புதிதாகத் தாயாதல்: குழந்தை பிறந்த பிறகு உணர்வுரீதியில் நலத்துடன் இருத்தல்

கர்ப்பமாக இருக்கும் நேரம் தாயாகப்போகும் பெண்ணைப்பற்றியது, அதன்பிறகு வருகிற காலகட்டமானது கவனத்தைக் குழந்தையின்மீது திருப்புகிறது.     முதல்முறை தாயாகப்போகும் ஒரு பெண் தானே பிரசவத்திலிருந்து மெதுவாக மீண்டு கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தையைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பைச் சமாளிப்பது அவருக்குக் கடினமாக இருக்கலாம்.  புதிய தாய்மார்கள் தங்களுடைய புதிய பொறுப்புகளை எண்ணித் திகைப்படையலாம்.  இதுபோன்ற நேரங்களில் அவர்கள் தங்களை நன்கு கவனித்துக்கொள்வதற்குச் சில குறிப்புகள் இதோ:

  • குழந்தை பிறந்த பிறகு சில நாட்களுக்கு அல்லது சில வாரங்களுக்குக் களைப்பாகவும் பலவீனமாகவும் உணர்வது இயல்புதான்.   பிரசவத்தின்போது குறிப்பிடத்தக்க ரத்த இழப்பு ஏற்படலாம், அதனால் புதிய தாய் களைப்பாக உணரலாம் அல்லது உடல் நடுங்குவதுபோல் உணரலாம்.    அவருடைய எடை தீடீரென்று குறையலாம், அவருடைய வயிறு ‘காலியாக’ இருப்பதுபோல் அவர் உணரலாம்.   இதுபோன்ற நேரங்களில் அவர் முதல் 2-3 வாரங்களுக்கு நன்கு ஓய்வெடுக்கவேண்டும்.
  • அவர் நிறையத் தண்ணீரும் நிறையத் திரவங்களும் குடிக்கவேண்டும்.  இந்தக் காலகட்டத்தில் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்கும்படி பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
  • இந்த நேரத்தில் அவர் ஓர் இயல்பான உணவுப்பழக்கத்தை மேற்கொள்ளலாம், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளலாம்.   புதிய தாய்மார்களுக்குச் சத்துகள் நிறைந்த உணவு தேவைப்படும்.  புதிய தாய்மார்கள் தங்களுடைய உணவுப்பழக்கத்தைப்பற்றித் தங்கள் மருத்துவர்களிடம் பேசலாம், பிறர் சொல்வதை அப்படியே பின்பற்றாமல் மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளைப் பின்பற்றலாம்.   உணவு பழக்கங்களைப்பற்றிச் பல சடங்குகள் இருக்கின்றன.  இவற்றில் அறிவியல்பூர்வமானவை, மருத்துவரீதியில் சரியாகத் தோன்றுகிறவற்றைப் பின்பற்ற முயற்சி செய்யலாம்.
  • பாலூட்டுதல்: பெரும்பாலான புதிய தாய்மார்களுக்கு முதல் சில நாட்கள் பாலூட்டுவது கடினமாக இருக்கலாம்.  அவர்கள் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அல்லது செவிலியர்களுடைய உதவிகளைப் பெற்றுப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  பாலூட்டுவதுபற்றி ஆலோசனை கேட்க அவர்கள் தயங்கவேண்டியதில்லை, தன்மீது தேவையில்லாத அழுத்தத்தைப் போட்டுக்கொள்ளவேண்டியதில்லை.    இதனை அவர்கள் சிறப்பாகச் செய்யத் தேவையானதெல்லாம் சரியான நிலை, அழுத்தமில்லாத தோரணை,  மற்றும் மனநிலை, மற்றும் பாலூட்டுவதுபற்றிய சரியான அணுகுமுறை ஆகியவைதான்.     அதன்பிறகும் அவர்களுக்கு ஐயங்கள் இருந்தால், பாலூட்டுவதுபற்றிய ஆலோசனைகளை வழங்கும் நிபுணர் ஒருவரிடம் பேசலாம். 
  • இந்த நேரத்தில் அவர் திகைப்பாக உணர்வது இயல்புதான், சில தாய்மார்கள் தாங்கள் பிள்ளை பெற்றுக்கொள்வதாகத் தீர்மானித்தது சரிதானா என்றுகூட முதல் சில நாட்களில் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளக்கூடும்.    இதுபோன்ற நேரங்களில் அவர்களுக்கு ஒரு நல்ல ஆதரவு அமைப்பு இருந்தால் அவர்கள் குழந்தையையும் நன்கு கவனித்துக்கொள்ளலாம், தாங்களும் போதுமான அளவு ஓய்வெடுக்கலாம்.   
  • முதல் சில மாதங்களில் களைப்பாக உணர்வது மிகவும் இயல்பானது, தன்னால் தீர்மானங்களை எடுக்க இயலவில்லை என்று அவர்கள் நினைப்பதும் முற்றிலும் இயல்பானதுதான்.  இது பலரிடம் காணப்படுகிற ஒரு விஷயம்.  இதனால் தன்னுடைய குழந்தையைத் தன்னால் சரியாகக் கவனித்துக்கொள்ள இயலவில்லை என்று அவர் நினைத்தால், அவர் உதவியை நாடலாம். 
  • பயிற்சி:  குழந்தை பிறந்து சில வாரங்களுக்குப்பிறகு நளினமான சில உடல்பயிற்சிகளை அவர்கள் செய்யத்தொடங்கலாம்.   அவருடைய உடல் நிலைக்கு ஏற்ற சிறந்த உடற்பயிற்சிகள் எவை என்பதுபற்றி அவர் தன்னுடைய மருத்துவரிடம் பேசலாம்.
  • புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தை அவருடைய நேரத்தில், கவனத்தில் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளக்கூடும், இதனால் பெரும்பாலான புதிய தாய்மார்கள் தங்களுடைய கணவன்மார்களுடன் நேரத்தைச் செலவிட இயலுவதில்லை.    அவர்கள் தங்களுடைய கணவன்மார்களைக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதில் ஈடுபடுத்தலாம்; இதன்மூலம் அவர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளலாம், ஒன்றாக நேரம் செலவிடலாம்.
  • குழந்தையைக் கவனித்துக்கொள்வதால் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது என்றால், குழந்தையை இன்னொருவர் கவனித்துக்கொள்கிற நேரத்தில் புதிய தாய் தனக்காகச் சிறிது நேரத்தைச் செலவிட முயலலாம்.
  • குழந்தை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்போது அவர் குழந்தையுடன் நேரத்தைச் செலவிடலாம்.

பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கு

  • பணிக்குச் செல்லும் தாய்மார்கள்,  குழந்தை பிறந்தபிறகு தங்களுடைய வேலைப்பாணி எப்படி இருக்கும் என்பதைக் குழந்தை பிறப்பதற்குமுன்பாகவே திட்டமிடவேண்டும். 
  • தங்களுடைய தேவைகளைப்பற்றித் தங்கள் மேலாளர் அல்லது HRஉடன் அவர்கள் ஒரு வெளிப்படையான உரையாடலை நிகழ்த்தவேண்டும்.  அவர்கள் சில நேரங்களில் தலைசுற்றுவதுபோல அல்லது ஆற்றல் குறைவாக உள்ளதுபோல உணரலாம்.  அவர்களுடைய உடலுக்கு ஓய்வு தேவைப்படும்போது ஓய்வு எடுத்துக்கொள்வதற்கு அவர்கள் HRன் ஒப்புதலைப் பெறவேண்டும்.  வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடலாம்.  அவர்கள் தங்களுடைய பணியிடத்தில், குழந்தைகளைக் கொண்ட பெண் ஊழியர்களுடன் தொடர்புடைய பணிக் கொள்கைகள் மற்றும் வசதிகளை வாசித்துத் தெரிந்துகொள்ளலாம். 
  • ஓய்வு நேரங்கள்:  அவர் 10-15 நிமிடங்களுக்குச் சிறு தூக்கம் அல்லது ஓய்வை எடுத்துக்கொள்ளலாமா?
  • பணிக்குச் செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை எப்படி வெளியில் எடுத்துச் சேமிப்பது என்பதைக் கற்றுக்கொண்டு, அதன்மூலம் குழந்தைக்கு உணவு தருவதற்கு ஏற்பாடு செய்யலாம்.
  • அழுத்தமானது குழந்தை, தாய் ஆகிய இருவரிடமும் ஒரு தாக்கத்தைக் கொண்டுள்ளது.  வேலையினால் அழுத்தம் ஏற்படுகிறது என்றால் இதுபற்றி அவர்கள் தங்களுடைய மேலாளரிடம் பேசலாம், தங்களுடைய பொறுப்புகளை மாற்றியமைக்க வாய்ப்பு உண்டா என்று பார்க்கலாம்.  பயணத்தால் ஏற்படும் களைப்பைப் போக்குவதற்காக அவர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற இயலுமா என்று பார்க்கலாம்.  அவர்கள் தங்களுடைய நிறுவனத்தில் உள்ள தாய்மை விடுமுறைக் கொள்கைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org