புதிதாகத் தாயாதல்: சமீபத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட ஒரு தாய்க்குச் சோகமும் திகைப்பும் ஏற்படுவது ஏன்...
குழந்தை பிறப்பதற்குச் சற்று முந்தைய மற்றும் குழந்தை பிறந்தவுடனே வருகிற காலகட்டத்தை ஆங்கிலத்தில் 'பெரிநேட்டல் காலகட்டம்’ என்று அழைப்பார்கள். இந்தக் காலகட்டமானது கருவுற்று 22 முழுமையான வாரங்களுக்குப்பிறகு தொடங்குகிறது, குழந்தை பிறந்து ஏழு நாட்களுக்குள் நிறைவடைகிறது.
பெரிநேட்டல் காலகட்டமானது தாய்மார்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் பெரிய சரிசெய்தல்களைக் கொண்டுவரக்கூடிய காலகட்டமாகும். புதிய பெற்றோர் தனித்துவமான சவால்களைச் சந்திக்கிறார்கள், இவை அவர்களுக்குத் திகைப்பைத் தரக்கூடும்.
’ப்ளூஸ்’ – இது இயல்பானது
இது இயல்பானது இல்லை
பல புதிய தாய்மார்கள் குழந்தை பெற்ற இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குப் ‘பேபி ப்ளூஸ்’ஐ அனுபவிக்கிறார்கள். உணர்வுக் கொந்தளிப்பைக் கொண்ட இந்தக் காலகட்டம் இயல்பானது, தற்காலிகமானது, அதன் தீவிரத்தன்மை ஒவ்வொரு தாய்க்கும் மாறுபடுகிறது. பேபி ப்ளூஸை உணரும் புதிய தாய் பொதுவாகப் பத்து நாட்களுக்குள் அதிலிருந்து குணமாகிவிடுகிறார்.
ஒருவேளை, இரண்டு வாரங்களுக்குப்பிறகும் அவரிடம் அழுகை, எரிச்சல், பிற உணர்வு அழுத்தங்கள் தொடர்ந்தால், அவருக்குப் போஸ்ட்பார்டம் மனச்சோர்வு ஏற்பட்டிருக்கலாம்.
ஒருவர் தன்னுடைய மனைவி/மகளிடம் இதுபோன்ற அறிகுறிகளைத் தொடர்ந்து கவனித்தால், நிபுணருடைய உதவியைப் பெறுவது நல்லது.
முக்கியமான குறிப்பு: பெரிநேட்டல் மனச்சோர்வானது தாய்மார்கள், தந்தைமார்கள் மற்றும் புதிய குழந்தையைத் தீவிரமாகப் பாதிக்கலாம். தாய்க்கும் சேய்க்கும் இடையிலான பிணைப்பு பாதிக்கப்படலாம், குழந்தையுடனான ஒட்டுதலில் தொந்தரவு ஏற்படலாம். தந்தைமார்களும் குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வை அனுபவிக்கலாம். இது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் நலனைப் பாதிக்கிறது.
குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வுக்குச் சிகிச்சை அளிப்பது அவசியம். இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், புதிய தாய்மார்களில் பாதிப்பேருக்கும்மேல் ஆறு மாதங்கள் கழித்தும் தொடர்ந்து பிரச்னையோடு இருப்பார்கள்.
போஸ்ட்பார்டம் காலகட்டம்
இந்தக் காலகட்டம் குழந்தை பிறந்தவுடன் தொடங்குகிறது, குழந்தை பிறந்து சுமார் ஆறு வாரங்களுக்கு நீடிக்கிறது. குழந்தை பிறந்தபிறகு வரும் முதல் வாரத்தில், உளவியல் மற்றும் ஹார்மோன் காரணிகள் தாயின் மனநிலை மற்றும் உணர்வுகளைப் பாதிக்கின்றன. பெரும்பாலான தாய்மார்கள் உணர்ச்சிவயப்படக்கூடும், மனச்சோர்வான மனநிலையை அனுபவிக்கக்கூடும், அடிக்கடி அழக்கூடும், எரிச்சலாக உணரக்கூடும், பதற்றமடையக்கூடும், அவர்களுக்குப் பசியெடுப்பதில் தொந்தரவுகள் இருக்கக்கூடும், தலைவலி, மற்றும் மறதி போன்றவற்றால் சிரமப்படக்கூடும். இவை அனைத்தும் போஸ்ட்பார்டம் ப்ளூஸின் அறிகுறிகளாகும். இவை தற்காலிகமானவை, அந்தத் தாய் பத்து நாட்களூக்குள் இதிலிருந்து முழுமையாகக் குணமாகிவிடுவார்.
