நேர்முகம்: அழுத்தமானது ஒரு பெண்ணின் தாய்ப்பாலூட்டும் அனுபவத்தைப் பாதிக்குமா?

புதிதாகத் தாயாகும் ஒருவர் பலவிதமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மாறுதல்களைச் சந்திக்கிறார்.   கர்ப்பம் மற்றும் தாய்மை அனுபவமானது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடலாம், இது தாய்ப்பால் கொடுத்தலுக்கும் பொருந்தும்.  இன்றைக்கு ஒரு புதிய தாய் தாய்ப்பால் ஊட்டுதலைப்பற்றி விழிப்புணர்வு அல்லது அறிவை அதிகம் பெறாமல் இருக்கலாம்.   ஆரம்ப அனுபவம் சரியானபடி அமையாவிட்டால் அது அழுத்தத்தைத் தரலாம், சிலநேரங்களில் அதிர்ச்சியையும் தரலாம்.

இதுபற்றி, மகளிர் நலன் மற்றும் தாய்ப்பாலூட்டல் ஆலோசகரான டாக்டர் தாரூ ஸ்நேஹ் ஜின்டாலுடன் வொயிட் ஸ்வான் அறக்கட்டளையைச்சேர்ந்த ஸ்ரீரஞ்சிதா ஜௌர்கர் பேசினார், இந்த உரையாடல், தாய்ப்பாலூட்டுதலுக்கும் மனநலனுக்கும் இடையிலுள்ள இணைப்பைப் புரிந்துகொள்ள முயன்றது.  

தாய்ப்பாலூட்டுதல் என்பது இயற்கையாக வருவது, இந்த அனுபவத்தை எல்லாத் தாய்மார்களும் மகிழ்ச்சியுடன் விரும்புகிறார்கள் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்.    இது உண்மையா?
ஒரு காலகட்டத்தில் இது உள்ளுணர்வு சார்ந்ததாக இருந்திருக்கலாம்.  பெரும்பாலான தாய்மார்கள் தாய்ப்பாலூட்டுவதை விரும்புகிறார்கள், குழந்தைக்குத் தாய்ப்பால் தரவேண்டும் என விரும்புகிறார்கள்.   அதேசமயம் பெரும்பாலானோர் தாய்ப்பால் ஊட்டுவதற்கு முற்றிலும் தயாராக இருப்பதில்லை. பலருக்கு இது ஒரு வலியாகவும் ஆகிவிடுகிறது, காரணம் பாலூட்டுவது தொடர்பான ஆதரவு இங்கு அதிகமில்லை, மருத்துவ ஆதரவு மற்றும் ஆலோசனைகளும் அதிகமில்லை.   குழந்தையைச் சரியாகப் பால் குடிக்கச்செய்வது எப்படி என்று பல தாய்மார்களுக்குத் தெரிந்திருப்பதில்லை, ஆகவே அவர்கள் தங்களுடைய மார்க்காம்புகளில் ரத்தம் கசிதல் மற்றும் புண் ஆகியவற்றைச் சந்திக்கிறார்கள், அவற்றால் துன்பப்படுகிறார்கள். ஆகவே, அவர்கள் தாய்ப்பாலூட்டுவதை விரும்பினாலும், பலர் இதனால் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

பாலூட்டுவதால் மனஅழுத்தம் ஏற்படக்கூடுமா?   
முதல்முறை தாயாகிறவர்கள் அதற்கு முற்றிலுமாகத் தயாராக இல்லாதபோது அது மிகவும் அழுத்தம் தருவதாக இருக்கக்கூடும்.  இந்நாட்களில் தனிக்குடும்பங்கள் அதிகமாகிவிட்டன, ஆகவே இந்த நேரத்தில் குடும்பத்தினரிடமிருந்து அவர்களுக்குத் தேவைப்படும் ஆதரவும் கிடைப்பதில்லை.   பெரும்பாலும் கணவன்மார்கள் இந்தச் செயல்முறையில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை, ஆகவே ஆதரவுக்கான ஒரு மிக முக்கிய மூலம் தொலைந்துவிடுகிறது.  

நம்முடைய பணியிடங்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவி புரிபவையாக இல்லை.  பாலூட்டும் தாய்மார்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுகிறது, அவர்கள் வேலையைத் தொடர்ந்து செய்வதற்காகப் பாலூட்டுவதை நிறுத்தவேண்டும் அல்லது பாலூட்டுவதைத் தொடர்ந்து செய்வதற்காக வேலையை நிறுத்தவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார்கள்.      இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு தொடர்ச்சியான வருவாய் இல்லாமலிருப்பது அவர்களுடைய அழுத்தத்தை அதிகரிக்கிறது. 

