தாய்மை

குழந்தை பிறந்தபின் சுதா மாறிவிட்டார்

குழந்தைப் பேற்றுக்கு பிந்தைய மன அழுத்தம் என்பது ஒரு தற்காலிகமான பிரச்னை, அதனை முற்றிலும் குணப்படுத்தலாம்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

எழுதியவர் Dr ப்ரீத்தி S

சுதாவுக்கு வயது 32.  அவர் எதிர்பார்த்தபடி வாழ்க்கை நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. அவர் ஒரு நல்ல வேலையில் இருந்தார், ஓர் அன்பான, கருணையான மற்றும் பொறுப்புள்ள கணவர் அவருக்குக் கிடைத்திருந்தார், அவர் ஓர் அழகிய வீட்டில் வசித்தார், பிரமாதமான நண்பர்கள் அவருக்குக் கிடைத்திருந்தார்கள், மொத்தத்தில் எந்தவிதத்திலும் குறையில்லாத நிம்மதியான வாழ்க்கை அவருக்கு அமைந்திருந்தது.

சுதா எப்போதும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார், நண்பர்களுடன் கலகலப்பாகப் பேசுவார், அதேசமயம் பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்வார், அவர்களை அரவணைத்து செல்வார்.

ஆனால் சுதாவுக்கு ஓர் ஏக்கம் தொடர்ந்து இருந்தது, அவருக்குள் ஆழ வேரூன்றியிருந்த தாய்மை உணர்வு, 'நீ குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்' என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

சுதாவும் அவருடைய கணவரும் ஒரு குழந்தை பெறுவதற்காக என்னென்னமோ செய்து பார்த்தார்கள், ஆனால் ஏதோ காரணத்தால் சுதா கர்ப்பமாகவே இல்லை. பல மாதங்கள் சென்றன, சில சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, மருந்துகளை உட்கொண்டபிறகு சுதா கர்ப்பமானார்.

சுதாவும் அவருடைய கணவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள், பெற்றோர் என்கிற புதிய பொறுப்புக்கு தயாரானார்கள்.

சுதாவுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது, குடும்பத்தில் எல்லாரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

சில நாள் கழித்து சுதாவின் பழக்க வழக்கங்களில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிந்தது. அவருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வரத்தொடங்கியது, எப்போதும் எரிச்சலாகவே இருந்தார், அடிக்கடி தன் கணவருடன் சண்டை போட ஆரம்பித்தார்.

திடிரென்று சுதா நடு ராத்திரியில் எழுந்து அமர்ந்துகொள்வார், தூங்காமல் அழுதுகொண்டே இருப்பார்.

இதைக் கவனித்த சுதாவின் கணவர், தன் மனைவிக்கு நிபுணரின் உதவி தேவைப்படுவதைப் புரிந்துகொண்டார், அவர்களுடைய பகுதியிலிருந்த ஓர் உளவியல் நிபுணரைச் சந்தித்தார்.

அந்த மருத்துவர் சுதாவின் நிலையை விரிவாகக் கேட்டுப் புரிந்துகொண்டார். சுதா அவரிடம் ‘குழந்தை பிறந்தபிறகு எல்லாமே மாறிவிட்டது’ என்றார், ‘நான் சோகமாக, மிகவும் களைப்பாக, நம்பிக்கையே இல்லாதவள்போல் உணர்கிறேன், குழந்தையைப் பார்த்துக்கொள்வதில் எனக்கு எந்த மகிழ்ச்சியும் வருவதில்லை.'

சொல்லப்போனால் தனக்குக் குழந்தைமீது எந்த பிணைப்புமே வரவில்லை என்று சுதா குறிப்பிட்டார். தான் வாழ்வது அவசியம்தானா என்றுகூட அவர் சிந்திக்கத் தொடங்கியிருந்தார். சுதாவுக்குப் பசியெடுக்காததால் அவருடைய எடையும் குறைந்திருந்தது.

இந்த அறிகுறிகளை மதிப்பிட்டபிறகு, அந்த உளவியல் நிபுணர் சுதாவுக்குக் குழந்தைப் பேற்றுக்கு பிந்தைய மன அழுத்தம் வந்திருக்கலாம் எனக் கண்டறிந்தார். குழந்தைப் பேற்றுக்கு பிந்தைய மன அழுத்தம் என்பது, குழந்தை பிறந்தபிறகு ஒரு தாயைப் பாதிக்கக்கூடிய பிரச்சினை, இது பலருக்கும் வரக்கூடியதுதான். ஹார்மோன் மாற்றங்கள், தூக்கமின்மை, தாயாகிவிட்டது பற்றிய பயம், மரபுக்காரணிகள், முதல்முறை கர்ப்பம் தரித்தல் போன்றவையெல்லாம் இந்த பிரச்னைக்கு வழிவகுக்கக்கூடும்.

புதிதாகத் தாயாகியிருக்கிற ஒருவரிடம் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் காணப்பட்டால், அவருடைய கணவரோ மற்ற குடும்ப உறுப்பினர்களோ உடனே கவனிக்கவேண்டும். குறிப்பாக, புதிதாகத் தாயான ஒருவருடைய உணர்வுகளை, அவருடைய கணவர் புரிந்துகொள்ளவேண்டும்,  அவருக்கு ஆதரவளிக்கவேண்டும், அவருடன் நெடுநேரம் அன்பாகப் பேசி அரவணைக்கவேண்டும். இவற்றின்மூலம் அந்தத் தாய் விரைவில் குணமாகிவிடுவார், தாய்மையின் மகிழ்ச்சியை அனுபவிக்கத் தொடங்குவார். ஒருவேளை இந்த அறிகுறிகள் மோசமானால் அந்தத் தாய்க்கு ஆலோசனைகளும் மருந்துகளும் தேவைப்படலாம்.

இந்தக் கற்பனை விவரிப்பைத் தொகுத்தவர் Dr.ப்ரீத்தி S. இவர் பெங்களூரில் உள்ள ஸ்பந்தனா மன நல மற்றும் நரம்பு அறிவியல் கல்வி மையத்தில் (SIMHANS) பணியாற்றி வருகிறார்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org