது

தாய்மையால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எண்ணி அவ்வப்போது வருந்துதல்

குழந்தையைக் கவனித்துக்கொள்வதில் அதிக மகிழ்ச்சியின்மை, அல்லது, மகிழ்ச்சியே இல்லாமலிருத்தல். இத்துடன், குழந்தை பிறந்ததை அவர் விரும்பாமலிருக்கலாம், வெறுக்கலாம், அல்லது அதையெண்ணி வருந்தலாம்

இத்துடன், தீவிர பதற்றம் தரும் எண்ணங்கள், தூக்கமின்மை, மனச்சோர்வு, எரிச்சல் போன்றவை ஒன்றாகச் சேர்ந்து, அந்தத் தாயைத் தனது தினசரி வேலைகளைச் செய்யவிடாமல் தடுக்கலாம். இந்தப் பிரச்னையை உடனே கவனிக்கவேண்டும். அவர் விரைவில் ஒரு மனநல நிபுணரின் உதவியைப் பெறவேண்டும்.

தாய் தன்னுடைய குழந்தையை நிராகரித்தால்  

தாய் தன் குழந்தையை நிராகரிக்கப் பல காரணங்கள் உண்டு. தாய்க்கு:

·அந்தத் தாய்க்கு ஏற்கெனவே உளவியல் பிரச்னைகள் இருந்தால், அவர் தன்னைத்தானே கவனித்துக்கொள்வதே சிரமம், இந்நிலையில் அவர் குழந்தையையும் கவனித்துக்கொள்வது இன்னும் சிரமம்

·அந்தத் தாய் குழந்தையாக இருந்தபோது, அவரது தாய் அவரை நன்றாகக் கவனித்திருக்காவிட்டால், இப்போது தன் குழந்தையை அவர் அப்படியே நடத்தக்கூடும்

·பிரசவம் மிகவும் வலிதரக்கூடிய, வேதனையானமுறையில் நிகழ்ந்திருந்தால், அந்தத் தாய் களைத்துப்போயிருக்கக்கூடும், தன் குழந்தைமீது கோபம்கொள்ளக்கூடும்

·திட்டமிடப்படாத கர்ப்பங்கள் அல்லது கட்டாய கர்ப்பங்கள் (உதா: பாலியல் வன்முறை)

·ஒருவேளை, குழந்தைக்கு ஏதேனும் உடல்பாதிப்பு இருந்தால், அல்லது, நாள்பட்ட நோய் இருந்தால், சில தாய்மார்களால் குழந்தையுடன் பிணைப்பை உண்டாக்கிக்கொள்ள இயலுவதில்லை.

பல இந்தியக் குடும்பங்களில், புதிதாகக் குழந்தைபெற்ற தாய்மார்களுக்கு அவர்களுடைய குடும்பத்தினர் பல உதவிகளைச் செய்வார்கள். உதாரணமாக, அந்தத் தாயின் தாய் அல்லது மாமியார் போன்றோர் இந்த உதவிகளைச் செய்யக்கூடும். இதனால், நிராகரிப்புக்கான காரணங்களைக் கண்டறிவது சிரமமாக இருக்கலாம். அதேசமயம், அவரது குடும்ப உறுப்பினர்கள் இதனைக் கவனிக்கலாம். தாயிடம்  மனத்துயரத்துக்கான அறிகுறிகள் எவையேனும் தென்படுகின்றனவா என்று பார்த்து, அவர் ஒரு மன நல நிபுணரை அணுக உதவலாம்.         

தாய்-குழந்தை அன்புப்பிணைப்புப் பிரச்னைகளைக் கையாளுதல்:

அன்புப்பிணைப்பு தொடர்பான பிரச்னைகளைச் சமூக, உளவியல்ரீதியில் சரிசெய்யவேண்டுமென்றால், தாயை(அல்லது, குழந்தையை முதன்மையாகக் கவனித்துக்கொள்ளும் இன்னொருவரை)மட்டும் கவனித்தால் போதாது, மற்ற குடும்ப உறுப்பினர்களும் இதில் பங்கேறவேண்டும். தாய் தன்னுடைய குழந்தையின் தேவைகளை எப்படிப் பார்க்கிறார், அதற்கு என்ன செய்கிறார், குழந்தைக்கு என்ன அவசியம் என்பதை அவரால் புரிந்துகொள்ள இயலுகிறதா என்றெல்லாம் குடும்ப உறுப்பினர்கள் கவனித்துச் சொல்லலாம்.

இரண்டாவதாக, சில தாய்மார்களுக்கு ஒரு வீடியோ பதிவு காண்பிக்கப்படும். அதாவது, அவர் தன் குழந்தையோடு எப்படிப் பழகுகிறார் என்பதைப் படமெடுத்து அவருக்கே போட்டுக்காட்டுவார்கள். இதனால், தான் என்ன செய்கிறோம் என்பதை அவர் உணர்வார், தன் குழந்தையின் தேவைகளைத் தான் எப்படி நிறைவேற்றலாம் என்று தெரிந்துகொள்வார்.

குழந்தையைக் குளிக்கவைக்குமுன், அதற்கு மசாஜ் செய்துவிடுமாறு தாயைக் கேட்கலாம். இதற்காக, அவர் தன் குழந்தையை மென்மையாகத் தொடவேண்டும், நீவிவிடவேண்டும். இத்துடன், அவர் தன்னுடைய குழந்தையைக் கண்ணுக்குக் கண் பார்த்துப் பழகவேண்டும், உதாரணமாக, பேசுதல், சிரித்தல் போன்றவை.   

குழந்தை, தாய் இடையிலான அன்புப்பிணைப்பு சரியாக இல்லையென்றால், அது ஒரு நலப்பிரச்னை. அதற்காகத் தாயைக் குற்றம்சொல்லக்கூடாது. இந்தப் பிரச்னை உள்ள தாய்மார்கள், குடும்பங்கள் பல நேரங்களில் நிபுணர்களைச் சந்தித்து உதவி பெறுவதில்லை. காரணம், மற்றவர்கள் தங்களைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்கிற பயம்தான். ஆனால், அப்படிப் பயந்து சும்மா இருக்கிறவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்: அன்புப்பிணைப்புப் பிரச்னைகள் சரிசெய்யக்கூடியவைதான். அதற்கு அந்தத் தாய் ஒரு நிபுணரை அணுகவேண்டும், அவர் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி அவருக்கும் அவரது குழந்தைக்கும் இடையே நல்ல பிணைப்பை உண்டாக்குவார். அதேபோல், குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புமுழுவதும் ஒருவரிடமே இருக்கக்கூடாது. பெரும்பாலான தாய்மார்கள், அன்புப்பிணைப்பில் தீவிரப் பிரச்னை உள்ளவர்கள்கூட, சில சிறிய வேலைகளைச் செய்யலாம். உதாரணமாக, குழந்தைக்கான உடைகளைத் தேர்ந்தெடுத்தல், அவற்றை ஒழுங்காக அடுக்கிவைத்தல், உணவு தயாரித்தல் (தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு) போன்றவை.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org