பாலூட்டுவது (அல்லது பாலூட்டாமல் இருப்பது) ஒரு பெண்ணின் மனநலத்தை எப்படிப் பாதிக்கிறது?
பாலூட்டும்போது வெளிப்படும் ஆக்ஸிடாசின் ஒரு தாயை இதமாக உணரச்செய்கிறது. அது அவருடைய அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, அன்பு, பிணைப்பு மற்றும் மகிழ்ச்சி உணர்வுகளைக் கொண்டுவருகிறது.   பாலூட்டாமல் இருக்கும் ஒரு தாய் இவை அனைத்தையும் இழக்க நேரிடலாம். இத்துடன் அவர் சில மணிநேரங்களுக்கு ஒருமுறை ஃபார்முலா எனப்படும் குழந்தை உணவைத் தயாரிக்க வேண்டியிருக்கும், அதற்கான பாத்திரங்களை நோய்கிருமி நீக்கிச் சுத்தப்படுத்தவேண்டியிருக்கும், இவை அனைத்தும் அவருக்கு மிகுந்த உடல்சார்ந்த அழுத்தத்தைக் கொண்டுவரலாம் சில தாய்மார்கள், இந்த வேலைகளெல்லாம் பாலூட்டுவதைவிட அதிக அழுத்தம் தருவதாக உணர்கிறார்கள்.  பாலூட்டாமல் இருப்பதன்மூலம் அவர்களுக்குக் குற்றவுணர்ச்சியும் வரலாம், தங்கள் குழந்தைக்குப் பாலூட்டுவது போன்ற மிக இயற்கையான விஷயத்தைச் செய்ய இயலவில்லையே என்கிற எண்ணத்தில் அவர்களுடைய சுயமதிப்பு குறையலாம்.   

சில பெண்களுக்குப் பாலூட்டுவதில் சிரமங்கள் இருக்கின்றனவேஅது அவர்களை உணர்வு ரீதியில் எப்படிப் பாதிக்கிறது?
சில பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு முறைப்படி பாலூட்ட இயலாமல் சிரமப்படுகிறார்கள், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதை நான் கண்டிருக்கிறேன்.    இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு கிடைக்காவிட்டால் அவர்களுடைய மனநலன் பாதிக்கப்படுகிறது.

இனி பாலூட்ட வேண்டாம் என்று தீர்மானிக்கும் பெண்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களுடைய எதிர்வினைகளை எப்படி கையாளலாம்?
பாலூட்டாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்: ஃபார்முலா உணவு மற்றும் புட்டிப்பால் கொடுப்பது ஆகியவை எளிமையாகத் தோன்றுவதில் தொடங்கி  அவர்களுக்கு தங்களுடைய சொந்த இடம் மற்றும் சுதந்தரம் வேண்டும் என்று அவர்கள் விரும்புவதுவரை.   பாலூட்டாமல் இருக்கும் இந்தப் பெண்களைச் சமூகம் அவமானமாக உணரச்செய்கிற வழக்கம் இருக்கிறது, நேரடியாகத் தாய்ப்பால் ஊட்டுவதற்குப் பதிலாக வேறு தெரிவுகளைத் தேர்ந்தெடுப்பதன்மூலம் தாங்கள் தாழ்வான தாய்மார்கள் ஆகிவிட்டோம் என்று அவர்களை இது உணரச்செய்கிறது.  இதனால் அவர்களுக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படலாம், அவர்களுடைய சுயமதிப்பு குறையலாம்.  இது பேணிவளர்த்தலுக்கும் ஊட்டச்சத்து வளர்த்தலுக்கும் எந்தவிதத்திலும் உதவுவதில்லை, ஏனெனில் தாய்மார்களுக்கு அழுத்தமானது எப்போதும் நல்லதாக இருப்பதில்லை. முதலில் அழுத்தத்தால் தாய்ப்பாலின் அளவு குறையலாம்.  மூளையிலிருந்து ஆக்ஸிடாஸின் சுரப்பதை அழுத்தமானது நேரடியாகக் குறைக்கிறது.  ஒரு புதிய தாய் தன்னுடைய தேர்வுகளின் நன்மை, தீமைகளை அறிந்திருக்கிறார் என்பதைப் பிறர் கவனத்துடன் உறுதிசெய்யவேண்டும், தங்கள் குழந்தைக்குப் பாலூட்டுவதுபற்றி அவர்கள் எந்தத் தீர்மானம் எடுத்தாலும் அதை மதிக்கவேண்டும்.

சில தாய்மார்களுக்குக் குழந்தைக்குத் தரும் அளவுக்குப் போதுமான பால் சுரப்பதில்லை, அப்போது என்ன செய்வது?   