இந்த அறிகுறிகள் ஒரு தாயிடம் தொடர்ந்து காணப்பட்டால், மேலும் தீவிரமடைந்தால், அவருக்குப் போஸ்ட்பார்டம் மனச்சோர்வு ஏற்படக்கூடும், பல தாய்மார்களிடம் இது பொதுவாகக் காணப்படுகிறது, பலரை இது முடக்கிப்போடக்கூடும். குழந்தை பிறந்து ஆறு வாரங்களுக்குள் தாய்மார்கள் தீவிரமான மனச்சோர்வைச் சந்திக்கக்கூடும். இதற்குச் சிகிச்சை அளிக்காவிட்டால், இந்தப் பிரச்னை ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கக்கூடும், தாய், குழந்தை மற்றும் குடும்பத்தைத் தீவிரமாகப் பாதிக்கக்கூடும்.
போஸ்ட்பார்டம் மனச்சோர்வின் சில அறிகுறிகள்:
- திகைப்பாக உணருதல், எரிச்சலாக உணருதல் மற்றும் தொடர்ந்து களைப்பாக உணருதல்
- குறைந்த சுயமதிப்பு மற்றும் தன்னால் குழந்தையைச் சிறப்பாக வளர்க்க இயலுமா என்பதுபற்றிய ஐயங்கள்
- குழந்தையைப்பற்றித் தொடர்ச்சியாகக் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பது அல்லது குழந்தையைக் கவனித்துக்கொள்வதில் ஆர்வமில்லாமல் இருப்பது
- வீட்டில் ஏற்பட்டுள்ள ஒழுங்கற்ற நடவடிக்கைகளைச் சமாளிக்க இயலாமலிருப்பது. குழந்தை வெவ்வேறு நேரங்களில் பால் குடிக்கிறது, வெவ்வேறு நேரங்களில் தூங்குகிறது என்பதால் தாயின் தூக்கம் பாதிக்கப்படுதல்
- குழந்தை தூங்கும்போதுகூடத் தாயால் ஓய்வெடுக்க இயலாமலிருத்தல்
- கர்ப்பத்துக்குமுன் அல்லது பிரசவத்துக்குமுன் தான் விரும்பி அனுபவித்துச் செய்த வேலைகளை இப்போது அனுபவித்துச் செய்ய இயலாமலிருப்பது
- எதிலும் கவனம் செலுத்த இயலாமலிருப்பது, தீர்மானம் எடுக்க இயலாமலிருப்பது, வேலைகளை ஒழுங்காகச் செய்ய இயலாமலிருப்பது
- பதற்றத்துக்கான உடல்சார்ந்த அறிகுறிகள், இதயப் படபடப்பு, தொடர்ச்சியான தலைவலிகள், வியர்க்கும் கைகள்
- தன்னால் எதையும் கட்டுப்படுத்த இயலுவதில்லை என்று உணர்வது அல்லது மிகையான செயல்பாடுகளுடன் இருப்பது
- குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட ஆர்வமில்லாமல் இருப்பது
- தொடர்ந்து எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்பது, தன்னைப்பற்றியும், தன்னுடைய எதிர்காலத்தைப்பற்றியும் நம்பிக்கையின்றி இருப்பது
- கோபம், சோகம், இழப்பு ஆகிய உணர்வுகள், மற்றும் அழுகையோடு இருப்பது
- பசியெடுக்கும் தன்மை மாறுவது
- குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடைய கருத்துகளை மிகையாக எண்ணிக்கொண்டு உணர்ச்சிவயப்படுவது
- தங்களையோ குழந்தையையோ காயப்படுத்துவதுபற்றி சிந்திப்பது
- குற்ற உணர்ச்சி, வெட்கம், கவலை தரக்கூடிய தொந்தரவான எண்ணங்கள் அல்லது காட்சிகளைத் தொடர்ந்து உணர்வது
போஸ்ட்பார்டம் மனச்சோர்வுக்குச் சிகிச்சை பெறுதல்
பெரிநேட்டல் மனச்சோர்வைச் சந்திக்கிறவர்களுக்கு உளவியல் மற்றும் மருந்தியல் சிகிச்சைகள் பலனளிக்கின்றன.
பெரிநேட்டல் மனநல மற்றும் பதற்றக் குறைபாடுகளுக்கு உதவியை நாடுவதும் சிகிச்சையை பெறுவதும் முக்கியம். பெரிநேட்டல் காலகட்டத்தில் CBT மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையிலான சிகிச்சை போன்ற உளவியல் சிகிச்சைகள் மதிப்புமிக்க சிகிச்சைகளாகும். இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை வழங்கப்படாவிட்டால், ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் துன்பம் அதிக நாள் நீடிக்கும்.
குறிப்பு: தீவிர மனச்சோர்வு அல்லது இருதுருவக் குறைபாடு கொண்ட பெண்களுக்கு மருந்துகள் தேவைப்படலாம்.