தாய்மை

மனநலம்பற்றி மகப்பேறு மருத்துவரிடம் பேசுதல்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

மனநலப் பிரச்னை கொண்ட ஒரு பெண் தாய்மைப்பேறு அடையலாம், அதில் எந்தச் சிரமங்களோ தடைகளோ கிடையாது!

அதேசமயம், அப்படிக் கர்ப்பமாகும் ஒருவர் தனது உளவியல் நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவர் இருவரிடமும் இதுபற்றிப் பேச வேண்டும், தன்னுடைய மன நலம் மற்றும் கர்ப்பம்பற்றித் தெரிவிக்கவேண்டும், இதன்மூலம் அவர் தன்னுடைய குறைகளை நன்கு கையாண்டு தனது வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தை நன்கு அனுபவிக்க இயலும்.

மனம் சார்ந்த பிரச்னை உள்ள ஒருவர் தன்னுடைய மகப்பேறு மருத்துவரிடம் பேசும்போது பின்வருவனவற்றைக் கண்டிப்பாகக் குறிப்பிடவேண்டும்:

  • அவரது மனம் சார்ந்த பிரச்னைகளின் வரலாறு
  • அவர் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள்

அவருடைய உளவியல் நிபுணரும் மகப்பேறு மருத்துவரும் தங்களுக்கிடையே பேசிக்கொள்வதும் நல்லது. இதன்மூலம் மகப்பேறு மருத்துவர் சம்பந்தப்பட்டவரின் நிலையை நன்கு புரிந்துகொள்வார், ஏதேனும் பிரச்னைகள் வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்று தெளிவுடன் இருப்பார்.

மனம் சார்ந்த பிரச்னை உள்ள ஒருவர் தன்னுடைய நலப் பராமரிப்புத் திட்டத்தைப்பற்றியும் மகப்பேறு மருத்துவருக்குத் தெரிவிப்பது நல்லது. இதன் மூலம், இந்த நிலையில் உள்ளவர் எப்படிச் சேவைகளை அணுகுவார், ஏதேனும் பிரச்னைகள் வந்தால் என்ன செய்வது என்பதெல்லாம் தெரியவரும்.

  • ஒருவருக்கு மனம் சார்ந்த பிரச்னை உள்ளது, அதற்காக இதற்கு முன் ஏதேனும் மருந்துகளை உட்கொண்டிருக்கிறார், அல்லது, இப்போது சில மருந்துகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் என்றால், அதைப்பற்றி அவர் தன்னுடைய மகப்பேறு மருத்துவருக்கு அவசியம் தெரிவிக்கவேண்டும், அப்போதுதான், அந்த மருந்துகளால் அவருக்கும் அவருடைய குழந்தைக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை மகப்பேறு மருத்துவர் உறுதி செய்வார், தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை நல்லவிதமாகப் பராமரிப்பார்.
  • மனம் சார்ந்த பிரச்னை உள்ள ஒருவர் அதற்காக மருந்துகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் திட்டமிடாதபடி ஒரு கர்ப்பம் உருவாகிவிட்டால் அதைப்பற்றி அவர் தனது மகப்பேறு மருத்துவருக்குக் கண்டிப்பாகத் தெரிவிக்கவேண்டும், அவருடைய மருத்துவ வரலாறு மற்றும் அவர் சாப்பிடும் மருத்துகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, தேவைப்படும் பரிசோதனைகள், ஸ்கேன்களை மகப்பேறு மருத்துவர் நிகழ்த்துவார், அதன்மூலம் அவருடைய குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்துகொண்டிருப்பதை உறுதி செய்வார்.
  • சில மருந்துகள் நீரிழிவுப் பிரச்னையை உண்டாக்கக்கூடும். ஒருவேளை, மனம் சார்ந்த பிரச்னை உள்ள ஒருவர் சாப்பிடும் மருந்துகள் அந்த வகையில் அமைந்தால், மகப்பேறு மருத்துவர் அவருடைய ரத்தத்தின் சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணித்துவருவார், தேவைப்பட்டால் அதற்கு உரிய மாற்றுச் சிகிச்சைகளை சிபாரிசு செய்வார்.

மனம் சார்ந்த பிரச்னை உள்ளவர் தன்னுடைய உளவியல் நிபுணர், மகப்பேறு மருத்துவர் இருவரிடமும் ஆலோசனை பெற்று, தனது மனநலப் பிரச்னையைச் சரியானபடி கையாண்டால், ஆரோக்கியமாக கர்ப்பகாலத்தைக் கடந்து குழந்தையை நல்லவிதமாகப் பெற இயலும், குழந்தை பிறந்தபிறகும் அதனை ஆரோக்கியமாகக் கவனித்துக்கொள்வதற்கு இந்த அனுபவம் உதவும்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org