இப்போதெல்லாம் மருத்துவமனை நெறிமுறைகளின்படி, குழந்தை பிறந்தவுடன் அதைத் தாயிடமிருந்து  பிரித்துவிடுகிறார்கள்.      சில நேரங்களில், குழந்தை பிறந்தவுடன் தாய்மார்கள் குழந்தையைத் தொடுவதற்குக்கூட அனுமதிப்பதில்லை, குழந்தைக்குச் செய்யவேண்டிய மருத்துவச் செயல்முறைகளுக்காகக் குழந்தையை வேறு இடத்துக்குக் கொண்டுசென்றுவிடுகிறார்கள்.  இதனால், பிறந்த குழந்தை தன்னுடைய தாயின் மார்பகத்தைக் கண்டறிந்து தானே பால் குடிக்கிற மிக இயற்கையான ஓர் அனிச்சை செயல் (இதை நாங்கள் breastcrawl என்று அழைக்கிறோம்) நிகழ்வதில்லை.    ஒருமணிநேரத்துக்குள் நிகழவேண்டிய இந்தச் செயல் பெரும்பாலான நேரங்களில் தாமதப்படுத்தப்படுகிறது.  தாய்க்குச் சிசேரியன் எனப்படும் அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிற நேரங்களில் இந்தத் தாமதம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.  பிரசவம் எப்படி நிகழ்ந்திருந்தாலும் சரி, தாய்ப்பால் ஊட்டுதலின் நோக்கம் சரியாகக் கையாளப்படாவிட்டால் அது அந்தத் தாயின் பிரசவ  அனுபவத்தைப் பாதிக்கிறது, அந்த நிகழ்வை அவர் சோகம் மற்றும் நம்பிக்கையின்மை உணர்வுகளுடன் நினைவுகொள்ளத் தொடங்குகிறார்.

மருத்துவமனை நெறிமுறைகள் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்கப்படுத்தும்வகையில் மாற்றப்பட்டால் இந்த அழுத்தத்தைப் பெருமளவு குறைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.  மருத்துவமனைகள் தங்களுடைய அமைப்புகளில் “பாலூட்டுவதை மையமாகக் கொண்ட” ஒரு கவனத்தை உருவாக்கவேண்டும், தாய்-சேய் பிரித்துவைக்கப்படுவதை இயன்ற அளவு குறைக்கவேண்டும், தாய்-சேய் இருவரும் சேர்ந்திருப்பதற்கான, இயல்பாகப் பாலூட்டுவதற்கான ஊக்கம் அதிகப்படுத்தப்படவேண்டும்.

பாலூட்டும் ஒரு தாய்க்குக் குடும்பத்தினரும் அவருடைய கணவரும் எப்படி உதவலாம்? குறிப்பாக அவருடைய உணர்வு நலனை எப்படிப் பாதுகாக்கலாம்?
துணிகளைத் துவைப்பது, சமையல் செய்வது, அல்லது குழந்தையைத் தட்டிக்கொடுத்துத் தூங்கவைப்பது போன்ற எளிய விஷயங்களுக்குக் குடும்பத்தின் ஆதரவு போதுமான அளவு கிடைக்காவிட்டால், ஒரு புதிய தாய் குழந்தைப் பிறப்பை முற்றிலும் திகைப்பூட்டும் ஓர் அனுபவமாகக் கருதக்கூடும்.   அவருடைய வேலைகள் திடீரென்று அதிகரித்துவிடுகின்றன, தூக்கம் குறைந்துவிடுகிறது, இதனால், குடும்பத்தின் ஆதரவு இல்லாத புதிய தாய் மிகவும் அழுத்தத்துக்கு உள்ளாகிறார்.  இந்த ஆதரவு இல்லாவிட்டால், அந்தத் தாய் வழக்கத்தைவிட முன்பாகவே பாலூட்டுவதை நிறுத்திவிடக்கூடும், ஃபார்முலா உணவுக்கு மாறிவிடக்கூடும்.

அவருடைய கணவரின் பங்கு இன்னும் முக்கியமானது.  ஆரம்ப நாட்களில் குடும்பத்தினர் குழந்தையைப் பராமரிக்கும் வேலையில் தந்தையை ஈடுபடுத்தாமல் இருக்கலாம், காரணம் அவருக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் ஊகிக்கிறார்கள் அல்லது அவரால் இந்த விஷயத்தில் எந்த உதவியும் செய்ய இயலாது என்று நினைக்கிறார்கள்.   இதனால், சவாலான இந்த நேரத்தில் அந்தத் தாய்க்கு தேவைப்படுகிற முக்கியமான, நெருக்கமான கூட்டாளியின் ஆதரவு குறைகிறது.   குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் செயல்முறையைப்பற்றித் தந்தைமார்கள் கற்றுக்கொண்டு அதில் தாங்களும் பங்கேற்கத் தொடங்கினால், தாய்மார்களுக்குப் பாலூட்டுவது எளிதாகிறது, அதிக மனநிறைவு அளிப்பதாக ஆகிறது. 

தாரு ஜின்டால், “பாலூட்டுவதுபற்றிய விஷயங்கள்என்ற பெயரில் பாலூட்டுவதுபற்றிய ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை நடத்திவருகிறார்பாலூட்டும் தாய்மார்களுக்காக வாட்ஸப்பில் ஓர் ஆதரவுக்குழுவையும் அவர் நடத்திவருகிறார்.    அவரைத் தொடர்புகொள்ள, இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்: tarujindal@yahoo.co.uk. 

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org